புகைபிடித்தல் கிறிஸ்தவ நோக்குநிலை
நாம் அறிந்தபடி, புகையிலைக் குறித்தும் புகைபிடிப்பது குறித்தும் பைபிள் குறிப்பிடுவதில்லை, ஏனென்றால் அவை பூர்வீக மத்திய கிழக்கில் அறியப்படாதவையாயிருந்தன. இதற்கு எளிய காரணம், புகையிலைச் செடி தென் அமெரிக்காவிலும் மெக்ஸிக்கோவிலும் மேற்கு இந்திய தீவுகளிலும் தோன்றியதே. பதினாறாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதிவரை உலகத்தின் மற்ற பகுதிகளுக்கு அது அறிமுகப்படுத்தப்படவில்லை.
அப்படியென்றால், பைபிள் புகைபிடிப்பதைக் குறித்து ஒன்றும் கூறவில்லை என்று அது அர்த்தப்படுத்துமா? அப்படி இல்லை. அது மிகத்தெளிவாக அனைத்திலும் பொருந்தக்கூடிய அடிப்படை நியமங்களைக் குறிப்பிடுகிறது; அவை நம் நடத்தைக்கு வழிகாட்டிகளாக உள்ளன. இப்படிப்பட்ட அடிப்படை நியமங்கள் சில யாவை?
கடவுளிடமும் பிறரிடமும் அன்புகூருதல்
“உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,” என்று இயேசு சொல்லியதே ஒரு கிறிஸ்தவனை ஊக்குவிக்கும் அடிப்படை சக்தியாக இருக்க வேண்டும்.—லூக்கா 10:27.
தன் திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து காலத்திற்கு முற்பட்ட நோயிற்கும் மரணத்திற்கும் வழிநடத்தும் ஒரு பழக்கத்தில், ஒரு தீயொழுக்கத்தில் ஒருவன் வேண்டுமென்றே ஈடுபட்டால் எவ்வாறு தேவனுக்கு முழு இருதயதோடும் ஆத்துமாவோடும், சிந்தையோடும் பலத்தோடும் அன்பு செலுத்த முடியும்? நிகோடீன் போன்ற அடிமையாக்கும் போத வஸ்துவை சுவாசிப்பது, கடவுள் கொடுத்த ஈவாகிய உயிருக்கு நாம் எப்படி போற்றுதலைக் காட்டுவதாக இருக்க முடியும்? “எல்லாருக்கும் ஜீவனையும், சுவாசத்தையும் கொடுத்தவர் கடவுள்.” (அப்போஸ்தலர் 17:24, 25) கடவுள் தந்த அந்தச் சுவாசத்தை நாம் அசுத்தம் செய்யலாமா? கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து அது உண்மையிலேயே ஒரு தீயொழுக்கமாகும், “ஒரு கொடிய, அவமதிக்கிற அல்லது ஒழுக்கங்கெட்ட பழக்கமாகும்.”—The American Heritage Dictionary of the English Language.
புகைபிடிப்பவரின் வெறுக்கத்தக்க மூச்சும் புகையும் ஆடையையும் சுற்றுப்புற காற்றையும் அசுத்தப்படுத்தும்போது புகைபிடித்தல் எப்படி அயலானிடம் அன்புகாட்டுவதாகும்? புகைபிடிப்பவரின் மிக நெருங்கிய அயலானாகிய மனைவியையும் குழந்தைகளையும் பற்றியது என்ன? உரிய காலத்துக்கு முன் படிப்படியான வேதனை மிகுந்த ஒரு மரணத்தை அவர்கள் பார்க்க வேண்டிய ஒரு போக்கைத் தொடர்வது அன்பாகுமா? புகைபிடிப்பவரின் நச்சுத் தன்மையுடைய வெளி சுவாசத்தை, மறைமுகமான புகைபிடிப்பவர்களாக மற்றவர்களை உட்சுவாசிக்க கட்டாயப்படுத்துவது அவர்களுக்கு கிறிஸ்தவ அக்கறையைக் காட்டுவதாகுமா? ஸ்பய்னிலுள்ள பிளேன்ஸ் தாவரவகை தோட்டத்தில் புகையிலைச் செடியை நச்சுச் செடி பகுதியில் வைத்திருப்பது, ஆச்சரியம் ஒன்றுமில்லை!
