இளைஞர் கேட்கின்றனர் . . .
காதல் பாட்டுகளில் இருப்பதுபோல் காதல் இருக்கிறதா?
காதல் பாட்டுகள்—உண்மையான காதலை மிக உயர்வாகப் புகழ்கின்ற பாட்டுகள்—தோல்வியுற்ற காதலைக் குறித்து சோக பாடல்கள்—வானொலி ஒலிபரப்புகளின் அடிப்படையாக இருக்கின்றன. அவை தாளயக் கூறு, ப்ளூஸ், சோல், பாப் அல்லது ராக் போன்ற எந்தப் பாவனையாக இருந்தாலும், அவை பேரளவாக பருவ வயதினரால் விரும்பப்படுபவையாக இருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன?
அநேக பாடல்கள் வெறுமென பலமான இசைக் கவர்ச்சி—இனிய ராகங்கள், இருதயத்தை உருக்கும் வார்த்தைகள், நடனத்திற்குரிய தாளங்கள்—கொண்டவையாய் இருக்கின்றன. அவை உணர்ச்சிகளைத் தொட்டு மன ஆற்றலால் தூண்டப்பட்ட காதல் உணர்ச்சி மிக்க மனநிலையை உருவாக்கக்கூடும். “ஏதோ ஒரு கடினமான சூழ்நிலைப்பற்றி தொலைபேசியின் மூலம் என் பெண்ணோடு பேசும்போது வார்த்தைகள் சரளமாக வராவிட்டால், ஒரு நல்ல காதல் பாட்டு பாடுவதைப் பின்னணியில் கேட்டால், அது என்னைக் கனிந்த நிலையில் வைக்கிறது, வார்த்தைகளும் சரளமாக வருகின்றன,” என்று இளைஞன் ரஸ்டி சொல்கிறான்.
என்றபோதிலும், காதல் பாட்டுகள் பிரபலமாக இருப்பது ராகங்களின் இசை நயத்தின் காரணமாக மட்டுமல்ல. நீங்கள் பருவ வயதினராக இருக்கும்போது, உங்கள் பாலுணர்ச்சிகளை எப்படிக் கையாளுவது என்பதைக் கற்றுக் கொண்டுவருகிறீர்கள். அன்பு மற்றும் காதலைப் பற்றிய இரகசியங்களை அறிய வேண்டுமென்ற ஆவலினால், காதற்சந்திப்பினால் வரும் சந்தோஷங்களையும் அது முறிந்து போய்விட்டால் ஏற்படும் வேதனைகளையும் கூறும் பாடல்களின் பேரில் நீங்கள் எளிதில் நாட்டம் கொள்ளக்கூடும். காதல் பாட்டுகளின் மூலம் பருவ வயதினர் “காதலில் ஈடுபடும்பொழுது, உணர்ச்சிகள் எவ்வாறு இருக்கும் என்பதைச் சிறிதளவு ருசித்துப் பார்க்க முடியும். மேலும் காதலின் காரணமாக ஏற்படும் சந்தோஷங்களையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்க முடியும்,” என்று ஓர் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.
காதல் வழிகளில் அனுபவம் இல்லாததாலும் மேலும் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் திறமையில் ஒருவேளை நம்பிக்கையில்லாததாலும், தங்களுக்கு விசேஷமான அந்த நபரிடம் சரியான வார்த்தைகளைச் சொல்ல சிலர் காதல் பாடல்களை நோக்கியிருக்கின்றனர். எதிர்பாலரைக் கவர்ச்சிக்க முயற்சி செய்வதற்குப் பிரபலமான பாட்டுகளிலிருந்து அப்படியே எடுக்கப்பட்ட சொற்றொடர்களை உபயோகிப்பதாகச் சில இளைஞர்கள் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் காதல் பாட்டுகள் உண்மையில் எந்த அளவுக்கு இளைஞருக்குக் காதலைப்பற்றி கற்பிக்கின்றன?
காதல் பாடல்களில் இருக்கும் பாடங்கள்
முதலில், மிக அழகான காதல் பாடல்களில் ஒன்றை சிந்தித்துப் பாருங்கள். சாலொமோனின் உன்னதப்பாட்டு என்று அழைக்கப்படும் இது அழகிய சூலமித்திய பெண்ணையும் ஒரு வாலிப மேய்ப்பப் பையனின் பேரில் அவளுடைய காதலையும் பற்றிய பைபிள் பதிவு. அவர்களுடைய அன்பானது ராஜாவாகிய சாலொமோனால் அச்சுறுத்தப்படுகிறது, சாலொமோன் தன் பகட்டான மகிமையினாலும், ஞானத்தினாலும், சொத்துகளினாலும் அந்த இளம் பெண்ணின் இருதயத்தைத் திருட முயற்சி செய்கிறான்—ஆனால் முடியவில்லை. அவளுடைய காதல் வலிமையற்றதாக இல்லை. அந்த இளம் பெண் அறிவித்தாள்: “நேச வைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.”—உன்னதப்பாட்டு 8:6.
