உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கல்வித்திறமையும் வேலைவாய்ப்பும்
  • கரப்பான்பூச்சி அலர்ஜி
  • வறுமையின் வளர்ச்சி
  • ஐரோப்பாவில் போதைமருந்து அடிமை
  • “ஒல்லியாக வேண்டும் என்ற கொடுமை”
  • பைபிளுக்காக எழுந்துள்ள எதிர்பாரா ஆர்வம்
  • ஓர் ஆருயிர் நண்பர்
  • தினந்தோறும் பழம் சாப்பிடுங்கள்
  • மன நோயாளிகளை பராமரிப்பது
  • புகைப்பதைவிட அதிக ஆபத்தானதா?
  • உங்கள் ஆரோக்கியத்தை கட்டிக்காக்க வழிகள்
    விழித்தெழு!—1999
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 4/22 பக். 28-29

உலகை கவனித்தல்

எய்ட்ஸும் மனித முன்னேற்றமும்

எய்ட்ஸ் என்னும் இந்த உயிர்கொல்லி உலக அளவில் மனித முன்னேற்றத்தை 1.3 வருடங்களுக்கு பின்நோக்கி தள்ளிவிட்டது என்பதாக ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டத்தின் சமீபத்திய ஓர் அறிக்கைத் தெரிவித்தது. சில ஆப்பிரிக்க நாடுகள் மிக பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளன. மனித முன்னேற்ற வளர்ச்சியில் ஜாம்பியா பத்து வருடங்களுக்கும் அதிகத்தை இழந்து போனது; டான்ஜானியா எட்டு வருடங்களையும், ருவாண்டா ஏழு வருடங்களையும், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆறுக்கும் அதிகமான வருடங்களையும் இழந்துவிட்டன. எய்ட்ஸ் மனிதனுடைய ஆயுள் காலத்தையும் குறைத்து விட்டது. வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 45 வயதுக்கு குறைவான ஆட்களின் மரணத்திற்கு எய்ட்ஸ்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒருவர் என்ற கணக்கில் தினந்தோறும் 6,000 ஆட்கள் ஹெச்ஐவி-ஆல் பாதிக்கப்படுகிறார்கள். 20 வயதுக்கும் 45 வயதுக்கும் இடையில் இருப்போருக்கு ஏற்படும் மரணங்களில் 85 சதவிகிதத்திற்கும் அதிகம் எய்ட்ஸால் ஏற்படுகிறது.

கல்வித்திறமையும் வேலைவாய்ப்பும்

தி வான்கூவர் சன் என்ற செய்தித்தாள் சொன்னபடி, “வேலையின்றி இருக்கும் கனடா நாட்டவரில் 56-லிருந்து 64 சதவிகிதத்தினருக்கு மிகவும் குறைவான கல்வித்திறமை இருக்கிறது” என்று ஸ்டாட்டிஸ்டிக் கனடா அறிக்கையிடுகிறது. உரைநடை, பத்திரம், கணக்கு முதலியவற்றில் கல்வித்திறமையை சோதிப்பதற்காக 1995-ல் நடத்திய சுற்றாய்வில், 36 சதவிகித கனடா நாட்டவருக்கு இந்த மூன்று அம்சங்களிலும் கஷ்டம் இருந்தது தெரியவந்தது. “காலம் காலமாக செய்துவரும் தொழில்களான விவசாயம், சுரங்கம் வெட்டுதல், உற்பத்தித்தொழில், கட்டடம் கட்டுதல் போன்றவற்றில் . . . கல்வித்திறமை மிகவும் குறைந்துகொண்டே போகிறது” என்று சன் கூறுகிறது. இத்துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே இருப்பதால், குறைவான கல்வித்திறமையுள்ள ஆட்களே வேலையிலிருந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதற்கும், வேலையிலிருந்தே வெளியேற்றப்படுவதற்கும் இலக்காகிறார்கள். ஒரு கல்வி ஸ்தாபனத்தின் பிரஸிடெண்டாக இருக்கும் ஜான் ஓலிரி குறிப்பிட்டதாவது: “1996-ல் குறைந்த அளவான கல்வித்தகுதியை பெற்றிருப்பவர்களுக்கு பலதரப்பட்ட தனி சலுகைகளும் தொழில் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன.”

