இளைஞர் கேட்கின்றனர்
விசுவாசத்தில் இல்லாத ஒருவரை நான் காதலித்தால் என்ன?
“எனக்கு ஒரு பிரச்னை இருக்கிறது,” என்று ஒப்புக்கொண்டாள் கிறிஸ்தவப் பெண் ஒருத்தி. “என் பக்கத்து வீட்டுக்காரரோடு நான் மோகம் கொண்டிருக்கிறேன். அவர் கனிவானவர், அமைதியானவர், கரிசனையுள்ளவர்.ஆனால் அவரிடம் ஒரே ஒரு குறையுண்டு—அவர் யெகோவாவை நேசிப்பவர் அல்ல. அவரை விரும்புவது தவறென்று எனக்குத் தெரியும். ஆனால் அவருக்காக வைத்திருக்கும் உணர்ச்சிகளை நான் எப்படிக் கையாளுவேன் என்றுதான் தெரியவில்லை.”
அதேபோன்ற சூழ்நிலையில் இருந்தபோது மாற்கு 14 வயதுடையவனாக இருந்தான்.a தன்னுடைய மத நம்பிக்கைகளைக் கொண்டிராத ஒரு பெண்ணோடு அவன் மோகம் கொண்டிருந்தான். “திருமணமாகி, ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்று நான் அடிக்கடி பகல் கனவு காண்பேன்,” என்கிறான் அவன். “ஆனால் அது தவறென்று நான் அறிந்திருந்தேன்.”
பருவவயது வருடங்களின்போது மோகம் என்பது சாதாரணமாக ஏற்படக்கூடியதாக இருக்கிறது. இந்த வயதில் காதலுணர்ச்சிகள் பலமாக ஏற்படுகின்றன. (1 கொரிந்தியர் 7:36-ஐ ஒப்பிடவும், தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.) அத்தகைய உணர்ச்சிகளை ஆபத்தின்றி வெளிக்காட்ட வழியின்றி, இளைஞர் தங்களுக்குப் பிடித்த ஆசிரிய ஆசிரியைகள், பொழுதுபோக்கு நட்சத்திரங்கள் போன்றவர்கள்மேல் மோகம் கொள்ளும் மனச்சாய்வை உடையவர்களாக இருக்கின்றனர். அத்தகைய வளர்ந்தவர்களோடு தனிப்பட்ட உறவு கொண்டிருப்பது பெரும்பாலும் அடையமுடியாத காரியமாகையால், இந்த மோகங்கள் பொதுவாகவே தற்காலிகமானவையாகவும் ஒப்பிடுகையில் கேடு விளைவிக்காதவையாகவும் இருக்கின்றன.b உறவுகொண்டாடும் நிலையில் இருந்து, அதற்கான விருப்பத்துடன் இருக்கும் யாரோ ஒருவருக்காக—ஒரு சகாவுக்காக நீங்கள் அத்தகைய பலமான உணர்ச்சியை வளர்த்துவிட்டீர்கள்; ஆனால் அந்த நபரோ உங்களுடைய மத நம்பிக்கைகளைக் கொண்டிராதவராக இருக்கிறார். அப்படியானால் என்ன செய்வது?
சிலர் இதை ஒரு பிரச்னையாகவே நினைக்காமல் இருக்கலாம். ஒரு காரணம் என்னவென்றால், இளைஞர் அநேகர் மதத்தில் ஆர்வமற்றவர்களாக இருக்கின்றனர். அப்படியே ஆர்வம் இருந்தாலும், அவர்களில் அநேகர் மத்தியில், வித்தியாசமான விசுவாசத்தில் இருக்கும் ஒருவரோடு விவாக நோக்கோடு பழகுவதை எப்போதும் வெறுக்காமல் இருக்கலாம். பரந்த-மனப்பான்மையுடைய ஆட்கள் அதை அங்கீகரிக்கவும் செய்யலாம். ஆயினும், வயதடைந்த அநேகர் அத்தகைய உறவுகளில் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகளை காண்கின்றனர். முக்கியமாக ஏனென்றால், அவை பெரும்பாலும் திருமணத்தில் முடிவடைகின்றன. இதன் காரணமாக எழுத்தாசிரியர் ஆன்ட்ரியா ஈகன் இளைஞருக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “இருவருமே மத நம்பிக்கையற்றவர்களாக இருந்தால், ஒரே மதப் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதல்ல. ஆனால் உங்களில் ஒருவருக்கோ இருவருக்குமேயோ மதப் பழக்கம் முக்கியமானதாக இருக்குமானால், அப்போது மத வேறுபாடுகளைப்பற்றி சிந்தித்தாகவேண்டும். . . . மதம் என்பது வரும்போது நீங்கள் இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டியதில்லை. . . . , ஆனால் நீங்கள் ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ முடிந்தவர்களாய் இருக்கவேண்டும்.”
