நீங்கள் எப்போதுமே தாமதமாகப் போகிறீர்களா?
சனிக்கிழமை மாலை இரண்டு மணிக்கு அவர்கள் வீட்டில் நடக்கப்போகும் கூட்டத்திற்கு இரண்டு வாலிபர்கள் அழைப்புகளை எழுதினார்கள். அவர்கள் நண்பர்களில் இருவர் எப்பொழுதுமே தாமதமாக வருவதை மனதில் கொண்டு ஒரு வாலிபன் “நாம் அவர்கள் அழைப்பிதழ்களில் 1:00 மணி என்று ஏன் எழுதக்கூடது? அவர்கள் அநேகமாக 2:00 மணிக்கு, சரியான நேரத்தில் வந்துவிடுவார்கள்” என்று சொன்னான். அது சரியாகவே அப்படி நடந்தது!
காலந்தவறாமையைச் சார்ந்த எல்லாப் பிரச்னைகளும் அவ்வளவு சுலபமாக தீர்க்கப்படுவதில்லை. உண்மையிலே சரியான நேரத்திற்கு வராவிட்டால், கால தாமதமாக வருபவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கும் கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும். உண்மைதான் எல்லாப் பண்பாடும் காலந்தவறாமைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நீங்கள் எங்கே வசிப்பராக இருந்தாலும்சரி, ஆகாய விமான பயணங்கள், வழக்கப்படியான கூட்டங்கள், வர்த்தக உடன்பாடுகள் மற்றும் சில சமூக நிகழ்ச்சிகளுக்குங்கூட சரியான நேரத்தில் இருப்பதற்கு நீங்கள் அவசியம் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஆகையால் நீங்கள் அடிக்கடி கால தாமதமாகச் செல்வீர்களானால் சரியான நேரத்தில் இருக்கும்படி செய்ய எது உதவியாக இருக்கக்கூடும்? மேலும் நீங்கள் மற்றவர்களுக்காக அடிக்கடி காத்திருக்கு வேண்டியதாக இருந்தால், எங்கும் இருக்கிற இந்த மனித குறையை நற்பயன் அளிக்கக்கூடிய விதத்தில் சமாளிக்க எது உங்களுக்கு உதவி செய்யக்கூடும்?
நீங்கள் வழக்கமாகவே தாமதமாகப் போகிறீர்களா? முதலாவதாக காரணத்தைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். எளிதில் உங்களுடைய கவனம் வேறுதிசையில் திருப்பப்படுகிறதா? உங்களை அல்லது உங்கள் குடும்பத்தை ஒழுங்குபடுத்துவதில் பெருங் கஷ்டம் அனுபவிக்கிறீர்களா? காலதாமதத்தின் பேரில் இருக்கும் இத்தகைய செல்வாக்குகளைக் கடும் முயற்சியினால் மேற்கொள்ளலாம். உதாரணமாக, வழக்கமான நடவடிக்கைகளுக்கு எடுக்கும் நேரத்தைக் குறியுங்கள், பின்பு ஒவ்வொன்றுக்கும் தேவைக்கு அதிகமான நேரத்தை அனுமதித்து, அதற்கேற்ப திட்டமிடுங்கள். சுமார் ஒவ்வொரு மணிநேரமும் நேரத்தைக் கவனியுங்கள். முக்கியமான பொறுப்புகளின்போது சரியான சமயத்தில் இருக்க முயற்சி செய்வதைவிட, எதிர்பார்க்கப்படும் நேரத்திற்கு முன்னதாகவே இருக்க குறிக்கோள் உடையவராக இருங்கள். ஆகிலும், காலதாமதமாக வரும் உங்கள் பிரச்னை இதைவிட ஆழமாக வேரூன்றி இருக்கக்கூடுமா?
