Photo by Stringer/Getty Images
விழிப்புடன் இருங்கள்!
மத்திய கிழக்கில் போர்—பைபிள் என்ன சொல்கிறது?
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்திருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவு காட்டுகிறது அமெரிக்கா. இந்த மோதலை உலகமே பதட்டத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை மிகப் பெரிய போராக உருவெடுக்குமா? அரசாங்கங்களால் அதைத் தடுக்க முடியுமா? நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவர முடியுமா?
பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘மத்திய கிழக்கில் நடக்கும் இந்தப் போர், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லியிருக்கும் அர்மகெதோன் போருக்கு ஆரம்பமாக இருக்குமோ?’
பைபிள் என்ன சொல்கிறது?
மத்திய கிழக்கில் நடக்கும் போரை அரசாங்கங்கள் முடிவுக்கு கொண்டுவருமா?
பைபிள் இப்படிச் சொல்கிறது: “அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.”—சங்கீதம் 146:3.
மத்திய கிழக்கில் அரசாங்கங்களால் ஓரளவு சமாதானத்தைக் கொண்டுவர முடியுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் ஒன்றை மட்டும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது: எந்த அரசியல் தலைவராலும் மனித அரசாங்கத்தாலும் அமைப்புகளாலும் போர்களுக்கு முடிவுகட்டவோ, நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரவோ முடியாது. கடவுளால் மட்டும்தான் ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்ட முடியும்.’—சங்கீதம் 46:9.
இன்னும் தெரிந்துகொள்ள, “போரில்லா பொற்காலம்—விரைவில்!“ என்ற காவற்கோபுர பத்திரிகையைப் படியுங்கள்.
மத்திய கிழக்கில் போர்—தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமா?
பைபிள் இப்படிச் சொல்கிறது: “போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். . . . ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்.“—மத்தேயு 24:6, 7.
மத்திய கிழக்கில் நடந்துவரும் இந்த மோதல், “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கு” இன்னொரு அடையாளமாக இருக்கிறது. அதாவது, நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. (மத்தேயு 24:3; 2 தீமோத்தேயு 3:1) இன்று நடக்கும் போர்களைப் பார்க்கும்போது, சீக்கிரத்தில் கடவுள் நடவடிக்கை எடுப்பார், போர்களுக்கு முடிவுகட்டுவார் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல, மனிதர்களுடைய மற்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்பதும் தெரிகிறது.
இன்னும் தெரிந்துகொள்ள, “‘கடைசி நாட்கள்’ அல்லது ‘கடைசிக் கட்டத்தின்’ அடையாளம் என்ன?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
அர்மகெதோன் போர் மத்திய கிழக்கில் ஆரம்பிக்குமா?
பைபிள் இப்படிச் சொல்கிறது: “எபிரெய மொழியில் அர்மகெதோன் என்று அழைக்கப்பட்ட இடத்தில் அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.”—வெளிப்படுத்துதல் 16:16.
அர்மகெதோன் என்பது மத்திய கிழக்கில் ஆரம்பிக்கிற... நாட்டுக்கு நாடு நடக்கும் போர் அல்ல. அது கடவுளுக்கும் உலகத்தில் இருக்கிற எல்லா அரசாங்கங்களுக்கும் இடையே நடக்கும் போர்.
இன்னும் தெரிந்துகொள்ள, “அர்மகெதோன் போர் என்றால் என்ன?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
பதட்டமான காலகட்டத்தை சமாளிக்க எது உதவும்?
பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்.”—பிலிப்பியர் 4:6.
யெகோவாa தன்னிடம் வேண்டிக்கொள்ளும்படி நம்மை அழைக்கிறார். கடவுள் நம்மேல் அக்கறையாக இருப்பதால் நம்முடைய வேண்டுதலைக் கேட்கிறார், கவலைகளைச் சமாளிக்க உதவுகிறார். (1 பேதுரு 5:7) அவர் நமக்கு உதவும் ஒரு வழி, போர்கள் நடப்பதற்கான காரணத்தையும் அதை எப்படி அவர் ஒழித்துக்கட்டப் போகிறார் என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறார். அதோடு, நம்முடைய கஷ்டங்களையெல்லாம் எப்படிச் சரிசெய்யப் போகிறார் என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறார்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
கடவுள் நமக்கு எப்படி உதவுகிறார் என்பதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள, “எனக்கு ஆறுதல் தருகிற வார்த்தைகள் பைபிளில் இருக்கிறதா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.