அத்தகைய புத்திமதி நியாயமானதாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அது “இவ்வுலகத்தின் ஞான”த்தைப் பிரதிபலிக்கிறது. (1 கொரிந்தியர் 3:19) விசுவாசத்தில் உள்ளவருக்கும் விசுவாசத்தில் இல்லாதவருக்கும் இடையில் உள்ள காதல், திருமண வாழ்க்கையில் ஒத்துப்போவதைவிட மிக அதிக முக்கியமான பிரச்னைகளை எழுப்புகிறது என்பதாக பைபிள் காட்டுகிறது. இது கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் சம்பந்தமான விஷயம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உள்ள இளைஞர் அறிந்திருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் “கர்த்தருக்குட்பட்ட” ஒருவரையே மணக்கவேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை தூண்டுகிறது. (1 கொரிந்தியர் 7:39) விவாக நோக்கோடு பழகுதல் என்பது ஏதோ பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு அடிகோலாக (prelude) அமைந்திருக்கிறது. ஆகவே தம்முடைய ஊழியர்களில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திராத ஒருவனோடு அல்லது ஒருத்தியோடு காதல் விவகாரங்களில் ஈடுபடுவது கடவுளுக்கு வெறுப்பூட்டுவதாய் இருக்கும்.
அப்படி இருந்தபோதிலும், சில இளம் சாட்சிகள் விசுவாசத்தில் இல்லாதவர்களிடமாக கவர்ந்திழுக்கப்படும் நிலையில் தங்களையே கண்டுள்ளனர். இது எவ்வாறு சம்பவிக்கிறது? நீங்கள் உங்களையே இந்த நிலையில் காண்பீர்களேயானால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
அது சம்பவிக்கும் விதம்
முதலாவது, மனிதர் எல்லாரும் தவறுசெய்யும் மனச்சாய்வைக் கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளுங்கள். “தன் பிழைகளை உணருகிறவன் யார்?” என்று கேட்டார் சங்கீதக்காரன். (சங்கீதம் 19:12) காதலின் ஆதிக்கத்தின்கீழ் இளைஞர் குறிப்பாக தவறுகள் செய்யும் சூழ்நிலையில் இருக்கின்றனர். ஏன்? வயதினாலும் அனுபவத்தினாலும் வரும் பகுத்தறிவு அவர்களுக்கு குறைவு என்ற ஒரு எளிய காரணத்தினால்தான். (நீதிமொழிகள் 1:4) ஒரு கிறிஸ்தவ இளைஞர் எதிர் பாலினத்தவரோடு பழகுவதில் குறைந்த அனுபவத்தையே கொண்டிருக்கிறார். ஆகவே காதல் கவர்ச்சியை—அல்லது கவனத்தை எவ்வாறு கையாளுவது என்று அவருக்கு தெரியாமலேயே இருக்கலாம்.
தன்னுடைய பள்ளி மாணவன் தன்னோடு மோகம் கொண்டிருந்தான் என்று ஷீலா உணர்ந்தபோது, அவளுடைய நிலைமை இதுபோலத்தான் இருந்தது. “அவர் என்னை விரும்பினார் என்று என்னால் சொல்லமுடியும்,” என்று சொன்னாள் ஷீலா. “மதிய சாப்பாட்டு வேளையில் அவர் என்னோடு வந்து சாப்பிடுவார். நூலகத்தில் படிப்பதற்கான வகுப்புகளின்போது அவர் என்னைத் தேடிவருவார்.” அந்தப் பையன்மேல் ஷீலாவுக்கு ஆசைகள் வளரத் தொடங்கின. முன்பு குறிப்பிடப்பட்ட மாற்கு, அதேபோல நினைவுபடுத்திப் பார்க்கிறான்: “இந்தப் பெண்ணை நான் எப்போதும் உடற்பயிற்சி வகுப்பில் பார்ப்பேன். அவள் விசேஷ முயற்சி எடுத்து என்னைப் பார்த்துப் பேசுவாள். நட்பு வளர்வது கடினமில்லாதிருந்தது.” பேம் என்ற 14 வயது பெண்ணின் விஷயத்தில், அடுத்த வீட்டுப் பையன் ஒருவன் அவள் மீது வைத்திருக்கும் பாசத்தின் அடையாளமாக ஒரு மோதிரத்தை அவளுக்குக் கொடுத்தான்.
