உங்களுடைய முத்திரை—உங்களுடைய கையொப்பம்
தைவானிலுள்ள விழித்தெழு! நிருபர்
“உங்க முத்திரைய (chop) இங்க குத்துங்க,” என்கிறார் தைவானின் தைபேயிலுள்ள பிஸியான தபால் நிலைய கவுண்டருக்குள் இருக்கும் கிளர்க்.
“என்னுடைய முத்திரைய குத்தவா?” முழுவதும் குழம்பிப்போய் நான் வாய்க்குள்ளேயே முனகுகிறேன். “மன்னிக்கனும், நான் இங்க புதுசா வந்திருக்கேன். எங்கிட்ட முத்திரை இல்லியே—அது என்னன்னு தெரியல,” நான் விளக்க முயற்சிக்கிறேன். “நான் சும்மா கையெழுத்துப் போட்டா பத்தாதா?”
“ம்ம், போடலாம், அதனால ஒண்ணுமில்ல, ஆனா நீங்க ஏன் ஒரு முத்திரை செஞ்சு வச்சுக்கக்கூடாது?” பதிலளிக்கிறார் அந்தத் தபால் நிலைய கிளர்க். “அப்படி செஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா உங்களுக்கு இனி எந்தத் தொந்தரவுமே இருக்காது.”
முத்திரை என்றால் என்ன, அந்த விநோதமான பெயர் எங்கிருந்து வருகிறது என்று யோசித்தவண்ணம் சிறிது ஆராய்ந்து பார்க்கிறேன். என்னுடைய டிக்ஷ்னரியிலிருந்து முத்திரை என்றால் ஒரு சீல் அல்லது ஒரு அலுவலக முத்திரை அல்லது அதன் பதிப்பு என்று நான் அறிந்துகொண்டேன். மேலும் அந்த “முத்திரை” என்பது “முத்திரைப் பதிப்பு” என்று அர்த்தப்படும் ச்சாப் என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து வருகிறது என்றும் அறிந்துகொண்டேன்.
ஒரு முத்திரையைப் பெறும் விதம்
முதலில் எனக்கு ஒரு சீனப் பெயர் வேண்டும்.a அயல்நாட்டவர் ஒருவருக்கு அந்தப் பெயர் பெரும்பாலும் அந்தப் பெயருடைய சப்தத்தின் ஒலிபெயர்ப்பாகவே (transliteration) இருக்கிறது. உதாரணமாக, “ஜான் ஸ்மித்” என்ற பெயர் “சூ மி சூ” அல்லது “சூ யுயெ ஹான்” என்று ஆகலாம். அல்லது ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க உதவி செய்வதற்கு ஒரு சீன நண்பரின் உதவியைப் பெறலாம். எனக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று அவர் நினைக்கும் ஒரு பெயரை அநேகமாக தெரிந்தெடுப்பார். ஆனால் என்னதான் இருந்தாலும் அது என்னுடைய நிஜப் பெயரைப்போல இல்லாமலே இருக்கலாம்.
அடுத்த படியானது முத்திரை செதுக்கும் ஒருவரின் கடைக்குச் செல்வதாகும். அங்குக் கிடைக்கும் பல்வகைப் பொருட்களிலிருந்து பொருத்தமான ஒரு துண்டை நான் தேர்ந்தெடுக்கிறேன். பிறகு அந்தக் கம்மியர் என்னுடைய சீனப் பெயரின் பாரம்பரிய பாணியிலுள்ள எழுத்துக்களை என் முத்திரையின்மீது செதுக்குகிறார்.
வியாபாரம் செய்யவோ அல்லது ஒரு தபால் நிலையம், ஒரு வங்கி, அல்லது அலுவலக வேலைகள் நடக்கும் மற்ற இடம் போன்றவற்றில் ஒரு வியாபார நடவடிக்கையில் (transaction) ஈடுபடவோ எனக்கு இப்போது முடியும். சட்டப்பூர்வமான சில வியாபார நடவடிக்கைகளுக்கு, என்னுடைய முத்திரையின் பெயர்விவரப்பதிவை அல்லது முத்திரை பதிப்பை குடும்பப் பதிவு அலுவலகத்தில் (Household Registry Office) பதிவுசெய்துகொள்ள வேண்டும். அது ஒரு கழகத்திற்காக இருக்குமானால், ஒரு நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்படுகிறது.
