படிப்பு 53
கேட்போரை உற்சாகப்படுத்தி பலப்படுத்துதல்
கடவுளுடைய ஊழியர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்ப்பட்டாலும்சரி, கிறிஸ்தவ சபையில் அவர்கள் உற்சாகத்தைப் பெற வேண்டும். அதற்காக, முக்கியமாய் மூப்பர்கள் தங்களுடைய பேச்சுக்களும் அறிவுரைகளும் உற்சாகப்படுத்துவதாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மூப்பர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இரு”க்க வேண்டும்.—ஏசா. 32:2.
நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், உங்களுடைய பேச்சுக்கள் புத்துணர்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கின்றனவா? யெகோவாவை உண்மையுடன் சேவிக்க முயற்சி செய்கிறவர்களை உயிர்ப்பூட்டுகின்றனவா? பொதுமக்கள் செவிகொடுக்காவிட்டாலும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நிலைத்திருக்க பலம் தருகின்றனவா? சபையாரில் சிலர் மனதளவில் சோர்ந்திருந்தால், கடும் பொருளாதார அழுத்தங்களால் பாரமடைந்திருந்தால், அல்லது குணப்படுத்த முடியாத பயங்கர வியாதியால் போராடிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? ‘உங்களுடைய சொற்களால் சகோதரர்களை வலுப்படுத்தலாம்.’—யோபு 16:5, பொ.மொ.
யெகோவாவிடமிருந்தும் அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளிலிருந்தும் சகோதரர்கள் நம்பிக்கையையும் பலத்தையும் பெற ஒரு பேச்சாளராக உங்களுக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.—ரோ. 15:13; எபே. 6:10.
யெகோவா செய்தவற்றை நினைப்பூட்டுங்கள். தைரியமூட்டுவதற்கு ஒரு முக்கியமான வழி, கடந்த காலங்களில் யெகோவா எவ்வாறு தமது மக்களை கஷ்டங்களின்போது காப்பாற்றினார் என்பதை காண்பிப்பதாகும்.—ரோ. 15:4.
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் நுழைவதற்கு முன்பு அது சத்துருக்கள் கைவசமிருந்தது; ஆகவே யோசுவாவை “திடப்படுத்தி பலப்படுத்து”ம்படி மோசேக்கு யெகோவா சொன்னார். அதை மோசே எவ்வாறு செய்தார்? எகிப்தைவிட்டு வந்தபோது யெகோவா செய்த அனைத்தையும் முழு தேசத்தாருக்கும், யோசுவாவின் முன்னிலையில் மோசே நினைப்பூட்டினார். (உபா. 3:28; 7:18) எமோரியர் மீது யெகோவா தந்த வெற்றிகளையும் அவர் நினைப்பூட்டினார். பின்பு, “பலங்கொண்டு திடமனதாயிரு” என்று கூறி யோசுவாவை மோசே உந்துவித்தார். (உபா. 31:1-8) உங்களுடைய சகோதரர்களை உற்சாகப்படுத்தும்போது, யெகோவா அவர்களுக்கு ஏற்கெனவே செய்தவற்றை நினைப்பூட்டி பலம்பெறுவதற்கு உதவி செய்கிறீர்களா?
சில சமயங்களில் பிரச்சினைகளால் மூழ்கடிக்கப்பட்டதைப் போல உணர்வதால், ராஜ்ய ஆசீர்வாதங்களை என்றாவது அனுபவிப்போமா என்றுகூட சிலர் யோசிக்கிறார்கள். யெகோவாவுடைய வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையைப் பற்றி அவர்களுக்கு நினைப்பூட்டுங்கள்.—யோசு. 23:14.
சில நாடுகளில், நம்முடைய சகோதரர்கள் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு அரசாங்கம் தடைவிதித்து ஆணைகள் பிறப்பித்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுடைய அனுபவங்களிலிருந்து பலம்பெற மூப்பர்கள் சக விசுவாசிகளுக்கு உதவலாம். (அப். 4:1–5:42) எஸ்தர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களை யெகோவா கையாண்ட விதத்தை சிறப்பித்துக் காட்டுவது நிச்சயம் தைரியத்தைப் பெற சகோதரர்களை உந்துவிக்கும்.
