காலந்தாழ்த்துதல் காலத்திருடன்
“காலந்தாழ்த்துதல் காலத்தின் திருடனாக இருக்கிறது.”—எட்வர்ட் யங், சுமார் 1742-ல்.
நில்லுங்கள்! இந்தக் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிடாதீர்கள்! என்ன நேரிடக்கூடும் என்று நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதை வாசிக்காமல் போட்டுவிட்டு இவ்வாறு சொல்லக்கூடும்: “அது ஒரு அக்கறைக்குரிய தலைப்பு, ஆனால் இப்போது அதை வாசிப்பதற்கு எனக்கு நேரமில்லை. பின்னர் அதை வாசிப்பேன்.” ஆனால் பின்னர் என்பது ஒருபோதும் வராது.
காலந்தாழ்த்துதலைப் பற்றி ஒரு கட்டுரையை வாசிப்பதற்குக் காலந்தாழ்த்தாதீர்கள்! அதற்கு எவ்வளவு நேரமெடுக்கும் என்று தீர்மானியுங்கள். பெரும்பாலும் இந்தக் கட்டுரையைச் சுமார் ஐந்து நிமிடங்களில் ஒருவேளை உங்களால் வாசித்துவிட முடியும். அப்படியானால் இந்த முழு பத்திரிகையில் சுமார் 10 சதவீதத்தை நீங்கள் வாசித்து முடித்திருப்பீர்கள்! உங்கள் கைக்கடிகாரத்தை நோக்கி இப்போதிருந்து நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். (இதற்குள் 5 சதவீதத்தை முடித்துவிட்டீர்கள்!)
அது காலந்தாழ்த்துதலா?
தள்ளிப்போட்டுக்கொண்டே—இப்போது செய்ய முடிவதை, அல்லது செய்ய வேண்டியதை, தாமதப்படுத்திக்கொண்டே—இருந்தால், நீங்கள் காலந்தாழ்த்துகிறீர்கள். வேறுவிதமாகச் சொன்னால், இப்போது, இன்று உங்களால் செய்ய முடிந்ததை நாளைக்காகத் தள்ளிப்போடுகிறீர்கள். நடவடிக்கை தேவைப்படுகிற சமயத்தில்தானே காலந்தாழ்த்துபவர் நடவடிக்கையைத் தாமதிக்கிறார்.
மேற்பார்வையாளர் ஒருவர் தன்னுடைய வேலையாளிடம் அறிக்கை ஒன்றைக் கேட்கிறார்; பெற்றோர் தங்கள் பிள்ளையிடம் அதன் அறையைச் சுத்தம் செய்யும்படி சொல்கின்றனர்; வடிகுழாயைச் சரிப்படுத்தும்படி ஒரு மனைவி தன் கணவனிடம் கேட்கிறார்கள். “எனக்கு அதிக வேலை இருந்தது” அல்லது, “நான் மறந்துவிட்டேன்” அல்லது, “எனக்கு நேரம் கிடைக்கவில்லை” ஆகியவை அவற்றைச் செய்வதற்குத் தேவையான முயற்சியை எடுக்காமலிருந்ததற்குக் கொடுக்கப்படும் சாக்குப்போக்குகள். உண்மை என்னவென்றால், அதிகமாக அனுபவிக்கத்தக்க வேறு வேலைகள் செய்வதற்கு இருக்கையில், அறிக்கைகளைத் தயாரிப்பதற்கோ அறைகளைச் சுத்தம் செய்வதற்கோ குழாயைச் சரிபார்ப்பதற்கோ நம்மில் வெகு சிலரே விரும்புகிறோம். ஆகவே நாம் தள்ளிப்போடுகிறோம், அல்லது அதைச் செய்ய தாமதிக்கிறோம்.
