ஜூன் 8-14, 2026
பாட்டு 8 நம் தஞ்சம் யெகோவா
‘சத்தியத்தின் கடவுள்’ சொன்னதை செய்து முடிப்பார்!
“யெகோவாவே, சத்தியத்தின் கடவுளே, நீங்கள் என்னை விடுவித்திருக்கிறீர்கள்.”—சங். 31:5.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவா சொன்னதையெல்லாம் செய்து முடிப்பார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம், அவருடைய அரசாங்கம் எப்படி சாத்தான் பரப்பியிருக்கிற பொய்களுக்கு முடிவுகட்டும் என்று கற்றுக்கொள்வோம்.
1. சங்கீதம் 31:2-5 சொல்வதுபோல், நாம் ஏன் யெகோவாவை நம்பலாம்?
சாத்தானுடைய இந்த உலகத்தில் பொய் சொல்வது, ஏமாற்றுவது, துரோகம் செய்வது, இவையெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கின்றன. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப முடிவதில்லை. வியாபாரம் செய்கிற நிறையப் பேர் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். விளம்பரம் செய்கிறவர்கள், பொருள்களை விற்பதற்காக நிறையப் பொய்களைச் சொல்கிறார்கள். சிலசமயம், நெருங்கிய நண்பர்களே துரோகம் செய்துவிடுகிறார்கள். ஆனால், யெகோவா அப்படியெல்லாம் இல்லை. அவரை நாம் தாராளமாக நம்பலாம். ஏனென்றால், அவர் ‘சத்தியத்தின் கடவுள்.’ (சங்கீதம் 31:2-5-ஐ வாசியுங்கள்.) இதைத் தெரிந்துகொள்வது நமக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது, இல்லையா! யெகோவா என்றுமே பொய் சொல்ல மாட்டார். அவர் எப்போதுமே உண்மையைத்தான் பேசுவார். அதனால், யெகோவா சொன்னதையெல்லாம் கண்டிப்பாக செய்து முடிப்பார் என்று நாம் முழுமையாக நம்பலாம்.
2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
2 இந்தக் கட்டுரையில், யெகோவாவை நாம் ஏன் முழுமையாக நம்பலாம் என்பதற்குச் சில காரணங்களைப் பார்ப்போம். பிறகு, சத்தியத்தின் கடவுள் எப்படி சாத்தானுடைய இந்த மோசமான உலகத்துக்கு முடிவுகட்டுவார் என்று பார்ப்போம். யெகோவா அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றும் பார்ப்போம். இதையெல்லாம் தெரிந்துகொள்ளும்போது சத்தியத்தின் கடவுளைப் பற்றிய உண்மைகளை இன்னும் தைரியமாக மக்களுக்குச் சொல்வோம்.
நாம் ஏன் சத்தியத்தின் கடவுளை நம்பலாம்
3. நாம் ஏன் யெகோவாவை முழுமையாக நம்பலாம்?
3 யெகோவா நம் படைப்பாளராக இருப்பதால் அவரை நம்பலாம். அவர்தான் இந்த வானத்தையும் பூமியையும் படைத்திருக்கிறார். நம் எல்லாருக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். (ஆதி. 1:1; சங். 36:9; வெளி. 4:11) அதோடு, தொடர்ந்து உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றையும் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, காற்று, தண்ணீர் இவையெல்லாம் எப்போதும் கிடைப்பதுபோல் செய்திருக்கிறார். இந்த முழு பிரபஞ்சமும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, இனியும் இருக்கப்போகிறது. அதனால், நம் படைப்பாளரான யெகோவாவால் நம்மைச் சரியான விதத்தில் வழிநடத்த முடியும், நமக்கு நல்ல எதிர்காலத்தைத் தர முடியும் என்று முழுமையாக நம்பலாம். அவரைவிட ஞானமுள்ள, சக்தியுள்ள ஒருவர் இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாது.
4. யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?
