பலன்தரும் முன்னுரைகள் —தயாரிப்பது எப்படி?
1. ஊழியத்தில் முன்னுரைகள் எந்தளவு முக்கியமானவை?
1 கமகமக்கும் வாசனை நம் பசியைத் தூண்டிவிடும். அதேபோல் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நம்முடைய ஆரம்ப வார்த்தைகள் வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டி, உரையாடலுக்கு வழிநடத்தும். பலன்தரும் முன்னுரைகள் சுருக்கமாகவோ, நீண்டதாகவோ வெவ்வேறு விஷயங்களின் பேரிலோ இருக்கலாம். ஆனால், ருசியான உணவைத் தயாரிப்பது போல அவற்றை முன்கூட்டியே நன்கு யோசித்துத் தயாரிக்க வேண்டும். (நீதி. 15:28) பலன்தரும் முன்னுரைகளை எப்படித் தயாரிப்பது?
2. ஆர்வமூட்டும் முன்னுரையை எப்படித் தயாரிக்கலாம்?
2 ஆர்வமூட்டும் விஷயங்களைத் தேர்ந்தெடுங்கள்: நம்முடைய முன்னுரை வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். இல்லையென்றால் அவர் பேச்சை நிறுத்திவிடுவார். எனவே, தயாரிக்கும்போது உள்ளூர் வாசிகளுக்கு என்னென்ன விஷயங்கள் ஆர்வமூட்டுவதாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள். நல்ல அரசாங்கம், சந்தோஷமான குடும்பம், போரில்லா உலகம் போன்ற விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருக்குமா? பொதுவாக, மக்கள் தங்களுடைய கருத்துகளைச் சொல்ல விரும்புவார்கள்; எனவே, சிந்தனையைத் தூண்டும் கேள்வி ஒன்றைத் தயாரியுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள மாதிரி அணுகுமுறைகளிலிருந்து முன்னுரைகளைத் தேர்ந்தெடுத்து, அதை உங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்க முயற்சி செய்யுங்கள். அவ்வப்போது குடும்ப வழிபாட்டில் சில முன்னுரைகளை ஒத்திகை பாருங்கள்.
3. கலாச்சாரத்தையும் பின்னணியையும் மனதில் வைத்து முன்னுரைகளை எப்படி மாற்றியமைக்கலாம்?
3 கலாச்சாரத்தையும் பின்னணியையும் மனதில் வையுங்கள்: சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டுமென்று சில ஊர்களில் எதிர்பார்ப்பார்கள். ஆனால் சில ஊர்களில், வீட்டுக்காரரின் நலனை விசாரிக்காமல், நம்மைப் பற்றிச் சொல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தால் ‘நாகரிகம் தெரியவில்லை’ என்று நினைப்பார்கள். சில இடங்களில், எடுத்த எடுப்பிலேயே பைபிளைத் திறந்து பேச முடியும். (அப். 2:14-17) ஆனால், கிறிஸ்தவர்கள் அல்லாதோர் வசிக்கும் பகுதிகளில் அல்லது நாத்திகர்கள் வசிக்கும் பகுதிகளில் முதல் சந்திப்பின்போது பைபிளைப் பற்றிக் குறிப்பிடாமல் மறுசந்திப்பின்போது குறிப்பிடுவது நல்லது.—அப். 17:22-31.
4. ஆரம்ப வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்?
4 ஆரம்ப வார்த்தைகள்: உங்கள் ஆரம்ப வார்த்தைகளைக் கவனமாகத் தயாரியுங்கள். சுருக்கமான, எளிமையான வாக்கியங்கள் பொதுவாகச் சிறந்த பலனைத் தரும். ஆரம்ப வார்த்தைகளை எவ்விதத்தில் சொல்கிறோம் என்பதுகூட முக்கியம். உற்சாகமாகப் பேசுங்கள். வீட்டுக்காரரின் நலனில் தனிப்பட்ட அக்கறை காண்பிக்கும் விதத்தில் உள்ளப்பூர்வமாக, சிநேகப்பான்மையாகப் புன்னகை பூத்திடுங்கள். இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினீர்கள் என்றால், ‘யெகோவாவின் மேஜையில்’ விருந்துண்பதற்கான ஆவலைத் தூண்டுகிற “கமகமக்கும்” முன்னுரைகளைத் தயாரிக்க முடியும்.—1 கொ. 10:21.