உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 52 பக். 265-பக். 267 பாரா. 4
  • திறம்பட அறிவுறுத்துதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திறம்பட அறிவுறுத்துதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • அவசர உணர்வுடன் பிரசங்கியுங்கள்!
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • சகோதர அன்பு செயல்படுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • ‘அன்பின் அடிப்படையில் புத்திசொல்வது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • தீத்து, பிலேமோன், மற்றும் எபிரெயருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 52 பக். 265-பக். 267 பாரா. 4

படிப்பு 52

திறம்பட அறிவுறுத்துதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நம்பவைக்கும் விதத்தில் நியாயங்காட்டிப் பேசுவதன் மூலம் அல்லது நம்பத்தகுந்த ஆதாரத்தின் அடிப்படையிலான அறிவுரையை அளிப்பதன் மூலம் பிறரை செயல்படத் தூண்டுங்கள். இதற்கு உள்ளார்ந்த அக்கறையோடு பேச வேண்டும்.

ஏன் முக்கியம்?

திறம்பட அறிவுறுத்துவது, யெகோவாவுக்குப் பிரியமானதை செய்வதன் முக்கியத்துவத்தைப் பிறருக்கு உணர்த்துகிறது.

“ஆரோக்கியமான போதனையினால் அறிவுறுத்தும்” திறமை கிறிஸ்தவ மூப்பர்களுக்கு வேண்டும். (தீத். 1:9, NW) சில சமயங்களில், மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில் அவர்கள் அவ்வாறு அறிவுறுத்த வேண்டும். வேதப்பூர்வ நியமங்களுக்கு இசைவாக அறிவுரை வழங்குவது முக்கியம். ஆகவே, ‘அறிவுறுத்துவதில் . . . கவனம் செலுத்து’ என்ற அறிவுரைக்கு மூப்பர்கள் செவிசாய்க்க வேண்டும். (1 தீ. 4:13, NW) முக்கியமாக மூப்பர்களுக்கு அல்லது மூப்பர்களாகும் சிலாக்கியத்தைப் பெற நாடுகிறவர்களுக்கு இந்தப் படிப்பில் ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன. என்றாலும், பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு அல்லது பைபிள் படிப்பு நடத்துபவர்கள் தங்களுடைய பைபிள் மாணாக்கர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய சந்தர்ப்பங்களும் வரும் என்பதால் பின்வரும் ஆலோசனைகள் அவர்களுக்கும் பொருந்தும்.

அறிவுறுத்த வேண்டிய சூழ்நிலைகள். எப்பொழுது அறிவுறுத்துவது அவசியம் என்பதை தீர்மானிப்பதற்கு, பைபிளில் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிவுறுத்தப்பட்டது என்பதை ஆராய வேண்டும். கடவுளுடைய மந்தையை மேய்க்கும் உத்தரவாதத்திற்கு கவனம் செலுத்தும்படி மூப்பர்களை அப்போஸ்தலன் பேதுரு அறிவுறுத்தினார். (1 பே. 5:1, 2) “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க” இளைஞர்களை அறிவுறுத்தும்படி தீத்துவுக்கு பவுல் அறிவுரை வழங்கினார். (தீத். 2:6) ‘ஒத்த கருத்துடையவர்களாக பேசும்படியும்,’ சகோதரர்கள் மத்தியில் பிரிவினைகளை உண்டுபண்ண முயன்றவர்களை விட்டுவிலகும்படியும் சக கிறிஸ்தவர்களை பவுல் உந்துவித்தார். (1 கொ. 1:10, பொ.மொ.; ரோ. 16:17; பிலி. 4:2) தெசலோனிக்கேயா சபையார் செய்துவந்த நற்காரியங்களுக்காக அவர்களை பவுல் பாராட்டியபோதிலும், அவர்கள் பெற்ற போதனையை இன்னும் முழுமையாக பின்பற்றும்படி அறிவுறுத்தினார். (1 தெ. 4:1, 10) “மாம்ச இச்சைகளை விட்டு விலகி”யிருக்கும்படி சக கிறிஸ்தவர்களை பேதுரு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். (1 பே. 2:11) ஒழுக்கக்கேட்டில் லயித்த தேவபக்தியற்றவர்களுடைய செல்வாக்கின் நிமித்தம், “விசுவாசத்திற்காக . . . தைரியமாய்ப் போராட வேண்டுமென்று” யூதா தன் சகோதரர்களுக்கு அறிவுறுத்தினார். (யூ. 3, 4) பாவத்தின் கடினத்தன்மையால் ஒருவரும் வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு, பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிவுறுத்தும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். (எபி. 3:13) கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் வைக்காத யூதர்களுக்கு பேதுரு இவ்வாறு அறிவுறுத்தினார்: “மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள்.”​—⁠அப். 2:40.