ஆனால் ஒரு முத்திரை மெய்யானதுதானா என்று ஒரு கிளர்க் எப்படி தெரிந்துகொள்வார் என்று நான் யோசிக்கிறேன். அதைக் கண்டுபிடிக்கவும் முத்திரைகள் உண்மையில் எவ்வாறு செதுக்கப்படுகின்றன என்று பார்க்கவும், தெற்கு தைவானில் உள்ள கவோசியுங் நகரத்தில் முத்திரை தயாரிக்கும் லின் ரோங்டா என்பவரைச் சென்று சந்திக்கிறேன். Mr. லின் சொல்லுகிறபடி, ஒரே முத்திரை தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட ஒரே பெயருள்ள முத்திரைகளும்கூட எப்போதும் சரியாக ஒரேமாதிரி இருப்பது கிடையாது என்று அநேக மக்கள் கருதுகின்றனர். ஒரு முத்திரை மெய்யானதுதானா என்று சோதித்துப் பார்க்க, ஒரு அலுவலக கிளர்க் முத்திரை பதிப்பை, வழக்கமாக மூலைவிட்டத்தினூடே, இரண்டாக மடித்து ஏற்கெனவே கோப்பில் இருக்கும் முத்திரை பதிப்பின் மேல் வைப்பார். அந்த இரண்டு பாதியும் சரியாக ஒத்திருக்கவேண்டும்.
“இப்பெல்லாம், ஒரு கம்ப்யூட்டரை உபயோகிச்சி முத்திரை செதுக்குற மிஷின்களும் இருக்குது. இந்த முறையில செதுக்கின முத்திரைகள் ஒரே மாதிரி இருக்கலாம்,” என்று தன்னுடைய கடையில் உள்ள ஓர் இயந்திரத்தைக் காட்டிக்கொண்டே சொல்கிறார் Mr. லின்.
“அப்படியா, ஆச்சரியமா இருக்கே!” நான் பிரதிபலிக்கிறேன். “ஆனா கம்ப்யூட்டர வச்சு ஒரு முத்திரைய எப்படி தயாரிப்பீங்க?”
“முதல்ல, பெயரின் எழுத்துக்கள முத்திரைக்கு பொருத்தமா இருக்கிற ஒரு வடிவில ஓரளவு ஒளியூடுருவக்கூடிய ஒரு சின்ன காகிதத்துண்டு மேலயோ இல்லன்னா பிளாஸ்டிக் மேலயோ நான் அச்சுக்கோத்துடுவேன் அல்லது வரஞ்சிக்குவேன்,” Mr. லின் விவரிக்கிறார். “அப்புறம் மிஷின்ல இருக்கிற சுத்தக்கூடிய ஒரு தலைமேல இத வைப்பேன். ஒரு லேசர் ஒளிக்கற்றைய உபயோகிச்சி அது அந்தப் பெயரை வாசிக்கும். அதே சமயத்தில, சுத்தக்கூடிய ரண்டாவது தலைமேல செதுக்கவேண்டிய முத்திரைய வச்சு டைட் பண்ணிவிட்டுடுவேன். லேசர் ஒளிக்கற்றையினால கட்டுப்படுத்தப்படுற ரூட்டர்ன்னு சொல்ற ஒரு சின்ன செதுக்குற சாதனம் நான் வரஞ்சிவச்ச எழுத்துங்களுடைய வடிவத்துக்கு முத்திரைய செதுக்குது.”
