வாழ்க்கை சரிதை
என் இளம் வயதிலிருந்தே யெகோவா எனக்கு பயிற்சிக் கொடுத்து வருகிறார்
ஒரு துண்டு பேப்பரை ஒரு சகோதரர் என்னிடம் கொடுத்தார். அது என்னவென்று புரியாமல் அதையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தேன். அதில், “டேவிட் ஸ்ப்லேன், ஏப்ரல் 8, 1953: ‘உலக முடிவைப் பற்றி பிரசங்கியுங்கள்’” என்று எழுதி இருந்தது. “என்ன இது” என்று கேட்டதற்கு, “தேவராஜ்ய ஊழியப் பள்ளியில்a நீ கொடுக்க போகிற பேச்சுதான் இது” என்று சொன்னார். அப்போது நான், “பேச்சு கொடுக்க நான் ஒத்துக்கொள்ளவே இல்லையே” என்று சொன்னேன்.
அப்புறம் என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன், என் கதையை முதலில் இருந்தே சொல்கிறேன். நான் இரண்டாவது உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் கனடாவில் இருக்கும் கல்கரியில் பிறந்தேன். 1940-களின் கடைசியில் டொனால்ட் ஃப்ரேசர் என்ற ஒரு இளம் பயனியர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். அம்மா பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார். படித்த விஷயங்கள் அவருக்கு ரொம்பப் பிடித்துப்போனது. ஆனால், அம்மாவுக்கு ஒரு மோசமான உடல் பிரச்சினை இருந்ததால், எல்லா கூட்டங்களுக்கும் போக முடியவில்லை. இருந்தாலும், நிறைய முன்னேற்றங்கள் செய்து, 1950-ல் ஞானஸ்நானம் எடுத்தார். ஆனால் வருத்தமான விஷயம், இரண்டு வருஷத்துக்குள் அவர் இறந்துவிட்டார். அந்தச் சமயத்தில், என் அப்பா சத்தியத்தில் இல்லை. ஆனாலும், அம்மாவின் சவ அடக்க நிகழ்ச்சியை யெகோவாவின் சாட்சிகள் நடத்த அப்பா சம்மதித்தார்.
அம்மா இறந்து கொஞ்ச நாளுக்குப் பிறகு, ஆலிஸ் என்ற ஒரு வயதான பரலோக நம்பிக்கையுள்ள சகோதரி என்னைக் கூட்டங்களுக்குக் கூப்பிட்டார். முன்பு அம்மாவோடு நான் வார இறுதியில் நடந்த கூட்டங்களுக்குப் போய் இருக்கிறேன். அதனால் என்னை அவருக்குத் தெரியும். நான் கூட்டங்களுக்குப் போகட்டுமா என்று அப்பாவிடம் கேட்டேன். சரி என்று சொன்னார். அதேநேரம், இந்த ஒருமுறை மட்டும் அவரும் என்னோடு கூட்டத்துக்கு வந்து அம்மாவின் சவ அடக்க நிகழ்ச்சியில் பேச்சு கொடுத்த சகோதரருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னார். அன்று, தேவராஜ்ய ஊழிய பள்ளியும் ஊழியக் கூட்டமும் நடந்தது. முதல்முறையாக அதையெல்லாம் பார்த்தது அப்பாவுக்கு ரொம்பப் பிடித்துப்போனது. ஏனென்றால், எல்லார் முன்பும் பேச்சு கொடுப்பது சம்பந்தமான ஒரு ‘கோர்ஸை’ (Course) அப்பா படித்து இருந்தார். நம் கூட்டத்தில் கொடுத்த பேச்சுகளைக் கேட்டு அசந்து போய்விட்டார். அதனால், வார நாட்களில் நடக்கும் அந்தக் கூட்டங்களுக்குத் தவறாமல் வர வேண்டும் என்று முடிவு எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டார்.
அந்தக் காலங்களில், கூட்டத்தை ஆரம்பிக்கும் முன் தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஊழியர், அந்தப் பள்ளியில் சேர்ந்து இருக்கும் எல்லாருடைய பெயர்களையும் வாசிப்பார். அப்போது, அவர்கள் ‘பிரசண்ட்’ (Present) என்று சொல்வார்கள். என்னுடைய பெயரையும் வாசியுங்கள் என்று ஒருநாள் அந்தச் சகோதரரிடம் சொன்னேன். அதற்காக அவர் என்னைப் பாராட்டினார். இந்தப் பெயர்களை ஏன் கூட்டங்களில் வாசிக்கிறோம் என்று நான் புரிந்திருக்கிறேனா என்றெல்லாம் அவர் என்னிடம் கேட்கவே இல்லை.