ஒப்புக்கொள்ளும் விதமாகவே, எப்போதுமே ஒரு சாட்சிதான் மற்றவர்களின் அணுகுதலுக்கு அப்பாவியாக இரையாயிருக்கிறார் என்பதில்லை. ஜிம் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவ பையன் தன்னிடமாக வைத்த தெளிவான ஆசையை ஒரு பெண் வெறுமனே அவனிடம் திரும்ப காண்பித்து வந்தாள். அவள் ஒரு நாள் அவனைத் தேடிக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு வந்தாள். அச்சமயம் அவன் அந்தப் பெண்ணுக்குச் செய்ததையெல்லாம் ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டான்!
சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும், அவ்வாறு ஈடுபடுதல் தவறு என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் எதிர் பாலினத்தவரிடத்தில் இருந்து வரும் கவனத்தை எதிர்த்து சமாளிப்பது சிலசமயங்களில் கடினமாக இருக்கிறது. ஆண்ரூவுடைய உதாரணத்தைக் கவனியுங்கள். அவன் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம், அவனுடைய பெற்றோர் மணவிலக்குச் செய்துகொள்வதில் ஈடுபட்டிருந்தனர். “பேச்சுத்துணைக்கு எனக்கு ஓர் ஆள் தேவைப்பட்டது,” என்று ஞாபகப்படுத்திப் பார்க்கிறான் அவன். பள்ளியில் ஒரு பெண் எப்போதுமே அவனுக்குத் தேவையான உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசிவந்ததாகத் தோன்றினாள். விரைவில் பரஸ்பர காதல் உணர்ச்சிகள் மலர்ந்தன.
அபாயங்கள்
கவனிக்காது விட்டுவிட்டால் அத்தகைய உணர்ச்சிகள் உங்களை மெய்யான துன்பத்தில் ஆழ்த்தக்கூடும். “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?” என்று சொல்லுகிறது நீதிமொழிகள் 6:27. உதாரணமாக, கிம் என்ற பெயருடைய ஒரு பெண்ணின் அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள். அவள் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக வளர்க்கப்பட்டாள். ஆனால் பள்ளியில் ஒரு பையனோடு உணர்ச்சியில் ஈடுபாடுகொண்டாள். “அவர் பள்ளியில் மிகவும் பிரபலமான, கிளர்ச்சியூட்டும் பையன்களில் ஒருவராக இருந்தார்,” என்று நினைத்துப் பார்க்கிறாள் கிம். விரைவில், வெளிப்படையாக போதைப்பொருட்களை உபயோகித்த விருந்துகளில் அவள் ரகசியமாக கலந்துகொண்டாள். “எனக்கு அவ்வளவு பயமாக இருந்தது, ஆனாலும் நான் அவரை காதலித்தேன். நான் கர்ப்பிணியானேன்.” கிம் தன் காதலனை மணந்துகொண்டாள். ஆனால் அவனோ ஆயுதம்தரித்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதற்காக சிறையிலடைக்கப்பட்டான். மீண்டும் பைபிளின் எச்சரிக்கை மெய்யானதாக நிரூபித்தது: “கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்.”—1 கொரிந்தியர் 15:33, NW.
யெகோவாவின் சாட்சிகளல்லாத இளைஞர் அனைவரும் ஒழுக்கங்கெட்டவர்கள் அல்லது போதைப்பொருள் உபயோகிப்பவர்கள் என்று அர்த்தப்படுத்துவதற்காக இவ்வாறு சொல்லப்படவில்லை. இருந்தபோதிலும், குறைந்தபட்சம், அத்தகைய இளைஞர் இளம் சாட்சிகள் கொண்டிருக்கும் அதே மதிப்பீடுகள், நோக்குநிலைகள், அல்லது குறிக்கோள்களைக் கொண்டிருப்பதில்லை. விசுவாசத்தில் இல்லாத ஒருவர் “தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்,” என்று 1 கொரிந்தியர் 2:14 விவரிக்கிறது. உங்களுடைய மதசம்பந்தமான மதிப்பீடுகள் உங்களுடைய உணர்ச்சிகளை எந்தளவுக்கு உருவமைத்திருக்கின்றன என்பதை—கிறிஸ்தவ கூட்டங்களில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோஷம், கேட்க மனதுள்ள ஒரு நபருக்கு பைபிள் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் உள்ள கிளர்ச்சி, பைபிளை படிப்பதனால்தானே வரும் மகிழ்ச்சி போன்றவற்றை யோசித்துப் பாருங்கள். விசுவாசத்தில் இல்லாத ஒருவர் அத்தகைய உணர்ச்சிகளை—ஒரு துளியாவது—புரிந்துகொள்வாரா? அதற்கு வாய்ப்பேயில்லை.