இந்த முறையில் அதிக செலவு ஆகாததால், வழக்கமாக குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு முத்திரையை செய்துகொள்கிறார். மேற்கத்திய நாடுகளில் இருந்து வருகிற கையொப்பமிட்டு வாங்கவேண்டியிருக்கிற பதிவு அஞ்சலையோ இதர வகைகளையோ பெறுகிற யாரோ ஒருவரால் உபயோகிக்கப்படுகிறதற்கு வசதியாக இருக்கிறமாதிரி வீட்டில் இந்த முத்திரைகள் வைக்கப்படுகின்றன.
முத்திரையின் தோற்றம்
தெரிந்தவரை சீனாவில் முதன்முதல் முத்திரை உபயோகித்தது பொ.ச.மு. 1324-ம் ஆண்டிலாகும். ஆனால் ச்சோ ஆட்சிகாலம் (பொ.ச.மு. 1122-256) வரை அவை பிரபலமாகாமலேயே இருந்தன. அந்தப் பழங்காலங்களில், அவற்றைக் கையொப்பமாக உபயோகிப்பதைவிட, அவை பெரும்பாலும் அரைக்கச்சையில் வைத்துக் கொண்டுபோகப்பட்டன. இது அந்தஸ்தையோ உத்தியோகத்தையோ அல்லது ஒரு நபர் மதிப்புக்குரியவராய் இருக்கிறார் என்பதைக் காண்பிப்பதற்காகவே ஆகும். அது ஒரு ஆள் வகித்த பதவியைக் குறிக்குமளவுக்கு அந்த ஆளைக் குறித்ததில்லை. ஒரு அலுவலர் ஓய்வுபெற்ற பிறகோ மரணமடைந்த பிறகோ, பெரும்பாலும் இன்று செய்வதைப்போலவே, அந்த முத்திரை அந்தப் பதவியை வகிக்கும் அடுத்த ஆளுக்குக் கடத்தப்பட்டுவந்தது. ஒரு பெருந்தகை அரசரைக் காண்பதற்கு வேண்டிக்கொண்டபோது, தன்னை அடையாளம் காட்ட தன்னுடைய பச்சை மணிக்கல் முத்திரையைக் காட்டுவார்.
காகிதம் கண்டுபிடிக்கப்பட்டபோது, முத்திரை படிப்படியாக கையொப்பத்தைக் குறித்துக்காட்டலாயிற்று. பாமர மக்களாலும்கூட அது அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்று, இங்கு ஒவ்வொருவரும், என்னைப் போல் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கிவாழும் ஒருவரும்கூட, ஒரு முத்திரையை வைத்திருக்கிறார். ஒரு ஆளின் கையொப்பம் தேவைப்படக்கூடிய எந்த வியாபார நடவடிக்கையும் முத்திரைபோடுவதன் மூலம் மட்டுமே முழுமையாக்கப்படலாம். சட்டப்படி எழுதப்படும் ஒரு கையொப்பமும்கூட உபயோகிக்கப்படலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு காரியங்களை சட்டப்பூர்வமாக்குவது அந்த முத்திரையே. இந்தப் பழக்கம் கீழ்த்திசை நாடுகளின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பரவியிருக்கிறது. ஆகவே ஜப்பானியர்களும் கொரியர்களும்கூட முத்திரையை உபயோகிக்கிறார்கள்.