இத்தகைய சூழ்நிலைகளில் வலிமையோடு அறிவுறுத்துவதற்கு எப்படிப்பட்ட பண்புகள் தேவை? அறிவுறுத்துகிறவர் ஒடுக்குகிறவராகவோ கொடூரமானவராகவோ இல்லாமல் தன்னுடைய வேண்டுகோளின் அவசரத்தன்மையை எவ்வாறு உணர்த்த முடியும்?

“அன்பினிமித்தம்.” நாம் “அன்பினிமித்தம்” அறிவுறுத்தவில்லையென்றால், அது கடுமையானதாக தொனிக்கலாம். (பிலே. 9) உடனடியாக செயல்படத் தூண்ட வேண்டிய அவசியம் ஏற்படும்பொழுது, பேச்சாளருடைய பேச்சு அந்தச் சூழ்நிலையின் அவசரத்தன்மையை உணர்த்த வேண்டும் என்பது உண்மைதான். மென்மையாக பேசுவது ஏதோ மன்னிப்பு கேட்பதுபோல் தொனிக்கலாம். அதேசமயத்தில், உள்ளார்வத்தோடும் பரிவிரக்கத்தோடும் அறிவுறுத்த வேண்டும். அன்புடன் அறிவுறுத்துவது சபையாரை அதிகமாக உந்துவிக்கும். பவுல் தன் சார்பாகவும் தன் தோழர்களின் சார்பாகவும் பேசும்போது தெசலோனிக்கேயரிடம் இவ்வாறு கூறினார்: “தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தி . . . சொன்னதை [“அறிவுறுத்தியதை,” NW] அறிந்திருக்கிறீர்கள்.” (1 தெ. 2:12) அந்தக் கிறிஸ்தவ கண்காணிகள் சகோதரர்களை அன்போடு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். உங்களுடைய வார்த்தைகள் செவிகொடுப்போர் மீதுள்ள உள்ளப்பூர்வமான அக்கறையால் பிறப்பதாக இருக்க வேண்டும்.

சாதுரியத்துடன் நடந்துகொள்ளுங்கள். யாரை நீங்கள் செயல்படத் தூண்ட முயற்சி செய்கிறீர்களோ அவர்களை விரோதிகள் போல் பாவிக்காதீர்கள். அதே சமயத்தில், ‘தேவனுடைய ஆலோசனையை’ உங்களுடைய சபையாருக்குச் சொல்லாமல் இருந்துவிடாதீர்கள். (அப். 20:26) சரியானதைச் செய்ய நீங்கள் அன்போடு உந்துவிப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்கள் கோபப்பட மாட்டார்கள் அல்லது உங்களை வெறுக்க மாட்டார்கள்.​—⁠சங். 141:5.

அறிவுறுத்துவதற்கு முன்பு தெளிவாக, உள்ளப்பூர்வமாக பாராட்டுவது நல்லது. சகோதரர்கள் செய்துவரும் நல்ல காரியங்களைப் பற்றி​—⁠யெகோவா மிகவும் பிரியப்படும் காரியங்களைப் பற்றி​—⁠யோசித்துப் பாருங்கள்; செயலில் அவர்கள் காண்பிக்கும் விசுவாசம், கடினமாக பிரயாசப்பட அவர்களை உந்துவிக்கும் அன்பு, இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்கள் காண்பிக்கும் சகிப்புத்தன்மை ஆகியவை அவற்றில் சில. (1 தெ. 1:2-8; 2 தெ. 1:3-5) இப்படிப்பட்ட நல்ல காரியங்களை நீங்கள் போற்றும்போது, தாங்கள் மதிக்கப்படுவதையும் புரிந்துகொள்ளப்படுவதையும் சகோதரர்கள் உணர்வார்கள். அறிவுரையை சரியான மனநிலையோடு ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களை தயார்படுத்தும்.

“எல்லா நீடிய சாந்தத்தோடு.” அறிவுரையை “எல்லா நீடிய சாந்தத்தோடு” கொடுக்க வேண்டும். (2 தீ. 4:2) இது எதை உட்படுத்துகிறது? தவறான செயலை அல்லது கோபமூட்டும் செயலை பொறுமையோடு சகித்துக்கொள்வதும் நீடிய சாந்தத்தில் உட்பட்டுள்ளது. தான் சொல்வதை கேட்போர் கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் நீடிய சாந்தமுள்ளவர் காத்துக்கொள்கிறார். இப்படிப்பட்ட மனப்பான்மையோடு அறிவுறுத்தினால், தாங்கள் மிக மோசமானவர்களாக எண்ணப்படுவதாக சபையார் நினைக்க மாட்டார்கள். சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற அளவுக்கு மிகச் சிறப்பாக யெகோவாவுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள் என்பதில் நீங்கள் காட்டும் நம்பிக்கை, சரியானதைச் செய்ய அவர்களுடைய ஆசையை தூண்டுவிக்கும்.​—⁠எபி. 6:9.

