ஐந்து மகன்களை எனக்கு தந்த யெகோவாவுக்கு நன்றி
ஹலன் சால்ஸ்பெரி சொன்னது
மார்ச் 2, 1997, என்னை சோகத்தில் மூழ்கடித்த நாள். அமெரிக்காவில், டில்வாரி மாகாணத்தில் வில்மிங்டன் நகரில் என் கணவர் தீனுடைய சவ அடக்கத்தில் கலந்துகொள்ள சுமார் 600 நண்பர்களும், உறவினர்களும் வந்திருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் அவர் மூப்பராகவும் சபைக் கண்காணியாகவும் சேவித்தார். 40 வருடங்களாக நான் அவரோடு நடத்திய இல்லற வாழ்க்கையை நினைத்துப்பார்த்தால் அவருக்கு நன்றி சொல்லி மாளாது. இப்போது தீன் எங்களையெல்லாம் விட்டுவிட்டு போனாலும், எல்லாம் வல்ல இறைவன் யெகோவாவின் நினைவில் பத்திரமாக இருக்கிறார். எதிர்காலத்தில் அவரை காண்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
தீன் தனது பள்ளிப்படிப்பை 1950-ல் முடித்த கையோடு, விமானப்படையில் சேர்ந்துவிட்டார். அவருக்கு மதத்தில் ஈடுபாடு கிடையாது. ஒருகாலத்தில் நான் கத்தோலிக்க மதத்தின் தீவிர பக்தை. என் கணவரோ அதன் போதனைகளை ஒத்துக்கவே மாட்டார். ஆனால் குழந்தைகள் பிறந்தால் அவர்களை கத்தோலிக்கர்களாக வளர்க்க இரண்டுபேரும் ஒத்துக்கொண்டோம். தினந்தோறும் இரவு நேரங்களில் நாங்கள் முழங்கால்போட்டு, அமைதியாக ஜெபம் செய்வோம். நான் கத்தோலிக்க ஜெபங்களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பேன். தீன் தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி ஜெபம் செய்வார். காலம் என்னும் நீர் பாய்ச்சி, நாங்கள் அறுவடை செய்த ஐந்து கண்மணிகள்: பில், ஜிம், ஜூனியர் தீன், ஜோ, சார்லி.
நான் விடாமல் சர்ச்சுக்குப் போவேன். பையன்களையும் கூட்டுக்கொண்டு போவேன். ஆனால் சர்ச்சின் நீல சாயம் வெளுக்க கண்டேன். குறிப்பாக வியட்நாம் போரில் சர்ச் ஈடுபட்டப்போது சுத்தமாக வெளுத்துவிட்டது. அமெரிக்கா வியட்நாமோடு போர் புரிவது சரிதானா என்று ஜனங்கள் கத்தோலிக்க சர்ச்சின் கார்டினல் ஸ்பெல்மேன் என்பவரிடத்தில் கேட்டபோது, “சரியோ, தவறோ என் நாட்டை நான் ஆதரிப்பேன்” என்று பதிலளித்தார். நான் போகும் சர்ச் போரில் ஈடுபட்டாலும்கூட என் பிள்ளைகளை போருக்கு அனுப்பக்கூடாது என்பதில் தீர்மானமாயிருந்தேன். ஆனால் எப்படியும் ஒரு பிள்ளையாவது பாதிரியாக ஆக்கவேண்டும்; என் கணவரும் கத்தோலிக்கராக ஆகவேண்டும் என்று வேண்டுதல் செய்வேன்.
மாறியது மனம்
ஒரு சனிக்கிழமை மாலையில் நடந்த பார்ட்டியில் நானும், கத்தோலிக்க நண்பர்கள் ஒருசிலரும், உள்ளூர் பாதிரியும் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் குடித்துக்கொண்டு, ஜாலியாக இருந்தோம். அப்போது பாதிரியைப் பார்த்து ஒரு பெண் இவ்வாறு கேட்டார்: “பாதார், இப்படி பார்ட்டியில் குடித்துவிட்டு, சர்ச் மாஸுக்கு நாளை காலை போக முடியாமல் போனால், மரண தண்டனைக்கு உண்டான பெரும் பாவமில்லையா?”