4 யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருப்பதால் அவரை நம்பலாம். மனிதர்கள் தன்னைப் போலவே உயிர் வாழ்ந்து வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் யெகோவா அவர்களைப் படைத்தார். உயிர் என்ற அருமையான பரிசைக் கொடுத்தார். “மனிதனை நம்முடைய சாயலில் நம்மைப் போலவே உண்டாக்கலாம்” என்று அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்து அவருடைய விருப்பம் என்னவென்று நமக்குத் தெரிகிறது. (ஆதி. 1:26) சொந்தமாக முடிவு எடுக்கிற திறமையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். பூமி என்ற அழகான வீட்டை நமக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 115:16) அதுமட்டுமல்ல, நம் முதல் பெற்றோருக்கு இந்த முழு பூமியையும் பூஞ்சோலையாக மாற்றுகிற அருமையான வேலையையும் கொடுத்தார். (ஆதி. 1:28; 2:15) அதோடு, இந்த பூமியில் இருக்கிற செடிகொடிகள், மரங்கள், மிருகங்கள், எக்கச்சக்கமான உணவு என எல்லாவற்றையும் அவர்களுக்காகவே கொடுத்தார். இதிலிருந்து யெகோவாவுக்கு நம்மேல் ரொம்ப அன்பு இருக்கிறது, அவருடைய மாறாத அன்பு “என்றென்றுமே இருக்கும்” என்று புரிகிறது.—சங். 103:17.
5. (அ) ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தாலும், யெகோவா அவருடைய நோக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) யெகோவா சொன்ன என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேறியிருக்கின்றன? (“யெகோவா சொன்னதை செய்து முடிப்பவர்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
5 யெகோவா ஒருநாளும் சொன்னதை செய்யாமல் போனதே இல்லை; அதனால் அவரை நம்பலாம். யெகோவா இந்தப் பூமியை “காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.” (ஏசா. 45:18, 19) ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தபோது அவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது. அதனால், பூமிக்கும் மனிதர்களுக்குமான கடவுளுடைய நோக்கத்தை சாத்தான் தடுத்து நிறுத்தியதுபோல் தோன்றலாம். ஆனால், யெகோவாவை யாராலும் எதாலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர் சொன்னதை செய்து முடிப்பவர். (ஏசா. 46:10, 11) இந்தப் பூமியை நல்ல மனிதர்களால் நிரப்ப வேண்டும் என்ற அவருடைய நோக்கம் மாறவே இல்லை. அதனால்தான், ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கு யெகோவா அனுமதித்தார். ஆதாமுடைய வம்சத்தில் வந்தவர்களை மீட்பதற்கும், அவர்களுக்கு என்றென்றும் வாழும் நம்பிக்கையைக் கொடுப்பதற்கும் தன்னுடைய ஒரே மகனை மீட்புவிலையாகக் கொடுத்தார்.—யோவா. 3:16.
சத்தியத்தின் கடவுள் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்
6. ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தபோது யெகோவா என்ன சொன்னார்?
6 ஆதாமையும் ஏவாளையும் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்ய தூண்டியது ‘பழைய பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன்.’a (வெளி. 12:9; ஆதி. 3:4, 5; யோவா. 8:44) சாத்தான் இப்படிச் செய்ததால் யெகோவா அவனுக்கு மரண தண்டனையைக் கொடுத்தார், அவனை அழிக்கப்போவதாகச் சொன்னார். (ஆதி. 3:15) ஆனால், இது நடப்பதற்கு முன்பு நிறைய மக்கள் சாத்தானைப் பின்பற்றி அவனைப் போலவே நடந்துகொள்வார்கள். அதேநேரம், யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும் சிலரும் நிச்சயம் இருப்பார்கள்.
7. யாரெல்லாம் சாத்தானைப் பின்பற்றுகிறார்கள், அவர்களுக்கு என்ன நடக்கும்?