முத்திரைகள் எப்படி இருக்கும்
ஒரு முத்திரை சதுரமாகவோ, நீள்சதுரமாகவோ, நீள்வட்டமாகவோ அல்லது வட்டமாகவோ இருக்கலாம். அல்லது எண்ணற்ற பல வடிவங்களிலும் இருக்கலாம். இது விட்டத்தில் மூன்றே மில்லிமீட்டர் அளவுக்குச் சிறியதாக இருக்கலாம் அல்லது 15 சதுர சென்டிமீட்டர் அளவுக்குப் பெரியதாகவும் இருக்கலாம். ஒரு முத்திரை பச்சை மணிக்கல், மாக்கல், விலங்குக் கொம்பு, மூங்கில், பித்தளை, மரக்கட்டை, அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் செய்யப்படலாம். எந்தப் பொருளால் செய்யப்படும் என்பது அதை வாங்குபவரின் விருப்பத்தையும், செலவுசெய்யும் திறமையையும், முத்திரை எந்த நோக்கத்திற்கு உபயோகிக்கப்படும் என்பதையும் பொருத்திருக்கிறது. முத்திரை ஒன்று எப்போதாவது ஒருமுறை முக்கியமற்ற வியாபார நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்படுமானால், மரக்கட்டையோ பிளாஸ்டிக்கோ போதுமானதாக இருக்கலாம். ஆனால் அதன் சொந்தக்காரர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதை உபயோகிக்க திட்டமிடுகிறார் என்றால், அவர் அதிக மதிப்பும் கவர்ச்சியுமிக்க ஒரு பொருளைத் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் தைவான் கிளைக்காரியாலய முத்திரை, உறுதியான மரக்கட்டைத் துண்டு ஒன்றால் செய்யப்பட்டது. அது ஏழரை சென்டிமீட்டர் நீளத்தையும் 5 சென்டிமீட்டர் அகலத்தையும், இரண்டரை சென்டிமீட்டர் பருமனையும் கொண்டது. என்னே ஒரு பருமனான “கையொப்பம்” என்று சொல்லமாட்டீர்களா? பெரும்பாலும் கையொப்பமிடப்பட வேண்டிய காகிதம் மிகப் பெரியதாய் இருப்பதில்லை!
மிகப் பொதுவாக உபயோகிக்கப்படும் முத்திரைகள், தட்டையான அடிப்பரப்பின்மீது சீன பாரம்பரிய பாணியில் செதுக்கப்பட்ட பெயரையுடைய தெரிந்தெடுக்கப்பட்ட பொருளின் சாதாரண துண்டாகும். அதன் கைப்பிடி அல்லது மேல்பாகம் சித்திர வேலைப்பாட்டைக் கொண்டிருப்பது முத்திரையின் அழகையும் மதிப்பையும் கூட்டுகிறது. சில முத்திரைகள் மிக நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. (பக்கம் 23-ல் உள்ள படத்தைப் பார்க்கவும்.) முத்திரையின் சொந்தக்காரர் வழக்கமாக ஒரு சிறிய தோல் பையிலோ ஒரு சிறிய பெட்டியிலோ முத்திரையை வைத்து எடுத்துச் செல்கிறார். அந்தப் பெட்டியினுள் ஒரு சிறிய அறையின் ஒரு முனையில் இரத்தச் சிவப்பு வண்ண மைப்பசை வைக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் புதிதாக திருமணமான ஒரு தம்பதி தங்களுடைய முத்திரைகளை ஒத்திருக்கும் வடிவமைப்புகளுள்ள ஒரே பொருளிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட இரண்டு துண்டுகளில் செதுக்கிக்கொள்வார்கள். அது ஒரு காதல் உணர்ச்சியின் நம்பிக்கையாக இருக்கிறது. அல்லது பக்கம் 23-ல் காட்டப்பட்டுள்ள அழகிய மஞ்சள்-பச்சை மணிக்கல் முத்திரைகளைப்போல, மூன்று முத்திரைகளும் சங்கிலிகளும் எல்லாம் ஒரே துண்டு கல்லிலிருந்து செதுக்கப்பட்டிருந்தன.
ஒருமுறை செதுக்கப்பட்டுவிட்டால், அந்த முத்திரை சொந்தக்காரரின் அல்லது பதவி வகிப்பவரின் சட்டப்பூர்வமான கையொப்பமாகிறது. ஆகவே அதை மிகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அது திருட்டுப் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் திருடிய ஒருவன், பொய் ஆவணங்கள் ஏற்படுத்தி வங்கிகளிலிருந்து பணம் எடுக்கவோ, காசோலைகளையோ பத்திரங்களையோ பணமாக மாற்றவோ, இதுபோன்ற காரியங்களை நடப்பிக்கவோ அதை பயன்படுத்தக்கூடும்.