“இல்லை, இல்லை. இதெல்லாம் பரவாயில்லை. நாங்கள் செவ்வாய்கிழமை இரவு பாதிரியார் வீட்டில் மாஸ் நடத்துவோம். அதில் வந்து கலந்துகொண்டு, உங்கள் கடமையை நிறைவேற்றிவிடுங்கள்” என்று பதிலளித்தார்.
தலையே போனாலும், ஞாயிற்றுக்கிழமை மாஸை தவறவிடக்கூடாது என்று சின்னப்பிள்ளையாக இருந்தபோதே எனக்கு கற்றுக்கொடுத்திருந்தார்கள். பாதிரியார் சொன்னதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது என்றதும், அவர் என்னை சபித்தார். பிறகு போயும் போயும் ஒரு பெண், பாதிரியாரை திருத்துவதா என்று கோபத்தில் வெடித்தார்.
இதைப் பார்த்ததும், ‘அச்சச்சோ! என்னுடைய மகன்களும் இப்படிப்பட்ட ஒரு பாதிரியாக ஆகவேண்டுமென்றா இவ்வளவு காலம் வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறேன்?’ என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். எல்லா பாதிரிமாரும் இவரைப்போல் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை. ஆனாலும் என் மனதில் சந்தேக விதை விழுந்துவிட்டது!
1960-களின் மத்தியில், பிலதெல்பியா, பென்ஸில்வேனியா, பிறகு நியூயார்க், டில்வாரி ஆகிய இடங்களில் யெகோவாவின் சாட்சிகள் எங்களை வந்து சந்தித்தார்கள். அவர்களுடைய கிறிஸ்தவ வைராக்கியத்தை கண்டு நான் மலைத்தது உண்மையே. ஆனால், அவர்கள் எப்போது பேசவந்தாலும், “மன்னிச்சிடுங்க. நான் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவ. நீங்கள் சொல்லற விஷயத்தை கேட்க இஷ்டமில்லை” என்று சொல்லிவிடுவேன்.
பிறகு, 1970, நவம்பரில் ஒருநாள் காலை சாட்சிகள் மறுபடியும் வந்தார்கள். வெளியே கடும்குளிர் வாட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் பைபிளிலிருந்து ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, சங்கீதம் 119:105-ஐ வாசித்தார்கள்: “உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” இவ்வார்த்தைகள் சுளீரென்று உறைத்தது எனக்கு. ‘பைபிள்! அவர்கள் கேட்ட கேள்விக்கு அதுதான் விடையாக இருக்கும். ஆனால் என்னிடத்தில் ஒரு பைபிள்கூட இல்லையே!’ என்று யோசித்தேன். கத்தோலிக்கர்களுக்கு பைபிள் தேவையில்லை. பைபிள் இருந்தால் நம்மை குழப்பிவிடும்; பாதிரியார் மட்டும் பைபிளை வைத்திருப்பார். அவரே அதை வாசித்து, விளக்கம் கொடுப்பார் என்று எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். பைபிளை வைத்திருக்காததால் நான் ஒரு உண்மையான கேத்தலிக் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற பைபிளை விளக்கும் புத்தகம் ஒன்றை அன்று சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அதே வாரத்தில் அப்புத்தகத்தை படித்து முடித்தேன். சத்தியம் எனக்குக் கிடைத்துவிட்டதை அறிந்துகொண்டேன்! சாட்சிகள் மறுபடியும் வந்தபோது, இரண்டு பைபிள்களை கொண்டு வந்திருந்தார்கள். அவற்றில் ஒன்று கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. அந்த பைபிள் விளக்க புத்தகத்தில் கொடுத்திருந்த வசனங்கள் கத்தோலிக்க பைபிளிலும் இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் தாளவில்லை! அன்று முதல் எனக்கு தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்தினார்கள். இதற்கிடையில் என் அக்கா சாலியும் பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தார். ஆகஸ்ட், 1972-ல் நானும், என் அக்காவும் முழுக்காட்டுதல் எடுத்தோம்.