சில சமயங்களில் ஆட்கள் கூட்டங்களுக்கு ஆஜராகிறார்கள், ஆனால் எந்த முன்னேற்றமும் செய்வதில்லை. தங்களுடைய முன்னாள் வாழ்க்கை படுமோசமாக இருந்ததால் கடவுள் தங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என அவர்கள் நினைக்கலாம். அரசனாகிய மனாசேயை யெகோவா எவ்வாறு நடத்தினார் என்பதை ஒருவேளை நீங்கள் விவரித்துக் காண்பிக்கலாம். (2 நா. 33:1-16) அல்லது பூர்வ கொரிந்துவில் வாழ்ந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு கிறிஸ்தவர்களாக ஆனதையும் கடவுளால் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டதையும் பற்றி சொல்லலாம்.—1 கொ. 6:9-11.
கடவுளுடைய தயவை இழந்துவிட்டதே தங்கள் பிரச்சினைகளுக்கு காரணமென சிலர் நினைக்கிறார்களா? யோபு பட்ட துன்பங்களையும் அவர் யெகோவாவுக்கு உத்தமமாக நிலைத்திருந்ததால் பெற்ற அபரிமிதமான ஆசீர்வாதங்களையும் பற்றி அவர்களுக்கு நினைப்பூட்டலாம். (யோபு 1:1-22; 10:1; 42:12, 13; சங். 34:19) யோபு ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும் என அவருடைய பொய் தேற்றரவாளர்கள் தவறாக விவாதித்தனர். (யோபு 4:7, 8; 8:5, 6) மாறாக, பவுலும் பர்னபாவும் சீஷர்களை பலப்படுத்தி, “விசுவாசத்தில் நிலைத்திருக்க உற்சாகப்படுத்தியபோது,” “அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று” கூறினார்கள். (அப். 14:21, 22; NW) அதேபோல இன்றும், எல்லா கிறிஸ்தவர்களும் உபத்திரவத்தில் சகித்திருக்க வேண்டும் என்பதையும் இப்படிச் செய்வது கடவுளுடைய பார்வையில் அதிக மதிப்புமிக்கது என்பதையும் எடுத்துக்காட்டி சோதனைகளை எதிர்ப்படுகிறவர்களை நீங்கள் பலப்படுத்தலாம்.—நீதி. 27:11; மத். 24:13; ரோ. 5:3, 4; 2 தீ. 3:12.
தங்களுடைய சொந்த வாழ்க்கையில் யெகோவா தமது வாக்குறுதிகளை நிறைவேற்றிய வழிகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி கேட்போரை உற்சாகப்படுத்துங்கள். இவ்வாறு நினைப்பூட்டுகையில், யெகோவா எவ்வாறு தாம் வாக்குறுதி அளித்தபடியே தனிப்பட்ட விதமாக தங்கள் சார்பாக ஏற்கெனவே செயல்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் உணரலாம். சங்கீதம் 32:8-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” யெகோவா வழிநடத்தியதையும் பலப்படுத்தியதையும் எண்ணிப் பார்க்க சபையாருக்கு உதவுங்கள்; அதன் மூலம் யெகோவா அக்கறை காண்பிக்கிறார் என்பதையும் தற்பொழுது எந்தப் பிரச்சினைகளை எதிர்ப்பட்டாலும் உண்மையில் உதவி செய்வார் என்பதையும் மிகவும் தனிப்பட்ட முறையில் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.—ஏசா. 41:10, 13; 1 பே. 5:7.
கடவுள் தற்பொழுது செய்கிறவற்றில் மகிழ்ச்சியை காண்பியுங்கள். உங்களுடைய சகோதரர்களுக்கு உதவி செய்ய நாடும்போது, இப்பொழுதே யெகோவா செய்துவரும் காரியங்கள் மீது அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள். இவை உங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கின்றன என்பதை காட்டும் விதத்தில் பேசுவது கேட்போருடைய இதயத்திலும் இதுபோன்ற உணர்ச்சிகளைத் தூண்டும்.
வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு நமக்கு யெகோவா எப்படி உதவுகிறார் என்பதை சிந்தியுங்கள். மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான வழியை அவர் நமக்கு காட்டுகிறார். (ஏசா. 30:21) குற்றச்செயல், அநீதி, வறுமை, வியாதி, மற்றும் மரணத்திற்குரிய காரணங்களை அவர் விளக்குகிறார், இவையனைத்திற்கும் எப்படி முடிவுகட்டுவார் என்பதையும் சொல்கிறார். அன்பான சகோதரர்களின் கூட்டுறவை அனுபவித்து மகிழச் செய்கிறார். ஜெபத்தின் வாயிலாக அவரிடம் பேசும் அருமையான சிலாக்கியத்தையும் தருகிறார். அவருடைய சாட்சிகளாக இருக்கும் பாக்கியத்தையும் நமக்கு அருளுகிறார். கிறிஸ்து ஏற்கெனவே பரலோகத்தில் அரியணையில் வீற்றிருப்பதையும், பழைய ஒழுங்கு முறையின் கடைசி நாட்கள் வெகு விரைவில் முடிவுக்கு வரவிருப்பதையும் காண நம் கண்களைத் திறக்கிறார்.—வெளி. 12:1-12.