கரப்பான்பூச்சி அலர்ஜி

பர்க்லிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹெல்த் செய்திக் கதிர் (ஆங்கிலம்) பிரகாரம், ஐக்கிய மாகாணங்களில் 1 முதல் 1.5 கோடி மக்களுக்கு கரப்பான்பூச்சி அலர்ஜி இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அலர்ஜி உள்ள ஒரு நபர் கரப்பான்பூச்சியிடம் மாட்டிக்கொள்ளும்போது, அவருக்கு “தோலில் எரிச்சலும் மூக்கடைப்பு அல்லது ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளும் வரலாம்.” “ஆஸ்துமா உள்ள பிள்ளைகளில் 80 சதவிகிதத்தினர் கரப்பான்பூச்சியால் உடனே பாதிப்புக்குள்ளாவார்கள்” என்று அந்தச் செய்திக்குறிப்பு கூறியது. சமையலறை அழுக்காக இருப்பதை இந்தக் கரப்பான்பூச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை. ‘மிகவும் சுத்தமான சமையலறையிலும்கூட அவை பெருகிவிடும்’ என்பதாக ஹெல்த் செய்திக் கதிர் குறிப்பிடுகிறது. ஒரு கரப்பான்பூச்சி கண்ணில் பட்டால், கண்ணுக்கு படாமல் கிட்டத்தட்ட 1,000 கரப்பான்பூச்சிகள் வீட்டில் வலம்வரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ஜோடி கரப்பான்பூச்சிகள் ஒரே வருடத்தில் சுமார் 1,00,000 குஞ்சுகளை உற்பத்தி செய்யமுடியும்.

வறுமையின் வளர்ச்சி

உலகெங்கிலும் அநேக மக்கள் ரொம்பவும் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களது வருட வருமானம் $370-க்கும் குறைவாக உள்ளது. இந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 130 கோடி, அதாவது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு. இவர்களில் பெரும்பாலோர் வளர்ச்சியடையாத நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த மக்களுக்கு போதுமான உணவு, சுத்தமான தண்ணீர், சுகாதாரம், போதுமான இருப்பிடம், கல்வி, வேலை ஆகியவை எட்டாத கனிகளே. அநேக சந்தர்ப்பங்களில், அவர்கள் வாழும் சமுதாயத்தில் அவர்களை அற்பமாக நினைக்கிறார்கள், அவர்களால் தங்கள் நிலைமையை மாற்றி அமைக்கவும் அதிகாரமின்றி கிடக்கிறார்கள். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் பிரகாரம், அதிகமான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் சுமார் 2.5 கோடியாக அதிகரிக்கிறது.