தன்னையே நேசிப்பதைப் பற்றி என்ன? ஒருவருடைய உடல், மனம், மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் குறித்த அக்கறை காண்பிக்கும் அளவிற்கு ஒருவர் தன்னில்தான் அன்பு கூருவது நியாயமாகும். அப்போஸ்தலனாகிய பவுல், “தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லை; . . . தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்,” என்று கூறுகிறார். ஒருவருடைய ஆரோக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் ஒரு பழக்கத்தில் ஈடுபடுவது தன்னில்தான் அன்பு கூருவதாகுமா?—எபேசியர் 5:28, 29.
“நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும், புதிய பூமியும்,” உண்டாகுமென்று யெகோவா தேவன் வாக்களித்திருக்கிறார். (2 பேதுரு 3:13) அது எந்தவிதமான தூய்மைக்கேடும் இல்லாத ஒரு சுத்தமான புதிய உலகமாகும். அப்பொழுது புகைபிடிப்பது அனுமதிக்கப்படாது அல்லது விரும்பவும்படாது என்றால், இப்பொழுது ஏன் புகைபிடிக்க வேண்டும்? நியாயமாகவே பவுலின் ஆலோசனை இங்கே பொருந்துகிறது: “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) நிகோடீன் மாம்சத்தைச் சொல்லர்த்தமாகவே அசுத்தம் செய்கிறது. புகைப்பிடிப்பது ஒரு கிறிஸ்தவன் தன் சரீரத்தைப் “பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக . . . செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை”யாக தேவனிடம் ஒப்புக்கொடுக்க இயலாது. (ரோமர் 12:1) புகைபிடிப்பது கெடுதியானது மற்றும் கிறிஸ்தவ நியமத்திற்கு எதிரானது என்று நியாயத்தை உணர்த்தும் சக்தியானது கண்டிப்பாகச் சொல்லுகிறது. அப்படியானால், ஒருவர் தேவனை மகிழ்விக்க வேண்டும் என்று விரும்பினால், புகைபிடிப்பதை நிறுத்த அது ஓர் அடிப்படைக் காரணமாகிறது.
அவர்கள் ஏன் நிறுத்தினார்கள்?
உலகத்தைச் சுற்றி இலட்சக்கணக்கான மக்கள் புகைபிடிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். அதைச் செய்ய முடியும். ஆனால் எப்படி? என்ன தேவைப்படுகிறது? ஒரு வல்லமை வாய்ந்த செயல்நோக்கம். பலருக்கு ஆரோக்கியமும், சுயமரியாதையும், குடும்பத்தினரிடம் இருக்கும் அன்புமாக இருக்கிறது. ஆனால் மற்றவர் மத சம்பந்தமான செயல் நோக்கத்தை—தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசையைக்கூட கொண்டிருக்கிறார்கள்.
நம் இரண்டாம் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ரே, பில், ஏமி மற்றும் ஹார்லியைப் பற்றியது என்ன? அவர்கள் புகைபிடிப்பதை ஏன் நிறுத்தினார்கள்?
முன்பு தாடியும், நீண்ட முடியும் கொண்டிருந்த ஓவியனான பில் என்பவர் யெகோவாவின் சாட்சிகளுடன் வேதாகமத்தைப் படித்தார். பிறகு என்ன? “நான் தேவனைச் சுத்தமான உடலுடனும், மனதுடனும் சேவிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். உடனடியாக நிறுத்தினேன். படிப்படியாக பின்வாங்குவது அல்ல. ஜனவரி 1, 1975-ல் கடைசி முறையாக ஒரு சிகரெட்டை இழுத்துவிட்டு சிகரெட்டுப் பாக்கெட்டையே தூக்கி எறிந்துவிட்டேன். அதிலிருந்து என் ஆரோக்கிய நிலை மேம்பட்டிருக்கிறது. எனக்கு எம்ஃபிஸீமா நோய் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் புகைபிடிப்பதை நான் நிறுத்திய பிறகு வண்ணங்களைப்பார்த்து உணரும் என் திறன் மேம்பட்டது.”