7 கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்த தேவதூதர்களும் கடவுளுக்குக் கீழ்ப்படியாத மனிதர்களும் சாத்தானைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் யெகோவாவை எதிர்ப்பதால் சாத்தானுடைய சந்ததியாக ஆகிவிடுகிறார்கள். குறித்த நேரத்தில் சாத்தானையும் அவனைப் பின்பற்றுகிற எல்லாரையும் கடவுள் அழிப்பார்.—தானி. 2:44; ரோ. 16:20.
8. 1914-ல் இயேசு என்ன செய்தார்? (படங்களையும் பாருங்கள்.)
8 சாத்தானையும் அவனைப் பின்பற்றுகிறவர்களையும் அழிக்கப்போவதாக யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதி, கண்டிப்பாக நிறைவேறும் என்று எப்படி உறுதியாக நம்பலாம்? 1914-ல் சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் எதிராக இயேசு போர் செய்தார். அவர்களைப் பரலோகத்தில் இருந்து பூமிக்குத் தள்ளினார். (வெளி. 12:7-9) இந்தப் போர் பரலோகத்தில் நடந்தாலும் அதன் பாதிப்புகள் பூமியில் இருந்தது. “பூமிக்கும் கடலுக்கும் ஐயோ, கேடு! ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 12:12) 1914-ல் இருந்து, சாத்தானுடைய முழு கவனமும் இந்தப் பூமியின் மேல்தான் இருக்கிறது. அதனால்தான், பூமியில் நிலைமைகள் படுமோசமாக இருக்கின்றன. உண்மையிலேயே ‘பூமிக்கு ஐயோ, கேடுதான்!’ ஆனால் சீக்கிரத்தில், இயேசு ‘ஜெயித்து முடிப்பார்.’ (வெளி. 6:2) சாத்தானை அதலபாதாளத்தில் தள்ளுவார். அவன் பக்கம் இருக்கும் மனிதர்களை அழிப்பார். யெகோவாவைப் பற்றி சாத்தான் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபித்து யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார். (சங். 45:4-6) அப்போது, யெகோவாதான் சத்தியத்தின் கடவுள் என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள்!—எசே. 38:23.
World War I: U.S. National Archives photo; bomb: USAF photo; pandemic: blvdone/stock.adobe.com; riot: inhauscreative/E+ via Getty Images
1914-ல் இருந்து உலக நிலைமைகள் படுமோசமாக ஆகியிருக்கின்றன (பாரா 8)
சத்தியத்தின் கடவுள் சத்தியத்தை நேசிக்கிறவர்களைக் கூட்டிச்சேர்க்கிறார்
9. யெகோவா இன்று யாரையெல்லாம் கூட்டிச்சேர்க்கிறார்?
9 இப்போது யெகோவா, ‘பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் மறுபடியும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கிறார்.’ (எபே. 1:10) “பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும்” என்பது பரலோகத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்ய யெகோவா தேர்ந்தெடுத்த பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் குறிக்கிறது. “பூமியில் இருக்கிற எல்லாவற்றையும்” என்பது பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழப்போகிறவர்களைக் குறிக்கிறது. இவர்கள் எல்லாரும் சுறுசுறுப்பாக யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். சாத்தான் சொல்லியிருப்பதெல்லாம் பொய் என்று நிரூபிக்கிறார்கள்.
10. உண்மைகளைப் புரிந்துகொள்ள யெகோவா மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார்? (வெளிப்படுத்துதல் 14:6, 7)
10 சரித்திரத்தில் இதுவரை நடக்காத ஒரு பிரம்மாண்டமான ஊழிய வேலை உலகம் முழுவதும் நடந்துகொண்டு இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐ வாசியுங்கள்.) அதைப் பயன்படுத்தி சத்தியத்தை நேசிக்கும் ஆட்களை யெகோவா கூட்டிச்சேர்க்கிறார். மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தினாலும், நல்ல மனதுள்ளவர்களைச் சபைக்குள் கூட்டிச்சேர்ப்பதில் தேவதூதர்களுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்த ஊழிய வேலை ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குப் புரிய வைக்கிறது. பொய் மதங்களைப் பயன்படுத்தி, சாத்தான் யெகோவாவைப் பற்றிய பொய்களைப் பரப்புகிறான் என்பதை மக்களுக்குப் புரிய வைக்கிறது. (வெளி. 18:2, 4) சீக்கிரத்தில், எல்லா பொய் மதங்களும் அடியோடு அழிக்கப்படும். (வெளி. 17:16) சத்தியத்தின் கடவுளான யெகோவாவை நேசிப்பவர்கள் அவருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுப்பார்கள்.