கூட்டங்களில் பேச்சு கொடுக்கத்தான் நான் என் பெயரைக் கொடுத்து இருக்கிறேன். அது அப்போது எனக்குப் புரியவில்லை. எனக்குத் தேவைப்பட்டது எல்லாம், என் பெயரையும் அவர்கள் கூட்டங்களில் வாசிக்க வேண்டும். அவ்வளவுதான்! அடுத்த கூட்டத்தில் என் பெயரை வாசித்தார்கள். நானும் சந்தோஷமாக ‘பிரசண்ட்’ என்று சொன்னேன். கூட்டம் முடிந்த பிறகு எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள். சில வாரங்கள் கழித்து, என்னிடம் ஒரு பேச்சு நியமிப்பைக் கொடுத்தார்கள். அதைப் பற்றித்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன்.
எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. அப்போதெல்லாம் மாணவர்கள் கொடுக்கும் பேச்சு, ஆறிலிருந்து எட்டு நிமிஷத்துக்கு இருக்க வேண்டும். வெறுமனே பைபிளை வாசிக்கும் நியமிப்பு அந்தச் சமயத்தில் இல்லை. இந்தப் பேச்சைத் தயாரிக்க அப்பா எனக்கு உதவி செய்தார். என்னை 20 முறை பேசி பார்க்க வைத்தார். பிறகு, நான் அந்தப் பேச்சைக் கொடுத்தேன். கூட்டத்தை நடத்திய சகோதரர் எனக்குப் பிரயோஜனமான ஆலோசனையைக் கொடுத்தார். அந்த நாளில் இருந்து இன்றுவரை யெகோவா எனக்கு நிறைய பயிற்சி கொடுத்து வருகிறார். என் அப்பாவை, சகோதர சகோதரிகளை, அமைப்பை எல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்.
பயிற்சி கிடைத்துக்கொண்டே இருந்தது
நான் ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, முன்பு சொன்ன ஆலிஸ் என்ற சகோதரிதான் எனக்குப் பயிற்சி கொடுத்தார். அந்தக் காலங்களில் ஊழியத்தில் மூன்று வசனங்களை வாசித்துக் காட்ட வேண்டும். பிறகுதான் புத்தகத்தைக் கொடுப்போம். நான் பேச வேண்டிய சமயம் வரும்போது, ஆலிஸ் முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிப்பார். பிறகு, முதல் வசனத்தை என்னை வாசிக்கச் சொல்வார். அதிலிருந்து, நான் பேச ஆரம்பிப்பேன். இரண்டாவது, மூன்றாவது வசனத்தை வாசித்துக் காட்டிவிட்டு பிரசுரத்தைக் கொடுப்பேன். கொஞ்ச நாளிலேயே, நானே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சை ஆரம்பிக்கக் கற்றுக்கொண்டேன். 1954-ன் கடைசியில் என் அப்பா ஞானஸ்நானம் எடுத்தார். பிறகு, அப்பாவும் எனக்கு ஊழியத்தில் நிறைய பயிற்சிகள் கொடுத்தார். அம்மா இறந்துவிட்டதால், தனி ஆளாக என்னைச் சத்தியத்தில் வளர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அப்பா செய்தார். அப்பாவுக்கு ரொம்ப முக்கியமானது கூட்டமும் ஊழியமும்தான். நாங்கள் எந்தக் கூட்டத்தையும் தவறவிடாமல் எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்வோம். சனி-ஞாயிறுகளில் ஊழியத்துக்குப் போய்விடுவோம்.
நான் ஸ்கூலில் சுமாராகத்தான் படித்தேன். ஆனால், அந்த 12 வருஷ ஸ்கூல் படிப்பிலிருந்தும் எனக்குப் பயிற்சி கிடைத்தது. அது இன்றுவரை எனக்கு உதவியாக இருக்கிறது. உதாரணமாக, நன்றாகக் கணக்கு போட கற்றுக்கொண்டேன். ஆங்கில இலக்கணத்தையும் கற்றுக்கொண்டேன். ஆங்கில பாடங்களையும் கதை எழுதும் திறமையையும் கற்றுக்கொண்டேன்; இப்போது எழுத்து இலாக்காவில் எனக்கு இருக்கும் நியமிப்பை நன்றாகச் செய்ய இவை எனக்கு உதவுகிறது.