என்றபோதிலும், ஏதோ ஒன்றைச் செய்வதை நாம் தள்ளிப்போடும்போது, அது எப்போதுமே காலந்தாழ்த்துதல் அல்ல என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா? ஒரு விண்ணப்பத்தைப் பெற்று அதைக் குறித்து என்ன செய்வதென்று அறியாதிருக்கிற ஒரு பெண் வணிகர், தன் மேசையில், “ஒத்திவைக்கவும்” என்று லேபல் இடப்பட்ட ஒரு பெட்டியில் கோர்த்து வைத்திருந்தாள். ஒருசில வாரங்களுக்குப் பின், அவள் இவற்றை எல்லாம் மறுபார்வை செய்து, அவற்றில் பாதிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவேண்டிய தேவையில்லை என்று காண்கிறாள். அவை தாமாகவே தீர்வாகிவிட்டிருந்தன அல்லது அவை இனிமேலும் தேவையற்றவையாக இருக்கின்றன. தாமதிக்க வேண்டுமா அல்லது நடவடிக்கை எடுக்கவேண்டுமா என்பதைக் குறித்து நீங்கள் உறுதியற்றவராக இருந்தால், நீங்கள் தள்ளிப்போடும் காரியத்தை ஒருபோதும் செய்யாவிட்டால் என்ன நேரிடும் என்பதைத் தீர்மானிக்க முயலுங்கள். அதைச் செய்து முடித்தீர்களென்றால் அதன் விளைவு நல்லதாக இருக்கக்கூடுமா அல்லது மோசமடையக்கூடுமா?
நம்மால் இப்போது நடவடிக்கை எடுக்க முடிவதாகவும், அது அவசியமாகவும் இருந்து, நடவடிக்கையைத் தாமதிப்பது அதிக பிரச்சினைகளைப் பின்னர் கொண்டுவரக்கூடும் என்றால், தாமதித்தல் காலந்தாழ்த்துதலாக இருக்கிறது. உதாரணமாக, பாத்திரங்களிலுள்ள அழுக்கெல்லாம் காய்ந்த பிறகு அவற்றைக் கழுவுவது, அவற்றைச் சுத்தமாகத் தேய்ப்பதைக் கடினமானதாக்குகிறது. கார் பராமரிப்பைத் தள்ளிப்போடுவது, பின்னர் செலவுபிடிக்கும் சரிபார்த்தல்களைச் செய்வதில் விளைவடையலாம். ஒரு கட்டணத் தொகையைத் தாமதமாகச் செலுத்தினால் அதிக கட்டணம் செலுத்துவதில் அல்லது அதற்கான சேவைகளை இழப்பதில் விளைவடையலாம். போக்குவரவு குற்றங்களுக்கான தொகை, வீடியோ டேப்புகள் மற்றும் நூலகப் புத்தகங்களைத் தாமதமாகக் கொடுத்ததற்கான தண்டத்தொகை 46 டாலர்களாக இருந்ததாக ஒரு பெண் கணக்கிட்டாள்! அது வெறுமனே ஒரு மாதத்திற்கானது!
திருடனைப் பிடித்தல்
நீங்கள் ஏன் காலந்தாழ்த்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பின்வரும் காரணங்களைக் கவனித்துப்பாருங்கள்; நீங்கள் செய்யத் தொடங்கியிராத அல்லது முடித்திராத தற்போதைய திட்டம் ஒன்றுக்கு பொருந்துவது எது என்பதைக் கண்டுபிடியுங்கள்:
பழக்கம்:
கடைசி நிமிடம் வரையாக நான் காத்திருந்தால், அதைச் செய்து முடிப்பதற்கு அதிகப்படியான தூண்டுதல் எனக்குக் கிடைக்கும்.
கடைசி கணத்தில் அதைச் செய்வதால் கிடைக்கும் கிளர்ச்சியை நான் அனுபவிக்கிறேன்.
என்னுடைய மேலதிகாரி ஓரிருமுறை ஞாபகப்படுத்தும்வரையாக நான் காத்திருப்பேன்; அப்போது, அதை நான் உண்மையிலேயே செய்து முடிக்கும்படி அவர் விரும்புகிறார் என்று அறிந்துகொள்வேன்.
எனக்குச் செய்வதற்கு எவ்வளவோ காரியங்கள் இருப்பதால் அத்தியாவசியமான காரியங்களே என்னுடைய கவனத்தைப் பெறுகின்றன.
மனநிலை:
அந்த வேலையைச் செய்வதற்கான விருப்பமோ உந்துவிப்போ எனக்கு இல்லை.
காரியங்களைச் செய்வதற்கான மனநிலை இருக்கும்போது மட்டுமே நான் அவற்றைச் செய்கிறேன்.
எனக்கு வேறு எதையாவது செய்யத் தோன்றுகிறது.
நான் சுய கட்டுப்பாட்டில் குறைவுபடுகிறேன்.
பயம்:
அதை என்னால் செய்ய முடியும் என்ற நிச்சயம் இல்லை.
அதைச் செய்வதற்கான போதிய நேரம் இல்லை.
அது மிகவும் பெரிய வேலையாக இருக்கிறது. எனக்கு உதவி தேவை.