“ஆரோக்கியமான போதனையினால்.” மூப்பர் ஒருவர் எவ்வாறு ‘ஆரோக்கியமான போதனையினால் அறிவுறுத்த’ முடியும்? ‘தன்னுடைய கற்பிக்கும் கலையைப் பொறுத்தமட்டில் உண்மையுள்ள வார்த்தையை உறுதியாக பற்றிக்கொள்வதன்’ மூலமே. (தீத். 1:9, NW) உங்களுடைய தனிப்பட்ட கருத்தை சொல்லாமல், கடவுளுடைய வார்த்தையை ஆதாரமாக வைத்து அறிவுரை வழங்குங்கள். என்ன சொல்ல வேண்டும் என்பதை பகுத்துணர பைபிள் உங்களுக்கு உதவி செய்வதாக. சிந்திக்கப்படும் விஷயத்தின் சம்பந்தமாக பைபிள் சொல்வதைப் பின்பற்றுவதால் வரும் நன்மைகளை சொல்லுங்கள். கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக நடக்காவிட்டால்​—⁠தற்காலத்திலும் வருங்காலத்திலும்​—⁠ஏற்படும் விளைவுகளை மனதில் நன்கு வைத்திருங்கள்; தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சபையாரை உந்துவிப்பதற்கு இவற்றைப் பயன்படுத்துங்கள்.

என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை உங்களுடைய சபையாருக்கு தெளிவாக விளக்குங்கள். உங்களுடைய நியாயவிவாதம் பைபிளில் உறுதியாக வேரூன்றப்பட்டிருப்பதை தெளிவுபடுத்துங்கள். தீர்மானிக்க வேண்டிய விஷயத்தில் சற்று வளைந்து கொடுப்பதற்கு பைபிள் அனுமதித்தால், எந்தளவுக்கு அப்படி செய்யலாம் என்பதை குறிப்பிடுங்கள். பிற்பாடு, உங்களுடைய முடிவுரையில், செயல்படுவதற்கு சபையார் எடுக்கும் தீர்மானத்தை பலப்படுத்துகிற விதமாக பேசுங்கள்.

‘துணிவோடு பேசுதல்.’ திறம்பட அறிவுறுத்துவதற்கு, ஒருவர் விசுவாசத்தில் ‘துணிவோடு பேச’ வேண்டும். (1 தீ. 3:13, பொ.மொ.) துணிவோடு பேச எது ஒருவருக்கு உதவுகிறது? தன் சகோதரர்களை என்ன செய்யும்படி உந்துவிக்கிறாரோ அதற்கு இசைவாக தானே “நற்கிரியைகளுக்கு மாதிரியாக” இருப்பது உதவுகிறது. (தீத். 2:6, 7; 1 பே. 5:3) அப்பொழுதுதான், அறிவுரை கூறுகிறவர் தான் செய்யாததை தாங்கள் செய்யும்படி எதிர்பார்க்கவில்லை என்பதை அறிவுரை பெறுகிறவர்கள் உணர்ந்துகொள்வார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு அவர் முயற்சி செய்வதைப் போல, அவருடைய விசுவாசத்தை தாங்களும் பின்பற்ற முடியும் என அவர்கள் புரிந்துகொள்வார்கள்.​—⁠1 கொ. 11:1; பிலி. 3:17.

கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அன்போடு கொடுக்கப்படும் அறிவுரை சிறந்த பலனைத் தரும். இப்படிப்பட்ட அறிவுரையை வழங்கும் உத்தரவாதமுள்ளவர்கள் அதை சிறந்த விதத்தில் கொடுப்பதற்கு ஊக்கமாக முயல வேண்டும்.​—⁠ரோ. 12:⁠8.

எப்படி செய்வது

  • அன்பையும் நீடிய பொறுமையையும் காட்டி, உள்ளார்வத்தோடு பேசுங்கள்.

  • கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அறிவுரை வழங்குங்கள்.

  • சிறந்த முன்மாதிரி வைப்பதன் மூலம் உங்கள் அறிவுரைக்கு வலுவூட்டுங்கள்.

பயிற்சி: பிலேமோனுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தை வாசியுங்கள். பின்வரும் அம்சங்களை கவனியுங்கள்: (1) கனிவாக பாராட்டுதல், (2) ஒநேசிமுவின் சார்பாக பவுல் வேண்டுகோள் விடுப்பதற்கான அடிப்படை, (3) திரும்பிவரும் அடிமையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பிலேமோன் நம்புவதற்கு பவுல் பயன்படுத்திய விவாதம், (4) பிலேமோன் சரியான காரியத்தை செய்வார் என்பதில் பவுலுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை. அறிவுரை வழங்கும்போது இந்த மாதிரியை எவ்வாறு பின்பற்றலாம் என்பதை சிந்தியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்