உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 6/22 பக். 4-7
  • குண்டாக இருப்பது நலம் தராதபோது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குண்டாக இருப்பது நலம் தராதபோது
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அதிக எடை, அதிக ஆபத்து
  • புதிய எடை வழிகாட்டி
  • எப்படி இந்தளவுக்கு குண்டானோம்?
  • நம்மால் வெற்றிபெற முடியுமா?
  • உடல் பருமன்—காரணங்கள் யாவை?
    விழித்தெழு!—2004
  • நான் ஏன் இவ்வளவு தடியாக இருக்கிறேன்?
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • நான் எடையைக் குறைப்பது எப்படி?
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 6/22 பக். 4-7

குண்டாக இருப்பது நலம் தராதபோது

“இப்போதெல்லாம் என் துணிமணிகள் எனக்குப் பத்துவதே இல்லை” என 35 வயதான ரோஸா மிகவும் வருத்தத்தோடு சொன்னார். “என் எடை 86 கிலோகிராமுக்கு ஏறிவிட்டது; இந்தளவுக்கு குண்டாவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை!”

குண்டாகிக்கொண்டே போவதை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருப்பது ரோஸா மாத்திரம் இல்லை. அவர் வசித்துவரும் ஐக்கிய மாகாணங்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் குண்டாக இருக்கின்றனர். a பிரிட்டனில், குண்டாயிருக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை பத்தாண்டுகளில் இருமடங்காகியிருக்கிறது. குண்டானவர்களைப் பார்ப்பதே அரிதாயிருந்த ஜப்பானில், இப்போது பருமனாவது சகஜமாகி வருகிறது.

அநேக பிள்ளைகள், தேவைக்குமீறிய எடையுள்ளவர்களாய் இருக்கின்றனர். 6-லிருந்து 17 வயதுடைய சுமார் 47 லட்சம் அமெரிக்க இளைஞர்கள் மிகவும் உடல் பருத்து காணப்படுகின்றனர். கனடாவைச் சேர்ந்த பிள்ளைகளிலோ சுமார் 20 சதவீதத்தினர் குண்டாக இருக்கின்றனர். சிங்கப்பூரில், உடல் பருத்த பிள்ளைகளது எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

சில நாடுகளில், குண்டாக இருப்பது, உடல் செழிப்பையும் ஆரோக்கியத்தையும் காட்டுவதாகவும், இது வறுமையிலும் ஊட்டச்சத்தின்றியும் இருப்பதைவிட எவ்வளவோ மேலானதாகவும் கருதப்படுகிறது. ஆனால் உணவு தட்டுப்பாடே ஏற்படாத மேற்கத்திய நாடுகளில், குண்டாவது பொதுவாக விரும்பப்படுவதில்லை. அதற்கு மாறாக, அது அதிக கவனம்செலுத்த வேண்டிய ஒரு விஷயமாகிறது. ஏன்?

“குண்டாயிருப்பது தோற்றம் சம்பந்தமான ஒரு பிரச்சினை என பெரும்பாலானோர் நினைத்தாலும், அது உண்மையில் ஆபத்தான ஒரு நோய்” என ஐ.மா.-வில் தலைமை அறுவை மருத்துவராக முன்பு பணியாற்றிய டாக்டர் சி. எவ்ரட் கூப் சொல்கிறார். நியூ யார்க்கில் நாளமில்லாச்சுரப்பி மருத்துவராக பணியாற்றும் எஃப். சேவியர் பிசன்யர் இவ்வாறு விளக்குகிறார்: “[அமெரிக்கர்கள் குண்டாவதால்] இன்னுமதிகமானோர் சர்க்கரை வியாதியையும், உயர்ந்த இரத்த அழுத்தத்தையும், ஸ்ட்ரோக்கையும், இதய நோயையும், சில வகையான புற்றுநோயையும்கூட பெறும் அபாயத்தில் இருக்கின்றனர்.”