அறுவை சிகிச்சை உதவியாளராகப் பணிபுரியும் ஏமி தான் புகைபிடிப்பதை எவ்வாறு நிறுத்தினாள் என்று விளக்குகிறாள். “நான் இருதய சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் உதவி புரிந்தேன்; இளஞ்சிவப்பு நிறமான ஆரோக்கிமானதும் மற்றும் கருமையான நஞ்சு படிந்ததுமான எல்லாவகை நுரையீரல்களையும் பார்த்திருக்கிறேன். கருமை மிளகுகள் நிரம்பிய, பயங்கரமான நோய்ப்பட்ட நுரையீரல்களை நான் பார்த்திருந்தாலும், புகைபிடிப்பதை நான் நிறுத்தவில்லை. ‘உனக்கு இன்னும் இளம் வயதுதான், அது உனக்கு நேரிடாது’ என்று சொல்லி என்னை நான் ஏமாற்றிக்கொண்டேன்.
“பிறகு 1982-ல் என் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டியதை உணர்ந்து, பைபிளை நான் சாட்சிகளுடன் படிக்க ஆரம்பித்தேன். ஒரு சாட்சியுடன் அவள் வீட்டில் தங்கியிருந்தாலும் புகைபிடிப்பதற்காக அவளுக்குத் தெரியாமல் மாடிக்குச் செல்வேன்! ஆகையால் என்னை நானே அடக்கியாள வேண்டியதாய் இருந்தது. நான் உறுதியாகவும் நெடு நேரமாகவும் ஜெபித்தேன். ஆனால் நான் தீர்மானித்தப் பிறகு சுலபமாக இருந்தது. முதல் இரண்டு நாட்கள் சோதனையாக இருந்தாலும், விடாது ஜெபித்தது எனக்கு உதவியாக இருந்தது.”
கப்பற்படையைச் சேர்ந்த முன்னாள் விமான ஓட்டியான ஹார்லி நிகோடீன் பழக்கத்தை விட்டுவிட அதிக சிரமப்பட்டார். “கொஞ்சம் கொஞ்சமாக புகைபிடிப்பதை விட்டுவிட முயற்சி செய்தேன், ஆனால் அது செயல்படவில்லை. பிறகு யெகோவாவின் சாட்களில் ஒருவராவதற்காக முழுக்காட்டுதல் பெற வேண்டுமென்று நான் தீர்மானித்த பொழுது சட்டென்று விட்டுவிட்டேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள் மிகுந்த வேதனைக்குள்ளானேன். நான் மிகவும் பயமிகுந்தவனாகவும், எரிச்சல் அடையக்கூடியவனாகவும், நிம்மதியற்றவனாகவும் இருந்தேன். ஒரு சிகரெட்டுக்காக எவ்வளவு ஆசைப்பட்டேன்! அப்பொழுது ஒரு சாட்சி அருமையான ஆலோசனை தந்து எனக்கு உதவி செய்தார். ‘ஒரு சிகரெட்டை எடுக்க ஆசை வரும் பொழுது, அப்பொழுதுதானே உதவிக்காக யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும்.’ அது எனக்குச் செயல்பட்டது. ‘இயேசு தன் வாயில் ஒரு சிகரெட்டை வைத்திருப்பது போல் என்னால் கற்பனை செய்ய முடியுமா?’ என்ற மற்றொரு எண்ணம் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. அந்தக் கேள்விக்கே இடமில்லை. ஆனால் புகைபிடிக்கும் ஒருவன் அப்பழக்கத்தை விட்டுவிடுவதற்கு ஒரு வல்லமை வாய்ந்த செயல் நோக்கம் தேவையென நான் உணருகிறேன். என் தாயிடம் நான் வழக்கமாகக் கூறியதாவது, ‘நான் எனக்குதானே கேடு விழைவித்துக்கொள்கிறேன், அம்மா.’ உண்மையில் பல வகையில் அவளுக்கும் தீங்கு இழைத்து வந்திருக்கிறேன்.”