இதன் காரணமாகத்தான் பவுல் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2 கொரிந்தியர் 6:14, 15) இளம் சோனியா விசுவாசத்தில் இல்லாத ஒருவனிடம் உணர்ச்சிவசப்பட்டிருந்தபோது, பாடனுபவித்து தானாகவே இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டாள். “உங்களுக்கு உள்ளதைப் போன்ற யெகோவாவுக்கான அன்பையும் வைராக்கியத்தையும் கொண்டிராத ஒரு துணையைக் கொண்டிருப்பதுதான் ஒருவரால் கற்பனைசெய்து பார்க்கமுடிந்தளவு தனிமையாக இருக்கிறது. அது உணர்ச்சிசம்பந்தமாக நொறுக்குவதாய் இருக்கிறது. சத்தியம் உங்களுடைய வாழ்க்கையின் தூண்டுசக்தியாக இருக்கும்போது, நீங்கள் அதைக் கட்டாயம் பகிர்ந்தேயாகவேண்டும்—அவசியம் பகிர்ந்தேயாகவேண்டும்! நீங்கள் விசுவாசத்தில் இல்லாத ஒருவரோடு வாழ்கிறீர்கள் என்பதனால், அதை உங்கள் துணையோடு பகிர்ந்துகொள்ள முடியாமல்போகும்போது, அது அப்பேர்ப்பட்ட ஒரு கடும் வெறுமையுணர்ச்சியாகவே இருக்கிறது,” என்று ஒப்புக்கொள்கிறாள் அவள்.
அப்படியானால், அத்தகைய உறவில், மதம் புரிந்துகொள்ளுதலின் ஓர் ஆதாரமாக அல்ல, ஆனால் பூசலின் ஒரு முக்கிய விஷயமாக மாறுவதற்கே வாய்ப்பு இருக்கிறது. சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்காக உங்களுடைய ஆவிக்குரிய அக்கறைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் குறைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக எளிதில் உணரலாம். ஆனால் அப்படி செய்வதானது உங்களுடைய ஆவிக்குரியத்தன்மையைக் குட்டிச்சுவராக்கிவிடத்தான் போகிறது. இளம்பெண் ஒருத்தி கூறுகிறாள்: “சாட்சியல்லாத ஒரு பையனோடு நான் மிக நெருங்கிப் பழகினேன். நட்பு நெருக்கம் அடைய அடைய, நான் அவனிடம் காதல்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன். யெகோவாவிடமாக உள்ள என்னுடைய உறவின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போனது. ஆனால் இந்தப் பையனோடு இருந்த உறவோ எனக்கு மிக முக்கியமானதாக ஆயிற்று. எனக்கு இனி கூட்டத்திற்குப் போவதற்கு கொஞ்சம்கூட விருப்பமில்லாமல் ஆயிற்று. என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களோடு கூட்டுறவுகொள்ளவோ பிரசங்க வேலைக்குப் போகவோ மனதில்லாமல் போய்விட்டது. நான் வாஞ்சித்ததெல்லாம் அவரோடு இருப்பதைத்தான். அடுத்த இரண்டு வருடங்களாக நான் ஒரு செயலற்ற சாட்சியாகிவிட்டேன். அந்தக் காலம் முழுவதும், நான் அவர்மேல் வைத்திருந்த அன்புக்கு என் ‘நண்பன்’ ஒருக்காலும் கைம்மாறு செய்ததுகிடையாது. என்றைக்காவது ஒரு நாள் அவர் கைம்மாறு செய்வார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது ஒருபோதும் நடந்தேறவில்லை.”
ஆம், உங்களுடைய மத மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளைக் கொண்டிராத ஒருவரோடு ஈடுபாடுகொள்வது நிச்சயமாக உங்களுக்கு துயரத்தையும் வருத்தத்தையும்தான் கொண்டுவரும். ஞானமான போக்கு அத்தகைய அந்நிய நுகத்தின் பிணைப்பிலிருந்து விலகியோடுவதே. ஆனால் ஒருவருக்காக பலமான உணர்ச்சியைக் கொண்டிருக்கும்போது அதை நீங்கள் எவ்வாறு செய்யலாம்? இந்தத் தொடரில் எமது அடுத்தக் கட்டுரையின் பொருள் இதுவே.
[அடிக்குறிப்புகள்]
a பெயர்களில் சில மாற்றப்பட்டிருக்கின்றன.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் 28-ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 19-ன் படம்]
ஆவிக்குரிய காரியங்களுக்கான உங்களுடைய ஆர்வத்தை விசுவாசத்தில் இல்லாத ஒருவர் கொண்டிருப்பாரா?