இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
“போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள்”
“1960-களில் இருந்து நான் செய்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய இத்தனை கால அனுபவத்தில் உலகம் முழுவதும் நடந்த 40-க்கும் அதிகமான போர்களைப் பற்றி நான் அறிக்கைகளைக் கொடுத்திருக்கிறேன். பனிப்போரின் உச்சத்தையும், அது திடீரென்று காணாமல் போனதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் 2025-ஐ போன்ற ஒரு பதட்டமான வருஷத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. அதற்கு காரணம், இந்த வருஷத்தில் நிறைய பெரிய போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது மட்டுமல்ல, இதில் ஏதோவொரு போர் இந்த உலகத்தின் அரசியல் நிலைமையை பெரியளவில் பாதிக்கப்போகிறது என்று தெளிவாக தெரிவதுதான்!”—ஜான் சிம்ப்சன், பிபிஸி வர்ல்ட் அஃபேர்ஸ் எடிட்டர். கவனிக்க வேண்டிய குறிப்பை தடித்த எழுத்துக்களில் காட்டியிருக்கிறோம்.
இந்த உலகத்தில் நடக்கிற போர்களைப் பற்றி மக்கள் ரொம்ப கவலைப்படுகிறார்கள். இதெல்லாம் என்றாவது சரியாகுமா என்று யோசிக்கிறார்கள். இதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்
இன்று நாம் பார்க்கும் நிலைமைகளைப் பற்றி இயேசு அன்றே சொன்னார். “போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள்” என்று இயேசு அவருடைய நண்பர்களை எச்சரித்தார்.—மத்தேயு 24:6.
இன்று போர்களையும் கலவரங்களையும் பார்த்து நமக்கு வேதனையாக இருந்தாலும், நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். ஏன்? ஏனென்றால், பெரியளவில் நடக்கும் போர்கள், அதோடு மற்ற சம்பவங்கள், நிலைமைகள், மக்கள் நடந்துகொள்ளும் விதம் போன்ற இவையெல்லாம் ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கான “அடையாளம்”’ என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 24:3; லூக்கா 21:7) சீக்கிரத்தில், ‘போர் என்றால் என்ன?!’ என்று நாம் கேட்கும் அளவுக்கு சமாதானமான ஒரு காலத்தை இயேசு கொண்டுவருவார். எப்படி?
இயேசு என்ன செய்யப்போகிறார்
கொஞ்ச காலத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக, இயேசு ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்.’—சங்கீதம் 46:9.
இந்த சமாதானமான எதிர்காலத்தைப் பற்றியும், அது எப்படி வரும், அதனால் உங்களுக்கு வேறென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள, “போர் வேரோடு அழிக்கப்படும்—எப்படி?” என்ற கட்டுரையைப் படியுங்கள்.