ஜூன் 29–ஜூலை 5, 2026
பாட்டு 131 ‘தேவன் இணைத்த பந்தம்’
உங்கள் வாழ்க்கை துணை வாழ்நாள் நண்பராக இருக்க...
“கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.”—நீதி. 18:24.
என்ன கற்றுக்கொள்வோம்?
கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், கணவனும் மனைவியும் நெருக்கமான நண்பர்களாக இருக்க வேண்டும், யெகோவாவை நேசிக்க வேண்டும்.
1. நல்ல நண்பர்கள் யெகோவா தரும் பரிசுகள் என்று ஏன் சொல்லலாம்?
நல்ல நண்பர்கள் யெகோவா தரும் பரிசுகள். (யாக். 1:17) அவர்கள் கடவுளையும் நம்மையும் நேசிக்கிறார்கள். நாம் சந்தோஷமாக இருக்கும்போது அவர்களும் நம்மோடு சேர்ந்து சந்தோஷப்படுகிறார்கள். நாம் சோகமாக இருக்கும்போது ஆறுதல் சொல்லி தூக்கிவிடுகிறார்கள். நமக்குத் தேவைப்படும் ஆலோசனைகளையும் தயங்காமல் கொடுக்கிறார்கள். எப்போதும் தோள் கொடுக்கும் தோழர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களை நாம் தாராளமாக நம்பலாம். இப்படிப்பட்ட நண்பர்கள் நம் “இதயத்துக்குச் சந்தோஷம்” தருகிறார்கள்.—நீதி. 27:9.
2. கணவனும் மனைவியும் அவர்களுடைய நட்பைப் பலப்படுத்திக்கொண்டே இருப்பது ஏன் முக்கியம்? (மத்தேயு 19:6)
2 ஒரு கணவனும் மனைவியும் உயிர் நண்பர்களாக இருப்பது ரொம்ப முக்கியம். அவர்களுக்குள் இருக்கும் நட்பை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. அந்த நட்பைப் பலமாக வைத்துக்கொள்ள அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், கல்யாண வாழ்க்கை வெறுத்துப் போகலாம், துணை இருந்தும் தனிமையில் வாடலாம், எதற்கு எடுத்தாலும் எரிந்து எரிந்து விழலாம். ஆனால், அந்த நட்பை அவர்கள் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருந்தால், இந்த உலகத்தில் வேறு யாருடனும் இல்லாத ஒரு நெருக்கமான பந்தத்தை அவர்கள் அனுபவிப்பார்கள். (மத்தேயு 19:6-ஐ வாசியுங்கள்.) இந்தக் கட்டுரையில், கணவனும் மனைவியும் அவர்களுடைய நட்பை எப்படிப் பலப்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்று பார்ப்போம். அதற்கு முன்பு, கல்யாணமாகாத சகோதர சகோதரிகள் அவர்களுடைய வாழ்க்கை துணையை, அதாவது வாழ்நாள் நண்பரை, எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று பார்க்கலாம்.
வாழ்க்கை துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
3-4. நல்ல வாழ்க்கை துணையைக் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்? (நீதிமொழிகள் 18:22)
3 ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன்பு அதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் எடுக்கும் முடிவால் என்னென்ன நன்மைகள் கிடைக்கலாம், என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெரிய முடிவு நம் வாழ்க்கையையே மாற்றிவிடலாம். அதனால், ரொம்பக் கவனமாக யோசித்து முடிவெடுப்பது முக்கியம்.
4 வாழ்க்கை துணையை, அதாவது காலத்துக்கும் பிரியாத நண்பரைத் தேர்ந்தெடுப்பது நம் வாழ்க்கையிலேயே எடுக்கும் ரொம்ப முக்கியமான முடிவு. அதனால், சரியான வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க, திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவாவிடம் உதவி கேட்பதுதான் சரியாக இருக்கும். நமக்கு எது நல்லது என்று யெகோவாவுக்குத்தான் நன்றாகத் தெரியும். ஒரு ஆண் நல்ல மனைவியையும், ஒரு பெண் நல்ல கணவரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (நீதிமொழிகள் 18:22-ஐ வாசியுங்கள்; ஏசா. 48:17, 18) பொருத்தமான வாழ்க்கை துணையைக் கண்டுபிடிக்க கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் நியமங்கள் நமக்கு உதவும்.
