உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 51 பக். 263-பக். 264 பாரா. 4
  • நேரத்திற்குள் முடித்தல், நேரத்தை சரிவர பிரித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நேரத்திற்குள் முடித்தல், நேரத்தை சரிவர பிரித்தல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • பொருத்தமான முடிவுரையும் உங்கள் நேரமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2004
  • சபை பேச்சுக்களைத் தயாரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 51 பக். 263-பக். 264 பாரா. 4

படிப்பு 51

நேரத்திற்குள் முடித்தல், நேரத்தை சரிவர பிரித்தல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பேச்சை முடியுங்கள், பேச்சின் ஒவ்வொரு பாகத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

ஏன் முக்கியம்?

முக்கிய குறிப்புகள் ஒவ்வொன்றுக்கும் போதுமான நேரம் ஒதுக்க வேண்டும். கூட்டத்தை சரியான நேரத்திற்குள் முடிப்பது முக்கியம்.

உங்களுடைய பேச்சின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு பேச்சின் நேரத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய கூட்டங்கள் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டு சரியான நேரத்திற்குள் முடிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. பேச்சு கொடுக்கும் ஒவ்வொருவரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

பைபிள் காலங்களில், வாழ்க்கையைப் பற்றிய மக்களின் நோக்குநிலை வித்தியாசமாக இருந்தது. “[சுமார்] மூன்றாம் மணிவேளை,” அல்லது “ஏறக்குறைய பத்துமணி வேளை” என நேரத்தை குத்துமதிப்பாக கூறினார்கள். (மத். 20:3-6; யோவா. 1:39) துல்லியமான நேரத்தைப் பற்றி பெரும்பாலும் யாருமே சட்டை பண்ணவில்லை. இன்றும் உலகில் சில பகுதிகளில், நேரத்தைப் பற்றி இதே கருத்துதான் நிலவுகிறது.

ஆனால் சிலர் உள்ளூர் பழக்கவழக்கத்தால் அல்லது தனிப்பட்ட விருப்பத்தால் நேரத்தை அதிகம் பொருட்படுத்தாதிருந்தாலும், அதற்கு தகுந்த கவனம் செலுத்த கற்றுக்கொள்வது நன்மை தரலாம். நிகழ்ச்சிநிரலில் அநேகர் நியமிக்கப்படும்போது, ஒவ்வொரு பாகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்ற நியமத்தை, சரியான நேரத்திற்குள் பேச்சுக்களை முடிக்கும் விஷயத்திற்கும் பொருத்தலாம்.​—⁠1 கொ. 14:⁠40.

ஒதுக்கப்பட்ட நேரத்தை கடைப்பிடித்தல். இதற்கு முக்கியமாக தேவைப்படுவது தயாரிப்பே. பொதுவாக, சரியான நேரத்தில் முடிப்பதற்கு சிரமப்படும் பேச்சாளர்கள் தகுந்த அளவு தயாரிக்க தவறிவிடுகிறார்கள். அவர்கள் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். அல்லது கடைசி நிமிஷம் வரைக்கும் தயாரிப்பை தள்ளிப்போட்டுக் கொண்டே போகலாம். சரியான நேரத்திற்குள் முடிப்பதற்கு, கொடுக்கப்பட்ட நியமிப்பை மதிக்க வேண்டும், நன்கு தயாரிப்பதற்கும் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு வாசிக்கும் நியமிப்பா? முதலில், படிப்பு 4 முதல் படிப்பு 7 வரையுள்ள ஆலோசனை குறிப்புகளை மறுபடியும் வாசித்துப் பாருங்கள்; சரளம், நிறுத்தம், தகுந்த இடங்களில் வலியுறுத்துதல், முக்கிய கருத்துக்களை வலியுறுத்துதல் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. பின்பு, அந்த ஆலோசனைகளைப் பின்பற்றி, நியமிக்கப்பட்ட பாகத்தை சத்தமாக வாசித்துப் பாருங்கள். நேரத்தை கவனித்துக் கொள்ளுங்கள். ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிப்பதற்கு நீங்கள் வேகமாக வாசிக்க வேண்டுமா? அதிக முக்கியத்துவம் இல்லாத பகுதிகளில் வேகத்தை கூட்டுங்கள், ஆனால் முக்கிய கருத்துக்கள் வரும் இடங்களிலெல்லாம் வலியுறுத்துவதற்கு நிறுத்தி மெதுவாக வாசியுங்கள். மீண்டும் மீண்டும் பழகிப் பாருங்கள். நீங்கள் சரளமாக வாசிப்பதில் முன்னேறுகையில், உங்களுடைய நேரத்தை கட்டுப்படுத்துவது சுலபம்.