மனோதத்துவ காரணங்கள்
சில சமயங்களில் கால தாமதத்திற்குப் பின்னால், மறைவான உள்ளெண்ணங்கள் இருக்கின்றன—செய்ய விரும்பாத நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, ஒருவரின் சொந்த முக்கியத்தைக் காட்டுவது, கவனிக்கப்பட விரும்புவது அல்லது மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியத்தை தவிர்ப்பது.
டாக்டர் டிரூ ஸ்கட் என்பவர் காலதாமதத்திற்கு இதைவிட வஞ்சகமான காரணத்தைப் பற்றி இப்படி கூறுகிறார்: “விற்பனையாளர் ஒருவர் ஒரு முக்கியமான வாடிக்கையாளர் கூட்டத்தில் பங்குகொள்ள சரியான நேரத்தில் அலுவலகத்தைவிட்டுச் செல்லத் தன்னை முழுமையாகத் தயார் செய்தபிறகு மறுபடியும் வீட்டிற்குத் திரும்ப வந்து ‘தொலைபேசியில் மேலும் ஒரு தொடர்பு’ கொள்ளுகிறார். விமானத்தைப் பிடிக்கச் செல்லும் தருவாயில் இருக்கும் ஒரு வழக்கறிஞர், ‘கடைசியாக ஒரே ஒரு தாக்கீதை’ எழுதச் சொல்வதன் மூலம் அவளுடைய புறப்படுதலைக் தாமதிக்கச் செய்கிறாள். இப்படியான காலந்தாழ்த்துதலிலிருந்து எதிர்மறைவான கிளர்ச்சியை இவர்கள் பெறுகிறார்கள். இயற்கையாகவே, கிளர்ச்சியூட்டும் கடைசி நிமிட அவசரத்தின் ஒரு தேவையை இது உண்டுபண்ணுகிறது.”
ஆம், கடைசி நிமிட கிளர்ச்சி—விரும்பத்தகாததாக இருப்பினும்—தேவையானத் தூண்டுதலைக் கொடுக்கும் காரியத்தை உண்மையிலே அது நிறைவேற்றக்கூடும். இவ்வகையான கிளர்ச்சியூட்டல் என்னும் துர்ப்பழக்கத்திற்கு “அடிமை”யாகி விட்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் சந்தேகப்பட்டால், அதை எப்படி மேற்கொள்ள முடியும்? டிரூ ஸ்கட் கொடுக்கும் ஆலோசனை: “தூண்டுதல் ஓர் அடிப்படைத் தேவையாக இருக்கிறது, எல்லாருக்குமே அத்தேவை இருக்கிறது. அதை நாடிச்செல்வது முதிர்ச்சி குறைவை காட்டுவதில்லை. ஆரோக்கியமான மனிதர் அதன் தேவையை ஒப்புக்கொள்கிறார்கள். பலன் தரக்கூடியதாக விதத்தில் அத்தேவையைப் பூர்த்திசெய்ய அவர்கள் கற்றுக்கொள்ளுகிறார்கள்.”
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால், உங்கள் வார திட்டங்களைப் பாருங்கள். நீங்கள் உங்கள் சொந்த கிளர்ச்சியூட்டலின் அல்லது தூண்டுதலின் தேவையைப் பூர்த்திசெய்ய சில பலன்கொடுக்கும் நடவடிக்கைகளை அதில் சேர்த்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் அட்டவணை ஒரு சோர்வூட்டுகிற இரண்டாந்தரமான, வழக்கமான வேலைமுறயாக இருக்கிறதா? ஒருவருக்கும் அவருடைய நடவடிக்கைகளின்பேரில் முழு காட்டுப்பாடில்லை, ஆனால் எங்கே உங்களால் முடியுமோ அங்கே தூண்டுதல் அளிக்கும் நடவடிக்கையை திட்டமிட்டால், காலதாமதத்தின் மூலம் கிளர்ச்சியைப் பெற தேடுவதற்கு பதில் நீங்கள் வாழ்க்கையின் அன்றாடக அம்சங்களை வெகு சுலபமாக சகித்துக்கொள்ளலாம்.
