நீங்கள் குறட்டை விடுகிறீர்களா?
நீங்கள் அதிக சப்தமாக குறட்டை விடும் ஒருவரா? சிலர் சப்தமாக குறட்டை விடுகிறார்கள், அதைப்பற்றி அவர்களுக்கு தெரிவதும்கூட கிடையாது. இதன்காரணமாக, தாங்கள் எழுந்திருக்கும்போது பலவீனமாக உணர்ந்து, தள்ளாடுவது ஏன் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்களுடைய கோளாறு தூக்க மூச்சுத்தடை (sleep apnea) என்றறியப்படுகிறது. இந்தக் கோளாறை உடைய ஒரு நபர் தூங்கும்போது, சுவாசக் குழாய்களைத் திறந்து வைத்திருக்கும் தொண்டைத் தசைகள், காற்றுக் குழாய் அடைத்துக்கொள்ளும் அளவுக்குத் தளர்வடைகின்றன. ஒரு நிமிடத்திற்குள் அந்த நபர் காற்றுக் கிடைக்காமல் மூச்சுவாங்கி சற்றுநேரம் விழித்துக்கொள்கிறார். தூக்க மூச்சுத்தடையால் அவதிப்படும் பெரும்பாலானோர் தங்களுடைய தூக்கம் கலைக்கப்படுகிறது என்று அறிகிறதில்லை. குறட்டை சப்தம் தாங்கமுடியாமல் அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளும், அறைநண்பன் மட்டும் அதைப்பற்றி சாடைமாடையாக ஏதாவது சொல்லலாம். மூச்சுத்தடை வாகன விபத்துக்களுக்கும் வேலையில் நடக்கும் விபத்துக்களுக்கும் காரணமாக இருக்கிறது என்றும், பாரிசவாயுவுக்கும் (strokes) மாரடைப்புகளுக்கும் (heart attacks) காரணிகளாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா? (மருத்துவர்கள் மற்றும் அறுவை மருத்துவர்களின் கொலம்பியா பல்கலைக்கழகக் கல்லூரியின்) முழுமையான வீட்டு மருத்துவ வழிகாட்டி (Complete Home Medical Guide) இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “பெண்களைவிட ஆண்கள் 20 மடங்கு அதிகப்படியாக பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவதிப்படுபவர்களில் பாதிக்குமேல் தடியர்களாக இருக்கின்றனர். இது சாதாரணமாக வந்துகொண்டிருக்கும் காற்றை இன்னும் கொஞ்சம் அடைத்துக்கொள்கிறது. ஆகவே எடையைக் குறைப்பது சிகிச்சையின் முக்கியமான ஒரு பாகமாக இருக்கிறது.” பிரச்சினை தீவிரமாக இருக்கும் ஆட்கள் காற்றுக் குழாய்த் தடையைக் குறைப்பதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லதாக இருக்கலாம் என்று அதே ஆதாரம் ஆலோசனை கொடுக்கிறது.