இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் எவ்வாறு வசைமொழி பேசும் தூண்டுதலை எதிர்க்கலாம்?
“கட்டுப்படுத்த முடியாத ஏமாற்றமான ஒரு நிலைமையில் இழிவான சொற்களைக் கொட்டிவிடுவதில் நலவாழ்விற்கு துணைபுரியும் ஒரு காரியம் இருக்கிறது” என்பதாக பிரபல மனோதத்துவர் ஜாய்ஸி ப்ரதர்ஸ் குறிப்பிடுகிறார்.
இன்று தூய்மையற்றப் பேச்சு மிகப் பரவலாக பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அநேகர் இப்படிப்பட்ட கருத்துகளை ஒப்புக்கொள்கிறார்கள். என்றபோதிலும் தூய்மையற்ற பேச்சு, நல வாழ்விற்கு துணைபுரிவதற்குப் பதிலாக அது வெறுப்பூட்டுவதாக, அழிவு செய்வதாக மற்றும் இழிவுபடுத்துவதாக இருக்கின்றது.a பைபிள் எழுத்தாளன் யாக்கோபு குறிப்பிட்டதாவது: “ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?” அப்படியென்றால் “பிதாவாகிய தேவனைத் துதிக்கும் [அதே வாயினால்] ‘தேவனுடைய சாயலின்படி’ உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபி”ப்பது [தீங்காக திட்டுவது] எத்தனை முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. யாக்கோபு முடிவாகச் சொன்னான்: “என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.”—யாக்கோபு 3:9–11.
பிரச்னை என்னவென்றால் கீழ்த்தரமான பேச்சை பயன்படுத்துவது அநேகமாக ஆழமாகப் பதிந்துவிடும் ஒரு பழக்கமாகிவிடுகிறது. ரான் என்ற பெயர் கொண்ட ஓர் இளைஞன் சொல்லும்விதமாக: “இந்த வசைமொழி வார்த்தைகள் உங்கள் மனதில் அவ்வளவாகப் பதிந்துவிடுவதால், [சினமூட்டப்படுகையில்] அதைச் சொல்ல நீங்கள் விரும்புகிறீர்கள்.” அப்படியென்றால் ஒரு நபர் எவ்விதமாக விசேஷமாக அழுத்தத்தின் கீழிருக்கையில் தன் பேச்சை கட்டுப்படுத்த முடியும்?
உங்கள் இருதயத்தைப் பாதுகாத்தல்
முதல் காரியமாக, ஆரம்பத்திலேயே கீழ்த்தரமானப் பேச்சை துண்டித்துவிட உழையுங்கள். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்பதாக இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 12:34) ஆகவே உங்கள் வாயிலிருந்து வெளிப்பட்டு வருவது, உங்கள் மனதையும் இருதயத்தையும் எதனால் போஷித்திருக்கிறீர்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது.
உதாரணமாக, நீங்கள் வாசிக்கும் புத்தகங்களும் பத்திரிகைகளும் அசுத்தமான மொழியை முதன்மையாக காண்பிக்கிறதா? அப்படியென்றால் வாசிப்பு பழக்கங்களில் ஒருசில மாற்றங்கள் இன்றியமையாததாகும். (பிலிப்பியர் 4:8) அசிங்கமான அல்லது அருவருப்பான கோஷங்களையும்கூட கொண்டிருக்கும் விளம்பரத் தாள்களை, பட்டன்களை அல்லது மேல் சட்டைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? இப்படிப்பட்ட கோஷங்கள் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் கடவுள் கண்டனம் செய்யும் காரியங்களைப் பார்த்து சிரிப்பது—அவைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் விளம்பரப்படுத்துவதைக் குறித்து சொல்லவே தேவையில்லை—அவருடைய பார்வையில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவை அழித்துவிடாதா? எந்தவித “பரியாசமும்” ஒரு கிறிஸ்தவனுக்கு “தகாதவை” என்பதாக பைபிள் கண்டனம் செய்கிறது.—எபேசியர் 5:4.