என் கணவர் தீன் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. கத்தோலிக்க மதம் அல்லாத வேறொன்றில் நான் ஆர்வம் காட்டுவதைப் பார்த்து அவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருந்திருக்கிறார். பையன்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்றால், முன்பெல்லாம் கூச்சல் போடுவேனாம். ஆனால், ‘மூர்க்கத்தையும், கூக்குரலையும்’ பைபிள் எச்சரிக்கிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன். (எபேசியர் 4:31, 32) அதோடு கூச்சல் போட்டு பிள்ளைகளை வளர்க்க முடியாது. ஒருநாள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி என் கணவர் தன் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது: “அம்மா, இந்த ஜனங்கள் எதைப் பிரச்சாரம் செய்யறாங்களோ, அதையே வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறார்கள்!” விரைவில் அவரும் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். ஜனவரி, 1975-ல் தீன் முழுக்காட்டுதல் எடுத்து, யெகோவாவின் சாட்சி ஆனார்.
ஐந்து மகன்களுக்கு வளர்ப்பு-பயிற்சி
ராஜ்ய மன்றத்திற்கு நான் போக ஆரம்பித்தேன். கூட்டங்களில் அவ்வளவு நேரம் பையன்களால் உட்கார முடியாது என்று நினைத்து, அவர்கள் அப்பாவோடு இருக்கட்டும் என்று வீட்டிலேயே விட்டுவிட்டு போவேன். தனியாக தொல்லையின்றி போய்வருவது எனக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் கூட்டத்தில் பேசிய ஒருவர், நம் கூட்டத்திற்கு ஆகும் நேரத்தை ஒப்பிட்டு இவ்வாறு கேட்டார்: “டிவி முன் எவ்வளவு நேரம் உங்கள் பிள்ளைகளால் உட்கார முடியும் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா?” ஐயோ! என்னுடைய பையன்களும் வீட்டில் டிவிதானே பார்த்துக் கொண்டிருப்பார்கள்! ‘இனி அவங்களையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்’ என்று முடிவுசெய்தேன். பையன்களை கூட்டிக்கொண்டு போக கணவரும் சம்மதித்தார். விரைவில் அவரும்கூட வரத்தொடங்கினார்.
கூட்டங்களுக்கு நாங்கள் தவறாமல் போனதால் எங்கள் குடும்ப வாழ்க்கை சீராகி, உறவுகள் உறுதிப்பெற்றன. அதுமட்டுமல்ல. இன்னும் எத்தனையோ நன்மைகள் வந்து சேர்ந்தன. நல்ல பெற்றோர்களுக்கு வேண்டிய திறமையை வளர்த்துக்கொள்ள நானும், தீனும் எப்போதும் முயன்றோம். பிள்ளை வளர்ப்பில் எங்குத் தவறு செய்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டு, பைபிள் தரும் வழிநடத்துதல்களைக் கவனமாக பின்பற்றினோம். எங்களுக்கு ஒரு சட்டம், பிள்ளைகளுக்கு ஒரு சட்டம் என்று வைக்கவில்லை. என் கணவருக்கும் எனக்கும் எது நல்லதாக படுகிறதோ அதுவே என் பிள்ளைகளுக்கும் நல்லதாகப்படும். மக்களிடத்தில் பிரசங்கிப்பதை இடைவிடாமல் செய்துவந்தோம்.
பொழுதுப்போக்கில் ஆளாளுக்கு தங்கள் இஷ்டப்படியில்லாமல் குடும்பமாக ஈடுபட்டோம். வன்முறையும், ஆபாசமும் உள்ள திரைப்படங்களை பார்க்க மாட்டோம். ஸ்கேட்டிங், பந்து, மினி கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவோம். சுற்றுல்லா பூங்காக்களுக்கும் (amusement parks) பிக்னிக்கும் போவோம். வெள்ளிக்கிழமை இராத்திரிகளில் ஜாலியா பீஸா சாப்பிட்டு வருவோம். தீன் அன்பே உருவான குடும்பத்தலைவன். குடும்பம் என்பதன் இலக்கணத்தை எங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொண்டோம்.—எபேசியர் 5:22, 23.