11. யெகோவாவைச் சரியான விதத்தில் வணங்குகிறவர்களை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்?
11 உலகம் முழுவதும் இருக்கிற வித்தியாசப்பட்ட ஆட்களை யெகோவா அவருடைய சபைக்குள் கூட்டிச்சேர்க்கிறார். (வெளி. 7:9, 10) அவர்கள் யெகோவாவைப் பற்றி முதல்முதலாக கேட்டபோது இதுதான் உண்மை என்று தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். (மாற். 13:10) அவருடைய மக்களுடன் சேர்ந்து அவரைச் சந்தோஷமாக வணங்குகிறார்கள். இன்று, யெகோவாவைச் சரியான விதத்தில் வணங்குகிறவர்களுக்கும் வணங்காதவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இதைப் பற்றி மல்கியா தீர்க்கதரிசி இப்படிச் சொன்னார்: “அப்போது, நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.” (மல். 3:18) யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய நடத்தை மூலமாகவும் ஊழியம் செய்வதன் மூலமாகவும் சத்தியத்தின் கடவுளைத்தான் வணங்குகிறார்கள் என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.
12. ஊழிய வேலை எப்படி யெகோவாவின் நோக்கம் நிறைவேற உதவுகிறது?
12 ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ பிரசங்கிப்பதன் மூலம் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம், தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றுகிறோம். (மத். 24:14; 28:18-20) இந்த ஊழிய வேலையால், உலகம் முழுவதும் இருக்கிற நிறைய மக்கள் இயேசுவின் சீஷர்கள் ஆகிறார்கள். சத்தியத்தின் கடவுளான யெகோவாவை முடிவே இல்லாமல் என்றென்றும் வணங்கும் காலத்துக்காகக் காத்திருக்கிறார்கள். யெகோவாவுடைய நோக்கம் நிறைவேறுவதில் நமக்கும் ஒரு பங்கு கிடைத்திருப்பது உண்மையிலேயே ஒரு பெரிய ஆசீர்வாதம்!
எதிர்கால வாக்குறுதிகள் நிச்சயம் நடக்கும்
13. சாத்தான் யாரை குறிவைத்து தாக்குகிறான், ஏன்?
13 சாத்தான் “தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது” என்று தெரிந்து ரொம்பக் கோபத்தோடு இருக்கிறான். (வெளி. 12:12, 13) அதனால் அவன், பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் குறிவைத்து தாக்குகிறான். ஏனென்றால், யெகோவா அவர்களைத் தன்னுடைய அரசாங்கத்துக்கு ராஜாக்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதோடு, அவர்கள் “கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும் வேலையை” செய்கிறார்கள். (வெளி. 12:17; 14:12) அதேசமயம், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு கொடுத்து, ஊழிய வேலைகளைச் செய்கிற மற்ற எல்லாரையும்கூட சாத்தான் தாக்குகிறான்.
14. யெகோவாவின் மக்களை சாத்தானுடைய ஆட்கள் தாக்கும்போது என்ன நடக்கும்? (படத்தையும் பாருங்கள்.)