ஐரோப்பாவில் போதைமருந்து அடிமை

ஒரு புதிய ஐரோப்பிய அமைப்பு மருந்துகளின் உபயோகத்தையும் அவற்றை தவறாக உபயோகிப்பதையும் கண்காணிக்க தன்னையே அர்ப்பணித்திருக்கிறது. அது சமீபத்தில் அதன் முதல் வருடாந்தர அறிக்கையை வெளியிட்டது. லா மான்டு என்ற பிரெஞ்சு தினசரி செய்தித்தாளின் பிரகாரம், “ஐரோப்பிய யூனியனில் ஹிராயின் போதைமருந்துக்கு அடிமையானவர்கள் 5,00,000 முதல் 10,00,000 வரை உள்ளனர்” என்பதை அவர்கள் செய்த ஆய்வு காட்டியது. ஐரோப்பிய பெரும் நகரங்களில், ஹிராயின் போதைமருந்து அடிமைகளின் எண்ணிக்கை அதிகமும் ஆகாமல் குறைவும் ஆகாமல் ஒரேயளவில் அல்லது குறைந்தும் காணப்பட்டாலும், சிறுசிறு நகரங்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பாவில் இன்னும்கூட கன்னாபிஸிலிருந்து தயாரிக்கப்படும் ஹசீஷ் மற்றும் கஞ்சாவும் பரவலாக உபயோகிக்கப்படும் போதைமருந்துகளாக இருக்கின்றன. இப்போதெல்லாம் போதைப்பொருளை மருந்துகளோடும் மதுபானத்தோடும் கலந்து சாப்பிடும் காக்டெயில்ஸ் என்று சொல்லப்படுவது அதிக பிரபலமாகி வருவதைக்கண்டு நிபுணர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். வட ஐரோப்பாவில் இளைஞர்களின் மத்தியில் ஆம்பீடமைன்கள், யெக்ஸ்டஸி (Ecstasy) (மெத்தாம்பீடமைனிஸிலிருந்து பெறப்படும் ஒருவகை மருந்து), எல்எஸ்டி (LSD) போன்ற போதை மருந்துகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.

“ஒல்லியாக வேண்டும் என்ற கொடுமை”

“ஒல்லியாக வேண்டும் என்ற கொடுமையை எதிர்த்து போராடுதல்” என்ற தலைப்பில் தி ஐரிஷ் டைம்ஸ் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “பெரும் எண்ணிக்கையான வாலக்குமரிகள் நாகரிக உணவு பாணியைப் பின்பற்றுவதால் இரத்தச் சோகைப்பிடித்து கிடக்கிறார்கள்.” இந்தப் போக்கைப் பற்றி டாக்டர்கள் கவலைத்தெரிவித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் ‘பிறரது கருத்தை எளிதாக ஏற்று மாறிவிடும் குமரிகள்மீது’ இந்தப் பேஷன் உலகம் ‘கொண்டுவரும் தீய விளைவுகளுக்காக’ அதைக் குற்றம்சாட்டுகிறார்கள். கடந்த தலைமுறையில் சராசரி பெண்களின் எடையைவிட ஒரு பேஷன் மாடலாக இருந்தவரின் எடை 8 சதவிகிதத்திற்கும் குறைவு என்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. இப்போதெல்லாம் 23 சதவிகிதத்திற்கும் குறைவான எடையுடன் இருக்கிறார். “பஞ்சத்தில் அடிப்பட்ட பரதேசியைப்போன்ற குச்சி குச்சி கை கால்களே பெரும் பேஷன்களாகிவிட்டன. காய்ந்துபோன கருவாடாய் இருக்கும் தோற்றமே, அதாவது வெளிரிப்போய், இளமையோடு, வயிற்றைக் காயப்போட்டு கிடைக்கும் உருவமே . . . ஒரு மாடலுக்கு ஏற்ற உருவமாக அறிமுகம் செய்கிறார்கள்” என்பதாக தி ஐரிஷ் டைம்ஸ் சொல்கிறது. இந்த உருவத்தைப்போலவே தாங்களும் பெறவேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற அபாரமான ஆசையின் காரணமாகவும் பல இளம் பெண்கள் தேர்ந்தெடுக்கும் உணவில் அவர்களுக்கு தேவையான இரும்புச்சத்தும், புரோட்டீனும், வைட்டமின்களும் கிடைப்பதில்லை.

