‘திக்குவாயருடைய நாவும் பேசும்’
அது செக்கோஸ்லோவாகியாவில் (இப்பொழுது செக் குடியரசு), யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ மாநாட்டு தினமொன்றின் பிற்பகல் நிகழ்ச்சிநிரலாயிருந்தது; பைபிள் போதனைகளைப் பெறுவதற்கென்று நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சிநிரலில் எனக்கிருந்த பாகத்தை மறுபார்வை செய்துகொண்டு பேச்சுமேடையின் பின்புறத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். அது அவ்வளவு பெரிய பாகமாயில்லை. இரண்டு இளம் சாட்சிகள் அனுபவங்களைச் சொல்ல இருந்தனர், நானோ அப்பாகத்திற்கு அக்கிராசனராய் மட்டுமே இருக்கவேண்டியிருந்தது. அன்று காலையில் எனக்குள்ளே மன அழுத்தம் இருந்தது, இப்போது அது அதிகரித்துவந்தது. நான் உண்மையிலேயே ஸ்தம்பித்துப் போனேன், அதீத கவலையுற்றேன், பேச முடியாதவனுமானேன்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கிட்டத்தட்ட அனைவருக்குமே படபடக்கத்தான் செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது வெறும் படபடப்பைக் காட்டிலும் அதிகமானதாய் இருந்தது. ஏன் அவ்வாறிருந்தது என்று நான் விவரிக்கிறேன்.
பேசுவதில் எனக்கிருந்த பிரச்சினை
நான் 12 வயதில் கீழே விழுந்ததால், என் தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பில் காயம்பட்டது. அதன் பிறகு, எப்போதாவது திக்குவேன், அல்லது வார்த்தைகளை அமைப்பதில் சிரமப்படுவேன், விசேஷமாக p, k, t, d, m போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைப் பேசுகையில் சிரமப்படுவேன். சில சமயங்களில், எனக்குப் பேசவும்கூட முடியாமல் போய்விட்டிருக்கிறது.
அப்போதைக்கு அப் பிரச்சினை அவ்வளவாய் என்னைக் கவலையுறச் செய்யவில்லை; அது ஓர் அசௌகரியமாய் மட்டுமே இருந்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல, எந்தவிதப் பொதுப்பேச்சைப் பற்றியும் ஓர் உண்மையான அச்சத்தை என்னில் வளரச்செய்தேன். பள்ளியில் ஓர் அறிக்கையை அளிக்கையில் ஒரு தடவை நான் மயக்கமடைந்துவிட்டேன். மேலும் சில சமயங்களில் நான் பொருட்கள் வாங்கச் சென்றிருக்கையில், எனக்கு என்ன வேண்டும் என்று விற்பனையாளர்கள் கேட்பர்; எனக்கோ, அவர்களுக்குப் பதில் கூற முடியாது. பேசுவதற்குக் கடினமாகப் போராடிக்கொண்டு அப்படியே நான் நிற்கையில், அவர்களுக்கு எரிச்சல் அதிகமாகும்: “சீக்கிரம் சொல்லு. நான் ஒரு நாள் முழுவதும் காத்துக்கிட்டு இருக்க முடியாது. மற்ற வாடிக்கையாளர்கள் காத்துக்கிட்டு இருக்கிறாங்க.” அதன் விளைவாக, எனக்குத் தேவையான பொருட்களை நான் வாங்க முடியாமல் போனது.
