ஆர்வம் காட்டியவர்களை உடனே போய்ப் பாருங்கள்
1 “ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்” என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். முக்கியமான விஷயங்களை ஆறப்போடாமல் உடனே செய்து முடிக்க இது நம்மைத் தூண்டுகிறது. இந்த உண்மை நம் ஊழியத்துக்கும் பொருந்தும் என்பதைப் பின்வரும் அனுபவம் காட்டுகிறது.
2 ஊழியத்தில் சந்தித்த ஒரு நபருக்கு நம் சகோதரி ஒரு புத்தகத்தை அளித்து, அவரை அவசியம் வந்து சந்திப்பதாகச் சொன்னார். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு தவறுதலாக மற்றொரு சகோதரி அதே வீட்டிற்குச் சென்றார். கையில் புத்தகத்தோடு வந்த அந்த நபர் இப்படிச் சொன்னார்: “திரும்ப வரேன்னு சொன்னீங்க ஆனா இவ்ளோ சீக்கிரம் வருவீங்கனு நான் நினைக்கல. உள்ள வாங்க நம்ம படிக்கலாம்.” இந்த விதத்தில் நாம் மறுசந்திப்பு செய்வதில்லைதான். என்றாலும், ஆர்வமுள்ளவர்களை உடனே சென்று சந்திப்பதன் அவசியத்தை இந்த அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.
3 மக்களுக்கு உதவி தேவை: பிரசுரங்களில் இருக்கும் தகவல்களை மக்கள் புரிந்துகொள்வதற்கும், இன்றைய வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்கும் அது பிரயோஜனமானது என்பதை அறிந்துகொள்வதற்கும் நாம் மறுசந்திப்பு செய்வது அவசியம்; அதுவும் முதல் சந்திப்பிற்குப் பிறகு ஒரு சில நாட்களிலேயே! இதற்கு எது உதவும்? நீங்கள் மீண்டும் வந்து சந்திப்பதாகச் சொல்லும்போது வீட்டுக்காரரின் ஆர்வத்தைக் கணக்கிட முடியும்.
4 மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்: பரபரப்பான இந்த உலகில் ஒரு விஷயத்திற்காக மக்கள் நேரம் ஒதுக்குவது அவ்வளவு சுலபமல்ல; சிலசமயம் சொன்ன நேரத்தை வீட்டுக்காரர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், மறுசந்திப்பு செய்வதற்கான நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு, மறக்காமல் அந்த நபரை சந்தித்தால்... முடிந்தவரை ஒரு சில நாட்களிலேயே சந்தித்தால்... நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் என்பது தெளிவாகத் தெரியும். போகும்போதெல்லாம் அந்த நபர் வீட்டில் இல்லை என்றால்கூட முயற்சியைக் கைவிடாதீர்கள். உங்கள் விடாமுயற்சியைப் பார்த்து சத்தியத்தைக் கேட்க அவர் தூண்டப்படலாம்.
5 முதல் சந்திப்பிலேயே ஒரு நபருக்கு சத்தியத்தின் மீது ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிட முடியாது. எனவே, வீட்டுக்காரர் துளி ஆர்வம் காட்டினால்கூட மறுபடியும் போய்ப் பாருங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களை உடனே சந்திப்பது பலன் அளிக்கிறது. ஏனென்றால், நீங்கள் பேசிய விஷயம் அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம்; மறுசந்திப்பில் அவர் முன்பைவிட அதிக ஆர்வத்தைக் காட்டலாம். எனவே, ஆர்வம் காட்டுகிறவர்களை உடனே போய்ப் பார்க்க தீர்மானமாய் இருங்கள்!