எனக்கு இசையில் எப்படி ஆர்வம் வந்தது என்று நிறைய பேர் கேட்பார்கள். என் அப்பா-அம்மாவுக்கு இசை ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஏழு வயது இருக்கும்போது ‘பியானோ’ கற்றுக்கொண்டேன். ஆனால், எனக்கு அதைக் கற்றுக்கொள்ளும் திறமை இல்லை என்று என் டீச்சர் நினைத்தார். அதனால், என் அப்பாவிடம், நான் பியானோ கற்றுக்கொள்வதை நிறுத்துவதுதான் சரி என்று சொன்னார். ஏன் என்று இப்போது எனக்குப் புரிகிறது. அந்தச் சமயத்தில் இசையைக் கற்றுக்கொள்வதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை.
சில மாதங்கள் கழித்து, அப்பா என்னை வேறொரு டீச்சரிடம் அனுப்பினார். இந்தச் சமயம், நான் பியானோவும் கற்றுக்கொண்டேன் பாட்டு பாடவும் கற்றுக்கொண்டேன். அது இரண்டையுமே நான் நன்றாகக் கற்றுக்கொண்டேன். அந்த வயதில் என் குரல் நன்றாக இருக்கும். அதனால், சில போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்கவும் செய்தேன். இசை துறையில் படித்துப் பட்டம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான், டீச்சராக வேலை கிடைக்கும், இசையைச் சொல்லிக்கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பயனியர் செய்யலாம் என்று நினைத்தேன். ஏனென்றால், பயனியர் ஆவதுதான் என் குறிக்கோள். ஆனால், அப்படிப் பட்டம் வாங்க வேண்டுமென்றால், நிறைய நேரம் படிப்பதிலும் தேர்வுக்குத் தயாரிப்பதிலுமே போய்விடும் என்று எனக்குப் புரிந்தது. அதனால், என் படிப்பை நிறுத்திவிட்டு 1963-ல் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தேன்.
பயனியர் சேவை சந்தோஷத்தை அள்ளித்தந்தது
நான் ஒரு வருஷம் பயனியர் செய்தபின், ஒன்டாரியோவில் இருக்கும் கபுஸ்கேசிங் என்ற இடத்துக்கு என்னை விசேஷ பயனியராக நியமித்தார்கள். சகோதரர் டேனியல் ஸ்கின்னர் என் பயனியர் பார்ட்னராக இருந்தார். அவர் என்னைவிட வயதில் ரொம்பப் பெரியவர். சபையில் இருக்கும் வித்தியாசமான வேலைகளைப் பற்றி அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார். அந்தச் சமயத்தில் சபையின் ஊழியக் குழுவில் சேவை செய்ய எனக்கு நியமிப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 20 வயது, கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. இன்றும் யெகோவாவின் அமைப்பு இளம் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி சொல்கிறது. அதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. இளம் சகோதரர்கள் அந்தப் பயிற்சியை எடுத்துக்கொண்டு கடினமாக உழைத்தால், இந்த சின்ன வயதிலேயே யெகோவா அவர்களை நன்றாகப் பயன்படுத்துவார்.
கபுஸ்கேசிங்கில் நிறைய சவால்களும் இருந்தன. அங்கே குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 44 டிகிரி வரை போகும். சிலநேரங்களில், மைனஸ் 33 டிகிரியாக உயரும். நிறைய சமயங்களில் நானும் சகோதரர் டேனியலும் நடந்தேதான் எல்லா இடங்களுக்கும் போவோம். அந்த நியமிப்பு எனக்கு ரொம்பப் பிடித்ததற்கு இன்னொரு காரணம், அங்கேதான் லிண்டா கோல் என்ற சகோதரியைப் பார்த்தேன். அவள்தான் பிறகு என் மனைவியாக ஆனாள்.
லிண்டா எப்போதும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்வாள். அவளுக்கு நிறைய மறுசந்திப்புகள் இருந்தன. அவள் அன்பாக இருப்பாள், மற்றவர்களுக்குத் தாராளமாக கொடுப்பாள். எல்லாரோடும் சேர்ந்து இருக்க அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அவளுடைய அம்மா கோல்டி யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஒரு சகோதரி. லிண்டாவின் அப்பா ஆலன் ஆரம்பத்தில் சத்தியத்தை எதிர்த்தார். அவரின் எதிர்ப்பு ஒருபக்கம் இருந்தாலும் சகோதரி கோல்டி, லிண்டாவையும் அவளுடைய தம்பிகள் ஜான் மற்றும் கார்டனையும் கூட்டிக்கொண்டு எல்லா கூட்டங்களுக்கும் வந்துவிடுவார். ஊழியத்திலும் அவர்களுக்கு நிறைய பயிற்சி கொடுத்தார். கோல்டி, லிண்டா, ஜான், கார்டன் எல்லாரும் பயனியர் செய்திருக்கிறார்கள். பல வருஷங்களுக்குப் பிறகு, லிண்டாவின் அப்பா ஆலனும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, சுறுசுறுப்பாக யெகோவாவுக்குச் சேவை செய்தார்.