பைபிளுக்காக எழுந்துள்ள எதிர்பாரா ஆர்வம்

“கோபன்ஹாகன் என்ற இடத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒன்று என்ற கணக்கில், டேனிஷ் மொழியில் புதிய ஏற்பாட்டின் [கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு] ஐந்து லட்சம் பிரதிகள் சுமார் 98 சதவிகித குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன” என்பதாக ENI புல்லட்டீன் அறிக்கை செய்கிறது. 1996-ம் ஆண்டின் ஐரோப்பிய கலாச்சாரத்தின் மையமாக கோபன்ஹாகன் பங்கு வகித்தது. இதைக் கொண்டாடியதன் ஒரு அம்சமாக இத்தகைய விநியோகிப்பு நடந்தது. கோபன்ஹாகனில் உள்ள குடும்பங்களில் 10 முதல் 20 சதவிகித குடும்பங்கள் அவ்வாறு பரிசாக விநியோகிக்கப்படும் பைபிளை பெற்றுக்கொள்ள மறுத்து விடுவார்கள் என்பதாக பலர் முன்னுரைத்தார்கள். ஆனால் “ஓரிரு சதவிகித குடும்பங்கள் மாத்திரம்” பைபிளை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள் என்று டேனிஷ் பைபிள் சொஸைட்டியின் பொதுச் செயலாளராக இருக்கும் மார்டன் ஓகோர் சொன்னார். 1998-லும் இதேபோல் ஒரு விநியோகிப்பை ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஓர் ஆருயிர் நண்பர்

ஜெர்மனியில், 10 பேரில் 9 பேருக்கு ஆருயிர் நண்பர் இருப்பதாக கூறினார் என்று நாசாயுஷ நாய ப்ரெஸெ (Nassauische Neue Presse) அறிக்கை செய்கிறது. அனுபவம்சார்ந்த சமூக அறிவியல் ஆராய்ச்சி சங்கம் நடத்திய சுற்றாய்வில் இந்த உண்மை வெளிவந்தது. அந்தச் சுற்றாய்வு 16 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 1,000-க்கும் அதிகமான ஆட்களிடம் கேள்விகேட்டது. நிலையான நட்புறவுக்கு தேவையான காரணிகளில் பேச்சுத்தொடர்பும் நேர்மையும் அதிமுக்கியமானவை என்று கருதப்பட்டன. அத்தகைய நட்புறவுகளை உண்மையற்றத்தன்மையும் நம்பிக்கை துரோகமும் கண்டிப்பாக முறித்துவிடுகின்றன என்று பேட்டி கொடுத்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே ஒத்துக்கொண்டனர். அந்தச் செய்தித்தாளின் பிரகாரம், “வெறும் 16 சதவிகிதத்தினர் மட்டுமே [தங்களுக்கு] அவசரத்தேவை ஏற்படும்போது, நல்ல நண்பராக இருப்பவர் பணத்தைக் கடனாக தரவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.” மறுபட்சத்தில், வியாதியாக இருக்கும் சமயங்களில்தான் நண்பரின் ஆதரவு ரொம்பவும் தேவை என்று பெரும் எண்ணிக்கையினர் கருதினார்கள்.

தினந்தோறும் பழம் சாப்பிடுங்கள்

11,000 பேரைக்கொண்டு 17 வருடங்களாக செய்த ஆய்வின்படி நித்தம் புத்தம்புதிய பழங்களை சாப்பிடுவதற்கும் இருதய நோயின் அபாயம் குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது என்ற உண்மை தெரியவந்தது. இந்த ஆய்வு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னலில் பிரசுரிக்கப்பட்டது. இந்த ஆய்வில், தினம் புத்தம் புதிய பழத்தை சாப்பிட்டவர்கள் மத்தியில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 சதவிகிதம் குறைவாகவும், ஸ்ட்ரோக்கால் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 சதவிகிதம் குறைவாகவும் இருந்தன. தினம் பழம் சாப்பிட்டோரின் இறப்பை எப்போதாவது பழம் சாப்பிட்டவர்களோடு ஒப்பிடுகையில் 21 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தது. சில ஆட்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரோக், இருதய நோய் போன்ற இரத்தக் குழாய் நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் அநேகமாக உணவில் பழங்களைச் சேர்க்காமல் இருப்பதுதான் என்று பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிய விஞ்ஞானிகளின் குழு குறிப்பிடுகிறது. சிறந்த உடல் நலத்தை பெறவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து தடவையாவது காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது பரிந்துரை செய்கிறார்கள். புத்தம்புதிய பழங்களும் காய்கறிகளும் கிடைக்கவில்லை என்றால் உறையவைத்த பழங்களும் காய்கறிகளும்கூட அதே பலனை அளிக்கலாம் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல் சொல்கிறது.