பள்ளியில் நான் இருந்த ஆண்டுகள் மிகவும் சிரமமாய் இருந்தன. வாய்மொழியான அறிக்கைகளைக் கொடுக்க வேண்டியிருந்தபோது, நான் திக்குவதைப் பார்த்து பள்ளித்தோழர்கள் கேலி செய்வர். ஆனாலும், நான் உயர்நிலைப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்று, 1979-ல் ப்ராக், செக்கோஸ்லோவாகியாவில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கல்வி பயின்றேன். நான் விளையாட்டுப் போட்டிகளில் இன்புற்றதால், உடற்கல்வி ஆசிரியராவதற்குரிய தொடர்பயிற்சி பெற்றேன். ஆனால் என் இலக்கை எப்படி அடைய முடியும்? அவநம்பிக்கைகள் இருந்தபோதிலும், முன்செல்ல வேண்டும் என்று நான் தீர்மானமாயிருந்தேன்.
உதவியை நாடுதல்
பேச்சில் எனக்கிருந்த சிரமத்தை மேற்கொள்ள எப்படியாவது ஒரு வழியைக் காண வேண்டியிருந்தது. ஆகவே பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்பு, தொழில்முறை உதவியைப் பெறுவதற்கு நான் தீர்மானமாயிருந்தேன். பேச்சுக் குறைபாட்டு சிகிச்சைக்கு விசேஷ கவனம் செலுத்தும் ஒரு கிளினிக்கை ப்ராக்கில் தேடிச் சென்றேன். அவ்வாறு அணுகிய துவக்கத்தில், “உனக்கிருக்கும் உளக்கோளாறு வினோதமானது!” என்று ஒரு நர்ஸ் யோசனையின்றிப் பேசிவிட்டார். திக்குதல் ஓர் உளக்கோளாறல்ல என்று வல்லுநர்கள் ஒத்துக்கொண்டபோதிலும், என்னை அவர் உளக்கோளாறு உள்ளவராய்க் கருதியதை நினைத்தது என்னைப் புண்படச் செய்தது. வெகு சீக்கிரத்தில் ஒரு தனித்தன்மையுடைய பிரச்சினையை நான் எதிர்ப்பட்டதை உணர்ந்தேன்: நான் 24 வயதுடைய ஓர் இளைஞன், மற்ற அனைத்து நோயாளிகளும் சிறார்கள்.
விரைவில் உளவியலார் உட்பட, அங்கு வேலை பார்ப்பவர் அனைவரும், எனக்கு உதவுவதில் ஈடுபட்டார்கள். எல்லா விதங்களிலும் அவர்கள் முயன்றார்கள். ஒரு தடவை, ஐந்து வாரங்களுக்கு என்னை எவருடனும் பேச அனுமதிக்கவில்லை. மற்றொரு சமயம், ஒவ்வொரு எழுத்தாகப் பேசவும், மி-க-வு-ம் மெதுவாகப் பேசவும் மட்டுமே என்னை அனுமதித்தார்கள். இந்த அணுகுமுறை எனக்கு உதவினபோதிலும், நான் அவ்வாறு வாசிப்பதைக் கேட்கும் பலர் தூங்கிவிட்டதால் பாம்பாட்டி என்ற பட்டப்பெயரையும் அது எனக்குத் தேடித்தந்தது.
யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு
1984-ல் ஒரு கோடைகாலக் காலையில், நகரின் வாணிக அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் நான் நடந்துசெல்கையில், இரண்டு இளைஞர்கள் என்னை அணுகினர். அவர்களின் வெளிப்படையான தோற்றம் அல்ல, ஆனால் அவர்கள் கூறின விஷயமே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினது. கடவுளுக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறதென்றும், அது, மனிதகுலத்தின் எல்லா பிரச்சினைகளையும் முடிவுக்குள்ளாக்கும் ஒரு ராஜ்யம் என்றும் அவர்கள் கூறினர். தங்களுடைய ஃபோன் நம்பரை அவர்கள் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றதால், பிறகு நான் அவர்களுக்கு ஃபோன் செய்தேன்.
அப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் ஒரு சட்டப்பூர்வமான மத அமைப்பாக செக்கோஸ்லோவாகியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனாலும், சீக்கிரத்தில் எனக்கிருந்த அக்கறை அந்தளவுக்கு வளர்ந்துவந்ததால் நான் அவர்களுடைய கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தேன். சாட்சிகள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பையும் அக்கறையையும் அப்படியே என்னால் உணர முடிந்தது.