இவற்றோடு கூட்டங்கள், வட்டார மற்றும் மாவட்ட மாநாடுகள் போன்ற ஆசீர்வாதங்களையும் அளிக்கிறார். இந்த ஏற்பாடுகளுக்கு உள்ளப்பூர்வ நன்றியை காண்பிக்கும் விதத்தில் நீங்கள் பேசும்போது, சகோதரர்களோடு ஒன்றுகூடுவதை அசட்டை செய்யக்கூடாது என்பதில் திடத்தீர்மானமாக இருக்க மற்றவர்களை பலப்படுத்துவீர்கள்.—எபி. 10:23-25.
நம்முடைய ஊழியத்தில் நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு அத்தாட்சி அளிக்கும் அறிக்கைகளும் பலத்திற்கு ஊற்றுமூலமாக திகழ்கின்றன. முதல் நூற்றாண்டில் பவுலும் பர்னபாவும் எருசலேமுக்கு பயணம் செய்தபோது, புறஜாதியார் மதம் மாறிய செய்தியை விவரமாக அறிவிப்பதன் மூலம் “சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.” (அப். 15:3) கட்டியெழுப்பும் அனுபவங்களை சகோதரர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்களும் சந்தோஷத்தை அளிக்கலாம்.
சகோதரர்கள் செய்யும் காரியம் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதைக் காண அவர்களுக்கு உதவி செய்யும்போது இன்னும் அதிக உற்சாகம் அளிக்கலாம். கிறிஸ்தவ ஊழியத்தில் பங்கு பெறுவதற்காக அவர்களை பாராட்டுங்கள். வயோதிகத்தாலும் வியாதியாலும் அதிகமாக ஊழியத்தில் ஈடுபட முடியாதபோதிலும் உண்மையோடு சகித்திருப்பவர்களைப் பாராட்டுங்கள். தமது நாமத்திற்காக அவர்கள் காண்பித்திருக்கும் அன்பை யெகோவா மறந்துவிட மாட்டார் என்பதை நினைப்பூட்டுங்கள். (எபி. 6:10) சோதனையில் நிரூபிக்கப்படும் விசுவாசம் விலையேறப்பெற்ற சொத்தாகும். (1 பே. 1:6, 7) நம்முடைய சகோதரர்களுக்கு இதை நினைப்பூட்ட வேண்டும்.
எதிர்கால நம்பிக்கையைப் பற்றி உணர்ச்சி ததும்ப பேசுங்கள். வரப்போகும் சம்பவங்களைப் பற்றி ஏவப்பட்டு எழுதப்பட்ட வாக்குறுதிகள் கடவுளை நேசிக்கும் அனைவருக்கும் உற்சாகத்தின் மிகப் பெரிய ஊற்றாக விளங்குகின்றன. ஒருவேளை உங்களுடைய சபையாரில் பெரும்பாலோர் இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். ஆனால், இந்த வாக்குறுதிகளைப் பற்றி நன்றியுணர்வோடு பேசுவதன் மூலம் அவற்றிற்கு நீங்கள் உயிரூட்டலாம், அவற்றின் நிறைவேற்றத்தில் நம்பிக்கையை ஊட்டலாம், இதயங்கள் நன்றியுணர்வால் பொங்கி வழியும்படி செய்யலாம். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நீங்கள் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துவது இதைச் செய்ய உங்களுக்கு உதவலாம்.
தமது ஜனங்களுக்கு உற்சாகமும் பலமும் அளிப்பதில் யெகோவா தாமே பிரதான ஊற்றுமூலராக திகழ்கிறார். என்றாலும், இந்த ஆசீர்வாதங்களை அளிப்பதில் நீங்களும் அவரோடு சேர்ந்து ஒத்துழைக்கலாம். சபையாரிடம் பேசும்போது, இதைச் செய்வதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.