இசையின் பாதிப்புகள்
என்னவிதமான இசையை நீங்கள் கேட்கிறீர்கள்? “பாடல்களைக் கேட்பதன் மூலம் நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளலாம்” என்பது ஜிம் என்ற இளைஞனின் ஒளிவு மறைவில்லாத கருத்தாகும். மிகத் தெளிவாக ஒழுக்கமற்ற அல்லது கீழ்த்தரமான இயல்பு கொண்ட அநேக பிரபலமான பாடல்களை அவன் குறிப்பிட்டு பேசினான். எழுத்தாளர் டிப்பர் கோர் அறிவிப்பதாவது: ‘இளைஞரின் அநேக பிரபல இசை கலைஞர்கள், இப்பொழுது கற்பழித்தல், சுயபுணர்ச்சி, முறைதகாப்புணர்ச்சி, வன்முறை மற்றும் உடலுறவைப் பற்றி பாடுகிறார்கள்.’
இளைஞர் அநேகமாக ஒரு பாடலின் இன்னிசையிலும் தாளத்திலும் அவ்வளவாக மயங்கிவிடுவதாகத் தெரிவதால், அவர்கள் பாடலின் வார்த்தைகளை கவனியாதிருப்பதுபோல தோன்றுகிறது. என்றபோதிலும் தற்செயலாக மட்டுமே நீங்கள் கேட்ட பாடலின் வார்த்தைகளை உங்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்த போரடிய ஒரு சமயம் உங்களுக்கு எப்போதாவது இருந்திருக்கிறதா? அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நீங்கள் கேட்பீர்களேயானால் அவை எத்தனை ஆழமாகப் பதிந்துவிடக்கூடும் என்பதைக் கற்பனைச் செய்து பாருங்கள்! ஆபாசமான அல்லது நிந்தனையான வார்த்தைகள் கொண்ட ஒரு சீரான இசை உணவு உங்கள் மனதை அசுத்தமான எண்ணங்களால் மாத்திரமே நிரப்பக்கூடும்—இது எளிதில் உங்கள் பேச்சில் வழிந்தோடக்கூடும்.
பாடம்? நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தெடுக்கிறவர்களாக இருங்கள்! “வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறது போல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப் பார்க்கிறதல்லவா?” என்பதாக பைபிளில் யோபு கேட்டான். (யோபு 12:11) உங்கள் நாவு ஒரு சில வகையான உணவு பொருட்களுக்கு விருப்பத்தை வளர்த்துக் கொள்வது போலவே, நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்ற காரியத்துக்கு வருகையில் உங்கள் காதும் அதேவிதமாகவே வேறுபாட்டை கண்டுணர பயிற்றுவிக்கப்பட முடியும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு காரியம், நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும். ஆபாசமான பேச்சின் உபயோகத்திலும் ஒழுக்கமற்ற நடத்தையை விளக்கமாக வருணிப்பதிலும் அவை அதிகமதிகமாக வரம்பு மீறியதாக மாறிவிட்டிருக்கின்றன. வீடியோ காசட்டுகள், அசுத்தமான திரைப்படங்களை எளிதில் காணும் வாய்ப்பை இளைஞருக்கு அளித்து வருகிறது. டைம் பத்திரிகையின் பிரகாரம், “தேசம் [ஐ.மா.] முழுவதிலும் ஒவ்வொரு நாளும் 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அருகிலுள்ள வீடியோ கடைகளுக்குச் சென்று ஒரு திரை அரங்கில் தங்களால் பார்க்க முடியாத படங்களை வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.”
தெரிந்தெடுப்பவர்களாய் இருப்பதில் விடை இருக்கிறது. உங்கள் சகாக்களின் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் திரைப்படங்கள், வேடிக்கை காட்சிகள் ஆகியவற்றிலிருந்து தூர விலகியிருப்பதை இது அர்த்தப்படுத்தலாம். இயேசு சொன்னார்: “உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் [அழிவு] தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்.”—மத்தேயு 5:29.
குறிப்பிடத்தக்க இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன? கிறிஸ்தவர்கள் தங்களுக்கு ஆவிக்குரிய இடறுதற் கல்லாக—“வலது கண்” போன்று அத்தனை மதிப்புள்ள ஒன்றாயிருந்தாலும்—இருக்கக்கூடிய எதையும் தங்களிலிருந்து ஒழித்துவிட மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாகவே சுத்தமான பேச்சைக் காத்துக் கொள்ளும் பொருட்டு கொஞ்சம் பொழுதுபோக்கு காட்சிகளை ‘பிடுங்கி’ போடுதல் ஒரு சிறிய தியாகமாகவே இருக்குமல்லவா?
உங்கள் கூட்டுறவுகளைக் குறித்து விழிப்பாயிருங்கள்!