நம்பிக்கையை நோக்கிச் சென்ற பாதை
என் பேச்சுக் குறைபாட்டிற்கு உதவி, தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் வடிவில் எனக்கு வந்தது; யெகோவாவின் சாட்சிகளுடைய ஒவ்வொரு சபையிலும் அப் பள்ளி, வாரம் ஒரு முறை நடத்தப்படுகிறது. என் பெயரையும் அதில் பதிவு செய்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தப்பட்டதால் நானும் பதிவு செய்துகொண்டேன். அப் பள்ளியின் பாடப்புத்தகங்களில் ஒன்றான தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்-ல் கூறப்பட்டிருந்த ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, சரளமாகப் பேசுதல், உச்சரிப்பு, கருத்து அழுத்தம், குரலில் ஏற்றத்தாழ்வு போன்ற பேச்சுப் பண்புகளில் உழைத்தேன். a
என்னுடைய முதல் மாணாக்கர் பேச்சு, பைபிள் வாசிப்பாக இருந்தது, அது முற்றிலும் தோல்வியானது. எனக்கு அந்தளவாய்ப் படபடத்துவிட்டதால், நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது. வெந்நீரில் குளித்த பிறகு படபடப்பு நீங்கிய நிலையைப் பெற்றதற்காக நான் எவ்வளவு நன்றியுடனிருந்தேன்!
அந்த முதல் பேச்சிற்குப் பிறகு, பள்ளிக் கண்காணி தயவுடன் என் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தினார். அவர் எனக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை மட்டும் அளிக்கவில்லை, என்னைப் போற்றவும் செய்தார். முயன்றுகொண்டே இருப்பதற்கு வேண்டிய தைரியத்தை அது எனக்கு அளித்தது. அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே, 1987-ல், நான் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியானேன். சில மாதங்களுக்குப் பிறகு, ப்ராக்கிலிருந்து ஸடார் நாட் ஸாஜாவோ என்ற அமைதியான சிறிய நகருக்கு மாறிச் சென்றேன். உள்ளூரிலிருந்த சாட்சிகளின் அந்தச் சிறிய தொகுதியினர் கனிவுடன் என்னை வரவேற்றனர். இன்னும் எனக்கிருந்த ஓசையற்ற பேச்சையும், அதைவிட, தடுமாற்றமான பேச்சையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர், அது என் சுயமரியாதையை அதிகரிக்கச் செய்தது.
காலப்போக்கில், ஒரு சிறிய பைபிள் படிப்புத் தொகுதியை நடத்த ஆரம்பித்தேன், அதன் பிறகு என்னுடைய முதல் பொது பைபிள் பேச்சைக் கொடுத்தேன். காலப்போக்கில், செக்கோஸ்லோவாகியாவில் அரசாங்க மாற்றம் ஏற்பட்ட பிறகு, அருகிலிருந்த சபைகளிலும் அதுபோன்ற பேச்சுக்களை நான் கொடுக்க ஆரம்பித்தேன். பழக்கப்படாத சுற்றுப்புறங்களில் என் பேச்சுக் குறைபாடு திரும்பியது. ஆனால் நான் விட்டுவிடவில்லை.
விசேஷ பிரச்சினைகளை எதிர்ப்படுதல்
ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ மூப்பர் என்னை அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு வரும்படி அழைத்தார். “பீட்டர், உங்களுக்கென்று நான் நல்ல செய்தி வைத்திருக்கிறேன்! வரவிருக்கும் வட்டார மாநாட்டில் நீங்கள் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார். எனக்கு மயக்கமாய் வந்ததால் உட்காரவேண்டியதாகிவிட்டது. என் நண்பர் ஏமாற்றமடையும் வகையில், நான் அந்த அளிப்பை ஏற்க மறுத்தேன்.
