உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/22 பக். 26-27
  • நாங்கள் இணைபிரியா தோழிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாங்கள் இணைபிரியா தோழிகள்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பார்வையின்றி பார்க்கிறேன்
  • விசேஷ பயிற்சிக்காகத் தெரிவுசெய்தல்
  • ட்ரேசி எனக்குச் செய்யும் வேலைகள்
  • புரிந்துகொள்வதற்கான தேவை
  • “இரத்தமேற்றுதல் மரணம் அல்ல, ஜீவன் என்று நினைத்தேன்”
    விழித்தெழு!—1988
  • திக்குவாயோடு நான் எப்படி சமாளிக்கிறேன்
    விழித்தெழு!—1998
  • உங்கள் நாயிடம்—சிறார்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்களா?
    விழித்தெழு!—1997
  • பைபிள் சொல்கிறபடி வாழவேண்டுமா?
    விழித்தெழு!—2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 4/22 பக். 26-27

நாங்கள் இணைபிரியா தோழிகள்

ட்ரேசி என்ற எனது வழிகாட்டும் நாயின் வயது பத்து. லாப்ரெடார் வேட்டை இனத்தை சேர்ந்த அவளின் நிறம் கறுப்பு. என்னால் சற்று இயல்பாக நடமாட முடிகிறது என்றால் அது அவளது உதவியால்தான். எனது உற்ற துணையாகவும் உற்சாகத்தின் ஊற்றுமூலமாகவும் அவள் இருக்கிறாள். ஆகவே நான் அவளை அளவுக்கு அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் இணைபிரியா தோழிகளானோம். இதில் ஆச்சரியம் அடைய ஒன்றுமில்லை.

மனிதர்கள் தங்கள் அறியாமையால் சில நேரங்களில் என்னை ஏமாற்றமடைய செய்கிறார்கள். ஆனால் ட்ரேசி ஒருபோதும் அவ்வாறு செய்வதில்லை. உதாரணத்திற்கு, ஒருநாள் ட்ரேசியை வீட்டில் விட்டுவிட்டு, நான் என்னுடைய தோழி ஒருத்தியுடன் நடந்துபோய்கொண்டிருந்தேன். நாங்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம், ஆனால் திடீரென்று நான் தரையில் விழுந்தேன். நான் ஒரு குருடி என்பதை என் தோழி மறந்துவிட்டாள், தெருவில் சாக்கடையை மூடியுள்ள ஒரு மேடு இருக்கிறது என்று அவள் என்னை எச்சரிக்கவில்லை. என்னுடைய ட்ரேசி என் பக்கத்தில் இருந்திருந்தால் எனக்கு இந்தகதி நேர்ந்திருக்காது.

ஒருமுறை ட்ரேசி என் உயிரை உண்மையிலேயே காப்பாற்றினாள். நான் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தேன், திடீரென்று ஒரு வண்டி கட்டுக்கடங்காமல் தாறுமாறாக ஓடி என்னை நோக்கி வந்தது. எனக்கு இஞ்சின் சத்தம் கேட்டதே ஒழிய, அது எந்தப்பக்கம் வந்துகொண்டிருந்தது என்று நிதானிக்க முடியவில்லை. இதை ட்ரேசி பார்த்துவிட்டாள், ஆபத்தை உணர்ந்த உடனே என்னை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துக்கொண்டு போனாள்.

பார்வையின்றி பார்க்கிறேன்

1944-ல், தெற்கு ஸ்வீடனில் நான் பிறந்தேன், நான் ஒரு பிறவிக்குருடி. என்னை பார்வையற்ற குழந்தைகளுக்கான ஒரு போர்டிங் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள், அங்கே நான் பிரேய்லில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டேன். இசை என் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துகொண்டது, அதிலும் முக்கியமாக பியானோ இசைப்பது. உயர்நிலை பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்ற பிறகு, நான் கோடேபோர்க் என்ற பல்கலைக்கழகத்தில் பல மொழிகளையும் இசையையும் தொடர்ந்து கற்றுவந்தேன்.

ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த என் அறையின் கதவுகளை இரண்டு யெகோவாவின் சாட்சிகள் எப்போது தட்டினார்களோ அப்போது என் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது. வெகுவிரைவிலேயே நான் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். நான் கற்ற விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் துவங்கினேன். யெகோவா தேவனுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் 1977-ல் வெளிப்படுத்திக் காட்டினேன். நான் கண்பார்வை அற்றவளாக இருந்தாலும்கூட, கடவுளின் வார்த்தையைப் படித்ததன் மூலம், விலைமதிக்கமுடியாத ஒன்றை பெற்றுக்கொண்டேன். அது தான் ஆன்மீக பார்வை.

