உங்களுடன் ஊழியம் செய்பவர்களுக்கு உதவுங்கள்
1. மற்றவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்போது அப்போஸ்தலன் பவுலை எப்படிப் பின்பற்றலாம்?
1 அப்போஸ்தலன் பவுல் சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிட்டபோதெல்லாம் “ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற வேண்டுமென்று” விரும்பினார். (ரோ. 1:12) அதேபோல், உங்களுடன் ஊழியம் செய்கிறவர்களுக்கு நீங்கள் உற்சாகமளிக்கிறீர்களா, உதவி செய்கிறீர்களா? சிறந்த விதத்தில் ஊழியம் செய்ய உங்களுக்கு உதவிய குறிப்புகளை அவர்களிடம் சொல்லுங்கள்.
2. நம்மோடு ஊழியம் செய்பவர்களைத் தைரியப்படுத்த என்ன செய்யலாம், இது ஏன் முக்கியம்?
2 தைரியம் கொடுங்கள்: ஊழியம் என்றாலே சிலர் நடுங்கலாம். அது அவர்கள் முகத்தில், பேச்சில் சட்டெனத் தெரிந்துவிடும். மனதாரப் பாராட்டினால், அவர்களுக்கும் தைரியம் வரும். வேறென்ன செய்யலாம்? ஒரு பயணக் கண்காணி, ஊழியம் செய்யும்போது தானும் பயப்படுவதாகவும், அதற்காக அடிக்கடி ஜெபம் செய்வதாகவும் தன்னுடன் ஊழியம் செய்பவர்களிடம் சொல்கிறார். மற்றொரு சகோதரர் தைரியமாக பேச தனக்கு எது உதவுகிறது என்று சொல்கிறார்: “ஒரு சிரிப்போட பேச்சை ஆரம்பிக்கணும். இது சாதாரண விஷயம்தான். ஆனால், இதைச் செய்றதுக்கே நான் சில சமயம் ஜெபம் செஞ்சிருக்கேன்.” தைரியமாக ஊழியம் செய்ய எது உங்களுக்கு உதவுகிறது? உங்களுடன் ஊழியம் செய்பவர்களிடம் அதைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
3. நம் கூடவருபவர்கள் சிறப்பாக ஊழியம் செய்ய உதவியாக எந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்?
3 பலன்தரும் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்: என்ன கேள்வி கேட்டு, எந்த ஆரம்ப வார்த்தைகளைச் சொல்லி ஊழியத்தில் பேச்சை ஆரம்பித்தீர்கள்? ஒருவேளை உள்ளூர் சம்பவத்தைப் பற்றிச் சொன்னீர்களா? மாதிரி அணுகுமுறையைக் கொஞ்சம் மாற்றிப் பேசியது உதவியிருக்கிறதா? வீட்டுக்காரரின் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படிப் பேசுகிறீர்கள்? இதையெல்லாம் உங்களோடு ஊழியம் செய்பவர்களிடம் சொல்லுங்கள். (நீதி. 27:17) மறுசந்திப்புக்கு என்ன குறிக்கோளோடு போகிறீர்கள், அதை அடைவதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைப் போகிற வழியில் பகிர்ந்துகொள்ளுங்கள். பைபிள் படிப்பு முடிந்ததும், உங்கள் பைபிள் மாணாக்கரை மனதில் வைத்து குறிப்புகளை, வசனத்தை, போதிக்கும் முறைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் என்று விளக்குங்கள்.
4. நம்முடன் ஊழியம் செய்பவர்களுக்கு உதவுவது ஏன் முக்கியம்?
4 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், சத்தியத்தை அறியாதவர்களுக்கு உதவி செய்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சகோதர சகோதரிகளையும் ஊக்கப்படுத்தினார்கள், பலப்படுத்தினார்கள். (அப். 11:23; 15:32) அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்குப் பயிற்சி அளித்தார். கற்றுக்கொண்டவற்றை மற்ற சகோதரர்களிடமும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். (2 தீ. 2:2) அதேபோல், நாமும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது நம்முடன் ஊழியம் செய்கிறவர்களும் சந்தோஷமாக, திறமையாக ஊழியம் செய்வார்கள், நம் பரலோகத் தகப்பனும் சந்தோஷப்படுவார்.—எபி. 13:15, 16.