5. ஞானஸ்நானம் எடுத்த ஒருவரைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
5 நாம் ஞானஸ்நானம் எடுத்தபோது கடவுளுடைய நண்பராக ஆனோம். (சங். 25:14) நீங்கள் யெகோவாவின் நண்பராக இருப்பதால், அவருடைய நண்பராக இருக்கும் ஒருவரையே வாழ்க்கை துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். (1 கொ. 7:39) இப்படிச் செய்தால் நீங்கள் யெகோவாவை மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுவீர்கள், உங்கள் துணையை யெகோவா கொடுத்த பரிசாகப் பார்ப்பீர்கள். (நீதி. 19:14) அதோடு, உங்களுக்குப் பொருத்தமில்லாத... யெகோவாவை நேசிக்காத... ஒருவரைக் கல்யாணம் செய்வதால் வரும் பிரச்சினைகளையும் தவிர்ப்பீர்கள். (2 கொ. 6:14, அடிக்குறிப்பு.) ஒருவேளை, யெகோவாவின் சாட்சிகளுக்குள் பொருத்தமான ஒரு துணையைக் கண்டுபிடிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதற்காக, யெகோவாவை வணங்காத ஒருவரைக் காதலிக்கலாம் என்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். அவர் என்றாவது ஒருநாள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார் என்று நினைத்து அவரைக் காதலிப்பது ஞானமாக இருக்காது.
6-7. டேட்டிங் செய்யும்போது என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
6 ஒருவர் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார் என்பதற்காக மட்டுமே அவர் உங்களுக்குப் பொருத்தமான துணையாக ஆகிவிட மாட்டார். உங்களுக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால், உங்களையே இந்தக் கேள்விகளைa கேட்டுக்கொள்வது ரொம்ப முக்கியம்: ‘தன் குடும்பத்தில் இருக்கிறவர்களிடம் அவர் எப்படி நடந்துகொள்கிறார்? அவர் அக்கறையுள்ளவரா, மரியாதையாக நடந்துகொள்கிறவரா? அவருடைய நண்பர்கள் யார்? அவருக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசமான கருத்துகள் இருக்கும்போது அவர் எப்படி நடந்துகொள்கிறார்? தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று இருக்கிறாரா? அல்லது, பைபிள் நியமங்களுக்கு எதிராக இல்லாதவரைக்கும், மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்கிறாரா? பணம் அவருக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறதா?’
7 அதோடு இந்தக் கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அவருக்கு யெகோவாமேல் ஆழமான அன்பு இருக்கிறதா? யெகோவா மாதிரியே நடந்துகொள்வதற்குக் கடினமாக முயற்சி செய்கிறாரா? யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய எனக்கு உதவி செய்வாரா? யெகோவாவின் சேவையில் எங்களுக்கு ஒரே மாதிரி குறிக்கோள்கள் இருக்கிறதா? நாங்கள் வெறுமனே நல்ல நண்பர்களாக இல்லாமல் உயிருக்கு உயிரான நண்பர்களாக ஆவோமா?’ (கொலோ. 3:9, 10) நீங்கள் ஒரு சகோதரியாக இருந்தால், நீங்கள் விரும்பும் அந்தச் சகோதரர் உங்களுக்கு ஒரு நல்ல நண்பராக, நல்ல குடும்பத் தலைவராக இருப்பாரா என்று யோசித்துப் பாருங்கள். (1 கொ. 11:3) நீங்கள் ஒரு சகோதரராக இருந்தால், நீங்கள் விரும்பும் அந்தச் சகோதரி உங்களுடைய அதிகாரத்துக்கு மதிப்பு கொடுப்பாரா, நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுப்பாரா என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் உங்கள் குறைகளைப் பற்றித் தெரிந்தும் அப்படி நடந்துகொள்வாரா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள நேரம் எடுக்கும்தான். அதனால், நீங்கள் கல்யாணம் செய்ய நினைக்கிறவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள தேவையான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
8-9. டேட்டிங் செய்கிறவர்கள் நல்ல முடிவு எடுக்க எது உதவும்? (படத்தையும் பாருங்கள்.)
