சிநேகப்பான்மையான பேச்சு இருதயத்தைத் தொடும்
1 உரையாடல் என்பதை “கருத்துப் பரிமாற்றம்” என்று சொல்லலாம். மற்றவர்களுக்கு விருப்பமான விஷயத்தைப் பற்றி சிநேகப்பான்மையாகப் பேச ஆரம்பித்தால், அவர்கள் இருதயத்தில் சத்திய விதையை விதைக்கலாம். சொற்பொழிவாற்றுவதைவிட சிநேகப்பான்மையாக, நிதானமாகப் பேசுவது நல்ல பலன் தந்திருப்பதை அனுபவங்கள் காட்டுகின்றன.
2 சிநேகப்பான்மையாகப் பேச ஆரம்பிப்பது எப்படி? நல்ல உரையாடல் என்பது, சுவாரஸ்யமூட்டும் விஷயங்களையும் வசனங்களையும் கோர்த்து அடுக்கடுக்காகச் சொல்வதைக் குறிக்காது. மற்றவர்களையும் பேச்சில் உட்படுத்துவதைக் குறிக்கிறது. உதாரணமாக, பக்கத்து வீட்டுக்காரரோடு சிநேகப்பான்மையாகப் பேசும்போது, நாம் இயந்திரத்தனமாகப் பேசுவதில்லை, ஆற அமர நிதானமாகப் பேசுகிறோம். அடுத்து என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க மாட்டோம். மாறாக, அவருடைய கருத்துகளுக்கு இயல்பாகப் பதிலளிப்போம். இப்படி, அவர் சொல்லும் விஷயங்களில் உண்மையான அக்கறை காட்டும்போது அவர் தொடர்ந்து நம்மிடம் பேசுவார். மற்றவர்களிடம் பிரசங்கிக்கும்போதும் நாம் இதையே செய்ய வேண்டும்.
3 குற்றச்செயல், இளைஞர்களின் பிரச்சினைகள், உள்ளூர் பிரச்சினைகள், உலக நிலைமை, வானிலை பற்றிச் சொல்லி சிநேகப்பான்மையாகப் பேச்சை ஆரம்பிக்கலாம். மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசினால் ஆர்வமாகக் கேட்பார்கள். உரையாடலை ஆரம்பித்துவிட்டால், அப்படியே மெதுமெதுவாக நற்செய்தியைச் சொல்லலாம்.
4 ஆற அமர நிதானமாகப் பேசலாம் என்பதற்காக, தயாரிக்க வேண்டியதில்லை என நினைக்கக் கூடாது. கண்டிப்பாகத் தயாரிக்க வேண்டும். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை எழுதி வைக்க வேண்டியதில்லை, மனப்பாடம் செய்யவும் வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் சூழலுக்கு ஏற்ப உரையாடலை மாற்ற முடியாது. (1 கொரிந்தியர் 9:20-23-ஐ ஒப்பிடுங்கள்.) நன்கு தயாரிக்க சிறந்த வழி, உரையாடலுக்கு வழிநடத்துகிற ஓரிரு பைபிள் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதாகும்.
5 சிநேகப்பான்மையாகப் பேச உதவும் முக்கியக் குணங்கள்: அன்பு மற்றும் உள்ளப்பூர்வமான அக்கறை. இந்தக் குணங்களைக் காட்ட முகத்தில் புன்னகை இருக்க வேண்டும், மகிழ்ச்சி தென்பட வேண்டும். உலகத்திலேயே சிறந்த செய்தி நம்மிடம் உள்ளது. நல்மனமுள்ள ஆட்களை அது ஈர்க்கும். எனவே, ஒரு நல்ல செய்தியை அவர்களிடம் சொல்ல உள்ளப்பூர்வமாக விரும்புவதால்தான் நாம் அக்கறை காட்டுகிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால், காதுகொடுத்துக் கேட்பார்கள்.—2 கொ. 2:17.
6 சிநேகப்பான்மையாக உரையாடுவது ஓர் இனிய அனுபவமாக இருக்க வேண்டும். எனவே, சாட்சி கொடுக்கும்போது கனிவாக, நாசூக்காகப் பேச வேண்டும். (கலா. 5:22; கொலோ. 4:6) முடிக்கும்போது வீட்டுக்காரரின் மனதில் நல்ல அபிப்பிராயம் ஏற்படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், முதல் சந்திப்பின்போது அவருடைய இருதயத்தைத் தொட முடியாவிட்டாலும், அடுத்தமுறை யெகோவாவின் சாட்சிகள் சந்திக்கும்போது நன்றாகக் கேட்பார்.
7 சொற்பொழிவாற்றுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தால்தான் சிநேகப்பான்மையாக உரையாடலை ஆரம்பிக்க முடியும் என்பதில்லை. வீட்டுக்காரருக்குப் விருப்பமான ஒரு விஷயத்தில் அவருடைய ஆர்வத்தை வளர்த்தாலே உரையாடலை ஆரம்பித்துவிடலாம். நன்கு தயாரித்துச் சென்றால், சிநேகப்பான்மையாக உரையாடுவது சுலபமாக இருக்கும். எனவே, முடிவில்லா வாழ்வைப் பற்றிய மிகச் சிறந்த செய்தியை அறிவித்து மக்களின் இருதயத்தைத் தொட முழுமுயற்சி எடுப்போமாக!—2 பே. 3:13.