லண்டனின் தண்ணீர் சப்ளை—ஒரு புதிய கோணம்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
இங்கிலாந்தின் தலைநகரான லண்டன், உலகத்திலேயே மிகவும் முன்னேற்றமடைந்த தண்ணீர் சப்ளையை இப்போது கொண்டிருக்கிறது. தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே, சுமார் $37.5 கோடி செலவில் அது முடிக்கப்பட்டது. அதன் கட்டமைப்பில் பெறப்பட்ட தொழில்திறமை ஏற்கெனவே மற்ற நாடுகளுக்கு வணிகப்படுத்தப்பட்டு வருகிறது.
அதிக செலவாகும் அப்படிப்பட்ட திட்டம் ஏன் அவசியமாயிருந்தது, அது எதை சாதித்திருக்கிறது?
பழைய ஒன்றிற்கு பதிலாக புதிது
லண்டனின் மிகப் பழமையான மைய மெயின் நீர்க்குழாய் 1838-ல் கட்டப்பட்டது. நாற்பது வருடங்களுக்குப் பிறகும் நகரத்தின் ஏழ்மையான பகுதிகளில், சமுதாய தெருவிலிருக்கும் நிலைகுத்துக் குழாய்களிலிருந்து பக்கெட்டுகளில் நீர் எடுத்துச்செல்லப்பட்டு வந்தது. “சாவியை வைத்திருக்கும் ஓர் ஆள் அதிகாலையில் குழாயை திறப்பது முக்கியத்துவம்வாய்ந்த ஒரு சம்பவமாக இருந்தது, . . . ஏனெனில் சாவியைப் பெற்றிருக்கும் அந்த அதிகாரி போன பிறகு அடுத்த நாள் காலைவரை ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட பெற முடியாது,” என்பதாக எழுத்தாளர் ஒருவர் விவரிக்கிறார்.
விக்டோரியா ராணி காலத்திய என்ஜினியர்கள், இரும்பு மெயின் நீர்க்குழாய்களை அமைப்பதன் மூலமாகவும் சாலை பரப்பின்கீழ் வெவ்வேறு ஆழங்களில் குழாய்க் கால்வாய்களைக் கட்டுவதன் மூலமாகவும் தனிப்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வழங்கியபோது திறம்பெற்ற வேலையைச் செய்தனர். எனினும், அது முதற்கொண்டு, தொலைதூரங்களுக்கு—சில சமயங்களில் 30 கிலோமீட்டர் வரையான தூரத்திற்கு—போதிய அளவு நீரோட்டத்தை உறுதிப்படுத்த தேவைப்படும் அதிக பம்பிங் அழுத்தத்துடன் சேர்த்து, மோட்டார் போக்குவரத்தின் அதிகரிக்கும் பருமனும் எடையும் அதிர்வும் மெயின் நீர்க்குழாய்கள் உடைந்துபோவதில் விளைவடைந்திருக்கின்றன. மெயின் நீர்க்குழாயின் ரிப்பேருக்காக சாலைகள் மூடப்படும்போது போக்குவரத்தில் குழப்பம் உண்டாகிறது. இங்கிலாந்திலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் அனைத்திலும் 25 சதவீதம், நீர்க்குழாய்களில் ஏற்படும் ஊறுபாடுகளால் இழக்கப்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
கூடுதலாக, லண்டனில் சென்ற 150 வருடங்களாக இருந்துவந்திருக்கும் தண்ணீருக்கான தேவை, நாளுக்கு 33 கோடி லிட்டரிலிருந்து 200 கோடிக்கும் அதிகமான லிட்டருக்கு அதிகரித்திருக்கிறது. வாஷிங் மெஷின்கள், டிஷ்வாஷர்கள், கார் கழுவுதல், வறண்ட கோடை காலத்தின்போது தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சுதல் போன்ற அனைத்தும் தேவையை அதிகப்படுத்துவதில் பங்களித்திருக்கின்றன. பெருநகருக்கு தண்ணீர் சப்ளையை முன்னேற்றுவிப்பதற்கான தேவை அவசரமாக கவனிக்கப்பட வேண்டியதாயிற்று. ஆனால் என்ன செய்யப்பட முடியும்?