நீங்கள் குறிப்புத்தாளைப் பயன்படுத்தி பேசுவீர்களா? சரியான நேரத்தில் முடிப்பதற்கு உங்களுடைய குறிப்புகளை விரிவாக​—⁠கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை​—⁠எழுத வேண்டிய அவசியமில்லை. 25-⁠ம் படிப்பில் நீங்கள் சிறந்த முறையை கற்றுக்கொண்டீர்கள். பின்வரும் ஐந்து குறிப்புகளை மனதில் வைத்திருங்கள்: (1) சிறந்த தகவல்களை தயாரித்துக்கொள்ளுங்கள், ஆனால் அதிகமாக அல்ல. (2) முக்கிய கருத்துக்களை மனதில் தெளிவாக பதித்துக்கொள்ளுங்கள், ஆனால் வரிக்கு வரி மனப்பாடம் செய்யாதீர்கள். (3) ஒவ்வொரு பாகத்திற்கும் எவ்வளவு நேரம் செலவழிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் அல்லது சில குறிப்புகளுக்கு வரும்போது எவ்வளவு நேரம் கடந்திருக்க வேண்டும் என்பதை உங்களுடைய குறிப்புத்தாளில் குறித்துக்கொள்ளுங்கள். (4) தயாரிக்கும்போது நேரம் அதிகமாக சென்றால், எதை விட்டுவிடலாம் என்பதை யோசியுங்கள். (5) உங்களுடைய பேச்சை பழகிப்பாருங்கள்.

ஒத்திகை பார்ப்பது முக்கியம். ஒத்திகை பார்க்கையில், உங்களுடைய பேச்சின் ஒவ்வொரு பாகத்திற்கும் எடுக்கும் நேரத்தை கவனியுங்கள். உங்களுடைய முழு பேச்சையும் நியமிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கும்வரை மறுபடியும் மறுபடியும் ஒத்திகை பாருங்கள். உங்களுடைய பேச்சில் அதிகமான விஷயங்களை திணிக்காதீர்கள். வீட்டில் பழகிப் பார்க்கும்போது எடுக்கும் நேரத்தைவிட சபையில் பேச்சு கொடுக்கையில் சற்று கூடுதலான நேரம் எடுக்கலாம்; ஆகவே இதை மனதில் வைத்து நேரத்தை திட்டமிடுங்கள்.

பாகங்களைப் பிரித்தல். பேச்சு பாகங்களை சரியாக பிரிப்பது பேச்சை சரியான நேரத்திற்குள் முடிப்பதோடு நெருங்கிய தொடர்புடையது. பெரும்பாலான நேரத்தை பேச்சின் பொருளுரைக்கு செலவழிக்க வேண்டும். அங்குதான் பேச்சின் முக்கிய குறிப்புகள் வருகின்றன. 38-⁠ம் படிப்பில் சொல்லப்பட்டுள்ள மூன்று நோக்கங்களை சாதிப்பதற்கு ஏற்ற அளவில் முகவுரை இருக்க வேண்டும். 39-⁠ம் படிப்புக்கு இசைவாக, திறம்பட்ட முடிவுரைக்கு போதுமான நேரம் இல்லாமல் போகுமளவுக்கு பொருளுரை மிக நீளமாக இருக்கக் கூடாது.

சரியான நேரத்திற்குள் முடிப்பதற்கு முயற்சி எடுப்பது ஒரு நல்ல பேச்சை கொடுக்க உதவும், அதோடு நிகழ்ச்சிநிரலின் மற்ற பாகங்களை கையாளுகிறவர்களுக்கும் முழு சபையாருக்கும் மரியாதை காட்டுவதாகவும் இருக்கும்.

எப்படி செய்வது

  • முன்கூட்டியே நன்கு தயாரியுங்கள்.

  • உங்களுடைய பேச்சின் ஒவ்வொரு பாகத்திற்கும் தகுந்த நேரத்தை பிரித்துக்கொள்ளுங்கள், பின்பு அதை கடைப்பிடியுங்கள்.

  • உங்களுடைய பேச்சை ஒத்திகை பாருங்கள்.

பயிற்சி: கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் வந்துசேருவதற்கு திட்டமிடுங்கள். பயணத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். காலதாமதத்தை உண்டாக்கும் பொதுவான பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். திட்டமிட்டபடியே பல தடவை முயன்று பாருங்கள், தேவையான மாற்றங்களை செய்யுங்கள். இதுபோன்ற நியமங்கள் பேச்சு கொடுப்பதற்கும் பொருந்தும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்