8 நீங்கள் டேட்டிங் செய்யும் நபரைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். அவர் எப்படிப்பட்ட பெயர் எடுத்திருக்கிறார், அவருக்கு என்னென்ன குணங்கள் இருக்கின்றன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, அவர் மனத்தாழ்மையானவரா, அன்பானவரா, நியாயமானவரா என்று தெரிந்துகொள்ளுங்கள். இப்படி, அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொண்டால் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும். பிரெஞ்சு கயானாவில் இருக்கும் சாரா என்ற சகோதரி, டேனியல் என்ற சகோதரரைக் கல்யாணம் செய்துகொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “டேனியலைப் பற்றி நான் நிறைய பேரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவருடைய ‘ரூம்-மேட்டாக’ இருந்த, அவருடன் சேர்ந்து பயனியர் செய்த சகோதரரிடமும், எங்கள் இரண்டு பேருக்கும் தெரிந்த நண்பர்களிடமும் கேட்டேன். அதோடு, டேனியலின் சபையில் இருந்த சில சகோதரிகளிடமும் ஒரு மூப்பரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.” அதுமட்டுமல்ல, சில விஷயங்களை நீங்கள் டேட்டிங் செய்கிறவரிடமே கேட்டு தெரிந்துகொள்வதும் முக்கியம். அவருடைய வாழ்க்கையில் நடந்த, அல்லது நடந்துகொண்டிருக்கிற எதையாவது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறதா என்று அன்போடு கேளுங்கள். ஏனென்றால், சில விஷயங்களும் பழக்கவழக்கங்களும் பிற்பாடு உங்கள் கல்யாண வாழ்க்கையை ரொம்பப் பாதிக்கலாம்.
9 ஒருவேளை, அந்த நபர் உண்மையிலேயே ஒரு நல்ல துணையாக இருப்பாரா என்ற சந்தேகம் உங்கள் மனதைக் குடைந்துகொண்டே இருந்தாலோ, அந்த நபரிடம் கவனித்த சில குறைகளைப் பற்றி முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகள் உங்களிடம் வெளிப்படையாகச் சொன்னாலோ, அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடாதீர்கள். அப்போதுதான், அந்த நபரைத் தொடர்ந்து டேட்டிங் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற ஞானமான முடிவை உங்களால் எடுக்க முடியும்.b அடுத்ததாக, கல்யாணம் ஆனவர்களைப் பற்றிப் பார்க்கலாம். தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் நட்பைப் பலப்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
டேட்டிங் செய்யும்போது, நீங்கள் விரும்பும் அந்த நபர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளுங்கள் (பாராக்கள் 8-9)
சேர்ந்து நேரம் செலவு செய்யுங்கள்
10. கணவனும் மனைவியும் சேர்ந்து நேரம் செலவு செய்வது ஏன் முக்கியம்?
10 கணவனும் மனைவியும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, சேர்ந்து நேரம் செலவு செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் நட்பு பலமாகும், கல்யாண வாழ்க்கை இனிக்கும். சேர்ந்து நேரம் செலவு செய்தால், ஒவ்வொரு நாளும் நடக்கிற விஷயங்களைப் பற்றிப் பேச முடியும், அவர்களுடைய ஆழ்மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியும். அதோடு, ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட முடியும், சேர்ந்து சந்தோஷமாக நிறைய விஷயங்களைச் செய்யவும் முடியும்.
11. கணவன் மனைவிக்குள் இருக்கும் நட்பை எது கெடுத்துவிடலாம்?
11 உயிர் நண்பர்களாக இருக்கும் கணவனும் மனைவியும் வேறு வேறு இடங்களில் இருக்க ஆசைப்பட மாட்டார்கள். உண்மைதான், சிலசமயங்களில் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலைகள் வரலாம். ஆனால், ரொம்ப நாட்கள் பிரிந்திருப்பது ஆபத்தானது. உதாரணத்துக்கு, சிலர் வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்வதால் ரொம்ப நாட்களுக்குக் குடும்பத்தைப் பிரிந்து இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால், ரொம்ப நாட்கள் இப்படிப் பிரிந்திருப்பது அவர்களுடைய கல்யாண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளைக் கொண்டுவரலாம்.