1965-ல், கனடா பெத்தேலில் ஒரு மாதம் நடந்த ராஜ்ய ஊழியப் பள்ளிக்கு எனக்கு அழைப்பு கிடைத்தது. அங்கே எனக்கு நிறைய பயிற்சி கொடுத்தார்கள். அதேசமயம், கிலியட் பள்ளிக்கு விண்ணப்பிக்கவும் சொன்னார்கள். ஒரு மிஷனரியாகச் சேவை செய்வதைப் பற்றி நான் யோசித்துப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், அதற்கெல்லாம் எனக்குத் தகுதி இல்லை என்றுதான் நினைத்தேன். ஆனாலும் கிலியட் பள்ளிக்கு விண்ணப்பம் செய்தேன். 42-வது வகுப்புக்கு எனக்கு அழைப்பு கிடைத்தது. பொதுவாக, கிலியட் பள்ளி மாணவர்களைக் கவனித்து, அவர்கள் எப்படிப் படித்துக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைப் போதகர்கள் சொல்வார்கள். ஆரம்பத்திலிருந்தே போதகர்கள் எனக்குச் சொன்ன விஷயம், இந்தப் பள்ளியில் இருக்கும்போதே அமைப்பைப் பற்றி எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள் என்று சொன்னார்கள். அப்போது எனக்கு 21 வயது, அதனால் அது உண்மையிலேயே சிறந்த ஆலோசனைதான்.
கிலியட்டில் இருந்த ஒரு பாடம், மீடியாவில் வேலை செய்யும் ஆட்களிடம் அதாவது, ரேடியோ, டிவி, நியூஸ்பேப்பர் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது பற்றி. அது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது, அதை ஆசையாய்ப் படித்தேன். அப்போது நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பின்னால் எனக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும் என்று அந்தச் சமயத்தில் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்.
செனிகலுக்கு நியமிக்கப்பட்டேன்
கிலியட்டில் பட்டம் வாங்கிய பிறகு நானும் மைக்கேல் ஹோலேயும் ஆப்பிரிக்காவில் இருக்கிற செனிகல் நாட்டுக்கு நியமிக்கப்பட்டோம். அந்தச் சமயத்தில் அந்த நாட்டில் கிட்டத்தட்ட 100 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள்.
செனிகலுக்குப் போய் பல மாதங்களுக்குப் பிறகு, வாரத்துக்கு ஒரு நாள் கிளை அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய எனக்கு அழைப்பு கிடைத்தது. அந்தச் சமயத்தில், மிஷனரிகள் தங்குகிற வீட்டிலிருந்த ஒரு சின்ன அறைதான் “கிளை அலுவலகம்.” கிளை அலுவலக ஊழியராக இருந்த சகோதரர் இம்மானுவேல் பெட்டராக்கிஸ் எனக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார். யெகோவாவுடைய அமைப்பு இந்த நாட்டில் இருப்பதற்கு இந்தச் சின்ன அறைதான் அடையாளம் என்று சொல்வார். ஒருசமயம், சகோதரர் பெட்டராக்கிஸ் அந்த நாட்டில் இருந்த மிஷனரிகளை உற்சாகப்படுத்துவதற்காக, எல்லாருக்கும் கடிதங்கள் அனுப்பலாம் என்று முடிவு செய்தார். அந்தக் காலத்தில், கடிதங்களை நகலெடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு ரொம்பச் செலவாகும். அதனால், ஒவ்வொருவருக்கும் அனுப்ப வேண்டிய கடிதத்தைத் தனித்தனியாக ‘டைப்ரைட்டரில்’ ‘டைப்’ செய்ய வேண்டியிருந்தது. அதெல்லாம் பெரிய வேலை. கஷ்டமான விஷயம் என்னவென்றால், அதில் ஒரு தவறு வந்தால்கூட அதைத் திருத்த முடியாது.