கீழ்த்தரமான பேச்சு பற்றிய தன்னுடைய புத்தகத்தில் எழுத்தாளர் பர்ஜஸ் ஜான்சன், கீழ்த்தரமான பேச்சை “தொற்று நோய்” என்றழைத்தார். ஆபத்தான, வெகுவாக தொற்றக்கூடிய நோயுள்ள ஒருவருக்கு எவ்வளவு அருகாமையில் நீங்கள் செல்ல விரும்புவீர்கள்? என்றபோதிலும், ஆபாசமான பேச்சைத் தாராளமாக பயன்படுத்தும் பள்ளி தோழர்களுக்கு எவ்வளவு அருகாமையில் நீங்கள் சென்றிருக்கிறீர்கள்?
கீழ்த்தரமான பேச்சு இளைஞர் (மற்றும் வயதுவந்தவர்கள்) மத்தியில் கவலைக்கிடமான அளவில் பொதுவாக இருக்கின்றது. அவைகளை பயன்படுத்துவது, அவர்களை அதிக வயது வந்தவர்களாக காணச் செய்கிறது என்பதாக சிலர் நினைப்பதாகத் தெரிகிறது. ஒருசில இடங்களில் பருவ வயதிலுள்ள இளைஞர் ஆபாசத்தில் போட்டியும்கூட நடத்துகிறார்கள். பார்வையாளர்களாக இருக்கும் சகாக்களினால் தூண்டப்படுகையில் வசைமொழி எறிவதும் பெயரிட்டு அழைப்பதுமாக கொடிய ஒரு விளையாட்டில் ஒருவரையொருவர் விஞ்சிவிட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். பெற்றோர், குடும்பம், கடவுள்தாமயும்கூட—அசுத்தமான வாய்களின் இந்தப் போரட்டத்தில் அனைவருமே தாக்குதலுக்கு இலக்காக இருக்கிறார்கள்.
நீதிமொழிகள் 13:20 சொல்வதாவது: “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” வேறு வார்த்தையில் சொன்னால், தகாத வார்த்தைகளைப் பேசுபவர்களோடு திரிந்துகொண்டிருங்கள், உங்கள் வாயிலிருந்து தகாத வார்த்தைகள் வெளிவர ஆரம்பித்தால் ஆச்சரியமடையாதீர்கள்! ஆகவே யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக மோனிக், தான் அசுத்தமான பேச்சைக் கேட்க விரும்புவதில்லை என்பதை தெரியப்படுத்திவிட்டாள். சகாக்களில் ஒருவர் ஆட்சேபத்துக்குரிய எதையாவது சொன்னால், ‘உன் வார்த்தையை கவனி!’ என்பதாகச் சொல்லும் அளவுக்கு அவள் செல்வாள். இப்படிப்பட்ட நிலைநிற்கையை எடுப்பது எளிதல்ல. ஆனால் ஸ்டீவ் என்ற மற்றொரு இளைஞன் குறிப்பிட்டான்: “எதையாவது நீங்கள் சொல்லாவிட்டால், உங்களிடம் அவ்விதமாகப் பேசுவது சரியே என்பதாக அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.”
ஆனால் உடன் கிறிஸ்தவன் அவனுடைய அல்லது அவளுடைய பேச்சில் ஒழுங்கு தவறிவிட்டால் அப்போது என்ன? ஒரு நண்பனை இழந்துவிடக்கூடும் என்ற பயத்தில், சிலர் சொல்லப்பட்டது சிறிய காரியம் என்பதாக அதை கண்டித்து பேசாமல் இருந்துவிடும் மனசாய்வுடையவர்களாக இருக்கக்கூடும். என்றபோதிலும் உண்மையைச் சொல்வதன் மூலம் நண்பனின் உணர்ச்சிகளை ‘அடிப்பதை’ அர்த்தப்படுத்தினாலும்கூட உண்மை நண்பர்கள் ஒருவரையொருவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 27:6) காரியங்களைச் சரிசெய்ய தேவைப்படுவதெல்லாம் தயவான ஒரு நினைப்பூட்டுதலாகவே—ஒரு சொற்பொழிவு அல்ல—இருக்கக்கூடும். நிச்சயமாவே ஒரு நண்பருக்கு அவருடைய பேச்சில் வினைமையான பிரச்னை இருக்குமானால், ஆவிக்குரிய தகுதியுள்ள வயது வந்த ஒருவரின் உதவியை பெற்றுக்கொள்ள அவனுக்கு அல்லது அவளுக்கு உதவி செய்வதே மிகச்சிறந்ததாகும்.b—கலாத்தியர் 6:1 ஒப்பிடவும்.