நான் அதில் வெற்றி அடையாவிட்டால் அல்லது அதை முடிக்காவிட்டால் என்ன செய்வது?
அந்த வேலையை முடிப்பதற்கான பொருள்களை நான் வாங்க வேண்டும்.
நான் குறைகூறப்படுவேன் அல்லது சங்கடத்திற்குள்ளாக்கப்படுவேன் என்று பயப்படுகிறேன்.
வித்தியாசப்பட்ட மக்கள் வெவ்வேறு படிநிலைகளில் காலந்தாழ்த்துகிறார்கள். அந்த வேலை மிகவும் பெரிது என்று கருதுவதால், சிலர் அதை ஆரம்பிக்கும் முன்னரே காலந்தாழ்த்துகிறார்கள். மற்றவர்கள் ஆரம்பிக்கிறார்கள், ஆனால் பாதி வழியில் அவர்களுடைய ஆர்வம் குன்றுகிறது, அதைச் செய்து முடிப்பதை அவர்கள் தள்ளிப்போடுகிறார்கள். இன்னும் மற்றவர்கள் அதை முடிக்கும் தறுவாய்க்கு வந்துவிடுகிறார்கள், ஆனால் அதை முடிக்காமல் விட்டுவிட்டு மற்றொரு வேலையை ஆரம்பிக்கிறார்கள். (நீங்கள் நன்றாகச் செய்துவருகிறீர்கள். ஏற்கெனவே இந்தக் கட்டுரையில் பாதிவரை வந்துவிட்டீர்கள்.)
ஒரு வேலையை ஆரம்பிக்காமல் அல்லது முடிக்காமல் இருப்பதற்கான உங்களுடைய காரணங்கள் இந்த மூன்று வகையான பிரிவுகளைச் சேர்ந்ததாகவும் இருக்கக்கூடும். தி நெள ஹாபிட் என்ற புத்தகத்தில், நீல் ஃபியாரா எழுதினார்: “பெரும்பாலான காலந்தாழ்த்துதல் பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருக்கும் மூன்று முக்கிய காரணங்கள்: தாக்குதலுக்கு உட்பட்டவராக உணருதல், உணர்ச்சியில் ஆழ்த்தப்பட்டவராக இருத்தல், தோல்விக்கான பயம்.” காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதை உண்டுபண்ணுபவை எவை என்பதை உங்களால் குறிப்பாக உணர முடிந்தால், அதற்கான தீர்வை நெருங்கி வந்திருப்பீர்கள்.
நீங்கள் ஏன் காலந்தாழ்த்துகிறீர்கள் என்பதைக் குறித்து சரியாக அறியாமல் இருந்தால், ஒரு வாரத்திற்கு உங்களுடைய நடவடிக்கைகளை அரைமணிநேர இடைவெளிகள்விட்டு குறித்துவையுங்கள். எவ்வாறு நேரத்தை செலவு செய்கிறீர்கள் என்று கண்டுபிடியுங்கள். முக்கியமான வேலைகளுக்கு மத்தியில் ஓரளவு முக்கியமற்ற காரியங்களுக்காக நாம் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிவது உண்மையிலேயே வியப்பூட்டுவதாக இருக்கலாம். அப்படியானால் அடுத்ததாக என்ன செய்வது?
விளைவுகளைக் குறித்துச் சிந்தியுங்கள்
முயற்சியின்றி ஏதாவது ஒரு காரியம் செய்து முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது சலிப்பூட்டுவதாய் இருக்கலாம். எதிர்பார்க்கப்பட்ட கெடுவை நெருங்குகையில், நீங்கள் அழுத்தத்தையும் வருத்தத்தையும் உணர ஆரம்பிக்கிறீர்கள். இந்த உணர்ச்சிகள் எழும்பும்போது, உங்கள் சிந்தனாசக்தி இடையூறுக்குள்ளாகக்கூடும். இலக்கை அடைவதற்கான பல்வேறு வழிகளைக் காண்பதற்கோ சீர்தூக்கி பார்ப்பதற்கோ மனமில்லாமல் அதைச் செய்து முடிப்பதிலேயே முக்கிய அக்கறையைக் கொண்டிருப்பீர்கள்.
