சிலியாக்-வயிற்று கோளாறை சமாளித்தல்
பின்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
“என்ன மாவுலே இந்தக் கேக்கை செய்தீங்க?”
“ஏன் கேக்கிறீங்க, சோளமாவிலிருந்து.”
“கேக்கு லைனிங் கொடுக்க என்ன யூஸ் பண்ணீங்க?”
“ரொட்டித் தூள்களை.”
“ரொம்ப சாரிங்க, நான் இந்தக் கேக்கை சாப்பிடக்கூடாது.”
உங்களுக்கு சிலியாக்-வயிற்றுக்கோளாறு இருந்தால் தர்மசங்கடத்தில் மாட்டிவிடும் இந்த உரையாடலை கேட்டுக்கேட்டு உங்கள் காது புளித்துப்போயிருக்கும். பல உணவுகளில் இருக்கும் சர்வசாதாரணமான ஒரு சத்துப்பொருளை ஜீரணிக்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் போகும்போது ஜீரண மண்டலத்தில் கோளாறு ஏற்படுகிறது. கோதுமை, பார்லி, ரே, ஓட்ஸ் போன்ற சில தானிய வகைகளில் கிளியாடின், குளூட்டின் ஆகிய இரண்டு கரிமப்பொருட்கள் உள்ளன. குளூட்டினில் உள்ள கிளியாடினின் ஒரு பகுதி வயிற்றுக்கோளாறை ஏற்படுத்துகிறது. நிறையப் பேருக்கு குளூட்டின் ஒத்துக்கொள்ளும். ஆனால் சிலியாக் நோய் (celiac) என்கிற குறிப்பிட்ட வயிற்று கோளாறு உள்ளவர்களுக்கோ பெரும் தீங்காக முடியும். இது சிலியாக் உள்ள நபர்களின் சிறுகுடலின் மெல்லிய படலத்தை அழித்து, தாதுப்பொருட்களை உறிஞ்சும் சக்தியை குறைக்க வல்லது.
சிலியாக் கோளாறு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்: வயிற்று வலி, வயிறு உப்புசம், பேதி, உடல் மெலிதல். இதே அறிகுறிகள் வேறு பல வியாதிகளில் காணப்படுவதால் சிலியாக்கை கண்டுப்பிடிப்பது கஷ்டம். சிலியாக் கோளாறால் அவதிப்படும் ஜூடி கூறியதாவது: “ரொம்ப காலமா, எனக்கு குடலில்தான் ஏதோ (irritable bowel syndrome) என்று சொன்னார்கள்.”
சிலியாக் கோளாறின் அறிகுறிகள், பொதுவாகவே சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே தெரிந்துவிடும். ஆனால் சிலருக்கு நடுத்தர வயதுவரை தெரியவே தெரியாது. சிலருக்கு இந்த வியாதி எப்போதும் கூடவே இருந்திருக்கும், ஆனால் வெளியே தெரிந்திருக்காது என்கிறார்கள் டாக்டர்கள். எது எப்படியோ, சிலியாக் வியாதிக்கு வைத்தியம் பார்க்காவிட்டால் ஆபத்தில் முடியும் என்பது உண்மை. சிலியாக் வியாதியுள்ள பிள்ளைகள் வளர்ச்சி குன்றி, உடல் மெலிந்து, வயிறு உப்பி, தசைகள் வளர்ச்சியடையாமல் இருப்பார்கள். வைட்டமின்கள் உடலில் கலப்பதை இந்நோய் தடைசெய்வதால் இரத்த சோகை, வைட்டமின் D குறைவால் ஏற்படும் எலும்பு நோய்கள், ஈறு, பல் சம்பந்தமான நோய்கள் (scurvy) வருவதோடு இன்னும் பல நோய்கள் படையெடுக்கின்றன. நிலைமை முற்றினால் எலும்பு தாறுமாறாக வளர்ந்துவிடும் அல்லது மெலிந்து உளுத்துப்போய்விடும். குறிப்பாக, பெரியவர்கள் சிலருக்கு சிலியாக் கடுமையாகவும், நாள்படவும் இருந்தால் மரணமும் ஏற்படலாம். ஆனால், சிலியாக் உள்ள நிறையப் பேர் இதை சமாளித்துவிடுகிறார்கள். சிலர், சரியான வைத்தியத்தால் நன்றாக தேறி வருகிறார்கள்.
என்னென்ன செய்யலாம்?
குளூட்டின் இல்லாத உணவு வகைகளை உட்கொள்வதே சிறந்த மருந்து. கோதுமை, ரே, பார்லி, ஓட்ஸ் ஆகிவற்றால் ஆன எந்தப் பொருளையும் தொடவேகூடாது. இப்படி வாயைக் கட்டிப்போட்டு பத்தியம் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும். சிலியாக் வியாதியால் அவதிப்படும் ஒருவர் கூறுகிறார்: “கோதுமை, பார்லி, ரே அல்லது ஓட்ஸ் ஆகியவற்றை நான் சாப்பிடக்கூடாது என்று முதலில் சொன்னபோது, ‘இது என்ன பெரிய கஷ்டம். வெறும் ரொட்டி, கேக் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. அவ்வளவுதானே’ என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது நிறைய ஐட்டங்கள் இந்தத் தானியங்களால் ஆனவை என்று. அதிலும் குறிப்பாக எதையெடுத்தாலும் கோதுமை! கோதுமை! கோதுமை! எனக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!”