பெரியளவில் திட்டமிடுதல்
அதே சாலைகளில் பழைய பைப்புகளுக்குப் பதிலாக பலமானவற்றை மாற்றீடு செய்வது முடியாத காரியம். லண்டன்வாசிகளுக்கு ஏற்படவிருந்த அசௌகரியம் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்ததோ அந்தளவுக்கு அதற்குரிய செலவுகளும் கட்டுப்படியாகாதவையாய் இருந்தன. இவ்வாறு, பத்து வருடங்களுக்கு முன்பு தேம்ஸ் வாட்டர் ரிங் மெயின் திட்டம் (Thames Water Ring Main project) வரையப்பட்டது. அது லண்டனின் தண்ணீர் சப்ளையை மிக அதிகமாக அதிகரிக்கும். நகரத்திற்கு கீழே சராசரியாக 40 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டு, நாளுக்கு 100 கோடிக்கும் அதிகமான லிட்டர் தண்ணீரை எடுத்துச்செல்லத்தக்க, 80 கிலோமீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமுமுள்ள மெயின் நீர்க்குழாயை அல்லது சுரங்கத்தை உண்டாக்குவதுதான் அந்தத் திட்டம். அப்படிப்பட்ட ரிங் மெயின், இரண்டு திசைகளிலேயுமே பாய்வு கட்டுப்படுத்தப்படுவதை அனுமதித்து, எந்தப் பகுதியும் எந்த நேரத்திலும் பழுதுபார்க்கும் பணிக்காக எடுக்கப்படுவதை சாத்தியமாக்கும். நீர் சுத்திகரிக்கும் நிலையங்களிலிருந்து புவியீர்ப்பினால் தண்ணீர் சுரங்கத்திற்குள் செலுத்தப்பட்டு, பின்பு, ஏற்கெனவே இருக்கும் உள்ளூர் மெயின் சப்ளைகளுக்குள் அல்லது தற்காலிக நீர்த்தேக்கங்களுக்குள் நேரடியாக பம்ப் செய்யப்படும்.
பிரிட்டனிலேயே மிக நீளமான அந்தச் சுரங்கம் ஏன் அவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும்? ஏனெனில், லண்டனின் நிலத்தடி, 12 பாதாள ரயில் அமைப்புகளாலும் பொதுவிலிருக்கும் பெருமளவான பொதுப்பணி பயனுடைமைகளாலும் நிரம்பியிருக்கிறது. சந்தேகமில்லாமல் அவை எல்லாவற்றிற்கும் இடையூறாக இல்லாதபடி சுரங்கம் இருக்க வேண்டும். முதல் ஆய்வில் கண்டுபிடிக்கத் தவறிப்போன ஒரு கட்டிடத்தின் ஆழமான அஸ்திபார பதிகாலை எதிர்பாராத விதமாக என்ஜினியர்கள் எதிர்ப்பட்டபோது, வேலை பத்து மாதங்களுக்கும் மேலாக தாமதமானது.
கட்டமைப்பு, பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கேற்றபடி அட்டவணையிடப்பட்டது. லண்டனின் களிமண்ணைத் தோண்டுவதில் அதிகமான பிரச்சினைகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இடமான தென் தேம்ஸிலுள்ள டூடிங் பெக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக சுரங்கம் தோண்டுதல் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. அங்கே சுரங்கத்தொழிலாளிகள், அதிக நீர் அழுத்தத்தைப் பெற்றிருக்கும் மண்படுகையை எதிர்ப்பட்டனர். அது கடைசியில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் இயந்திரத்தை மூடிவிட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, குத்தகையாளர்கள் நிலத்தை உறையும்படி செய்வதற்கு மைனஸ் 28° செல்சியஸில் ஆழ்துளைகளுக்குள் உவர்நீர் கரைசலை சுற்றோட்டம் செய்ய தீர்மானித்தனர். மற்றொரு சுரங்கச் செல்குழாயை அருகாமையில் இறக்குவதன் மூலம், புதையுண்ட அந்த இயந்திரத்தை வெளியேற்றத்தக்கதாய் ஐஸ் கட்டியினூடே தோண்டவும் துளையிடுவதைத் தொடரவும் அவர்களால் முடிந்தது.
