படிக்க டிப்ஸ்
பைபிளில் இருக்கும் சொல்லோவியங்களைப் புரிந்துகொள்ளுங்கள்
பைபிளில் நூற்றுக்கணக்கான சொல்லோவியங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை புரிந்துகொள்வது நிறைய பேருக்கு கஷ்டமாக இருக்கிறது. (மத். 13:13) பைபிளில் இருக்கும் சொல்லோவியங்களின் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள என்ன செய்யலாம்? இப்படிச் செய்துபாருங்கள்:
எது முக்கிய விஷயம், அது எதோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். சொல்ல வரும் முக்கிய விஷயத்தை ஒரு உதாரணத்தோடு ஒப்பிட்டுச் சொல்வதுதான் சொல்லோவியங்கள். உதாரணமாக, வெளிப்படுத்துதல் 3:3-ல், இயேசுவின் வருகையை (முக்கிய விஷயம்) திருடன் வருவதோடு (உதாரணம்) ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமையைக் கண்டுபிடியுங்கள். எந்தெந்த விதங்களில் முக்கிய விஷயமும் உதாரணமும் ஒத்துப்போகிறது என்று பாருங்கள்.
சரியான அர்த்தத்தைக் கண்டுபிடியுங்கள். சிலசமயத்தில், இந்தச் சொல்லோவியங்களின் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. மேலே பார்த்த உதாரணத்தில், இயேசு எதையோ திருட வருகிறார் என்று அர்த்தம் இல்லை. அதற்குப் பதிலாக, அவருடைய வருகை, திருடன் வருவதுபோல் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று இருக்கும் என்பதுதான் அர்த்தம்.