என்னுடைய முத்திரையை இழந்தால் நான் என்ன செய்வேன்? முதன்முதலில் தபால் நிலையத்திற்கும், வங்கிக்கும், சம்பந்தப்பட்ட இதர நிறுவனங்களுக்கும் நான் தெரிவிப்பேன். அப்போது அவர்கள் என்னுடைய முத்திரையை ரத்து செய்யக்கூடும். சந்தேகமின்றி, என் முத்திரை சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க இதை நான் உடனடியாக செய்யவேண்டும். அதன் பிறகு புதிய முத்திரை ஒன்று செய்யப்படவேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒரு முத்திரையை மாற்றீடு செய்யவேண்டுமானால், மீண்டும் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்ளவேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு என்னுடைய புதிய முத்திரையைப்பற்றி தெரியப்படுத்தவேண்டும். கடன் அட்டையை (credit card) காணாமல் போகவிடுவது எவ்வளவு தொந்தரவு நிறைந்தது என்று நினைக்கிறீர்களா? தன்னுடைய முத்திரை காணாமல் போவதை அல்லது திருடு போவதை தடுக்கும் ஒரு நபர் விவேகியாக இருக்கிறார்!
மேற்கத்திய நாடுகளில் ஃபிலேட்டலி, அதாவது அஞ்சல் தலை சேகரிப்பது எல்லாராலும் விரும்பி மேற்கொள்ளப்படும் விருப்பவேலையாகும். சீனாவில் அநேகர் வெவ்வேறு வகையான முத்திரைகளையோ முத்திரை பதிப்புகளையோ சேகரிக்கின்றனர். அதற்காக விசேஷித்த புத்தகங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. சில முத்திரைகள் மிக அழகாக இருக்கின்றன. காரணம் எழுத்துக்களின் பாணியும் முத்திரையின் வடிவம், நிறம், வேலைப்பாடு போன்றவையும் ஒன்றிணைந்து மிகவும் வனப்புடன் காட்சியளிக்கின்றன. புகழ்பெற்ற அல்லது செல்வாக்குப் படைத்த நபர்களால் ஒரு காலத்தில் உடைமையாக வைத்திருக்கப்பட்ட முத்திரைகளோ சிறப்பான பழமைச் சின்னங்களின் முத்திரைகளோ அடிக்கடி அருங்காட்சியக சேகரிப்புகளில் வைக்கப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் கையொப்பமிட பேனாவை எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும், கீழ்த்திசை நாடு ஒன்றில் ஒரு முத்திரையை எடுத்து, இரத்தச் சிவப்பு மை அட்டையில் சிலமுறை அழுத்தியபின், புள்ளிகளாலான கோட்டின் மீது தன்னுடைய ‘கையொப்பத்தை’ கவனமாக பதிக்க யாரோவொருவர் ஒருவேளை இருக்கலாம்.
வித்தியாசமான பழக்கவழக்கங்கள் வாழ்க்கையை எவ்வளவு ஆர்வமூட்டுவதாய் ஆக்குகின்றன!
[அடிக்குறிப்புகள்]
a மற்ற மொழிகளில் உள்ள பெயர்களைக்கொண்ட முத்திரைகள் தயாரிக்கப்படலாம். இருப்பினும், சீன எழுத்துக்களின் வடிவமைப்பிலேயே அந்த முத்திரையின் அழகு அடங்கியிருக்கிறது.
[பக்கம் 23-ன் படங்கள்]
வலஞ்சுழியாக: ஒரு முத்திரையின் இரத்தச் சிவப்பு முத்திரைப் பதிப்பு; சங்கிலியோடிணைந்த முத்திரைகள், எல்லாம் ஒரேதுண்டு பச்சை மணிக்கல்லிலிருந்து செதுக்கப்பட்டவை; ஒரு வடிவமைப்பைச் செதுக்கிக்கொண்டிருக்கும் முத்திரை தயாரிப்பாளர்; ஒரு கவிதை பொறிக்கப்பட்ட முத்திரை
ஆமை வடிவில் முத்திரை
[படத்திற்கான நன்றி]
Chops: National Palace Museum, Taipei, Taiwan