அவ்வாறு மறுத்தது திரும்பத்திரும்ப என் நினைவுக்கு வந்தது. அதை என் மனதிலிருந்து நீக்கிப்போடவே முடியவில்லை. கிறிஸ்தவக் கூட்டங்களின்போது, கடவுளில் நம்பிக்கை வைப்பதைப் பற்றிய விஷயம் பேசப்படும்போதெல்லாம், அந்த மறுப்பு திரும்ப என் மனதில் வந்து என்னை வேதனைப்படுத்தியது. கூட்டங்களில், கடவுளின் வழிநடத்துதலால் மீதியானிய சேனை அனைத்தையும் வெறும் 300 பேரைக் கொண்டு எதிர்ப்பட்ட கிதியோனைப் பற்றி சில சமயங்களில் குறிப்பிடப்பட்டது. (நியாயாதிபதிகள் 7:1-25) தன் கடவுளாகிய யெகோவாவில் உண்மையிலேயே நம்பிக்கை வைத்தவரான ஒரு மனிதன்! அந்த நியமிப்பை மறுக்கும்போது, நான் கிதியோனின் முன்மாதிரியைப் பின்பற்றியிருந்தேனா? நான் அப்படி செய்திருந்தேன் என்று என்னால் நேர்மையுடன் சொல்லமுடியாது. எனக்கு வெட்கமாயிருந்தது.
ஆனாலும், என் கிறிஸ்தவ சகோதரர்கள் எனக்கு உதவுவதில் நம்பிக்கை இழக்கவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தை அவர்கள் எனக்கு அளித்தனர். ஒரு விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரலில் பங்கேற்கும்படி நான் அழைக்கப்பட்டேன். இந்தத் தடவை நான் ஒத்துக்கொண்டேன். இந்தச் சிலாக்கியத்திற்காக நன்றியுடன் இருந்தாலும், ஜனங்கள் நிறைந்த ஒரு ஹாலில் பேச்சுக் கொடுக்கும் எண்ணம் என்னைக் கல்லாக்கிவிட்டது என்பதை ஒளிவுமறைவின்றி சொல்லுகிறேன். யெகோவாவில் என் நம்பிக்கையை அதிகரிப்பதில் உண்மையிலேயே நான் இன்னும் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் எப்படி?
பிற சாட்சிகள் அவரில் கொண்டிருந்த விசுவாசம் மற்றும் நம்பிக்கையை முழுமையாகவும் கவனமாகவும் எண்ணிப்பார்ப்பதன் மூலமாக. இவ்வாறு செய்வது என்னைப் பலப்படுத்தியது. ஒரு நண்பரின் ஆறு வயது மகளான வெறுங்க்காவால் எழுதப்பட்ட ஒரு கடிதமும்கூட எனக்கு ஒரு சிறந்த மாதிரியாய்த் திகழ்ந்தது. அவள் எழுதினாள்: “செப்டம்பரில், நான் பள்ளிக்குச் செல்லப்போகிறேன். தேசிய கீதத்தைப் பொறுத்தமட்டில் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இஸ்ரவேலுக்காகப் போர் செய்ததுபோல, எனக்காக யெகோவா போரிடுவார் என்று நான் நம்புகிறேன்.”
ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட, விசேஷ மாநாட்டு தினத்தின் பிற்பகல் நிகழ்ச்சிநிரலுக்கு வழிநடத்தினவற்றில் வெறும் சில நிகழ்ச்சிகளாகவே அவை இருந்தன. நான் உருக்கமாக ஜெபம் செய்திருந்தேன். இப்போது என்னுடைய சரளமான பேச்சைக் குறித்து நான் மிகவும் கவலைப்படவில்லை, மக்கள் நிறைந்திருந்த இச் சபையாருக்கு முன்பாக கடவுளின் பெரிய நாமத்தைத் துதிப்பதைப் பற்றியே கவலைப்பட்டேன்.