சிலியாக் வியாதியுள்ளவர்கள் உணவு பொட்டலங்களில் ஒட்டியிருக்கும் லேபிள்களை கவனமாக வாசிக்க வேண்டும். இவர்கள் கோதுமை, ரே, பார்லி ஓட்ஸ் தானிய வகைகளை தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக சோளம், அரிசி, சோயாபீன்ஸ், தினை (millet), உருளைக்கிழங்கு ஆகியவற்றால் ஆன உணவு வகைகளை சாப்பிடலாம். குளூட்டின் நீக்கிய, நிறைய மாவு வகைகள் உள்ளன. அவற்றையும் சாப்பிடலாம். சூப்பர் மார்கெட்டில், நீங்கள் ‘சாப்பிடக்கூடாத பொருட்கள்’ அடுக்கடுக்காக வைத்திருப்பதை பார்க்கும்போது வாழ்க்கையே வெறுத்துவிடுவீர்கள். கவலைப்படாதீர்கள். சாப்பிடக்கூடாத பொருட்களைப் பார்த்து எச்சில் விழுங்குவதைவிட, உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் உணவுகளை தேடுங்கள். இப்படியே செய்துவந்தீர்கள் என்றால், கொஞ்ச நாள் ஆனதும், ஷாப்பிங் போய், சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்களைப் பார்த்தாலும் சட்டைசெய்ய மாட்டீர்கள்.
குளூட்டின் இல்லாத உணவு சாப்பிடும் உங்களுக்கு பார்ட்டிகளுக்கு போவதென்றாலே கஷ்டமாக தோன்றலாம். சிலியாக் நோய் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அத்தகைய பார்ட்டிகளை தவிர்த்துவிடாதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் நண்பர்களிடத்தில் சிலியாக் நோயைப் பற்றி விளக்கிக்கூறுங்கள். நீங்கள் குளூட்டின் இல்லாத உணவை சாப்பிட உதவும்படி கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய தேவையைத் தெரிந்துகொண்டால் சந்தோஷமாக உதவுவார்கள். ஒருசிலர் உங்கள் மனம் புண்படும்படி ஏதாவது சொல்லிவிட்டால் வெறுப்பை வெளிக்காட்டாதீர்கள். நீங்கள் கனிவோடு பதிலளித்தால், உங்களிடத்தில் பரிவோடு நடந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் பிறக்கும்.
இலேசான சிலியாக் வியாதியுள்ள ஒருசிலர் நன்கு குணமாகி, பழையப்படி குளூட்டின் உள்ள உணவை சாப்பிடுகிறார்கள். உங்களாலும் பழையப்படி குளூட்டின் உள்ள உணவுகளை சாப்பிட முடிந்தாலும்சரி, சாப்பிட முடியாவிட்டாலும்சரி, நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள். சிலியாக் வியாதியுள்ள ஒரு பெண்ணின் பரிந்துரை: “இவ்வியாதியின் நல்ல அம்சங்களை நினைத்துப்பாருங்கள்.” நல்ல அம்சங்களா? அவரே தொடர்ந்து கூறுகிறார்: “சிலியாக் வியாதி தொற்றுவதில்லை. பத்தியம்தான் இதன் வைத்தியம். ஆகவே வைத்தியம் சுலபமானது, சிக்கல் இல்லாதது. நீங்கள் பத்தியத்தை கடைப்பிடிக்க பிடிக்க, உடல் நலம் தேறிவரும். உங்களுக்கு சிலியாக் வியாதி இருந்தாலும் நல்ல ஆரோக்கியமாக இருப்பதை அநேகமாக உணருவீர்கள்.”
[பக்கம் 19-ன் பெட்டி]
உதவிக்கரம் நீட்டுங்கள்
உங்களுக்கு தெரிந்த சிலியாக் வியாதியுள்ள நபர், குறிப்பிட்ட உணவை வேண்டாம் என்று சொன்னால், ‘தொல்லைப்பிடித்த ஆசாமி’ என்று முத்திரை குத்திவிடாதீர்கள். “பார்த்தா நல்லா கல்லுருண்ட மாதிரி இருக்கும் இவருக்கா வியாதி?” என்று வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். மிக முக்கியமாக, “சும்மா கொஞ்சம் சாப்பிட்டால் ஒண்ணுமாகாது” என்று சொல்லி சிலியாக் வியாதியுள்ளவருக்கு குளூட்டின் உள்ள உணவை திணிக்க முயலாதீர்கள். உங்களது ‘ஒண்ணுமாகாது’ ஜோசியம் பொய்யாகிவிடும்! சிலியாக் வியாதியுள்ளவர்களின் சிறுகுடலை பொருத்தவரை குளூட்டின் விஷமே. அது கண்டிப்பா கைவரிசையைக் காட்டிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சிலியாக் வியாதியுள்ளவர்கள் கேட்கும் பத்திய உணவை கொடுப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டம் அல்ல. நீங்கள் மார்க்கெட் போய் வாங்கவிருக்கும் சாமான்களில், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் போதும், நோயாளிக்கு ஒத்துக்கொள்ளும் நிறையப் பொருட்களை வாங்கலாம். எல்லா உணவு வகைகளையும் சிலியாக் நோயாளி “சாப்பிடும்” ஐட்டங்களாக தயாரிக்கவும் முடியும். குளூட்டின் இல்லாத உணவை விருந்தினர் அனைவரும் உண்டு மகிழலாம். அவர்களுக்கும் வித்தியாசம் தெரியவும் தெரியாது. மேலும், மற்றவர்கள் முன் காலைவாராமல் இருந்தாலே கோடி புண்ணியம் என்று நினைப்பார் சிலியாக் நோயாளி.
[பக்கம் 18-ன் படம்]
கோதுமை, பார்லி, ரே, ஓட்ஸ் தானியங்களை சிலியாக் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்