உதாரணமாக: ஒரு விஷயத்தைக் குறித்துப் பேசும்படி நீங்கள் நியமிக்கப்படுகிறீர்கள். அதற்கு முந்தின நாள் இரவு உட்கார்ந்து ஒருசில வார்த்தைகளைக் காகிதத்தில் எழுதுகிறீர்கள். உங்கள் பேச்சுப்பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய போதுமான நேரத்தைச் செலவிடவில்லை, ஆகவே நீங்கள் “திடீர் தயாரிப்பு” செய்கிறீர்கள். ஒருவேளை இன்னும் கொஞ்சம் முயற்சி மட்டும் எடுத்திருந்தால், கேட்பவர்கள் அந்தப் பொருளை கற்பனை செய்து பார்ப்பதற்கு வசதியாக அனுபவங்களை, ஆதாரமான தகவலை, அல்லது விளக்க வரைபடங்களை உட்படுத்தியிருக்கலாம்.
ஒரு வேலையைத் தாமதமாகச் செய்வதால் வரும் மற்றொரு விளைவு என்னவென்றால், ஓய்வுநேரம் கிடைக்கும்போது ஓய்வெடுக்க முடியாமல் இருப்பதாகும். ஏனென்றால், நாம் ஒரு வேலையைச் செய்யாமல் விட்டிருக்கிறோம் என்ற நச்சரிக்கும் உணர்வைக் கொண்டிருக்கிறோம் (அல்லது நச்சரிக்கும் ஒருவர் நம்மை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது).
நான் என்ன செய்யலாம்?
பட்டியலிடுங்கள். இதை முந்தின நாள் இரவு செய்யுங்கள். அடுத்த நாளில் நிறைவேற்ற விரும்பும் காரியங்களைக் காகிதத்தில் எழுதுங்கள். இவ்விதமாகச் செய்கையில், ஏதோவொன்றை மறந்துவிட மாட்டீர்கள், மேலும் முடித்த காரியங்களை குறியிட்டு வைப்பதன்மூலம் உங்கள் முன்னேற்றத்தை நீங்கள் பார்ப்பீர்கள். ஒவ்வொரு காரியத்திற்கு வலது பக்கத்திலும், ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கு எவ்வளவு நேரமெடுக்கும் என்று நீங்கள் கணக்கிடுகிறீர்கள் என்பதை எழுதுங்கள். அந்த நாளில் ‘செய்யவேண்டியவை’ என்ற பட்டியலை நீங்கள் தயாரிக்கிறீர்கள் என்றால், நிமிடக் கணக்குகளை எழுதுங்கள். வேலைத் திட்டப் பட்டியலைத் தயாரிக்கிறீர்கள் என்றால், மணிநேரங்களைக் குறிப்பிடுங்கள். இந்தப் பட்டியலை முந்தின நாள் இரவில் தயாரித்துவிடுங்கள். அடுத்த நாளுக்கான பட்டியலைத் தயாரிப்பதற்கு ஒருசில நிமிடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மாதாந்தர நாட்காட்டி ஒன்றைப் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வேலைகளையும் சந்திப்புத்திட்டங்களையும் ஏற்றுக்கொண்டவுடன் அவற்றை எழுதி வையுங்கள்.
அடுத்த நாளுக்குரிய வேலைகளை நீங்கள் சீர்தூக்கி பார்க்கும்போது, உங்கள் நாட்காட்டியிலுள்ள காரியங்களை நிறைவேற்ற வேண்டிய வரிசையில் அ, ஆ, இ, என்று முன்னுரிமைப்படுத்துங்கள். சிலர் காலையிலும், மற்றவர்கள் மதியம் அல்லது மாலையில் நன்கு வேலை செய்கிறார்கள். நீங்கள் திறம்பட்ட விதத்தில் வேலை செய்யும் நேரத்திற்கென உங்கள் பெரிய வேலைத் திட்டங்களை வையுங்கள். அனுபவித்துச் செய்யக்கூடிய வேலைகளுக்கு முன்னால் அவ்வளவு அனுபவிக்கக்கூடாத வேலைகளை வையுங்கள்.