மன நோயாளிகளை பராமரிப்பது

“சூடான கஞ்சி, இதமான இசை, கவனமாக ஏற்படுத்தி தரும் சூழல் போன்ற மருத்துவ உத்திகள் புதியவை அல்ல. ஆனாலும் வயதானவர்களை பராமரிப்பதற்காக அவை உதவுகின்றன,” என்பதாக குறிப்பிடுகிறது கனடா நாட்டு தி குளோப் அண்டு மெயில். நோயாளிகளை குளிப்பாட்டும் முறையிலும் அவர்களுக்கு உணவு பரிமாறும் விதத்திலும் சில எளிய அதே சமயத்தில் செலவு குறைந்த மாற்றங்களை செய்வதானது அவர்களுடைய குழப்பத்தையும் கவலையையும் குறைக்க உதவுகின்றன. உதாரணத்திற்கு, உணவு பரிமாறும்போது, ஒவ்வொரு வகை உணவையும் தனித் தனியே எடுத்து கொடுக்கும்போது, எந்த உணவை முதலில் சாப்பிடவேண்டும் என்ற குழப்பம் நோயாளிக்கு ஏற்படாமலிருக்க உதவும். இதுதான் மன நோயாளியைப் பெரும்பாலும் குழப்புவது. நோயாளிகளை பராமரிப்பவர்களும் இந்தப் புதிய அணுகுமுறைகளை முயன்று பார்க்க ஆர்வத்தை காட்டுவதால், நோயாளிகளுக்கு மனநோய் மருந்துகளைக் கொடுப்பதும்கூட குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கிறது.

புகைப்பதைவிட அதிக ஆபத்தானதா?

கனடா ஸ்டாடிஸ்டிக்ஸ் பிரகாரம், “சிகரெட் பிடிப்பதால் உடல்நலத்திற்கு ஏற்படும் கேட்டைவிட உட்கார்ந்த இடத்திலேயே காலத்தை ஓட்டும் வாழ்க்கை பாணியே இரட்டிப்பான ஆபத்தைக் கொண்டுவரும்” என்று அறிக்கை செய்கிறது தி மெடிக்கல் போஸ்ட். எழுபது லட்ச கனடா நாட்டவருக்கு புகையிலைப் புகைப்பதனால் பயங்கரமான உடல்நல பிரச்சினைகளும் அகால மரணமும் அநேகமாக ஏற்படவிருக்கின்றன. ஆனால் இதே உடல்நல பிரச்சினைகளை 1.4 கோடி முதல் 1.7 கோடி மக்கள் உடற்பயிற்சி செய்யாததால் எதிர்ப்படுகிறார்கள். நேரம் இன்மை, சக்தி இன்மை, தூண்டுதல் இன்மை முதலியவையே சீராக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்காக சொல்லும் முக்கிய காரணங்கள். உட்கார்ந்தே இருக்கும் ஆட்கள் கொழுப்புள்ள பொருட்களை அதிக அளவிலும், பழங்களையும் காய்கறிகளையும் குறைந்த அளவிலும் அநேகமாக சாப்பிடுவார்கள். “உச்ச அளவான நன்மை இருதயத்திற்கு கிடைக்கவேண்டும் என்ற தற்போதைய இலக்கை அடையவேண்டுமென்றால் மக்கள் உடற்பயிற்சியை மிதமாகவோ துரிதமாகவோ குறைந்தது 30 நிமிடம், ஒரு நாள்விட்டு ஒருநாளாவது செய்யவேண்டும்” என்று சொல்கிறது போஸ்ட்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்