ஒருநாள், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது “அமைப்பிடமிருந்து உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது” என்று சகோதரர் பெட்டராக்கிஸ் சொன்னார். அதைத் திறந்து பார்த்தபோது நான் ‘டைப்’ செய்த கடிதம் அதில் இருந்தது. அந்தச் சம்பவத்தில் இருந்த நான் கற்றுக்கொண்ட பாடம்: ‘ஒரு நாட்டில் இருக்கும் கிளை அலுவலகம் பெரிதாகவும் இருக்கலாம் சின்னதாகவும் இருக்கலாம். ஆனால், எப்போதும் யெகோவாவுடைய அமைப்பை உயர்வாகப் பார்க்க வேண்டும், அதை மதிக்க வேண்டும்.’
1967-ல் செனிகல் நாட்டில் மற்ற மிஷனரிகளுடன்
அங்கிருந்த சபைகளில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். பெரும்பாலும், சனிக்கிழமை சாயங்காலங்களில் அவர்களோடுதான் நிறைய நேரம் செலவு செய்வேன். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. இப்போதும் அவர்களோடு நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். செனிகலில் இருந்தபோது நான் கற்றுக்கொண்ட பிரெஞ்சு மொழி இப்போதும் எனக்கு உதவியாக இருக்கிறது. உலகம் முழுதும் இருக்கிற கிளை அலுவலகங்களைச் சந்திக்கும்போது அது எனக்குக் கைகொடுக்கிறது.
1968-ல், லிண்டாவும் நானும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு எடுத்தோம். கல்யாணத்துக்குப் பிறகு, செனிகலிலேயே இரண்டு பேரும் பயனியர் சேவை செய்ய ஆசைப்பட்டோம். அதனால், நிறைய மாதங்களாக ஒரு பகுதி நேர வேலையை நான் அங்கு தேடிக்கொண்டிருந்தேன். ஆனால், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு அங்கு வேலை கொடுக்க மாட்டார்கள், அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும்தான் வேலை கொடுப்பார்கள். கடைசியில், நான் கனடாவுக்கே திரும்பி வந்தேன். பிறகு, லிண்டாவைக் கல்யாணம் செய்துகொண்டேன். நியு ப்ரன்ஸ்விக்கில் இருக்கிற எட்மன்ஸ்டன் என்ற இடத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் விசேஷ பயனியர்களாக நியமிப்பு கிடைத்தது. அது கியுபெக்கின் எல்லையில் இருக்கிற ஒரு சின்ன ஊர்.
1969-ல் எங்களுக்கு கல்யாணம் ஆனபோது
நியு ப்ரன்ஸ்விக்கிலும் கியுபெக்கிலும் பயனியர் சேவை
அந்த ஊரில் பிரஸ்தாபிகள் யாருமே இல்லை, சில பைபிள் படிப்புகள் மட்டும்தான் இருந்தன. அங்கிருந்த மக்கள் கத்தோலிக்க மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லார் வீட்டிலும் ‘யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி இல்லை’ என்று ஒரு போர்டு இருக்கும். அப்போதெல்லாம் அப்படி எழுதியிருந்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அந்த போர்டு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, எல்லா வீட்டுக்கும் போவோம். ஒவ்வொரு வாரமும் அங்கிருந்த கத்தோலிக்க அமைப்பு செய்தித்தாளில் ஒரு செய்தி வெளியிடுவார்கள். “யெகோவாவின் சாட்சிகளைக் கண்டுபிடித்து அவர்களை ஒழித்துக்கட்டுவோம்” என்ற செய்தி அதில் வரும். அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் நான்கு பேர்தான்—விக்டர் மற்றும் வெல்டா நார்பக், நானும் லிண்டாவும். அதனால், எங்களைப் பற்றித்தான் சொல்கிறார்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அங்கு நடந்த வட்டாரக் கண்காணியின் முதல் சந்திப்பை என்னால் மறக்கவே முடியாது. வட்டாரக் கண்காணி எங்களிடம், “இங்கிருக்கும் மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றித் தப்பான கருத்து இருக்கிறது. அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதை உங்கள் குறிக்கோளாக வையுங்கள்” என்று சொன்னார். அதனால், அந்தக் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சி செய்தோம். அதற்குப் பலனும் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக, மனத்தாழ்மையாக இருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கும் பெருமைபிடித்த கத்தோலிக்க மத தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசத்தை மக்கள் நன்றாகப் பார்த்தார்கள். இப்போது அந்த ஊரில் ஒரு சின்ன சபை இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு வருஷம் அங்கு சேவை செய்த பிறகு, கியுபெக் நகரத்திலிருந்த ஒரு பெரிய சபைக்கு என்னையும் லிண்டாவையும் மாறிப்போக சொன்னார்கள். அங்கே ஆறு மாதங்கள் சந்தோஷமாகச் சேவை செய்தோம். சகோதர சகோதரிகள் எங்களை ரொம்ப அன்பாக உபசரித்தார்கள். பிறகு, வட்டாரச் சேவை செய்ய எங்களுக்கு நியமிப்பு கிடைத்தது.