நான் யெகோவாவின் சாட்சிகளோடு 1970-ல் பைபிள் படிக்க துவங்கியபோது, பில்லுக்கு வயது 12, ஜிம்முக்கு 11, ஜூனியர் தீனுக்கு 9, ஜோவுக்கு 7, சார்லிக்கு 2. அவர்களுக்கு சர்ச் போகும் பழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் பைபிளிலிருந்து விஷயங்களை கற்கத்தொடங்கிவிட்டார்கள். விஷயங்களை கற்க கற்க எங்களது ஆர்வ வெள்ளத்திற்கு அணைப்போட முடியவில்லை. நான் அவர்களை கூப்பிட்டு: “ஓடிவாங்க, ஓடிவாங்க, இதோ இங்கே என்ன போட்டிருக்கு பாருங்க!” என்று பைபிளிலிருந்து சுட்டிக்காட்டுவேன். எங்களுக்கு புதிதாக தோன்றும் விஷயங்களை எல்லாரும் சேர்ந்து ஆர்வத்தோடு அக்குவேறு ஆணிவேறாக அலசுவோம். இந்த உலகில் எதனோடும் மதிப்பிட முடியாத புத்தகமாகிய பைபிளை என் பிள்ளைகள் படித்து, யெகோவாவை நேசிக்க கற்றுக்கொண்டார்கள். வெறும் அம்மா அப்பாவுக்கு மாத்திரம் அல்ல, தங்களை படைத்த கடவுளுக்கு உத்தரவாதம் உள்ளவர்கள் என்பதை உணர்ந்தார்கள்.
பைபிள் சத்தியத்தை கற்பதற்கு முன்பு எங்களுக்கு நிறையக் கடன் இருந்தது. ஒருசில கடன்களை அடைப்பதற்காக, எங்களுடைய வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டிற்கு குடிபுகுந்தோம். எங்களுடைய புதிய காரையும் விற்றுவிட்டு பழைய காரை வாங்கினோம். முடிந்த மட்டும் எளிமையாக வாழ்ந்தோம். சிக்கனமாக வாழ்ந்ததால் நான் வெளியே வேலைக்கு போகாமல், வீட்டிலிருந்து என் பிள்ளைகளை கவனிக்க முடிந்தது. பிள்ளைகளுக்கு வீட்டில் அம்மா அவசியம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போனப்பிறகு கிடைத்த நேரத்தையும் கிறிஸ்தவ ஊழியத்தில் செலவிட்டதால், என்னால் அதிகம் செய்யமுடிந்தது. இப்படியாக, செப்டம்பர் 1983-ல் நான் ஒரு பயனியராக (முழுநேர ஊழியராக) ஆனேன். என் பிள்ளைகளுக்கு நல்ல நல்ல பொருள்களைக் கொடுக்க முடியவில்லை என்பது உண்மை. ஆனாலும், அந்தப் பொருட்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எங்கள் பிள்ளைகள் மனதில் தோன்றியதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தொழில் சார்ந்த பாடங்களை எடுத்துக்கொண்டு, தோட்டக்கலை, தச்சுவேலை, ஆட்டோ மெக்கானிக்ஸ், கிராஃபிக்ஸ் ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் தேர்ச்சி அடைந்து, தங்கள் சொந்த கால்களில் நிற்கும் தகுதியைப் பெற்றார்கள்.