அதிக எடை, அதிக ஆபத்து

1,15,000 அமெரிக்க நர்ஸுகளை வைத்து 16 வருடங்களாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். பெரியவர்கள் ஐந்திலிருந்து எட்டு கிலோகிராம் எடை கூடினாலும் இதய நோயைப் பெறும் ஆபத்து அதிகமாகிறது என அந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. செப்டம்பர் 14, 1995 தேதியிட்ட த நியூ இங்லாண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின்-ல் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி, புற்றுநோயால் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் ஒரு பங்கும் இதய நோயால் ஏற்பட்ட மரணங்களில் பாதியளவும் குண்டாயிருந்ததால்தான் உண்டாயின என்பதைக் காட்டியது. “ஆண்களில் 78 சதவீதமும் பெண்களில் 65 சதவீதமும் உயர்ந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு குண்டாயிருப்பதே காரணமென்று உறுதியாக சொல்லலாம்” என மே 22/29, 1996 தேதியிட்ட த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் (JAMA) அறிக்கை செய்தது. “குறிப்பிடத்தக்க அளவில் குண்டாயிருப்பவர்கள்” (சாதாரண எடையைவிட 40 சதவீதமோ அதற்கும் அதிகமோ கூடுதல் எடையுடன் இருப்பவர்கள்) “அதிகளவில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருக்கிறார்கள்” என அமெரிக்க புற்றுநோய் கழகம் சொல்கிறது.

ஆனால் வெறுமனே எடை கூடுவது மாத்திரமே ஆபத்தானதல்ல; உடலில் கொழுப்புச்சத்து பரவியிருப்பதும் வியாதிப்படும் அபாயத்தை அளிக்கிறது. வயிற்றில் அதிக கொழுப்புச்சத்தைப் பெற்றிருப்பவர்கள், இடையிலும் தொடையிலும் அதிக சதைப்பற்றுடன் இருப்பவர்களைவிட உண்மையில் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள். வயிற்றுப் பகுதியில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பது, சர்க்கரை வியாதி, இதய நோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றை அதிகம் உண்டாக்கலாம்.

அதேவிதமாக, குண்டாயிருக்கும் இளைஞர்கள் உயர்ந்த இரத்த அழுத்தத்தினாலும், அளவுக்கதிகமான கொலஸ்ட்ராலினாலும், சர்க்கரை வியாதிக்கான ஆரம்ப அறிகுறிகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்கள் பெரியவர்களாகையிலும் பெரும்பாலும் குண்டாகவே இருக்கிறார்கள். த லான்செட் என்ற பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையில் பிரசுரமான விவரத்தைப் பயன்படுத்தி, த நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அறிக்கை செய்தது: “பிள்ளைப் பருவத்தில் குண்டாக இருந்தவர்கள் மற்றவர்களைவிட அதிக சீக்கிரமாகவே இறந்தனர்; மேலும் சிறு வயதிலேயே இன்னுமதிக வியாதிகளால் பாதிக்கப்பட்டனர்.”

புதிய எடை வழிகாட்டி

ஐ.மா. அரசு, எடை சம்பந்தமாக ஒரு பெரும் பிரச்சினை ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டு, பரிந்துரைக்கப்பட்ட அதன் எடை வழிகாட்டியை 1995-ல் இன்னும் கண்டிப்பாக்கியது. (அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியைக் காண்க.) புதிதாய் மாற்றியமைக்கப்பட்ட இந்த வழிகாட்டி, “ஆரோக்கியமான எடை,” “சற்று அதிகமான எடை,” “மிக அதிகமான எடை” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி, வயதுவந்த ஆண்கள், பெண்கள் ஆகிய இருதரப்பினருக்குமே எந்த வயதிலும் பொருந்தும்.