அடுத்த 14 வருஷங்களுக்கு, கியுபெக்கில் இருந்த நிறைய வட்டாரங்களில் சேவை செய்தோம். அதெல்லாம் ரொம்பச் சந்தோஷமான நாட்கள். அந்தச் சமயத்தில் கியுபெக்கில் ஊழிய வேலைகள் ரொம்ப மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு சபையிலும் நிறைய குடும்பங்கள் பைபிளைப் படித்து நன்றாக முன்னேறினார்கள்.
கடினமாக உழைத்த சகோதர சகோதரிகள்
கனடாவில் இருக்கும் பிரெஞ்சு பேசும் சகோதர சகோதரிகள் ரொம்ப அன்பாக இருப்பார்கள். வெளிப்படையாக இருப்பார்கள், சந்தோஷமாக பேசுவார்கள். ஆனால், அவர்கள் சத்தியத்துக்கு வருவது அவ்வளவு சுலபம் இல்லை. குடும்பத்தில் இருந்து அவர்களுக்குப் பயங்கரமான எதிர்ப்பு வரும். சாட்சிகளோடு பைபிள் படிக்கிற இளம் பிள்ளைகளிடம் அவர்களுடைய அப்பா-அம்மா இப்படிச் சொல்வார்கள்: “யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பதை நிறுத்து. இல்லையென்றால், வீட்டைவிட்டு வெளியே போ.” நிறைய பேர் இந்த எதிர்ப்பைத் தாண்டி சத்தியத்துக்கு வந்திருக்கிறார்கள். கண்டிப்பாக யெகோவா அவர்களைப் பார்த்து ரொம்பப் பெருமைப்படுவார்.
கியுபெக்கில் அந்தச் சமயத்தில் ஒழுங்கான பயனியர்களாக, விசேஷ பயனியர்களாக சேவை செய்தவர்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர்களில் நிறைய பேர் கனடாவின் வேறு வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதோடு, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அந்த மக்களுடைய கலாச்சாரத்தையும் அவர்கள் யோசிக்கிற விதத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
அப்போதெல்லாம், பிரஸ்தாபிகளே இல்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் ஊழியம் செய்ய விசேஷ பயனியர்களை நியமித்தார்கள். அங்கிருந்தவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகளைச் சுத்தமாகப் பிடிக்காது. அதனால், வீடு மற்றும் பகுதி நேர வேலை கண்டுபிடிப்பதெல்லாம் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. புதிதாக கல்யாணம் ஆனவர்கள்கூட நான்கு பேர், ஆறு பேர், எட்டு பேர் என சேர்ந்து தங்குவார்கள். அப்போதுதான் அவர்களால் வாடகை கொடுக்க முடியும். தனியாக வாழ்வதற்கு அவர்களுக்கு வசதி இருக்காது. அந்த பயனியர்கள் உண்மையிலேயே கடின உழைப்பாளிகள்தான். ஒரு பைபிள் படிப்பு கிடைத்துவிட்டால் போதும், அந்த நபருக்கு உதவ அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்கள். இப்போது கியுபெக்கில், உள்ளூரிலேயே நிறைய பிரஸ்தாபிகள் இருப்பதால் வேறு பகுதிகளில் இருந்து வந்த அந்த பயனியர்கள் இன்னும் அதிக தேவை இருக்கிற மற்ற இடங்களுக்கு மாறி போயிருக்கிறார்கள்.