முன்னாள் கப்பற்படையைச் சேர்ந்த சிறுதிறப் பணியாளரான ரே கூட, புகைபிடிப்பதைச் சுலபமாக நிறுத்திவிடவில்லை. “யெகோவாவின் சாட்சிகளை சந்திப்பதற்கு முன்னமே, ஓரிரு முறை நிறுத்த முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை. நான் எப்பொழுதுமே புகைபிடிப்பவர்களோடு கூட்டுறவு கொண்டிருந்ததால் அளிக்கப்படும் சிகரெட்டை மறுப்பது கடினமாயிருந்தது. ஆனால் வேதாகமத்திலிருக்கும் சத்தியத்தை அறிந்த பிறகு கிறிஸ்து செய்ததுபோல, நான் யெகோவாவை சேவிக்க விரும்பினேன். ஆகையால் ஒரே நாளில் பழக்கத்தை விட்டுவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என் உடல் நிகோடீனுக்காக அழுதது. ஆனால் எப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை அது உண்டுபண்ணியது! திடீரென்று வரையறையற்ற சக்தியை நான் மீண்டும் அடைந்தேன். என்னைக் குறித்து நானே நல்லபடி உணர்ந்தேன். மீண்டும் நான் அந்த நாட்டத்தை அடக்கியாள முடிந்தது.
அது பிரயோஜனமான ஒன்றா?
தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும் என்று பொது அறிவு குறிப்பிடுகிறது. ஆனால் புகைபிடிப்பதன் சம்பந்தமாக வெறுமென தீங்கு விளைவிப்பதை பற்றி மட்டும் நான் பேசவில்லை. அது மரணத்திற்கு வழிவகுக்கிற ஒன்றாகக் கொடூரமாக இருக்கிறது. அது நச்சுப்பொருளாகும். புகையிலை செல்வத்திற்கு வாரிசான பாட்ரிக் ரேனால்ட்ஸ், ஐ. மா. காங்கிரசின் உட்குழுவில் கொடுத்த சாட்சியத்தில் குறிப்பிட்டதாவது: “சிகரெட்டை விளம்பரம் செய்வது ஒரு நச்சுப் பொருளை மேம்படுத்துவதாகும் என்று நான் நம்புகிறேன். மேலும் சிகரெட்டை விளம்பரம் செய்வதைத் தவிர்ப்பது ஒழுக்கமானதும், சரியானதும், நல்லதானதுமாகும்.”
கடவுளைப் பிரியப்படுத்த நினைக்கும் கிறிஸ்தவர்கள் புகையிலை விளம்பரங்கள் மட்டுமல்லாமல் எல்லாப் புகையிலைப் பண்டங்களையும் தவிர்ப்பது நிச்சயமாகவே ஒழுக்கமானதும், சரியானதும், நல்லதுமாகும். சிகரெட்டு (“பாதுகாப்புள்ளவை”யும், பாதுகாப்பற்றவையும்), சுருட்டு, குழாயில் பிடிப்பதற்கான புகையிலை, மற்றும் மூக்குப்பொடி—அவை அனைத்துமே நிகோடீனை உற்பத்தி செய்யும். ‘நீ வெகுதூரம் வந்திருக்கிறாய், பெண்ணே’ அல்லது உங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் அருஞ்சுவையையும் கொண்டிருப்பதற்கு வந்திருக்கிறாய் என்பதை நிரூபிக்க அவசியமில்லை. வியாதியையும் மரணத்தையும் விற்பனை செய்பவர் உங்களிடம் எதைக் கூற முயற்சி செய்தாலும், தன்னைத்தானே நஞ்சூட்டிக்கொள்வது உலக பண்பாட்டை வெளிப்படுத்துவதாகாது! (g89 7/8)
[பக்கம் 15-ன் பெட்டி]
புகை பிடிப்பது சம்பந்தப்பட்ட வியாபாரத்தை விட்டு வெளிவந்தவர்கள்
1875-ல் வட கரோலினாவில் R.J. ரேனால்ட்ஸ் மெல்லுவதற்கான ஒரு புகையிலைத் தொழிற்சாலையை நிறுவினார். 1913-ல் அவர்களுடைய முதல் சிகரெட்டை—ஒட்டகச் சின்னம் கொண்டதை உற்பத்தி செய்தார்கள். அதிலிருந்து ஐக்கிய மாகாணங்களின் சிகரெட் விற்பனை மற்றும் பொருள் ஈட்டும் கூட்டில் பிலிப் மோரீஸிற்கு அடுத்தபடி இரண்டாவதாக ஆகுமளவிற்கு செழித்துவளர்ந்துள்ளது. இதை ஆரம்பித்தவரின் கொள்ளுப்பேரனான பாட்ரிக் ரேனால்ட்ஸ், அவருடைய 40-களின் ஆரம்பத்தில் உள்ளார். முன்னே 15 வருடங்களாக புகைபிடித்த இவர், புகையிலை உலகத்திற்கே ஒரு குண்டு போட்டார்.