1990-ன் வழிகாட்டி, நடுத்தர வயதில் நடுத்தர உடல் வளர்ச்சியை அனுமதித்தது; அது பொதுவாக நடுத்தர வயது உடல் பருத்தல் என அழைக்கப்படுகிறது. புதிய வழிகாட்டி இதை அனுமதிப்பதில்லை; ஏனென்றால், பெரியவர்கள் வயது ஆக ஆக பருமன் ஆகக்கூடாது என்பதே காட்டப்பட்டிருக்கிறது. b இவ்வாறு, முன்பு தனக்கு சரியான எடை இருப்பதாக நினைத்த ஒருவர், இப்போது குண்டாயிருப்போரின் பட்டியலில் தானும் இருப்பதை காண்பார். உதாரணத்திற்கு, 35-லிருந்து 65 வயதான, 168 சென்டிமீட்டர் உயரமுள்ள, 75 கிலோகிராம் எடையுள்ள ஒரு நபர், 1990-ன் வழிகாட்டியின்படி ஆரோக்கியமான எடை உள்ளவராக கருதப்பட்டிருப்பார். ஆனால் புதிய வழிகாட்டியின்படி, அவர் 5 கிலோகிராம் அதிக எடையுள்ளவராக கருதப்படுகிறார்!

எப்படி இந்தளவுக்கு குண்டானோம்?

மரபியல் பண்புகள், குண்டாயிருப்பதன் பேரில் ஒரு நபரது மனப்பான்மையைப் பாதிக்கலாம்; ஆனால் மேற்கத்திய நாடுகளில் எடை அதிகரிப்பதற்கு இவை பொறுப்பல்ல. இந்தப் பிரச்சினைக்கு காரணம் வேறொன்று இருக்கிறது.

கொழுப்புச்சத்து நிறைந்த ஆகாரங்களைச் சாப்பிடுவது நம்மை குண்டாக்கும் என உடல்நல நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பெரும்பாலான இறைச்சி, அநேக பால் பண்டங்கள், பேக்கரி தயாரிப்புகள், விரைவு-உணவுகள், சிற்றுண்டிகள், பொரிக்கப்பட்ட உணவுகள், சாஸுகள், க்ரேவி, எண்ணெய்கள் போன்றவற்றில் எக்கச்சக்கமான கொழுப்புச்சத்து இருக்கிறது; அவற்றைச் சாப்பிடுவதால் உடல் பருத்துவிடும். ஏன் அப்படி?

நமது உடல் பயன்படுத்துவதற்கும் அதிகமான கலோரிகளை உணவின்மூலம் உட்கொள்வது நம்மைக் குண்டாக்கும். ஒரு கிராம் புரதச்சத்து அல்லது மாவுச்சத்தில் நான்கு கலோரிகள் இருக்கின்றன; ஆனால் ஒரு கிராம் கொழுப்புச்சத்திலோ ஒன்பது கலோரிகள் இருக்கின்றன. ஆகவே நாம் கொழுப்புச்சத்தை சாப்பிடும்போது அதிக கலோரிகளை உட்கொள்கிறோம். ஆனால் இன்னொரு முக்கிய காரணக்கூறும் இருக்கிறது—மாவுச்சத்தும், புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் அளிக்கிற சக்தியை உடல் எவ்வாறு உபயோகிக்கிறது என்பதே அது. உடல் மாவுச்சத்தையும் புரதச்சத்தையும் முதலில் பயன்படுத்திக்கொள்கிறது, அதன் பின்னரே கொழுப்புச்சத்தை உபயோகிக்கிறது. பயன்படுத்தப்படாத கொழுப்புச்சத்தின் கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்ந்து பெருகுகின்றன. ஆகவே கொழுப்புச்சத்து நிறைந்த உணவுப் பண்டங்கள் சாப்பிடுவதைக் குறைப்பதே, இளைப்பதற்கான ஒரு முக்கிய வழியாகும்.