12-13. (அ) சேர்ந்து நேரம் செலவு செய்வதற்கு சில தம்பதிகள் என்ன செய்திருக்கிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) உங்கள் துணை உங்களுடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு முக்கியம்? (“என் துணை எனக்கு எந்தளவு முக்கியம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
12 சேர்ந்து நேரம் செலவு செய்வதற்குச் சில தம்பதிகள் என்ன செய்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம். குவாம் என்ற இடத்தில் இருக்கும் லியா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “எனக்கும் என் கணவருக்கும் நிறைய விஷயங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்வது ரொம்பப் பிடிக்கும். நண்பர்களோடு நேரம் செலவு செய்வது, சுற்றிப் பார்க்கப் போவது, இந்த மாதிரி விஷயங்களையும் சேர்ந்துதான் செய்வோம்.” அமெரிக்காவில் இருக்கும் ராக்சேன் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. பொதுவாக, முக்கியமான விஷயங்களைத் திட்டம் போட்டுத்தான் செய்வோம். அதேமாதிரி, நாங்கள் சேர்ந்து செலவு செய்யும் நேரத்தையும் முன்கூட்டியே திட்டம் போடுகிறோம்.” (ஆமோஸ் 3:3-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) பிரான்சில் இருக்கும் டேமியன் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “என் மனைவிக்கு என்ன பிடிக்கும் என்று நானும், எனக்கு என்ன பிடிக்கும் என்று என் மனைவியும் தெரிந்துகொண்டோம். அதை விரும்பி செய்யப் பழகிக்கொண்டோம்.” (மத். 7:12) அமெரிக்காவில் இருக்கும் கேட்டி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “சிலசமயம் நாங்கள் ஃபோனை ஓரமாக வைத்து விடுவோம். அதனால், எந்தத் தொந்தரவும் இல்லாமல் எங்களால் சேர்ந்து நேரம் செலவு செய்ய முடிகிறது.”
13 ரொம்ப முக்கியமாக, யெகோவாவுக்காகச் செய்யும் விஷயங்களைச் சேர்ந்து செய்யுங்கள். பிரான்சில் இருக்கும் மிரியாம் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “தினமும் காலையில் முதல் வேலையாக பைபிள் படிப்போம். பிறகு, அதில் எங்களுக்கு எது பிடித்திருக்கிறது, எதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆசைப்படுகிறோம் என்று பேசுவோம். அந்த நேரத்துக்காக நான் ஆசையாகக் காத்திருப்பேன். சேர்ந்து ஜெபம் செய்வதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் கணவருக்கு யெகோவாமேல் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அவர் செய்யும் ஜெபங்களிலிருந்து தெரிந்துகொள்கிறேன்.” போன பாராவில் பார்த்த கேட்டி இப்படிச் சொல்கிறார்: “சேர்ந்து செய்வதிலேயே எங்களுக்கு ரொம்பப் பிடித்தது ஊழியம்தான். யெகோவாவைப் பற்றி என் கணவர் பேசுவதை நானும், நான் பேசுவதை என் கணவரும் கேட்கும்போது எங்களுக்குள் இருக்கும் நட்பு இன்னும் அதிகமாகிறது, ஒருவரிடமிருந்து ஒருவர் புதுப்புது விஷயங்களையும் கற்றுக்கொள்கிறோம்.”—நீதி. 27:17.
நீங்கள் தவறாமல் சேர்ந்து நேரம் செலவு செய்தால் உங்கள் கல்யாண வாழ்க்கை உறுதியாக இருக்கும் (பாராக்கள் 12-13)
பிரச்சினைகள் உங்களைப் பிரிக்காமல் இருக்க...
14-15. கல்யாண வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை ஒரு கணவனும் மனைவியும் ஏன் சரிசெய்ய வேண்டும்? உதாரணம் கொடுங்கள்.
14 கணவனும் மனைவியும் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் கல்யாண வாழ்க்கையில் கண்டிப்பாகப் பிரச்சினைகள் வரும். “திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்ற எதார்த்தத்தை பைபிள் சொல்கிறது. (1 கொ. 7:28) இந்த வசனத்துக்கான ஆராய்ச்சிக் குறிப்பு இப்படிச் சொல்கிறது: “கல்யாணம் ஆனவர்களுக்குப் பொதுவாக வருகிற பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் பற்றிதான் இங்கே சொல்லியிருக்கிறது.” ரொம்ப நெருக்கமான தம்பதிகளுக்குக்கூட பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் வரும். இந்த மாதிரி பிரச்சினைகள் வரும்போது, அதை சரிசெய்துகொண்டு தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருக்க கணவனும் மனைவியும் சேர்ந்து உழைக்க வேண்டும். ஏன்?