வட்டாரச் சேவையில் இருந்தபோது, பொதுவாக சனிக்கிழமை காலையில் இளம் பிள்ளைகளோடு ஊழியம் செய்வோம். அப்படிச் செய்ததால், அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்று தெரிந்துகொள்ள முடிந்தது. எங்களோடு அப்போது ஊழியம் செய்த சில இளம் பிள்ளைகள், இப்போது வேறு நாடுகளில் மிஷனரிகளாக இருக்கிறார்கள், வேறு நியமிப்புகளிலும் இருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் எங்களுடைய பயண செலவுகளையும் சாப்பாடு செலவுகளையும் சில சபைகளால் கவனித்துக்கொள்ள முடியவில்லை. அதனால், மாத கடைசியில் எங்கள் கையில் காசே இருக்காது. அந்தச் சமயங்களில், யெகோவாவை மட்டும்தான் நாங்கள் முழுமையாக நம்பியிருந்தோம். ஏனென்றால், அவருக்கு மட்டும்தான் நாங்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தெரியும். அவர் எங்களைக் கைவிட்டதே இல்லை. கையில் காசே இருக்காது, ஆனால் எப்படியோ அடுத்தடுத்த சபைகளுக்குப் போய்விடுவோம்.
உண்மையுள்ள சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்
நான் முன்பு சொன்னதுபோல், மீடியாவில் இருக்கும் ஆட்களிடம் பேசுவதற்கு கிலியட்டில் கிடைத்த பயிற்சி எனக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்தது. அந்தச் சமயத்தில் கியுபெக்கில், ரேடியோ, டிவி அல்லது செய்தித்தாளில் சாட்சி கொடுப்பதற்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அப்போது, பெரும்பாலும் லியோன்ஸ் க்ரிப்போ என்ற பயணக் கண்காணியோடு சேர்ந்து வேலை செய்யத்தான் எனக்கு நியமிப்பு கிடைக்கும். அவருக்கு மீடியாவில் இருப்பவர்களிடம் பேசுவது கைவந்த கலை. மீடியாவில் இருக்கும் முக்கியமான ஆட்களிடம் பேசும்போது, ‘எல்லாம் தெரிந்தவர்போல்’ அவர் காட்டிக்கொள்ள மாட்டார். அதற்குப் பதிலாக இப்படிச் சொல்வார்: “நானும் என்னுடைய ஃபிரண்டும் ஊழியக்காரர்கள்தான். ரேடியோவிலும் டிவியிலும் பேச எங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பெரிய மாநாடு இங்கு நடக்கப்போகிறது என்று மக்களிடம் சொல்ல வேண்டும். அந்த வேலையை எங்கள் அமைப்பு எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், நீங்கள் உதவி செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்” என்று சொல்வார். இப்படி அவர் மனத்தாழ்மையாகப் பேசியதால் நிறைய பேர் எங்களுக்குத் தாராளமாக உதவினார்கள்.
பிறகு, நம் வக்கீல்களில் ஒருவராக இருந்த சகோதரர் க்ளென் ஹவ்வோடு சேர்ந்து வேலை செய்ய எனக்கு நியமிப்பு கிடைத்தது. மீடியா ரொம்ப ஆர்வம் காட்டிய சில சிக்கலான வழக்குகளில் நாங்கள் இருவரும் வேலை செய்தோம். அப்போது, கிலியட்டில் இருந்து எனக்குக் கிடைத்த பயிற்சியும் சகோதரர் லியோன்ஸிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களும் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. சகோதரர் க்ளென்னோடு வேலை செய்தது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். அவர் ரொம்பத் தைரியசாலி. அமைப்புக்காக சட்டரீதியாக வாதாடும்போது கொஞ்சம்கூட பயப்பட மாட்டார். ரொம்ப முக்கியமாக, யெகோவாமேல் அவருக்கு ஆழமான அன்பு இருந்தது.
1985-ல், மேற்கு கனடாவில் இருந்த ஒரு வட்டாரத்தில் சேவை செய்ய எங்களுக்கு நியமிப்பு கிடைத்தது. அது என் அப்பாவின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அதனால், என் அப்பாவை எங்களால் கவனித்துக்கொள்ள முடிந்தது. நாங்கள் போய் மூன்று மாதத்தில் அப்பா இறந்துவிட்டார். 1989 வரை மேற்கு கனடாவில் இருக்கும் வட்டாரங்களில்தான் சேவை செய்தோம். பிறகு, நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அமெரிக்க பெத்தேலில் சேவை செய்ய எங்களுக்கு அழைப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 19 வருஷங்களாக செய்துகொண்டிருந்த வட்டாரச் சேவையை நாங்கள் விட்டுவிட்டு போக வேண்டியிருந்தது. அத்தனை வருஷங்களில் நாங்கள் நிறைய பேருடைய வீடுகளில் தங்கியிருக்கிறோம், தாராள மனதுள்ள நிறைய சகோதர சகோதரிகளோடு சேர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். எங்களுக்காக வீடுகளைத் திறந்து எங்களை உபசரித்த அவர்கள் எல்லாருக்கும் நாங்கள் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்.