இன்றுள்ள காதல் பாட்டுகள் காதலைக் குறித்து அதே போன்று ஓர் உயர்ந்த, அதே சமயத்தில் உண்மையான கருத்தை முன்னேற்றுவிக்கின்றனவா? அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. எழுத்தாளர் சாலி ஹெல்ஜீசன் காதல் பாட்டுகள் இன்ப முடிவுகளும் தீராத ஆசைகளும் கொண்ட உலகை வருணித்து காதலை அதன் “பூரண தீர்வாக” காட்டுகின்றன என்று சொல்கிறார். வருந்தத்தக்க விதமாய்க் காதலின் ‘பூரண தீர்வுகள்’ வெகு சிலதே, உண்மை வாழ்க்கையில் எட்ட முடியாதவை. மேலும் அவற்றைத் தேடுபவர் ஏமாற்றத்தை வருவித்துக் கொள்கின்றனர். ஏன், ராஜா சாலொமோனின் உன்னதக் கவிதை சிறப்புமிக்க சொற்றொடர்கள் கூட சூலமித்திய பெண்ணின் காதலைப் பெற முடியவில்லை! கூடுதலாக ஹெல்ஜீசன் சொல்கிறார்: “முழு வளர்ச்சியடைந்தவர்களின் வாழ்க்கையைக் குறித்து வடிவமில்லா கனவை இப்பாட்டுகள் தூண்டுகின்றன. அதில் அடங்காத ஆசைகள் மற்ற உணர்ச்சிகளை உட்கொண்டுவிடுகின்றன, உத்தரவாதங்கள் யாருக்கும் கிடையாது.” இதுவும் மெய்யான வாழ்க்கையிலிருந்து வெகுவாய் வித்தியாசப்பட்டது.
நியு யார்க் பல்கலைக்கழக கவிதைப் பேராசிரியர் ஷீலா டேவிஸ், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் ‘புழக்கத்தில் இல்லை’ என்ற கருத்தை காதல் பாட்டுகள் ஆட்களிடையே பரவச் செய்கிறது என்று சொல்கிறார். மேலும் காதல் பாடல்களில் கொடுக்கப்படும் மற்றொரு பிரபலமான கருத்து, காதல் கணப்பொழுதில் ஏற்படுகிறது என்பது. “முதல் ஹலோ,” “முதல் புன்சிரிப்பில்” காதல் “திடீரென” வந்தது என்பது ஒரு பிரபலமான பாடலின் கருத்து. காதலுக்குக் கண்கள் இல்லை, பலத்தை அறிந்து கொள்கிறது, ஆனால் வெளிப்படையாய் காணப்படும் குறைபாடுகளைக் காண மறுக்கிறது என்று காதல் பாடல்கள் போதிக்கின்றன.
அப்பேர்ப்பட்ட பாட்டுகள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை? சிந்தித்துப் பாருங்கள்: நிலைத்து நிற்கும் ஓர் உறவுக்கு முதல் எண்ணம் உண்மையிலேயே ஓர் அடிப்படையாகுமா? ஆகாது. முதிர்ந்த உண்மையான அன்பை பைபிள் எப்படி விவரிக்கிறது என்று பாருங்கள்: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; . . . அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, . . . சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:4–8.
உண்மையான அன்பு கணப்பொழுதில் நிகழும் ஒரு காரியமல்ல அல்லது அது வெறுமென உணர்ச்சிகளையும் அடங்கா ஆசைகளையும் மட்டும் உட்படுத்துவதில்லை. முதிர்ச்சி பெற்ற அன்புக்குக் கண்கள் இருக்கிறது; அது பெலத்தைக் காண்கிறது, ஆனால் குறைபாடுகளைக் கவனியாமல் விடுவதில்லை. மற்றொருவருடைய ஆள்தன்மையையும் குணாதிசயங்களையும் “இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தையும்” பற்றிய அறிவைப் பெற உண்மையான அன்பு ஒரு காலப் பகுதியில் வளருகிறது. (1 பேதுரு 3:4) உண்மையான அன்பு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் காரியத்தில் பின்வாங்குவதில்லை, அது ஓர் உறவோடு நிலைத்து நிற்கிறது. காரியங்கள் சரியாக இல்லையென்றாலும், அது அதை மேம்படுத்த உழைக்கிறது. பாட்டுகளில் விவரிக்கப்படும் காதலைவிட உண்மையான அன்பு எவ்வளவு வித்தியாசப்பட்டதாயிருக்கிறது!