இந்த அனுபவத்தின் காரணமாக, சுரங்கத்தை சிமிட்டியால் பூசும் ஒரு புதிய திட்டத்தை வகுப்பதற்கான தேவையை என்ஜினியர்கள் கண்டனர். இப்படிப்பட்ட நிலையற்ற நிலத்தைச் சமாளிப்பதற்கு வேறு விதமான சுரங்கம் தோண்டும் இயந்திரம் தேவைப்படுவதும் தெளிவாகியது. கெனடியன் புவி அழுத்த சமநிலை இயந்திரம் அதற்கு ஏற்ற ஒன்றாக இருந்தது. அதில் மூன்று வாங்கப்பட்டன, அதன் காரணமாக சுரங்கம் தோண்டும் வேகம் மாதத்திற்கு 1.5 கிலோமீட்டர் என இரட்டிப்பானது.
கம்ப்யூட்டர் கட்டமைப்பு
சுரங்கச் செல்குழாய் இடங்களுக்கான பார்வைக்கோடு அளவுகளைக் கொடுப்பதற்காக பாரம்பரிய தியோடொலைட் நில ஆய்வுகள் மேற்கூரைகளிலிருந்து செய்யப்பட்டன. பின்பு விளைவுகள் எலக்ட்ரானிக் முறையில் சரிபார்க்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த முறை போதுமானதாக இருந்தது, ஆனால் சுரங்கம் தோண்டுதல் ஆரம்பமானவுடன் நிலத்தடியில் சரியான ஒழுங்கமைப்பை எவ்வாறு நிச்சயப்படுத்த முடியும்?
இதை, க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டத்தின் (GPS) மூலம் நவீன தொழில்நுட்பம் நிறைவேற்றியது. இந்த ஆய்வுச் சாதனம், பூமியைச் சுற்றும் GPS விண்வெளி ஓடத்துடன் இணைக்கும் செயற்கைக்கோள் ரிஸீவரைக் கொண்டிருக்கிறது. இச்சாதனம் சுற்றிக்கொண்டிருக்கும் அநேக செயற்கைக்கோள்களிலிருந்து வரும் சிக்னல்களை ஒப்பிட முடியும். இந்த அளவுகள் கம்ப்யூட்டரால் கிரமமாக இணைக்கப்பட்டவுடன், 21 சுரங்கச் செல்குழாய்கள் மற்றும் 580 ஆழ்துளைகளின் இடங்கள் ஆர்டன்ஸ் சர்வே வரைபடங்களில் பாதைகளினூடே துல்லியமாக குறிக்கப்படுகின்றன. இந்தச் செய்திக்குறிப்புகளால் ஆயத்தமாக்கப்பட்டவர்களாய், சுரங்கம் தோண்டுபவர்கள் சரியாக வழிநடத்தப்பட்டனர்.
கம்ப்யூட்டர் கட்டுப்பாடு
60 லட்சம் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது சுலபமான வேலையே இல்லை. காலத்திற்கு காலம் மட்டுமல்ல நாளுக்கு நாள்கூட தேவையில் ஏற்றவிறக்கம் ஏற்படும். சரியான நீர் அழுத்தமும் நீர் தரமும் எல்லா காலங்களிலும் பராமரிக்கப்படுவதை நிச்சயப்படுத்துவதற்கு 24-மணிநேர கண்காணிப்பு செய்யப்படுவதை இது தேவைப்படுத்துகிறது. இந்த இன்றியமையாத ஒருங்கிணைப்பு எவ்வாறு சாத்தியமாகும்? $50 லட்சம் விலையுள்ள கம்ப்யூட்டர் கன்ட்ரோல் ஸிஸ்டம் ஒன்றினால் இதைச் செய்ய முடியும்.