அமெரிக்க பெத்தேலில் எங்கள் சேவை
நாங்கள் புருக்லின் பெத்தேலுக்குப் போன பிறகு, ஊழிய இலாகாவில் எனக்கு நியமிப்பு கிடைத்தது. அங்கு கிடைத்த பயிற்சிக்கும் நான் நன்றியோடு இருக்கிறேன். அங்கு நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம்: எதையும் ஊகிக்க கூடாது, எல்லா உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். 1998-ல், எழுத்து இலாகாவில் என்னை நியமித்தார்கள். இப்போதும் நான் எழுத கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். பல வருஷங்களாக, சகோதரர் ஜான் பார்-க்கு உதவி செய்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அந்தச் சமயத்தில் எழுத்துக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். சகோதரர் ஜான் பார், ரொம்பத் தங்கமானவர். அவரோடு நான் இருந்த நாட்களையும் அவரிடமிருந்து கிடைத்த பயிற்சியையும் பொக்கிஷமாகப் பார்க்கிறேன்.
ஜான் மற்றும் மில்ட்ரெட் பாருடன்
எழுத்து இலாகாவில் இருக்கும் மனத்தாழ்மையுள்ள சகோதர சகோதரிகளோடு சேர்ந்து வேலை செய்வதை உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன். அவர்கள் தங்கள் நியமிப்பை நன்றாகச் செய்வதற்கு எப்போதும் யெகோவாவிடம் உதவி கேட்கிறார்கள், அவரையே நம்பி இருக்கிறார்கள். ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்தால், அது தங்களுடைய திறமையால் அல்ல, யெகோவாவுடைய சக்தியால்தான் நடந்தது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
2009 வருடாந்தரக் கூட்டத்தில் பாடல் குழுவை நடத்தியபோது
2014-ல், தென் கொரியாவில் இருக்கும் சீயோலில் நடந்த சர்வதேச மாநாட்டில் பைபிள்களைக் கொடுத்தபோது
110 நாடுகளுக்குப் போய் அங்கிருக்கிற உண்மையுள்ள சகோதர சகோதரிகளைப் பார்த்து பேசும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மிஷனரிகள், கிளை அலுவலகக் குழுவில் இருப்பவர்கள், முழுநேர ஊழியர்கள் என இவர்களுடைய அன்பை ருசித்து பார்த்தோம். முக்கியமாக, அந்த நாடுகளில் இருக்கும் சகோதர சகோதரிகள் எந்தளவு சுறுசுறுப்பாக, உண்மையாக யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள் என்பதைக் கண்ணார பார்த்தோம். போர், பணப்பிரச்சினை, துன்புறுத்தல் என எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் யெகோவாவுடைய சேவையை முதலில் வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து அவருக்கு உண்மையாகச் சேவை செய்கிறார்கள். கண்டிப்பாக யெகோவா அவர்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்!
இத்தனை வருஷங்களாக என் நியமிப்பை நன்றாகச் செய்ய, லிண்டா எனக்குப் பெரிய உதவியாக இருந்திருக்கிறாள். அவளுக்கு மற்றவர்களோடு இருப்பது ரொம்பப் பிடிக்கும். அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று பார்த்துக்கொண்டே இருப்பாள். ஊழியத்தில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்துவிடுவாள். யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறாள். செயலற்றவர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கும் உதவியிருக்கிறாள். என் மனைவி லிண்டா, யெகோவா எனக்கு கொடுத்த பரிசு! இப்போது எங்களுக்கு வயதாகிவிட்டது. நாங்கள் பயணம் செய்யும்போதும் மற்ற விஷயங்களைச் செய்யும்போதும் நிறைய இளம் சகோதர சகோதரிகள் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் உதவிகளை நாங்கள் மறக்கவே மாட்டோம்.—மாற். 10:29, 30.
இந்த 80 வருஷங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, என் மனம் நன்றியால் நிறைகிறது. சங்கீதக்காரர் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது: “கடவுளே, சிறுவயதிலிருந்து நீங்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.” (சங். 71:17) என் கடைசி மூச்சுவரை இதைத்தான் நான் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன்.
a இன்று இந்தப் பயிற்சி, வார நாட்களில் நடக்கும் கூட்டத்தில் கிடைக்கிறது.