“ஆனால் அழுத்தத்தின் கீழ் நான் மிக நன்றாகச் செய்கிறேன்!”
சிலர் கடைசி நிமிடம் வரைக்கும் காத்திருக்கும்போது, அவர்கள் மிக நன்றாகச் செய்வதாக உரிமை கொண்டாடுகிறார்கள். அது உங்கள் விஷயத்தில் நிச்சயமாகவே உண்மையாக இருக்கிறதென்றால் மிகவும் நல்லது. ஆனால் உங்களிடத்திலே நேர்மையுள்ளவர்களாக இருங்கள். கடைசி நிமிடம் வரைக்கும் காத்திருப்பதாலே உண்மையிலேயே நீங்கள் மிக நன்றாக செய்கிறீர்களா?
புத்திசாலித்தனமாக வேலை செய்வது என்ற அவருடைய புத்தகத்தில் மைக்கல் லீபோவ் கூறுவதாவது: “நாம் அவ்வாறு நம்ப விரும்பினாலும், நம்மில் வெகு சிலரே அழுத்தத்தின் கீழ் மிக நன்றாக வேலை செய்கிறோம் . . . முதலாவதாக, நீங்கள் வேலையைத் துரித நடையில் செய்ய வற்புறுத்தப்பட்டால், நீங்கள் தவறுகள் செய்யும் சாத்தியத்தை அதிகப்படுத்துவீர்கள். . . . இரண்டாவதாக, . . . சில காரியங்கள் குறுக்கே வரும், அது மிகவும் அவசரமானதாக இருக்கலாம், நீங்கள் அந்த வேலையைச் செய்ய ஒதுக்கிய அந்தக் கடைசியான விலையுயர்ந்த நிமிடங்களை அது எடுத்துக்கொள்ளும். . . . மூன்றாவதாக, எல்லாம் சரியாக நடந்தேறிற்று, சிறிது நேரத்தில் நிறைய வேலையைச் செய்தீர்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் நற்பயனளிக்கும் விதத்தில் வேலைசெய்ய தெரிந்திருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் அழுத்தத்தின் கீழ் இருந்தாலொழிய அதைச் செய்ய விரும்ப மாட்டீர்கள் என்று அது அர்த்தப்படுத்தும். உங்களுக்கு இருக்கும் திறமைக்கு ஏற்ப வேலை செய்யத் தவறுவதன் மூலம் உங்களையே நீங்கள் வஞ்சித்துக் கொள்ளுகிறீர்கள்.”
நீங்கள் காத்திருக்க வெறுப்படைகிறீர்களா?
நீங்கள் நேரம் தவறாதவராக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து காலதாமதமாக வரும் மற்றவர்களுக்காக காத்திருக்கக் கட்டாயப்படுத்தப்படலாம். காலதாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்கள், சிநேகிதர்கள் அல்லது சகவாசிகளுக்கு எப்படி நீங்கள் உதவி செய்யக்கூடும்? அல்லது குறைந்தது அவர்களை எவ்வாறு சமாளிப்பீர்கள்?