காத்துக்கொள்வது
சங்கீதக்காரன் பின்வரும் கேள்வியைக் கேட்டபோது, ஒருவருடைய பேச்சைக் கட்டுப்படுத்த உதவக்கூடிய மற்றொரு நியமத்தை எடுத்துரைத்தான். “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?” பதில்? “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே.” (சங்கீதம் 119:9) இதைச் செய்வதற்கு ஒரு வழி ஒழுங்கான ரீதியில் நல்ல, ஆரோக்கியமான பேச்சை பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும். நீங்கள் பேசுவதைக் கேட்க எவரும் இல்லாத சமயத்திலும்கூட கீழ்த்தரமான பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். அழுத்தமிருக்கையில், அவ்விதமாகச் செய்ய உங்களுக்கு மிகக் குறைவான மனசாய்வே இருக்கும்.
காத்துக்கொள்வது, “பேசுகிறதற்குப் பொறுமையாயும் கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருப்பதை”யும்கூட அர்த்தப்படுத்துகிறது. (யாக்கோபு 1:19) உணர்ச்சிவசப்பட்டு பிரதிபலித்து, நீங்கள் மனஸ்தாபப்படக் கூடிய எதையோ ஒன்றைச் சொல்வதற்கு முன்னால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். (ஆதியாகமம் 4:7 ஒப்பிடவும்.) நீங்கள் சொல்ல விரும்புவதைக் குறித்து எண்ணிப்பாருங்கள். அது கூடுதலாக துன்பத்தையும் வருத்தத்தையும் உண்டுபண்ணுமா? அது மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைக் கொடுக்குமா? அது கடவுளிடம் அன்பையும் பிறரிடம் அக்கறையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறதா? (மத்தேயு 22:37–39) இழிவான வார்த்தைகளைக் கூற தூண்டுதல் பலமாக இருக்குமானால், பின்வருமாறு ஜெபித்த சங்கீதக்காரனைப் போலவே உதவிக்காக கடவுளை நோக்கி ஜெபம் பண்ணுங்கள்: “கர்த்தாவே [யெகோவாவே, NW], என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.”—சங்கீதம் 141:3.
அப்படியும் சில சமயங்களில் நீங்கள் தவறி தவறான காரியங்களைச் சொல்லிவிடக்கூடும். (யாக்கோபு 3:2) ஆனால் இப்படிப்பட்ட அசுத்தமான பேச்சை பயன்படுத்துவதை எதிர்த்து தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருங்கள். அவ்விதமாகச் செய்வது, பள்ளியில் உங்களை அதிக பிரபலமான இளைஞனாகச் செய்யாது. கின்னி என்ற பெயருள்ள இளைஞன் ஒப்புக்கொள்ளுகிறான்: “அநேக தடவைகள் பள்ளியில், நான் தனியாக நடந்துகொண்டிருப்பேன்—சொல்லர்த்தமாகவே.” ஆனால் தன் கூட்டுறவுகளைக் குறித்து கவனமுள்ளவனாயிருக்க அவனுடைய தீர்மானம், ஒரு பாதுகாப்பாக நிரூபித்திருக்கிறது. மேலுமாக கென்னி சொல்கிறபடி, “மக்கள் உங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். இது தைரியமானது என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.” யெகோவா தேவனும் அவ்விதமாக நினைக்கிறார். (நீதிமொழிகள் 27:11) வசைமொழி பேசுவதற்கான தூண்டுதலை எதிர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர் கவனத்தில் கொள்வார். (g89 9/8)
[அடிக்குறிப்புகள்]
a ஜனவரி 8, 1991 விழித்தெழு! பிரதியில், “எப்பொழுதாவது ஒருமுறை வசைமொழி பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது?” பார்க்கவும்.
b அக்டோபர் 8, 1989 விழித்தெழு! பிரதியில், “என் நண்பனைப்பற்றி நான் கோள் சொல்லலாமா?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
[பக்கம் 16-ன் படம்]
வசைமொழி பேசும் ஆட்களின் கூட்டுறவைத் தவிர்த்துவிடுங்கள்