ஒளிவுமறைவற்ற கவிதைகள்
காதல் பாட்டுகள் பாலுணர்ச்சியையும் அன்பையும் சமப்படுத்தி காட்டுகின்றன. இது இன்றைய நாட்களில் அதிர்ச்சியூட்டும் வண்ணம் வெட்கமின்றி போதிக்கப்படும் ஒரு பாடம். உங்கள் பெற்றோர்களோ அல்லது அவர்களுக்கு முந்திய சந்ததியோ ஒரு சமயம் கேட்டு நடனமாடின காதல் பாடல்கள் இத்தகைய மறைவான எண்ணங்கள் ஒன்றிரண்டைக் கொண்டிருந்திருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் இன்றிருக்கும் பாடல்களில் எதுவும் இரகசியமானதாக இல்லை. முன்பு குறிப்பிட்ட ஷீலா டேவிஸ் சொல்கிறார்: “மறைமுகமான காரியங்கள் வெளிப்படையாக சொல்லப்படுகின்றன, காதல் பிராந்தியம் விரிவாக்கப்பட்டு அதில் தற்புணர்ச்சி, [தகாவழிப்] பாலுறவுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி, பாட்டுகள் உறவினரிடையே முறைதகாப்புணர்ச்சிக் கருத்துகளையும் கூட்டியிருக்கின்றன.” ஐக்கிய மாகாணங்களின் அநேக பாடல் பதிவு நிறுவனங்கள் இப்பொழுது பாலுறவு அல்லது வன்முறை சம்பந்தப்பட்ட வெளிப்படையான பாடல்கள் கொண்ட ரெக்கார்டுகளில் எச்சரிப்பு அட்டைகளைப் போட ஒத்துக் கொண்டிருக்கின்றன.
பதினாறு வயது லெஸ்லி வாதாடுகிறான்: “உங்களால் அதோடு நடனமாட முடிந்தால் கவிதைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. அது யாரையும் கறைபடுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அது வெறும் இசையே.” நிபுணர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. “பிரபலமான ஒரே இசையைப் பல தடவைகள் தினந்தோறும் திரும்பத் திரும்ப இசைப்பது, பாலுணர்ச்சி சம்பந்தப்பட்ட செய்திகளை எளிதில் மனப்பாடம் செய்ய உதவுகிறது,” என்று ஓர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மறுபடியும் மறுபடியுமாக கேட்டதன் காரணமான ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான கவிதைகளை உங்களை அறியாமல் நீங்களே பாடுவதாக நீங்கள் கண்டிருக்கிறீர்களா? (எபேசியர் 4:29) சான் ஆண்டானியோவிலுள்ள டாக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இசைப் பேராசிரியர் டாக்டர் ஜோசப் ஸ்டூஸி எச்சரிக்கிறார்: “எந்த விதமான இசையும் நம்முடைய மனநிலை, உணர்ச்சிகள், மனப்பான்மைகள் மற்றும் நம் நடத்தை விளைவுகளைப் பாதிக்கின்றன.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
பாலுணர்வு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடான காரியங்களைத் தெளிவாக விளக்கும் அல்லது ஊக்குவிக்கும் வார்த்தைகளைக் கேட்பது அல்லது பாடுவது ஆரோக்கியகரமானதாக இருக்குமா? அவ்வாறு செய்வது விவாகத்தில் பாலுணர்வு வகிக்கும் பங்கைப்பற்றிய உங்களுடைய சரியான நோக்கத்தைக் கறைபடுத்திவிடுமல்லவா?—1 கொரிந்தியர் 7:3–5.
“சிநேகிக்க ஒரு காலம்”
எதிர்பாலரோடு நெருக்கமான உறவு கொள்ள பருவ வயதினர் தயாராக இருக்கின்றனர் என்ற மற்றொரு பயங்கரமான தப்பெண்ணம் பிரபலமான இசைகளில் போதிக்கப்படுகிறது. “சிநேகிக்க ஒரு காலமுண்டு” என்பது உண்மை—ஆனால் பைபிள் இங்கே காதல் சிநேகத்தைக் குறித்து குறிப்பிடவில்லை. விவாக சிநேகத்தைக் குறித்ததில், அதை செய்வதற்கு உங்களுக்கு இதுதான் நேரமா? இப்பொழுதிலிருந்து அநேக வருடங்கள் கழித்து நீங்கள் தக்க வயதை அடைந்த பின் அல்லவா? (பிரசங்கி 3:8) பின்னால் குறிப்பிடப்பட்டது உண்மையானால், இன்னும் உங்களால் பெறமுடியாததன் பேரில் பலமான ஆசைகளை எழும்பச் செய்வது ஞானமாகுமா?