இன்று, கண்பார்வை இருந்தும் ஆன்மீக ரீதியில் குருடாக இருப்பவர்களைக் காட்டிலும் நான் எவ்வளவோ மேல் என்று எனக்கு நானே நினைத்துக்கொள்கிறேன். (யோவான் 9:39-41-ஐ ஒப்பிடுக.) கடவுளின் புதிய உலகில் கடவுள் தந்த வாக்கின்படியே குருடர்கள் கண்பார்வை அடைவார்கள்— எல்லா வகையான நோய்களும் தீர்க்கப்படும், மரித்தவர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை நான் எனது மனக்கண்ணால் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியில் மூழ்குகிறேன்!—சங்கீதம் 146:8; ஏசாயா 35:5, 6; அப்போஸ்தலர் 24:15.

நான் திருமணம் ஆகாதவளாகவும், கண்பார்வை அற்றவளாகவும் இருந்தாலும்கூட, விசுவாசமுள்ள உற்ற துணையாக இருக்கும் என்னுடைய ட்ரேசியின் உதவியால் இயல்பான வாழ்க்கையை ரொம்ப நன்றாகவே என்னால் ஓட்ட முடிகிறது. எப்படி அவள் எனக்கு உலகப்பிரகாரமான வேலையைச் செய்யவும், ஒரு யெகோவாவின் சாட்சியாக எனது ஊழியத்தை நிறைவேற்றவும் உதவுகிறாள் என்று உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். (மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 20:20; எபிரெயர் 10:25) ஆனால், அதற்கு முன் ட்ரேசியை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

விசேஷ பயிற்சிக்காகத் தெரிவுசெய்தல்

ட்ரேசி வெறும் 8 மாத குட்டியாக இருந்தபோதே, ஒரு வழிகாட்டும் நாயாக அவளுக்குப் பயிற்சி அளிக்க முடியுமா என்று அவளை சோதித்தார்கள். அவள் அமைதியாகவும், எளிதில் கற்றுக்கொள்பவளாகவும், திடீரென வரும் பலத்த சத்தத்திற்கு பயப்படாதவளாகவும் இருந்தது தெரியவந்தது. ஆகவே, அடுத்தப்படியாக, இயல்பான குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கற்றுக்கொள்ள ஒரு குடும்பத்தோடு இருக்கும்படி சில காலத்திற்கு அவள் அனுப்பிவைக்கப்பட்டாள். பிறகு, அவள் போதுமான அளவுக்கு வளர்ந்தவுடன், வழிகாட்டும் நாய்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

வழிகாட்டும் ஒரு நாயாக என்னவெல்லாம் தேவை என்பதை ட்ரேசி இந்தப் பள்ளியில் கற்றுக்கொண்டாள். அதாவது தன் எதிர்கால எஜமானுக்கு கதவுகளையும், படிகளையும், வாயில் கதவுகளையும் (gates), பாதைகளையும் கண்டுபிடிக்க உதவ வேண்டும். நெரிச்சலுள்ள நடைபாதைகளில் எப்படி நடப்பது, தெருக்களை எப்படி கடப்பது போன்றவற்றையும் அவள் கற்றுக்கொண்டாள். சாக்கடையை மூடியுள்ள மேடான பகுதியைக் கண்டதும் நிற்கவும், போக்குவரத்து சிக்னல்களுக்குக் கீழ்ப்படியவும், ஆபத்தான முட்டுகட்டைகளிடமிருந்து விலகி இருக்கவும் அவளுக்குக் கற்றுத்தரப்பட்டன. சுமார் ஐந்து மாத பயிற்சிக்குப்பின், அவள் வேலைக்குத் தயாரானாள். அந்தச் சமயத்தில்தான் ட்ரேசியை எனக்கு அறிமுகம் செய்தனர்.

ட்ரேசி எனக்குச் செய்யும் வேலைகள்

ஒவ்வொரு நாள் காலையிலும் ட்ரேசி என்னைப் படுக்கையிலிருந்து எழுப்புகிறாள், நான் எழுந்து அவளுக்கு சாப்பிட கொடுப்பேன். பிறகு வேலைக்குப்போக நாங்கள் தயாராவோம். எங்களுடைய ஃப்ளாட்டிலிருந்து சுமார் 20 நிமிடம் நடந்தால் என் ஆபீஸ் வந்துவிடும். எனக்கு நன்றாகவே வழி தெரியும். இருந்தாலும் வண்டிகளின் மீதோ, ஆட்களின் மீதோ, விளக்குக் கம்பங்களின் மீதோ அல்லது இதுபோன்ற எத்தனையோ பொருட்களின்மீது மோதிவிடாமல் என்னைப் பத்திரமாக ஆபீஸுக்குக் கொண்டுபோய் சேர்க்கவேண்டியது ட்ரேசியின் வேலை. நாங்கள் வந்து சேர்ந்ததும், அவள் என்னுடைய மேஜையின்கீழே படுத்துக்கொள்வாள். பிறகு, மதிய உணவு இடைவேளையின்போது பொதுவாகவே நாங்கள் சற்று உலாவப்போவோம்.