1986-ல் ஒரு காங்கிரஸ் உட்குழுவிற்கு முன் புகைப்பதற்கெதிராக சாட்சியம் கூற தோன்றினார்! அப்போதிருந்து புகையிலை உபயோகிப்பதற்கு எதிராக அவர் ஒழுங்குதவறாமல் பிரசாரம் செய்யக் கூடியவரானார். அவர் குடும்பத்திற்கு செல்வத்தைத் தந்த அந்தப் பொருளின் மீது அவருக்கு அந்த வெறுப்பு எவ்வாறு உண்டாகியது? அதிகம் புகைபிடித்தவராகிய தன் தந்தை எம்ஃபிஸீமா நோயால் மெதுமெதுவாக இறப்பதை ஒரு சிறுவனாக கவனித்ததை நினைவுகூர்ந்தார். பாட்ரிக் கூறினார்: “என் தந்தையைப் பற்றிய என் நினைவெல்லாம் எப்பொழுதும் மூச்சுக்காகத் திணறுபவரும் தான் உயிரோடிக்க எஞ்சியிருக்கும் காலத்தைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தவருமாய் இருந்ததுதான்.”
பாட்ரிக் தன் வாழ்க்கையைக்கொண்டு ஏதேனும் சரியான ஒன்றைச் செய்ய தீர்மானித்தார். “நான் ஒரு வேறுபாட்டை உண்டுபண்ணி, என் வாழ்க்கையைக் கொண்டு ஏதேனும் செய்ய இயலும் என்பதை உணர்ந்தேன்.” “நிரூபிக்கப்பட்ட கொலையாளிகளை” தொடர்ந்து வளர்த்துவருவது “தெளிவாகவே அநீதியாகும்” என்று அவர் கூறினார்.
“எனக்கு உணவூட்டிய கை புகையிலைத்தொழில் என்றால், அதே கை பல இலட்சக்கணக்கான மக்களைக் கொலை செய்திருக்கிறது; மக்கள் சிகரெட்டுகளின் ஆபத்துகளுக்கு விழிப்புள்ளவர்களாக ஆகாவிட்டால் இன்னும் இலட்சக்கணக்கானோரைத் தொடர்ந்து கொல்லும்.”—தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times), அக்டோபர் 25, 1986.
வின்ஸ்டன் சிகரெட் விளம்பரங்களில் வின்ஸ்டன் மனிதனாக பிரசித்திபெற்றிருந்தவர் டேவிட் கோவர்லிட்ஸ். அவர் சிகரெட்டுக்காக விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு இப்பொழுது அமெரிக்க புற்றுநோய் கழகத்தின் சார்பாக பேச்சாளராக ஆகியுள்ளார். அவரை மாறச் செய்தது என்ன? டிசம்பர் 29, 1988-ல் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் அவர் சொன்னார்: ‘போஸ்டனிலுள்ள ஒரு மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவிலிருந்த என் சகோதரனைச் சென்று பார்த்தேன். அது நான் செய்த வேலையின் விளைவுகளுடன் என்னை நேருக்கு நேர் கொண்டுவந்தது—புற்றுநோயாளிகள் புகைபிடித்தலின் காரணமாக கஷ்டப்படுகின்றனர். புகைப்பதற்கு இரையானவர்களுக்கு ஏற்பட்ட சீரழிவான விளைவுகளையும், அப்படி இரையானவர்களின் குடும்பங்களையும் பார்த்தேன். 40-களில் இருந்த மனிதர்களின் தலைகளில் முடியில்லாமல் தொண்டையிலும் வயிற்றிலும் குழாய்களுடன் இருந்ததை நான் கண்டேன். நான் குற்றம்செய்தவனாக உணர்ந்து புகையிலைக்காக விளம்பரம் செய்வதைவிட்டுவிட தீர்மானித்தேன்.’▪
[பக்கம் 14-ன் படம்]
“நான் இருதயம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் உதவிபுரிந்தேன்; எல்லாவகை நுரையீரல்களையும் பார்த்திருக்கிறேன்”