வழக்கமாகக் காலதாமதமாக வருபவர்களுக்கு, செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக் குறித்து முன்கூட்டியே நினைப்பூட்டுவதன் மூலம் அல்லது பிரச்னையைப் பற்றி அவர்களிடம் நேர்மையோடு பேசுவதன் மூலம் நீங்கள் உதவி செய்யக்கூடும். காலதாமதமாக வரும் சிலர், அவர்களுடைய பின்னணியின் காரணமாக அல்லது சொந்தக் குறைபாடுகளின் காரணமாக, உதவிக்குப் பிரதிபலிக்காமல் சரியான நேரத்திற்கு வராமல், தொடர்ந்து மற்றவர்களை அசெளகரியத்திற்குள்ளாக்குபவர்களாக இருப்பார்கள். உங்கள் சூழ்நிலை, அப்படிப்பட்ட நபர்களோடு வாழ அல்லது வேலை செய்ய வேண்டியதாக இருந்தால் நீங்கள் அவர்களுடைய காலதாமதத்தை வாழ்க்கையின் உண்மையான காரியம் என்று ஏற்றுக்கொண்டு, நற்பயன் அளிக்கும் விதத்தில் அதைச் சமாளிக்க திறன்களை விருத்தி செய்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்து, அதற்காக தயார் செய்துகொள்ளலாம். காத்திருப்பதை மகிழ்ச்சியுள்ள ஓர் அனுபவமாக்கும் இடத்தில், ஒருவேளை ஒரு பலசரக்கு கடையிலோ, அல்லது சாப்பாடு விடுதியிலோ சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம். அல்லது நீங்கள் காத்திருக்கும் சமயத்தை நற்பயனுள்ள முறையில் உபயோகிக்க, செய்யக்கூடிய சில வேலைகளை அல்லது வாசிக்கக்கூடிய சில புத்தகங்களை உங்களோடு கொண்டுவரலாம். சற்று முன்பே அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ளுங்கள், அப்படி செய்வதன் மூலம், அவர்களுடைய சாத்தியமான காலதாமதம், குறித்த நேரத்தில் நீங்கள் செய்ய திட்டமிட்டிருக்கும் காரியங்களை தவறவிடாமல் இருக்கச் செய்யும். சில சந்தர்ப்பங்களில், வழக்கமாக காலதாமதமாக வருபவர்களை உங்கள் திட்டங்களில் சேர்க்கக்கூடாதென்று உங்கள் நியாயமான தீர்ப்பு கட்டளையிடக்கூடும்.
உங்கள் நல்நடத்தைக்குக் கைமாறு செய்யுங்கள்
சரியான நேரத்தில் இருப்பதில் உங்களுக்குப் பிரச்னை இருக்குமானால், இந்தக் குறைக்கு சாக்குபோக்கு சொல்லாதீர்கள் அல்லது உங்களுக்காக மற்றவர்கள் காத்திருக்க எதிர்பார்த்து அக்கறையில்லாதபடி அதற்கு இடங்கொடுக்காதீர்கள். அது மற்றவர்களுடைய வாழ்க்கையின்பேரிலும், உணர்ச்சிகளின்பேரிலும் உங்களுக்கு கரிசனையில்லை என்று காட்டும். தன் திருமணத்திற்கு மூன்று மணிநேரம் தாதமதாக வந்த ஒரு மணப்பெண்ணின் காரியத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள். அதன் விளைவாக, அந்தத் திருமணச் சடங்கு துரிதமாக ஒரு தனிப்பட்ட வீட்டிற்கு மாற்றப்பட வேண்டியதாயிற்று. அந்நிகழ்ச்சிக்கு வருகைத்தந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பெரும் அசெளகரியத்தை உண்டுபண்ணிற்று. நிச்சயமாகவே, மற்றவர்களைப் பற்றி கரிசனையுள்ளவர்களாக இருப்பது நாம் குறித்த நேரத்தில் இருக்கும்படி நம்மைத் தூண்டும்!