சாயங்காலம் ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய பிறகுதான், அந்த நாளின் மகிழ்ச்சியான நேரம் ஆரம்பமாகும். இந்த நேரத்தில்தான் ட்ரேசி என்னை வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கும், நான் பைபிள் படிப்பு நடத்தும் வீடுகளுக்கும் வழிநடத்திக்கொண்டு போவாள். பலர் அவளிடத்தில் நட்போடு இருக்கிறார்கள். அவளை தட்டிக்கொடுப்பார்கள், கட்டிப்பிடிப்பார்கள். சில நேரங்களில் அவளுக்காக கொஞ்சம் உணவு பண்டங்களையும் என்னிடத்தில் கொடுத்து அனுப்புவார்கள். ஒவ்வொரு வாரமும் நாங்கள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் போவோம். கூட்டங்கள் முடிந்தப்பின், ட்ரேசியை மகிழ்விக்கும் வகையில் பிள்ளைகள் அவளை பார்க்கவும், கட்டிப்பிடித்து விளையாடவும் ஓடோடி வருவார்கள்.

ட்ரேசி வெறும் ஒரு நாய் என்பதும், ஒருநாள் அவள் இறந்துபோவாள் என்பதும் எனக்குத் தெரியும். அப்படியென்றால் நான் வேறொரு வழிநடத்தும் நாயைக் கொண்டுவரவேண்டியிருக்கும். ஆனால், இப்போதைக்கு நாங்கள் இருவரும் ஒரு குழுவாக இருக்கிறோம், ஒருவரின் உதவி மற்றவருக்குத் தேவையாக இருக்கிறது. ட்ரேசி என் பக்கத்தில் இல்லையென்றால் எனக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அவளுக்குக்கூட என்னை வழிநடத்திக்கொண்டு போகவில்லையென்றால் ஒருமாதிரியாக பயந்து, தவிதவித்துப் போவாள்.

புரிந்துகொள்வதற்கான தேவை

சில நேரங்களில் எங்கள் இருவரையும் பிரித்துவிட ஆட்கள் முயற்சிப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்கள் ட்ரேசியை வெறும் ஒரு சாதாரண நாயாக அல்லது செல்லப்பிராணியாக பார்க்கிறார்கள், எங்கள் இருவரிடையே இருக்கும் ஆழமான உறவை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. கைகால் விலங்காத ஒருவருக்கு எப்படி சக்கரநாற்காலி அவசியம் தேவையோ அதேபோல் எனக்கு ட்ரேசி அவசியம் தேவை என்ற உண்மையை இந்த ஆட்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். எங்களைப் பிரிக்க நினைப்பது என் கண்களைப் பிடிங்கி எறிவதற்கு சமானம்.

என்னையும் ட்ரேசியையும் பற்றி மற்றவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாக புரிந்துகொள்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரச்சினைகளும் கண்டிப்பாக குறையும். சொல்லப்போனால், ஒரு சக்கரநாற்காலியை உடனே ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். ஆனால் ஒரு வழிகாட்டும் நாயை அவ்வாறு எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலருக்கு நாய்கள் என்றால் பயம் அல்லது அவர்களுக்கு நாய்களைக் கண்டாலே பிடிக்காது.

வழிநடத்தும் நாய்களைப் பற்றி ஸ்வீடனின் பார்வையற்றோரின் சங்கம் வெளியிட்ட கையேடு பெரும் உதவியாக இருக்கிறது. அது சொல்வதாவது: “பார்வையற்ற ஒருவருக்கு நடமாடும் ஓர் உதவியாளனாக இருப்பது இந்த வழிநடத்தும் நாய். ஆம், அதைக்காட்டிலும் அதிகம் செய்கிறது. இது உயிரோடு இருக்கும் ஒரு உதவியாளன். . . . உங்களை ஒருபோதுமே ஏமாற்றம் அடையச்செய்யாதிருக்கும் ஒரு நண்பன்.”

உண்மையில், இருளில் எனது கண்களாக ட்ரேசி இருக்கிறாள், இப்போது ஓரளவுக்கு இயல்பான வாழ்க்கை வாழ அவள் எனக்கு உதவுகிறாள். இருப்பினும், விரைவில் கடவுள் வாக்களித்திருக்கும் புதிய உலகில் மனதை கொள்ளைகொள்ளும் பிரமிப்பூட்டும் படைப்பை கண்குளிர கண்டு மகிழ்வேன் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இப்போது என்னுடைய ஆன்மீக பார்வையை நிலையாக வைத்துக்கொள்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ஆகவே, இப்போது என் மடியில் ட்ரேசி தலையை வைத்து படுத்தக்கொண்டிருக்க, பதிவு செய்யப்பட்ட காவற்கோபுர பத்திரிகையின் புதிய இதழை டேப்பில் போட்டு கேட்க நாங்கள் தயாராகிவிட்டோம்.—ஆன்-மாரி ஏவால்ட்சான் சொன்னபடி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்