தங்களுடைய காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு வாயில்கள் இல்லாவிடில், சில இளைஞர்கள் காதல் கனவுலகில் ஆழ்ந்துவிடுகின்றனர். சிலர் தங்களுக்குப் பிடித்தமான பாடகர்கள் மீது “காதல்” கொள்கின்றனர், பாடப்படும் ஒவ்வொரு மென்மையான வார்த்தையும் அவர்களுடைய சொந்த காதுகளில் இரகசியமாக சொல்லப்படுவது போல் கற்பனை செய்கின்றனர். தங்கள் கைகளுக்குக் கிடைக்கும் அப்பாடகரின் ஒவ்வொரு ஆல்பத்தையும், புகைப்படத்தையும் சேகரித்து அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காண்கின்றனர். அப்பேர்ப்பட்ட கனவுலகு உறவின் ஒரே முடிவு ஏமாற்றமும் மனநோவுமே.
சாலொமோனின் உன்னதப்பாட்டு மற்றொரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. மேய்ப்பனுக்கு உண்மையுள்ளவளாய் நிலைத்திருக்க விரும்பினதன் காரணமாக சூலமித்திய பெண், அவளுடைய நேசத்தைத் தேடின சாலொமோன் ராஜாவுக்காக ‘அவளுடைய ஆசைகளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி’ தன் பெண் தோழிகளைக் கேட்டுக் கொண்டாள். (சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:7) அவளுடைய உணர்ச்சிகளை பாதிக்கும் பேச்சின் ஆற்றல் சக்தியை அறிந்தவளாய், அதற்கு செவிகொடுக்க மறுத்தாள். அதே போன்ற மனப்போக்கு இசையைத் தேர்ந்தெடுப்பதிலும் உங்களுக்கு ஞானமானதாக நிரூபிக்கும். உங்களில் பலமான காதல் உணர்ச்சிகளை எழும்பச் செய்யும் அல்லது உங்களை வருத்தமாகவும் தனிமையாகவும் உணரச் செய்யும் இசையை ஏன் நீங்கள் தவிர்க்கக்கூடாது?
மனதில் வையுங்கள்: இசை கடவுளிடம் இருந்து பெற்ற வெகுமதி. தரக்குறைவான, ஒழுக்கங்கெட்ட இசையை அவர் விரும்புவதில்லை என்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் புரட்டும் அல்லது ஒழுக்கங்கெட்ட நடத்தையை உற்சாகப்படுத்தும் இசையை அவர் விரும்புவதில்லை என்றும் நிச்சயமாயிருக்கலாம். ஆகையால் கிறிஸ்தவ இளைஞர்கள் இசையைத் தேர்ந்தெடுப்பதில் தெரிவு செய்யவேண்டும். பத்தொன்பது வயது ஸ்கட் சொல்லுகிறான்: “நான் ஓர் இசைத்தட்டையோ அல்லது கேசட்டையோ வாங்குவதற்கு முன், அதன் அட்டையைப் பரிசோதித்து, பாடல்களைக் குறித்து சில குறிப்புகளைத் தெரிந்து கொள்கிறேன். அவைகள் தவறான தூண்டுதல் கொண்டவையாக இருந்தால் நான் அதை வாங்க மாட்டேன்.”
காதல் பாடல்களில் இருப்பது போல் காதல் இல்லை. வாழ்க்கையின் சில துயரமிக்க அனுபவங்களிலிருந்து நீங்கள் இந்த உண்மையைக் கற்றுக் கொள்வீர்கள். அழகிய பாடல்கள் உண்மையான நண்பர்களுக்குப் பதிலீடு செய்யாது என்பதையும் நினைவில் வையுங்கள். இசைக் கனவுலகில் உங்களைத் தனித்து வைத்துக் கொள்வதற்குப் பதிலாக—உங்கள் பெற்றோர்கள், கடவுள் பயமுள்ள வாலிபர்கள், முதிர்ந்த கிறிஸ்தவர்கள்—இவர்களோடு நேரத்தைச் செலவிடுங்கள். (நீதிமொழிகள் 18:1) அப்பேர்ப்பட்ட கூட்டுறவு தெய்வீக வழியில் நேசிக்கப்படுகிறீர்கள் என்ற உணர்ச்சியை உங்களுக்குக் கொடுக்கும்—இது காதல் பாட்டுகளின் ஆற்றலைக் காட்டிலும் வெகுவாய் மேம்பட்ட ஓர் உணர்ச்சி. (g89 6⁄22)
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
“எந்த விதமான இசையும் நம்முடைய மனநிலை, உணர்ச்சிகள், மனப்பான்மைகள் மற்றும் நம் நடத்தை விளைவுகளைப் பாதிக்கின்றன”
[பக்கம் 17-ன் படம்]
காதல் பாட்டுகள் அனைத்துமே உண்மை வாழ்க்கையைச் சித்தரிக்கின்றனவா?
[பக்கம் 18-ன் படம்]
நீங்கள் செவிகொடுப்பவற்றைத் தேர்ந்தெடுங்கள்!