14 மகா பாபிலோன் அழிந்த பிறகு, சாத்தானுடைய ஆட்கள் யெகோவாவின் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முயற்சி செய்வார்கள். அப்போதுதான், அர்மகெதோன் போர் ஆரம்பிக்கும். (வெளி. 16:13, 14, 16) இயேசுவும் அவருடைய பரலோகப் படையும் கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார்கள். சாத்தானுடைய உலகத்தில் மீதியிருக்கும் எல்லா கெட்ட விஷயங்களையும் முழுவதுமாக அழித்துவிடுவார்கள். (வெளி. 19:19-21) அந்தச் சமயத்தில், பொய் பேசுபவர்கள், கெட்டவர்கள், ஏமாற்றுக்காரர்கள் என எல்லாரும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவார்கள். (வெளி. 21:8) யெகோவாதான் சத்தியத்தின் கடவுள், அவர் செய்வது எல்லாமே சரியானது என்று எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.
அர்மகெதோன் போரில் இயேசுவும் அவருடைய பரலோகப் படையும் கடவுளுடைய எதிரிகளை அழிக்கிறார்கள் (பாரா 14)
15. எதிர்காலத்தைப் பற்றி யெகோவா சொன்ன வாக்குறுதிகள் கண்டிப்பாக நடக்கும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (ஏசாயா 65:16, 17) (படத்தையும் பாருங்கள்.)
15 என்றும் இல்லாத அளவுக்கு இன்று இந்த உலகத்தில் நிறையப் பிரிவினைகள் இருக்கின்றன. ஆனால், யெகோவாவின் உதவியால் அவருடைய மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். சத்தியத்தை நேசிக்கும் மக்களைத் தன்னுடைய குடும்பத்தில் கூட்டிச்சேர்க்கும் வேலையை யெகோவா ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார். யெகோவா அவருடைய மக்களையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் ஆசீர்வதிப்பதை யாராலும் எவற்றாலும் தடுத்து நிறுத்த முடியாது. (ஏசாயா 65:16, 17-ஐ வாசியுங்கள்.) அதனால், எதிர்காலத்தைப் பற்றி யெகோவா சொன்ன வாக்குறுதிகள் கண்டிப்பாக நடக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். ரோமர் 8:38, 39-ல் அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகள் உண்மையிலேயே நமக்கு நம்பிக்கை தருகின்றன: “சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ, உயர்வான காரியங்களோ, தாழ்வான காரியங்களோ, வேறெந்தப் படைப்போ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று உறுதியாக நம்புகிறேன்.”
இன்று நாம் அனுபவிக்கும் எந்தக் கஷ்டங்களும் பூஞ்சோலை பூமியில் நம் ஞாபகத்துக்கே வராது (பாரா 15)
16. நீங்கள் ஏன் யெகோவாவை முழு மனதோடு நம்புகிறீர்கள்?
16 சத்தியத்தின் கடவுளான யெகோவாவை நம்புவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. அவர்தான் நம் படைப்பாளர். நம்மேல் அவர் உயிரையே வைத்திருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள வித்தியாசப்பட்ட மக்களை அவர் கூட்டிச்சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் யெகோவாவைச் சரியான விதத்தில் வணங்குகிறார்கள். (ஏசா. 60:22; சக. 8:23) யெகோவா ஒருநாளும் சொன்னதை செய்யாமல் போனதே இல்லை என்று நமக்கு நன்றாகத் தெரியும். பொய்களால் நிறைந்த இந்த சாத்தானுடைய உலகத்தை அழிப்பதாக அவர் சொன்ன வாக்குறுதியையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார். தாவீது சொன்னதுபோல் “கடவுளான யெகோவா புகழப்படட்டும். அவர் மட்டுமே அற்புதங்களைச் செய்கிறவர். அவருடைய மகிமையான பெயர் என்றென்றும் புகழப்படட்டும். அவருடைய மகிமை பூமி முழுவதையும் நிரப்பட்டும்.”—சங். 72:18, 19.
பாட்டு 2 யெகோவா என்பதே உங்கள் பெயர்
a இந்தக் கெட்ட தேவதூதனுடைய பெயர் என்னவென்று பைபிள் சொல்வதில்லை. பைபிள் வெறுமனே அவனை “பிசாசு” [இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்] என்றும், “சாத்தான்” [எதிர்ப்பவன்] என்றும்தான் சொல்கிறது.