என் குடும்பத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும், எனக்குள் இப்படி சொல்லிக்கொள்வேன்: ‘செல்வம் அவ்வளவாக இல்லாவிட்டால் என்ன, என் குடும்பம்போல் சந்தோஷமான குடும்பம் வேறு இந்த உலகத்திலே இருக்க முடியுமா?’ விரைவில், தீனும், பிள்ளைகளும் சபையில் நிறையப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்கள். 1982-ல் தீன் மூப்பராக நியமிக்கப்பட்டார். எட்டு வருடம் கழித்து, 1990-ல் என் பெரிய மகன் பில் மூப்பராக நியமிக்கப்பட்டான். அதே வருடத்தில் ஜோவும், 1991-ல் ஜூனியர் தீனும், 1992-ல் சார்லியும், 1993-ல் ஜிம்மும் மூப்பர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
பெற்றோர்களாக இங்கே அங்கே என்று ஒருசில தவறுகள் செய்திருப்போம். அவற்றை மறுக்கவில்லை. நாங்கள் செய்த எல்லா நல்ல விஷயங்களும் அவ்வளவாக ஞாபகம் இல்லை. கிறிஸ்தவ நண்பர் ஒருவர் என் பிள்ளைகளை அணுகி, சிறு வயதுமுதல் கிறிஸ்தவர்களாக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கேட்டார். அதிலும் குறிப்பாக எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பயிற்சியில், கற்றுக்கொண்ட எந்தெந்த பைபிள் நியமங்கள் அவர்கள் இளம் மனதில் பதிந்தன என்றும், அவை கிறிஸ்தவ மூப்பர்களாக ஆவதற்கு எவ்வாறு உதவின என்றும் கேட்டார். அவர்கள் சொன்ன பதில்கள் என் மனதுக்கு இதமளித்தன.
பிள்ளைகளின் உள்ளங்களிலிருந்து உதிர்ந்தவை
பில்: “ரோமர் 12:9-12-ல் கற்ற விஷயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்தன. அதிலிருந்து ஒரு பகுதி: ‘சகோதர சிநேகத்திலே ஒருவர்மேல்லொருவர் பட்சமாயிருங்கள். கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். . . . ஆவியிலே அனலாயிருங்கள்; . . . நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்.’ மற்றவர்களிடம் அன்பு காட்டுவதென்றால் என்ன என்பதை என் பெற்றோரிடம் கற்றேன். மற்றவர்களிடத்தில் அன்பை காட்டி, அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை கண்ணார கண்டேன். குடும்பத்தில் எப்போதும் அன்பு நிலவியதால், நாங்கள் கற்ற பைபிள் சத்தியங்களும் எங்கள் சிந்தனைகளை ஊடுருவி, நிரந்தரமாக மனதில் குடிபுகுந்தன. அன்புதான் சத்தியத்தில் நிலைத்திருக்க உதவியது. பைபிள் சத்தியத்தை என் பெற்றோர்கள் முற்றும் முழுக்க நேசித்தார்கள். அதனால் பைபிள் சத்தியங்களை நேசிப்பதில் எனக்கு ஒரு கஷ்டமும் இருக்கவில்லை. அதில் நிலைத்திருப்பதிலும் எனக்கு கஷ்டமில்லை.”
ஜிம்: “மத்தேயு 5:37-ல் (பொ.மொ.) உள்ள மிக முக்கிய நியமம், ‘ “ஆம்” என்றால் “ஆம்” எனவும் “இல்லை” என்றால் “இல்லை” எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்து வருகிறது.’ இந்த பைபிள் நியமம்தான் டக்கென்று என் ஞாபகத்துக்கு வருகிறது. பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்கும், என் அண்ணனுக்கும், தம்பிகளும் எப்போதும் தெரியும். கிறிஸ்தவர்கள் வாழவேண்டிய விதத்தை வாழ்ந்து காட்டியவர்கள் எங்கள் பெற்றோர். அவர்கள் இரண்டுபேரும் எல்லா விஷயத்திலும் எப்போதும் ஒத்துப்போவார்கள். ஒருபோதும் காரசாரமான விவாதம் செய்ததில்லை. அவர்களுக்குள் ஏதேனும் கருத்துவேறுபாடு இருந்ததா என்றுகூட எங்களுக்குத் தெரியாது. ரொம்ப ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்களது ஒற்றுமை எங்கள் எல்லார் மனங்களிலும் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. அம்மா அப்பாவின் நம்பிக்கையை, எல்லோரையும்விட யெகோவாவின் நம்பிக்கையை தகர்த்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தோம்.”