சந்தேகமின்றி, சரியான நேரத்தில் இருக்க வேண்டுமென்று நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி, சரியான நேரத்தில் இருப்பதில் மட்டுமல்ல, ஆனால் பல ஏற்பாடுகளில், நடவடிக்கைகளில் நீங்கள் முன்னதாகவே இருக்கும்படி செய்யும். இது ஏற்படும்போது உங்களுக்கே கைமாறு செய்துகொள்ளுங்கள்! டாக்டர் ஸ்கட் சொல்லுகிறார்: “நேரத்தைக் காண்பது, பணத்தைக் காண்பதைப் போல் இருக்கிறது. அதை உங்கள் தின வரவு செலவு கணக்கில் போட்டுவிடாதீர்கள்; நீங்கள் மகிழ்ச்சிகாணும் சில நிகழ்ச்சிகளில் அதைச் செலவிடுங்கள். ஒவ்வொரு காலையிலும் பத்து நிமிடங்கள் அல்லது சாயங்கால வேளையில் அரை மணிநேரம் அல்லது ஒரு நாளில் இங்கேயும் அங்கேயும் ஒரு சில நிமிடங்கள் உங்களுக்கு அதிகப்படியாக இருந்தால் அந்நேரங்களில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சில யோசனைகளை தயாராக வைத்திருங்கள், நீங்கள் முன்னதாகவே செல்லும்போதெல்லாம் உங்களுக்கு நீங்களே மகிழ்ச்சியூட்டும் ஒரு வெகுமதியை கொடுக்கக்கூடும்.” (g89 6/8)
[பக்கம் 19-ன் பெட்டி/படங்கள்]
கடைசி நிமிடம்வரை காத்திருப்பதை மேற்கொள்ள வழிகள்:
1. பெரிய, நம்மையே அடக்கி ஆளக்கூடிய வேலைகளைச் சிறிய செய்யக்கூடிய நடவடிக்கைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
2. ஒரு வேலையைச் செய்து முடிக்க உடற்பிரகாரமான நடவடிக்கை எடுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிப்பதை தள்ளிப்போடுகிறீர்கள் என்றால் அப்புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து உங்களுக்கு விருப்பமான படிக்கும் நாற்காலியின் அருகில் வையுங்கள்.
3. ஒருவருக்கு ஒன்றைச் செய்கிறேன் என்று வாக்குக் கொடுங்கள். உங்கள் நண்பரிடம் அல்லது மேற்பார்வையாளரிடம் குறித்த நேரத்தில் ஒரு வேலையைச் செய்து முடித்துவிடுவேன் என்று சொல்லுங்கள்.
4. ஒரு பெரிய திட்டத்தை நீங்கள் ஒவ்வொரு கட்டமாக முடிக்கும்போது உங்களுக்கே கைமாறு செய்துகொள்ளுங்கள்.
5. நீங்கள் நேரம் கடத்துகிறீர்கள் என்று கவனிக்கும்போது, “நான் என் நேரத்தை வீணாக்குகிறேன்” என்று உங்களிடமே ஒத்துக்கொள்ளுங்கள். இந்த ஞாபகமூட்டுதல், கட்டுப்பாட்டிற்கும் காலதாமதம் செய்வதை நிறுத்த தீர்மானிக்கவும் முடிவில் வழிநடத்தும்.
6. தாமதத்தின் விலையை ஆலோசித்துப் பாருங்கள்: வேலைப் பளு அதிகரிக்குமா? பணச்செலவு அதிகரிக்குமா? கடைசி நிமிடம் வரும்போது நீங்கள் சுகவீனமடைந்தால் என்ன? அத்திட்டம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் எடுத்துக்கொண்டால் என்ன? தொடர்ந்து தடங்கல்கள் இருந்துகொண்டே இருக்கக்கூடுமா? உங்கள் கடைசி நிமிட வேலையின் தரம் பாதிக்கப்படுமா?—ஆலன் லகினின் “உங்கள் நேரத்தையும் உங்கள் வாழ்க்கையையும் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
[படங்கள்]
ஓர் ஏற்பாட்டிற்காக வீட்டை விட்டு போகுமுன் “இன்னொரு வேலையைச்” செய்யலாம் என்ற ஓர் உணர்ச்சி எழும்புகிறதா?
உண்மையிலே நீங்கள் அழுத்தத்தின் கீழ் உங்களால் செய்யக்கூடிய மிகச் சிறந்ததைச் செய்கிறீர்களா?
காத்திருக்கும் நேரத்தை ஓய்வெடுக்க அல்லது நீங்கள் விரும்பும் ஒன்றை செய்துமுடிக்க பயன்படுத்துங்கள்