ஆனாலும், கொழுப்புச்சத்துள்ள பொருட்கள் சாப்பிடுவதை குறைத்திருப்பதாக நினைக்கும் சிலர் தங்கள் உடல் பெருத்துக்கொண்டே போவதைக் காணலாம். ஏன்? அதற்கான ஒரு காரணம் அவர்கள் மூக்குப்பிடிக்க சாப்பிடுவதே ஆகும். ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணர் இவ்வாறு சொல்கிறார்: “அளவுக்கதிகமாக பரிமாறப்படுவதால் நாம் அளவுக்கதிகமாக சாப்பிடுகிறோம். நம் கண் முன்னே இருக்கிறது, நாம் சாப்பிடுகிறோம்.” அதுமட்டுமல்ல, கொழுப்புச்சத்து குறைவாயுள்ள அல்லது கொழுப்புச்சத்தே இல்லாத உணவு வகைகளை அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிடுகின்றனர். ஐ.மா. உணவு உற்பத்தி கலந்தாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “கொழுப்புச்சத்து குறைவாயுள்ள உணவுகளுக்கு, [அதிக கலோரியுள்ள] சர்க்கரையை அதிகம் சேர்ப்பதன் மூலம் சுவை கூட்டப்படுகிறது.” இவ்வாறு, த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்ததாவது: “90-களில் இரண்டு பாணிகள்—கொடுத்த காசுக்கு முடிந்தளவு சாப்பிட்டுவிட வேண்டுமென்ற ஆவலும், குறைவான அல்லது முற்றிலுமே கொழுப்பு இல்லாத உணவுப் பண்டங்களை சாப்பிடும் பாணியும்—தின்னிப்பண்டாரங்களை உண்டாக்கியிருக்கின்றன.” இப்படியாக நபர்கள் குண்டாகின்றனர்.

உட்கார்ந்தே பொழுதை ஓட்டுவதும் உடல் பருத்துப்போவதில் விளைவடையும். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அங்குள்ள பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் சாதாரண உடற்பயிற்சியை 20 நிமிடங்களுக்கும் குறைவாகவே செய்கின்றனர் என்பதைக் காட்டியது. அவர்களில் பாதிக்கும் குறைவானோர் மட்டுமே சுறுசுறுப்பான விளையாட்டுகளில் பங்குகொள்கின்றனர். அநேக மேற்கத்திய நாடுகளில், நடப்பதற்கு பதிலாக அனைவரும் காரில் செல்கின்றனர்; மேலும், அளவுக்கதிகமாக டிவி பார்ப்பது சோம்பலையும் பெருந்தீனியையும் அதிகப்படுத்துகிறது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள பிள்ளைகள், வீடியோ கேம்ஸ் விளையாடும் நேரம் போக, ஒவ்வொரு வாரமும் 26 மணிநேரம் உட்கார்ந்தபடியே டிவி பார்ப்பதில் கழிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில், சுமார் 36 சதவீத பள்ளிகளில் மட்டும்தான் இன்னமும் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

குண்டாயிருப்பதற்கு மனநிலை சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. “உணர்ச்சிப்பூர்வ தேவைகளால் நாம் சாப்பிடுகிறோம்” என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வெயிட் மேனேஜ்மன்ட் சென்டரைச் சேர்ந்த டாக்டர் லாரன்ஸ் ச்செஸ்கின் சொல்கிறார். “நாம் சந்தோஷமாயிருக்கும்போது சாப்பிடுகிறோம், கவலையாயிருக்கும்போது சாப்பிடுகிறோம். மற்ற அநேக காரியங்களுக்கு உணவுதான் மாற்றுப்பொருள் என நம்பியே நாம் வளர்ந்துவிட்டோம்.”

நம்மால் வெற்றிபெற முடியுமா?

குண்டாயிருப்பது சம்பந்தமான பிரச்சினைகள் சிக்கலானவை. ஒவ்வொரு வருடமும் எட்டு கோடி அமெரிக்கர்கள் பத்திய உணவு சாப்பிட ஆரம்பிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே கொஞ்சம் இளைத்த பிற்பாடு பழையபடி எப்போதும்போல் சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றனர். ஐந்து வருடங்களுக்குள், 95 சதவீதத்தினர் தாங்கள் இழந்த எடையைத் திரும்பவும் பெற்றுவிடுகின்றனர்.