தீன்: “நீதிமொழிகள் 15:1 இவ்வாறு சொல்கிறது: ‘மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.’ அப்பா பொறுமையின் சிகரமாக இருந்தார். நான் டீனேஜராக இருந்தபோதுகூட அவரோடு சர்ச்சை செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் நிலைகுலைந்து போனால்கூட அமைதியாக இருப்பார். சிலநேரங்களில் செய்த தப்புக்கு தண்டனையாக என் அறைக்குள் போகும்படி சொல்வார் அல்லது ஒருசில சலுகைகளை என்னிடத்திலிருந்து பறித்துவிடுவார். அப்போதுகூட நாங்கள் விவாதித்ததே கிடையாது. அவர் எங்களுக்கு வெறும் அப்பாவாக மாத்திரம் அல்ல, நண்பராகவும் இருந்தார். அவருக்கு ஏமாற்றம் தர நாங்கள் விரும்பவில்லை.”
ஜோ: “2 கொரிந்தியர் 10:5-ல் பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.’ யெகோவாவின் தராதரங்களுக்கும், போதனைகளுக்கும் கீழ்ப்படிய எங்கள் வீட்டில் கற்றுக்கொடுத்தார்கள். சத்தியமே எங்கள் வாழ்க்கை. கூட்டங்களுக்கு செல்லுதலே எங்கள் வாழ்க்கைப் பாதை. கூட்டங்கள் நடைபெறும் இரவுகளில் வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ள மாட்டோம். வாழ்க்கையில் கிறிஸ்தவ ஊழியத்திற்கும் முக்கிய இடம் கொடுத்து, தவறாமல் சென்றோம். இஷ்டப்பட்டால் போகலாம் என்ற சாய்ஸ் எல்லாம் கிடையாது. எங்கள் பிரண்ட்ஸ் ராஜ்ய மன்றத்தில் இருந்தார்கள். வேறு இடத்தில் நண்பர்களை தேடவேண்டிய அவசியம் இல்லை. ஒரு அப்பா தன் பிள்ளைகளுக்கு ஜீவ பாதையைக் காட்டுவதைவிட வேறு எதை பெரிதாக செய்துவிட முடியும்!”
சார்லி: “நீதிமொழிகள் 1:7 (தி.மொ.) என் மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்துவிட்டது. அது குறிப்பிடுவதாவது: ‘யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம், ஞானத்தையும் போதகத்தையும் மதிக்கேடர் வெறுப்பார்.’ யெகோவா தேவன் ஏதோ மறைபொருள் அல்ல. அவர் உண்மையில் இருக்கிறார் என்பதை கண்டுகொள்ளவும், அவரைப் பற்றி பயத்தை வளர்க்க வேண்டிய அவசியத்தை அறிந்துகொள்ளவும், அவர்பால் அன்பு செலுத்தவும் என் பெற்றோர்கள் எங்களுக்கு உதவினார்கள். ஒருசெயலை செய்யும்படி சொன்னால், அதற்கான காரணத்தையும் இப்படியாக விளக்கிக்கூறுவார்கள்: ‘‘பிள்ளைகளே, ஏதோ நாங்க சொல்றோம்னு செய்யாதீங்க. நீங்க இதப்பத்தி என்ன நினைக்கிறீங்க? இதப்பத்தி யெகோவா என்ன நினைப்பாருன்னு நீங்க நினைக்கிறீங்க? சாத்தான் எப்படி உணருவானு தெரியமா?’