15 ஒரு உதாரணத்தைக் கவனிக்கலாம். ஒரு பிரபலமான கட்டடமோ ஒரு விலைமதிப்புள்ள பொருளோ சேதமடைந்துவிட்டால், அதன் சொந்தக்காரர் அதைச் சரிசெய்யத்தான் நினைப்பார். அதற்காக நிறைய பணமும் நேரமும் செலவு செய்வார். அதைச் சரிசெய்வதற்குப் பல வருஷங்கள் எடுத்தாலும் அதைச் சரிசெய்யாமல் விடமாட்டார். ஏனென்றால், அந்தக் கட்டடமோ பொருளோ ஒரு பொக்கிஷம். அதேமாதிரி எல்லா திருமணமும் பொக்கிஷம்தான். சேதமடைந்த கட்டடத்தையோ பொருளையோ எப்படிச் சரிசெய்ய முடியுமோ, அதேமாதிரி பிரச்சினைகள் நிறைந்த கல்யாண வாழ்க்கையையும் சரிசெய்ய முடியும். அதற்கு நிறைய நேரமும் முயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். இப்படி முயற்சி எடுத்து, தம்பதிகள் அவர்களுக்குள் இருக்கும் நட்பைப் பலப்படுத்தும்போதும், பிரிந்து போகாமல் இருக்க கடினமாக உழைக்கும்போதும் யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுவார். (மல். 2:16) அதோடு, பிரச்சினைகளைச் சரிசெய்யும்போது கணவனும் மனைவியும் ஒருவர்மேல் ஒருவர் அன்பும் மரியாதையும் வைத்திருப்பதைக் காட்ட முடியும். அதைவிட முக்கியமாக, திருமணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவாமேல் அன்பும் மரியாதையும் இருப்பதைக் காட்ட முடியும்.
16. கல்யாண வாழ்க்கையில் பெரிய பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கும் தம்பதிகள் என்ன செய்யலாம்? (1 கொரிந்தியர் 13:4-8அ) (படத்தையும், “காலத்துக்கும் பிரியாத நட்பை உருவாக்க...” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
16 உங்கள் கல்யாண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று உடனே பிரிந்து போக நினைக்காதீர்கள். (1 கொ. 7:10, 11) அதற்குப் பதிலாக, ‘எங்களுக்குள் இருக்கும் நட்பைப் பலப்படுத்த நான் வேறு ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அன்பு காட்டுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று படித்துப் பாருங்கள். 1 கொரிந்தியர் 13:4-8அ-ல் இருக்கும் விஷயங்களில் நீங்கள் இன்னும் ஏதாவது முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறதா என்று நியாயமாக யோசித்துப் பாருங்கள். (வாசியுங்கள்.) கல்யாண வாழ்க்கையை விட்டு வெளியே போக நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, உங்களுடைய துணையின் மனதில் மறுபடியும் இடம்பிடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் நட்பைச் சரிசெய்ய, உங்கள் துணை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்காமல் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்யுங்கள். அமைப்பு கொடுத்திருக்கும் பிரசுரங்களும் வீடியோக்களும் உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். அதோடு, மூப்பர்களிடமும் முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளிடமும் உதவி கேளுங்கள். முக்கியமாக, யெகோவாவை நீங்கள் நம்பியிருந்தால் உங்கள் கல்யாண வாழ்க்கை ‘அறுந்து போகாது.’ ஏனென்றால், ‘மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றின்’ மூன்றாவது இழையாகவும் ரொம்ப உறுதியான இழையாகவும் இருப்பது யெகோவாதான். —பிர. 4:12.
பிரச்சினைகள் வரும்போதும் இணைபிரியாத நண்பர்களாக இருங்கள் (பாரா 16)
17. கல்யாணம் செய்ய நினைக்கிறவர்களும், கல்யாணம் ஆனவர்களும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
17 யெகோவா தன்னுடைய ஊழியர்கள் எல்லாருமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நீங்கள் கல்யாணம் ஆகாதவரா? கல்யாணம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியென்றால், காலம் முழுவதும் உங்களோடு வாழப்போகும் அந்த நண்பரை ரொம்பக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் கல்யாணம் ஆனவரா? அப்படியென்றால், உங்கள் துணையோடு இருக்கும் நட்பைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொண்டே இருங்கள். யெகோவா கொடுக்கும் உதவியை ஏற்றுக்கொண்டு உங்கள் கல்யாண வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைச் சரிசெய்யுங்கள். இப்படிச் செய்தால், உங்கள் உயிருக்கு உயிரான துணையோடு ‘வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்!’ —பிர. 9:9.
பாட்டு 132 என் உயிர் நீ!
a பின்வரும் கேள்விகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.
b ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ள உதவும் சில டிப்ஸ், மே 2024 காவற்கோபுர பத்திரிகையில் வந்த “திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு உதவி” என்ற கட்டுரையில், “ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்” என்ற உபதலைப்பில் இருக்கிறது.