ஆகவே நூற்றுக்கணக்கானோரின் முன்னிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் ஒலிவாங்கிக்கு முன் நான் நின்றேன். பிறகு, செய்தியாளரைக் காட்டிலும் செய்தியே மிக முக்கியமானது என்பதை உணர்ந்தவனாய், மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து, பிறகு ஆரம்பித்தேன். அதன்பிறகு, காரியங்களை மதிப்பிட எனக்கு நேரமிருந்தது. நான் படபடத்தேனா? நிச்சயமாகவே படபடத்தேன், சில தடவைகள் திக்கவும் செய்தேன். ஆனாலும், கடவுளின் ஆதரவின்றி நான் ஒருபோதும் பேசியிருந்திருக்க மாட்டேன் என்று எனக்குத் தெரிந்தது.
பிறகு ஒரு கிறிஸ்தவ சகோதரர் ஒரு முறை என்னிடம் சொல்லியிருந்த ஒரு விஷயத்தைப் பற்றி தியானிக்க ஆரம்பித்தேன்: “உனக்கு திக்குப் பிரச்சினை இருப்பதால் சந்தோஷப்படு.” அக் கூற்றை அவர் கூறுகையில் எனக்கு உண்மையில் ஆச்சரியமாய் இருந்தது. அவரால் எப்படி அவ்வாறு கூற முடிந்தது? திரும்பிப் பார்க்கையில், அவர் என்ன அர்த்தம் கொண்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது. எனக்கிருக்கும் பேச்சுக் குறைபாடு என்னிலேயே சார்ந்திருப்பதற்குப் பதிலாக கடவுளின்மீது சார்ந்திருக்க எனக்கு உதவியிருக்கிறது.
அந்த விசேஷ மாநாட்டு தினத்தின் பிற்பகலிலிருந்து ஒருசில ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இந்த ஆண்டுகளின்போது பெருங்கூட்டமான சபையாரின் முன்னிலையில் பேசும் மற்ற சிலாக்கியங்களும் எனக்குக் கிடைத்துள்ளன. ஸடார் நாட் ஸாஜாவோவில் ஒரு கிறிஸ்தவ மூப்பராகவும், யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் அழைக்கப்படும் ஒரு பயனியராகவும்கூட நான் நியமிக்கப்பட்டேன். கற்பனை செய்து பாருங்கள்! அதன்பிறகு நான் ஒவ்வொரு மாதமும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதில் நூறு மணிநேரங்களுக்கும் மேலாக செலவழித்தேன், எங்கள் கிறிஸ்தவ கூட்டங்களில் வாராந்தர போதனைக்காக நான் செலவழித்த நேரத்தைக் குறிப்பிடவே தேவையில்லை. இப்போது நான் ஒரு வட்டாரக் கண்காணியாக சேவை செய்கிறேன், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சபைகளில் பேச்சுக்களைக் கொடுக்கிறேன்.
“திக்குவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்” (NW) என்று பைபிளில் ஏசாயா புத்தகத்தில் உள்ள இக் குறிப்பிட்ட தீர்க்கதரிசனத்தைப் பற்றி நான் வாசிக்கும்போதெல்லாம் போற்றுதலால் என் இதயம் பூரிப்படைகிறது. (ஏசாயா 32:4; யாத்திராகமம் 4:12) அவருடைய கனம், துதி, மற்றும் மகிமைக்காக நான் ‘தெளிவாய்ப் பேசுவதில்’ யெகோவா தேவன் என்னுடன் இருப்பதை உண்மையிலேயே நிரூபித்துள்ளார். மிகுந்த இரக்கமுடைய நம்முடைய கடவுளைத் துதிக்க முடிகிறதற்காக நான் மிகவும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்.—பீட்டர் குன்ட்ஸால் கூறப்பட்டது.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.