உடல் இளைத்து, பின் எப்போதுமே அதே உடற்கட்டை காத்துக்கொள்வதற்கு, வாழ்க்கை பாணியில் மாற்றங்கள் செய்வது அவசியமாகும். அப்படிப்பட்ட மாற்றங்களுக்கு குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உதவி தேவைப்படுவதோடுகூட முயற்சியும் உறுதியும் தேவைப்படுகின்றன. சில சமயங்களில் உடல்நல மருத்துவர்களது உதவியும் தேவைப்படலாம். c எனினும், உங்களது முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமானால், நம்பிக்கையான தூண்டுதல் கட்டாயம் தேவை. ‘நான் எதற்காக இளைக்க வேண்டும்?’ என உங்களையே கேட்டுக்கொள்வது நல்லது. உடல் சம்பந்தமான ஆபத்துகளை தவிர்ப்பதற்கான விருப்பத்தோடு, இன்னும் நன்றாக உணருவதற்கும், இன்னும் நன்றாக தோற்றமளிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை இன்னும் முன்னேற்றுவிப்பதற்கும் விருப்பம் இருக்குமானால், இளைப்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் பெரும்பாலும் வெற்றிகாண்பீர்கள்.

ஊட்டச்சத்துள்ள, அதேசமயத்தில் குறைவான கலோரியுள்ள, சுவையையும் திருப்தியையும் தரும் ஏராளமான உணவை நீங்கள் சாப்பிடலாம். ஆனால் நீங்கள் இளைப்பதற்கு உதவிபுரியும் உணவு வகைகளை சிந்திப்பதற்குமுன், உணவுப் பழக்கத்தின் சில அம்சங்கள் எவ்வாறு உடல்நலத்திற்கு ஆபத்தாக மாறலாம் என்பதை ஆராய்வோமாக.

[அடிக்குறிப்புகள்]

a குண்டாயிருப்பது என்பது சாதாரண எடையைவிட 20 சதவீதமோ அதற்கும் அதிகமாகவோ சதைப்பற்றுடன் இருப்பதை பெரும்பாலும் அர்த்தப்படுத்துகிறது.

b 1995-ன் வழிகாட்டி, பெரும்பாலான வயதினருக்கு பொருந்துகிறது; ஆனாலும் அனைத்து வயதினருக்கும் அல்ல. “இந்தப் புதிய வழிகாட்டி 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒருவேளை பொருந்தாது என்பதே பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது” என டாக்டர் ராபர்ட் எம். ரஸல், ஜூன் 19, 1996, JAMA-ல் குறிப்பிட்டார். “வயதானவர்கள் கொஞ்சம் எடை அதிகமாயிருப்பது நன்மையளிப்பதாய் இருக்கலாம்; ஏனெனில், வியாதிப்படுகையில் அது தேவையான சக்தியளிக்கலாம், மேலும் தசையையும் எலும்பையும் பாதுகாக்க உதவலாம்.”

c இளைப்பதற்கான ஆலோசனைகளுக்கு இவற்றைக் காண்க: ஆங்கில விழித்தெழு! மே 8, 1994, பக்கங்கள் 20-2; ஜனவரி 22, 1993, பக்கங்கள் 12-14; மற்றும் டிசம்பர் 8, 1989, பக்கங்கள் 3-12.

[பக்கம் 6-ன் அட்டவணை]

“ஆரோக்கியமான எடை,” “சற்று அதிகமான எடை,” “மிக அதிகமான எடை.” இவற்றில் எந்தப் பட்டியலில் நீங்கள் பொருந்துகிறீர்கள்? இங்கே காண்பிக்கப்பட்டிருக்கும் படம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க உங்களுக்கு உதவும்

ஆண்களுக்கும் பெண்களுக்குமான 1995-ன் எடை வழிகாட்டி

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உயரம்* செமீ

198

190

180 170 ஆரோக்கியமான எடை சற்று அதிகமான எடை மிக அதிகமான எடை

160 150

கிகி 30 40 50 60 70 80 90 100 110

எடை†

புள்ளிவிவரங்களின் ஆதார மூலம்: U.S. Department of Agriculture, U.S. Department of Health and Human Services

* ஷூ அணியாமல்.

† துணிமணி இல்லாமல். அதிக எடைகள், அநேக ஆண்களைப் போன்ற அதிக தசையும் எலும்பும் உள்ள நபர்களுக்குப் பொருந்துகின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்