“இப்படி விளக்கம்காட்டி பேசியது, உண்மையான பிரச்சினை என்ன என்பதை கண்டுகொள்ள எங்களுக்கு உதவியது. நாங்கள் போன இடத்திற்கு எல்லாம் அப்பா அம்மாவால் வர முடியவில்லை. ஆனால், எங்கள் இருதயங்களிலும், மனங்களிலும் பைபிள் சத்தியங்களை ஆழமாக நட்டு, வளர்த்துவிட முடிந்தது. பள்ளிக்கூடத்தில், வேலைசெய்யும் இடத்தில், நண்பர்களோடு இருக்கையில் தனியாகவே சமாளித்தோம். யெகோவாவுக்காக நாங்கள் வளர்த்துக்கொண்ட ஆரோக்கியமான பயம் பேருதவி புரிந்தது. அதுவே இன்றும் எங்களுக்கு உறுதுணையாக விளங்குகிறது.
“அம்மா எப்பப்பார்த்தாலும் பயனியர் ஊழியத்தைப் பத்தியும், அவருக்கு நேரிட்ட நல்ல அனுபவங்களைப் பத்தியும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் ஊழியத்தின் மீது எப்போதும் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார். அதுவே எங்களுக்குள் நல்ல பாதிப்பை ஏற்படுத்தியது. அவரைப்போலவே மக்களை நேசிக்க கற்றுக்கொண்டோம், வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் அதிக மகிழ்ச்சி காணமுடியும் என்பதை உணர்ந்துகொண்டோம்.”
நன்றி சொல்ல காரணம்
மகன்கள் எல்லாருக்கும் கல்யாணம் ஆகி, அருமையான ஐந்து மருமகள்கள் உள்ளனர் எனக்கு. எல்லாரும் யெகோவாவை உண்மையோடு சேவிக்கிறார்கள். எனக்கு இன்னும் ஐந்து மகன்கள் இருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா? மணியான ஐந்து பேரன்கள்! யெகோவாவை நேசிக்கவும், அவருடைய ராஜ்யத்திற்கே வாழ்க்கையில் முதலிடம் தரவும் கற்றுத்தந்து அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஒருநாள் அவர்களும் தங்கள் அப்பாக்களைப் போலவும், தாத்தாவை போலவும் மூப்பர்களாக ஆகவேண்டுமென்று பிராத்திக்கிறோம்.
என் கணவர் காலமானப்பின் என்னோட மகன் இவ்வாறு எழுதினான்: “அப்பா இல்லாமல் நிச்சயம் நான் தவிக்கப்போகிறேன். இப்போது [மரணம் என்னும்] தூக்கத்தில் துயில்கொண்டிருக்கிறார். அவருக்கு இனி எந்த வேதனையும் இல்லை. துன்பமும் இல்லை. ஆபரேஷன்கள், ஊசிகள், குழாய்கள் மூலம் உணவு என்று எந்தத் தொல்லைகளும் இன்றி அமைதியான நிலையில் சஞ்சரித்துவிட்டார். அப்பா சாகும்போது நான் பக்கத்தில் இல்லையே என்று வேதனையாக உள்ளது. நாம் நினைப்பதுபோல் எல்லாமே நடப்பதில்லை. அப்பா சாகும்போதுதான் பக்கத்தில் இருக்க முடியவில்லை, அவர் திரும்பி வரும்போது [மரணத்திலிருந்து எழுப்பப்படும்போது] கண்டிப்பாக நான் வரவேற்பேன்! அந்த வாய்ப்பை பெற எப்படி வாழவேண்டுமோ அதேபோல் வாழத் தீர்மானமாயிருக்கிறேன்.”
அன்பான கணவனையும், உயிர்த்தெழுதல் என்ற உறுதியான நம்பிக்கையையும் கொடுத்த யெகோவாவுக்கு சொல்வேன் நன்றிகள் பல! (யோவான் 5:28, 29) ஐந்து மகன்களை எனக்குத் தந்ததற்காக அவருக்கு நன்றிகள் கோடி!
[பக்கம் 23-ன் படம்]
இன்று, ஹலன் சால்ஸ்பெரியும் அவர் குடும்பமும்