பைபிள் பொருத்தமற்றதா?
அநேகர் ஆம் என்று பதிலளித்துக் கூறுகின்றனர்: “அது அறிவியல்பூர்வமற்றது. அது கட்டுக்கதையும் கற்பனையும்தான். அது காலத்திற்கு ஒவ்வாதது. நடைமுறையற்றது. நம்புகிறவர்கள் ஒரு கனவுலகத்தில் வாழ்ந்துவருகின்றனர்.”
இருப்பினும், உண்மைகள் யாவை?
● உயிர் கடவுளால் படைக்கப்பட்டது என்று பைபிள் கூறுகிறது. அறிவியலோ ரசாயனப்பொருட்களும் சக்தியும் தற்செயலாக இணைந்ததன் மூலம் உயிர் உண்டாயிற்று என்று கூறுகிறது. “உயிர் தானாகவே தோன்றமுடியாது என்று பாஸ்டர் (Pasteur) காண்பித்தார்,” என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. உயிரியல் வல்லுநர் மைக்கல் டெண்டனின் பரிணாமம்: சிக்கலில் உள்ள ஒரு கோட்பாடு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “உயிருள்ள ஒரு செல்லுக்கும் மிக உயர்ந்த ஒழுங்கமைப்போடுகூடிய உயிரியல்-சாராத அமைப்புக்கும் இடையே, . . . எந்தளவுக்குக் கற்பனைசெய்து பார்க்கமுடியுமோ அவ்வளவு பெரிய, முழுமையான ஒரு பிளவு இருக்கிறது.” உயிர் தானாக தோன்றமுடியும் என்பதற்கான எந்த விஞ்ஞானப்பூர்வமான வழியையும் பரிணாமக் கோட்பாட்டாளர் எவராலும் கூறமுடியாது.
● இந்த மூல செல்லானது பூமியில் காணப்படும் அனைத்து உயிரிகளாகவும் படிப்படியாக மாறிவளர்ந்தது என்று பரிணாமம் சொல்லுகிறது. ஒரு குடும்ப வகை மற்றொன்றாக மாறிவளர்கிறதற்கான எந்தவொரு படிநிலையையுமே புதைப்படிவ சான்று காண்பிக்கிறதில்லை. ஒட்டைச்சிவிங்கியின் கழுத்து (The Neck of the Giraffe) என்ற தனது புத்தகத்தில் அறிவியல் அறிஞர் ஃப்ரான்ஸிஸ் ஹிச்சிங் எழுதுகிறார்: “பெரிய விலங்குத் தொகுதிகளுக்கிடையில் உள்ள தொடர்புகளுக்காக தேடுகையில், அவை இல்லவே இல்லை.” இது “அதனுடைய வகையின்படியே” ஒரு குடும்பம் இனப்பெருக்கம் செய்கிறது என்று பைபிள் சொல்வதற்கு இசைவாக இருக்கிறது.—ஆதியாகமம் 1:12, 25, NW.
● புதைபொருளாய்வியல் (archaeology) பல சான்றுகளின் வாயிலாக பைபிளின் வரலாற்றுப் பதிவுகள் உண்மையானவை என்று உறுதிசெய்திருக்கிறது.
● பூமி விண்வெளியில் எல்லா வகையான கற்பனை ஆதாரங்களினாலும் தாங்கப்பட்டிருக்கிறது என்று பழங்காலத்தவர்கள் நினைத்தனர். இயக்கம் மற்றும் புவியீர்ப்பு விதிகளால் பூமி விண்வெளியில் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறது என்று அறிவியல்பூர்வமாக காண்பித்தவர் ஐசக் நியூட்டன்தான். கடவுள் “பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்,” என்று கிட்டத்தட்ட 3,200 வருடங்களுக்கு முன்பே, யோபு 26:7-ல் பதிவு செய்வதன் மூலம் பைபிள் குறித்துக்காட்டுகிறது.
● தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது: “மறுமலர்ச்சிக் காலம்வரை ஓர் உருண்டை வடிவ பூமியைப் பற்றிய கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது.” ஆனால் பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டின்போது, கடவுளைப்பற்றி பைபிள் இவ்வாறு சொன்னது: “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.”—ஏசாயா 40:22.
● பாஸ்டர் நோய்க்கிருமிகளையும் நோயையும் தொடர்புபடுத்தியதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, மோசேயின் நியாயப்பிரமாணம் (பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டு) தொற்றுநோய்க் கிருமிகளைப்பற்றிய அறிவை வெளிக்காண்பித்தது.—லேவியராகமம், அதிகாரங்கள் 13, 14.
● கிறிஸ்து வருவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னே, இரத்த ஓட்டத்தைப் பற்றி சாலொமோன் உருவக நடையில் எழுதினார். ஆனால் பொ.ச. 17-ஆம் நூற்றாண்டில் உவில்லியம் ஹார்வி அதை விவரிக்கும்வரை மருத்துவ விஞ்ஞானம் காத்திருக்க வேண்டியதாயிற்று.—பிரசங்கி 12:6.
● குளிர்காலம் முழுவதும் கிடைக்கும்படி விதைகளை சேமித்துவைக்கும் நிலத்தடி தானியக் களஞ்சியங்களைக் கொண்டிருந்த எறும்புகளைப்பற்றி சாலொமோன் எழுதினார். (நீதிமொழிகள் 6:6-8) அத்தகைய எறும்புகள் இருந்ததேயில்லை என்று பைபிளில் குறைகண்டுபிடிப்போர் கூறினர். எனினும், 1871-ல், ஒரு பிரிட்டிஷ் இயற்கை வல்லுநர் அந்த எறும்பையும் அதன் தானியக் களஞ்சியங்களையும் கண்டுபிடித்தார்.
● “என் கருவை உம்முடைய கண்கள் கண்டன, அதன் அவயவங்கள் அனைத்தும் உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன,” என்ற 139:16-ம் சங்கீதம் மரபியல் குறியீட்டைப் பற்றிய அறிவை வெளிக்காட்டிற்று.
● அறிவியல் அறிஞர்கள் பறவையின் இடம்பெயர்தலைக் கண்டுணருமுன், பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில், எரேமியா 8:7-ல் பைபிள் வெளிப்படுத்திற்று: “ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த்தன் [இடம்பெயரும், NW] வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்.”
● “கடைசிநாட்களில்” மனிதர்கள் பூமியின் சுற்றுச்சூழலை அழிப்பார்கள்; இதன் காரணமாக கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்று முதல் நூற்றாண்டில் பைபிள் முன்னுரைத்தது.—2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 11:18.
● பைபிள் நடைமுறையற்றதா? இந்த நெருக்கடி நிறைந்த காலங்களுக்குத் தேவையான, எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஞானத்தை அது கொண்டிருக்கிறது. அதிலிருந்து பயனடைய வேண்டுமானால், அதைப் பின்பற்ற ஜனங்கள் தங்களுடைய சுயாதீனத்தை உபயோகிக்க வேண்டும். ‘உங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடியுங்கள்.’ ‘மற்றவர்கள் உங்களுக்கு எவற்றை செய்ய விரும்புகிறீர்களோ அவற்றையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.’ உங்களிடத்தில் நீங்கள் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவீர்களாக. இந்த நியமங்களைப் பின்பற்றுபவர்கள் போர்களைத் தொடங்கிவிடுவதில்லை, குற்றச்செயல்களைச் செய்வதில்லை. பூமியிலுள்ள மக்கள் கிறிஸ்துவின் கைகளில் உள்ள கடவுளுடைய ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படிந்திருக்கும்போது, பைபிளை விசுவாசிப்பவர்களுடைய நம்பிக்கை, நிறைவேறா கனவாக அல்ல, ஆனால் ஒரு நடைமுறையான நிஜமாக நிரூபிக்கும்.—மீகா 4:2-4; மத்தேயு 7:12; வெளிப்படுத்துதல் 21:3-5.
[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of the Shrine of the Book, Israel Museum, Jerusalem