புகை பிடிப்பதை நிறுத்த பத்து வழிகள்
1. உண்மையிலேயே செயல்பட தூண்டப்பட்டவர்களாயிருங்கள். நிறுத்துவதற்காக நல்ல திடமான காரணங்களைக் கொண்டிருங்கள்—சுய-மரியாதை; இன்றைய மற்றும் நாளைய ஆரோக்கியத்தைக் குறித்த உங்களுடைய அக்கறை; உங்களுடைய ஆபத்தான பழக்கத்தால் பாதிக்கப்பட்ட அன்பானவர்கள் மீது அக்கறை; தனக்கு முன்பும், கடவுள் முன்பும் சரீரப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசை.
2. நிறுத்த ஒரு தேதியைக் குறித்து அதைப் பின்பற்றுங்கள் உடனடியாக பழக்கத்தை விட்டுவிடுங்கள்; இது அதிக வேதனையை அளித்தாலும், அதிவேகமாக சுகமளிக்கிறது.
3. இந்தப் பழக்கத்தை முறிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுங்கள். வீட்டில் என்ன சிகரெட்டுகள் இருந்தாலும் அதை உடைத்து அதன் மேல் தண்ணீரை ஊற்றுங்கள். புகையிலை நாற்றம் வரும் உங்கள் துணிகள் அனைத்தையும் சுத்தம் செய்யுங்கள். புது வாழ்க்கையைத் தொடருங்கள், புத்துணர்ச்சி அடையுங்கள்!
4. நிகோடீனிலிருந்து முழுமையாக விலகும் சமயத்தில் புகை நிறைந்த சூழ்நிலையையும் புகைபிடிக்கும் நண்பர்களையும் தவிருங்கள். நூல் நிலையங்கள், பொருட்காட்சி சாலைகள் போன்ற புகைபிடிப்பதைத் தடை செய்யும் இடங்களுக்குச் செல்லுங்கள்.
5. புகையிலை புகைத்திருந்தால் நீங்கள் செலவழித்திருக்கக்கூடிய பணத்தைச் சேமித்து, ஒரு மாதத்திற்குப் பிறகு கணக்கிடுங்கள்! உண்மையிலேயே உங்களுக்குத் தேவைப்படும் ஒன்றை வாங்குங்கள். அல்லது உங்களது வெற்றியில் ஆனந்தமடையக்கூடிய அன்புக்குரியவருக்கு ஒரு வெகுமதியை வாங்கியளியுங்கள்.
6. சாதாரணமாக ஒரு சிகரெட்டைத் தேடும் அந்த நேரங்களில் உங்களையும், உங்கள் கைகளையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். புகைபிடிக்கும் ஆசை உங்களை வருத்தும் போது ‘சூயிங்கம்’ (நிகோடீன் ‘கம்’ அல்ல) மெல்லுங்கள் அல்லது ‘மின்ட்களை’ வாயிலிட்டுச் சுவையுங்கள். புகைப்பதற்குப் பதிலாக உணவருந்திய பிறகு பற்களைச் சுத்தப்படுத்துங்கள். மேலுமாக உலாவுதல், கடிதம் எழுதுதல், தைத்தல், தோட்ட வேலை செய்தல், பொருட்களைச் சரி செய்தல், காரைச் சுத்தம் செய்தல் போன்ற காரியங்களைச் செய்யுங்கள்.
7. மன உறுதியற்ற அல்லது அழுத்தங்களின் கீழ் இருக்கும் நேரங்களில், ஆழமாகவும், மெதுவாகவும் சுவாசியுங்கள். சிகரெட்டை தேடுவதற்குப் பதிலாக நிறைய தண்ணீரையும் பழச்சாருகளையும் குடியுங்கள். திரவங்கள் சுத்தம் செய்யும்.
8. உங்கள் சரீர வரம்புகளுக்குள் உடல் பயிற்சி செய்யுங்கள். உங்கள் மருத்துவரிடம் போதுமான பயிற்சி என்னவென்று கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். முன்னேறிவரும் உங்களது சரீர நிலையானது உங்களுக்கு உற்சாகமூட்டும்.
9. மதுபானம் உட்கொள்ளுவதைக் குறையுங்கள். அடிக்கடி மதுபானங்களும், சிகரெட்டுகளும் ‘ஒன்றாக உபயோகப்படுத்தப்படுகின்றன’, ஏனென்றால் புகைபிடிக்கும் ஆசையை மதுபானம் தூண்டுகிறது. இவ்வாறு நேரிடக்கூடிய தோழமைக் கூட்டங்களைத் தவிருங்கள். புகையிலை விளம்பரங்களை அதன் தீமையை உணர்ந்தவர்களாய் நோக்குங்கள்—அதன் ஆழமற்ற தன்மையையும், வஞ்சகத்தையும் கூர்ந்து ஆராயுங்கள். மீண்டும் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
10. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆக வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தீர்களேயானால், கடவுளிடம் உதவிக்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். பிறகு உங்கள் ஜெபத்திற்கேற்றபடி செயல்படுங்கள். ஓர் அற்புதத்தை எதிர்பார்க்காதீர்கள்; அது நடக்கும்படிச் செய்யுங்கள்.