ஒவ்வொரு சுரங்கச் செல்குழாய் பம்ப்பும் அதற்குரிய சொந்த கம்ப்யூட்டரினால் கட்டுப்படுத்தப்படுகிறது, குறைந்த விலையுள்ள, அதிகமாய் பயன்படுத்தப்படாத நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் செலவு மிகக் குறைவாகிறது. மேற்கு லண்டனின் ஹாம்ப்டனிலுள்ள மாஸ்டர் கம்ப்யூட்டர்கள், முழு நெட்வொர்க்கையும் கட்டுப்படுத்துகின்றன. கம்ப்யூட்டர்கள், சுரங்கத்தின் சுவர்களிலுள்ள குழாய்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களிலிருந்து செய்திக்குறிப்புகளைப் பெற்று அவற்றை க்ளோஸ்-சர்க்யூட் தொலைக்காட்சி மானிடர்கள் மூலம் ஒலிபரப்புகின்றன.
தினசரி, வாராந்தர மற்றும் மாத இடைவெளிகளில் தண்ணீரின் தரம் சரிபார்க்கப்படுகிறது. “தண்ணீரின் தரத்தைப் பரிசோதனை செய்வதில் 120 பொருட்களுக்கு கட்டாயமான 60 பரிசோதனைகள் இருக்கின்றன. நைட்ரேட்டுகள், இம்மித் தனிமங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற வேதியியல் கரைமங்கள் போன்ற பொருட்களுக்கான பரிசோதனையையும் அவை உட்படுத்தும்,” என்பதாக தி டைம்ஸ் செய்தித்தாள் விளக்குகிறது. இந்த அளவுகள் இப்போது ஆட்டமேட்டிக்காக செய்யப்பட்டு, தேவைக்குத் தகுந்தாற்போல் விளக்கமளிக்கப்படுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கம்ப்யூட்டர் தலைமை அலுவலகத்தில் ஒலிபரப்பப்படுகின்றன. தண்ணீரை சுவைப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்போர்கூட தரத்தை காலமுறைதோறும் மதிப்பிடுகின்றனர்.
எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடுதல்
லண்டன் பெருநகரின் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பின்மீது பரவியிருக்கும் ஜனத்தொகைக்கு ஒவ்வொரு நாளும் 58.3 கோடி குடிநீரை அதிசயிக்கத்தக்க நவீன என்ஜினியரிங் ஏற்கெனவே அளித்துவருகிறது. அது முழுமையாகவே செயல்பட ஆரம்பித்தவுடன், இப்போதுள்ள 50 சதவீத தேவையைப் பூர்த்திசெய்து, சப்ளை செய்யும் மற்ற மூலங்களின் சிரமத்தை நீக்கும்.
இதுவும்கூட போதுமானதாக இருக்காது. ஆகவே, அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரிங் மெயினை இன்னொரு 60 கிலோமீட்டருக்கு பெரிதாக்குவதற்கான திட்டங்கள் இப்போது வகுக்கப்படுகின்றன. உண்மையிலேயே, கஷ்டமான ஒரு பிரச்சினைக்கு புத்திநுட்பமான தீர்வாகும்!
[பக்கம் 15-ன் வரைப்படம்]
லண்டன் நிலத்தடியின் குறுக்குவெட்டுத் தோற்றம், மற்ற சுரங்க பணிகளுக்குக் கீழ் மெயின் நீர்க்குழாயைக் காண்பிக்கிறது
புதிய மெயின் நீர்க்குழாய் மற்றும் சுரங்கச் செல்குழாய்கள்
தேம்ஸ் நதி
நிலத்தடி ரயில் சுரங்கங்கள்
[பக்கம் 16-ன் படம்]
மெயின் நீர்க்குழாயின் சுரங்கம் தோண்டும் இயந்திரம்
[படத்திற்கான நன்றி]
Photograph: Thames Water
[பக்கம் 16-ன் படம்]
மெயின் நீர்க்குழாய் கட்டமைப்பு வேலை
[படத்திற்கான நன்றி]
Photograph: Thames Water