நேரத்தைக் கணக்கிடுங்கள். நீங்கள் எப்போதுமே தாமதமாக சென்றுகொண்டிருந்தால், தாமதமாக இருப்பதால் சொல்லர்த்தமாகவே ஓடிக்கொண்டிருந்தால், நேரத்தைக் கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள். அதாவது, ஒரு வேலையைச் செய்வதற்கு எவ்வளவு நேரமெடுக்கும் என்று திருத்தமாகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். நேரிடக்கூடிய “எதிர்பாராத சம்பவங்களுக்காக” ஒருசில நிமிடங்களைக் கூட்டுங்கள். வெவ்வேறு சந்திப்புகளுக்கு இடையில் நேரத்தை அனுமதிக்க மறந்துவிடாதீர்கள். பயண நேரத்தை நீங்கள் கூட்ட வேண்டும். ஒரு கூட்டத்தை காலை 10:00 மணிக்கு முடித்துவிட்டு, மற்றொன்றில் காலை 10:00 மணிக்கு கலந்துகொள்ள முடியாது; அது ஒரே அறையில் இருந்தால்கூட முடியாது என்ற பட்சத்தில் நகரத்தின் வேறு பகுதியில் இருந்தால் முடியவே முடியாது. இடையில் போதுமான நேரத்தை அனுமதியுங்கள்.
பகிர்ந்தளியுங்கள். நாமே எப்போதும் எல்லாவற்றையும் செய்யத் தேவையில்லை என்றாலும், நாம் அடிக்கடி நாமாகவே எல்லாவற்றையும் செய்ய முயலுகிறோம். மற்றொரு நபர் அஞ்சல் அலுவலகத்திற்குப் போகிறார் என்று அறிந்தால் அவர் நமக்காக ஒரு பொதியை அங்கு எடுத்துச்செல்லக்கூடும்.
பிரித்துக்கொள்ளுங்கள். சிலநேரங்களில் ஒரு புதிய வேலைத் திட்டத்தின் அளவின் காரணமாக அதை நாம் ஆரம்பிப்பதில்லை. பெரிய வேலையை ஏன் அதைவிட சிறியவையாகப் பிரித்துக்கொள்ளக் கூடாது? சிறிய வேலைகளை நாம் செய்து முடிக்கும்போது, நாம் நம்முடைய முன்னேற்றத்தைக் கண்டு, அடுத்த பகுதியைச் செய்து முடிக்க உற்சாகமடைவோம்.
திட்டமிடுங்கள். ஒரு வேலைநாளில் நமக்கு எப்போதும் இடையூறுகள்—தொலைபேசி அழைப்புகள், விருந்தினர், பிரச்சினைகள், தபால்—இருக்கின்றன. நாம் திறம்பட்டவர்களாக வேலைசெய்ய விரும்புகிறோம்; இது கெடு தேதிகளைக் கொண்டிருக்கும் மற்ற மக்களோடு வேலை செய்வதை உட்படுத்துகிறது. திறம்பட்டவர்களாக வேலை செய்வதைப்பற்றி மட்டுமே நாம் அக்கறையுள்ளவர்களாக இருந்தால், மற்றவர்கள் நம்முடைய நடவடிக்கைகளில் குறுக்கிடும்போது வருத்தமடைவோம். ஆகவே, இடையூறுகளுக்கு இடமளித்துத் திட்டமிடுங்கள். திட்டமிடப்படாத காரியங்களின் நிகழ்வுக்காக தினசரி நேரத்தை ஒதுக்குங்கள். அவை எழும்பும்போது, அவற்றிற்காக நீங்கள் சிறிது நேரத்தை ஒதுக்கியிருப்பதால், அவற்றையும் நீங்கள் கவனித்துக்கொள்ளலாம்.
பலனளியுங்கள். உங்கள் அட்டவணையைத் தயாரிக்கும்போது, சுமார் 90 நிமிடங்கள் உன்னிப்பாக அல்லது ஒருமுகப்பட்ட கவனத்துடன் செயல்படுவதற்குத் திட்டமிடுங்கள். வேலை தயாரிப்பிற்காக நேரத்தைத் திட்டமிட மறந்துவிடாதீர்கள். உண்மையில் வேலையை ஆரம்பித்து, ஒன்றரை மணிநேரங்களுக்கு நீங்கள் வேலை செய்த பிறகு, உங்களுக்கு ஒரு சிறிய இடைவேளை தேவைப்படக்கூடும். அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களென்றால், சற்று நிறுத்தி, நீட்டி நிமிர்ந்து, யோசித்துப் பாருங்கள். வெளியில் வேலை செய்கிறீர்களென்றால் ஏதாவது சிற்றுண்டியை உட்கொள்ளுங்கள். உங்கள் வேலைக்காக உங்களுக்குப் பலனளியுங்கள்.—பிரசங்கி 3:13.
தலைப்பை வாசித்து சுமார் ஐந்து நிமிடங்களில் இந்தக் கட்டுரையை வாசித்து முடித்துவிட்டீர்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முன்னேற்ற பாதையில் இருக்கக்கூடும்!