கடவுளை மகிமைப்படுத்தும் நடத்தை
1. மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்கிற சாட்சிகள் ஏன் தனித்துத் தெரிவார்கள்?
1 மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்ளும்போது, அந்த ஊர் மக்களுக்கு நாம் தனித்துத் தெரிவோம். மாநாடு நடைபெறும் அநேக ஊர்களில், நம்முடைய மாநாட்டைப் பற்றி உள்ளூர் செய்தியாளர்கள் செய்திகளை வெளியிடுவார்கள். அங்குள்ள ஓட்டல்களில் எங்கு பார்த்தாலும் சாட்சிகளே தங்கியிருப்பார்கள்; அவர்கள் பேட்ஜ் கார்டு அணிந்திருப்பதை சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் கவனிப்பார்கள். எனவே, நம்முடைய நடத்தை கடவுளை மகிமைப்படுத்தும் விதத்தில் இருப்பதற்காகச் சில நினைப்பூட்டுதல்களை இப்போது கவனிக்கலாம்.—1 பே. 2:12.
2. மாநாடு நடக்கும் ஊரில் நாம் அணிகிற அடக்கமான உடை கடவுளை எப்படி மகிமைப்படுத்தும்?
2 அடக்கமான உடை: மாநாட்டின்போது நாம் அணிந்திருக்கும் அடக்கமான உடை அநேகருடைய மனதைக் கவர்ந்திருக்கிறது. என்றாலும், மற்ற சமயங்களில், அதாவது லாட்ஜுகளில் தங்கும்போது, உணவகங்களுக்குச் செல்லும்போது, கடைகளுக்குப் போகும்போது, நம்முடைய உடை நம்மைப் பற்றி இன்னும் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட சமயங்களில், மாநாட்டிற்கு அணிவது போன்ற உடைகளை நாம் அணிய வேண்டியதில்லை என்றாலும், நாம் உடுத்துகிற உடை அடக்கமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும், ஏனோதானோவென்று இருக்கக் கூடாது. நமக்கும் உலகத்தாருக்கும் இடையே உள்ள வித்தியாசம் மற்றவர்களுக்குப் பளிச்செனத் தெரிய வேண்டும். (ரோ. 12:12) அச்சமயங்களில் மாநாட்டு பேட்ஜை அணிந்துகொள்ளவும் நாம் மறந்துவிடக் கூடாது; இது, மாநாட்டை விளம்பரப்படுத்தும், சாட்சி கொடுக்க வாய்ப்பளிக்கும், மற்ற சாட்சிகளுக்கு நம்மை அடையாளம் காட்டும்.
3. நாம் எப்படிப் பொறுமையாக, கரிசனையாக நடந்துகொள்ளலாம்?
3 பொறுமை, கரிசனை: சுயநலவாதிகளும் நன்றிகெட்டவர்களும் நிறைந்த இந்த உலகில், மற்றவர்களிடமும் ஓட்டல் பணியாளர்களிடமும் நாம் பொறுமையாக, கரிசனையாக நடந்துகொள்ளும்போது அவர்கள் மனம் குளிர்வார்கள். (2 தீ. 3:1-5) மாநாட்டு மன்றத்தில் இருக்கைகளைப் பிடித்து வைக்கும்போது அல்லது புதிய வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கும்போது, நம்முடைய நலனை நாடாமல் பிறருடைய நலனை நாட வேண்டும். (1 கொ. 10:23, 24) ஆர்வமுள்ள ஒரு நபர் முதன்முதலாக மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இப்படிச் சொன்னார்: “அன்றைக்கு என்னென்ன பேச்சுகளைக் கேட்டேன் என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால், அங்கிருந்த சாட்சிகளுடைய நல்ல நடத்தையை மட்டும் என்னால் மறக்க முடியாது.”
4. சூழ்நிலை அனுமதித்தால், மாநாட்டின்போது வாலண்டியர் சேவை செய்வது பற்றி நாம் ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
4 வாலண்டியர்கள்: மனப்பூர்வமாகச் சேவை செய்யும் மனப்பான்மை உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம்! (சங். 110:3) எனவே, மாநாட்டின்போது உங்களால் மனப்பூர்வமாக வாலண்டியர் சேவை செய்ய முடியுமா? ஒருசமயம், மாநாடு நடைபெறுவதற்குமுன் அந்த வளாகத்தைச் சுத்தப்படுத்த சுமார் 600 சகோதர சகோதரிகள் வாலண்டியர்களாகச் சேவை செய்தார்கள். இதைப் பார்த்த அந்த வளாகத்தின் பணியாளர்கள் சொன்னார்கள்: “எங்கள் கண்ணையே எங்களால் நம்ப முடியவில்லை. சுத்தம் செய்த அத்தனை பேருமே வாலண்டியர்கள் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!” இந்த வருட மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்; மாநாட்டு சமயத்தில், கடவுளிடமிருந்து கேட்டுக் கற்றுக்கொள்வதற்கு மட்டுமல்ல, அவரை மகிமைப்படுத்தவும் நல்ல வாய்ப்பைப் பெறுகிறோம்.
[பக்கம் 2-ன் பெட்டி]
2013 மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப இசை துவங்கப் போவதாக அறிவிக்கப்படும்போது நாம் எல்லோரும் நம்முடைய இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்; கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக இது உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 4:50 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 3:35 மணிக்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: சில மாநாட்டு வளாகங்களில் வாகனம் நிறுத்துமிடத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பு நம் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படலாம். அப்போது, முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த இடம் அளிக்கப்படும். பொதுவாக வாகனங்களை நிறுத்துவதற்குக் குறைவான இடமே இருக்கும் என்பதால் ஒரு காரில் பலர் ஒன்றாகச் சேர்ந்து வருவதற்குக் கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும். லைசென்ஸ் பிளேட் உள்ளவர்கள் அல்லது ஊனமுற்றவர்களுக்கான கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பார்க் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தாருக்கு அல்லது தற்போது உங்களுடன் பைபிளைப் படித்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம். முதியவர்களுக்கும் சுகவீனர்களுக்கும் ஒரு சில இருக்கைகளே ஒதுக்கப்படும் என்பதால் அவர்களுடைய குடும்பத்தார் அனைவரும் அவர்கள் அருகில் அமர முடியாது. எனவே, அவர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கும் அந்த இருக்கைகளை ஒதுக்கி வையுங்கள்.—1 கொ. 13:5.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்குத் தயவுசெய்து எளிய மதிய உணவை எடுத்து வாருங்கள்.
◼ நன்கொடைகள்: மாநாட்டு மன்றத்திலுள்ள நன்கொடைப் பெட்டிகளில் உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் போடுவதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நம் நன்றியுணர்வைக் காட்டலாம். “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயரில் செக் எழுதவும்.
◼ மருத்துவ உதவி: நீங்கள் ஏதாவது மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டியிருந்தால், உங்களுக்குத் தேவையானவற்றைத் தயவுசெய்து கையோடு எடுத்து வாருங்கள். மாநாட்டு மன்றத்தில் அவை உங்களுக்குக் கிடைக்காது. சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ஊசிகளை மற்ற குப்பைகளோடு சேர்த்து மாநாட்டு மன்றங்களிலும் ஓட்டல்களிலும் போடக்கூடாது. அதைத் தனியாக அப்புறப்படுத்த வேண்டும்.
◼ காலணிகள்: பொருத்தமற்ற காலணிகள் அணிவதால் ஒவ்வொரு வருடமும் மாநாட்டின்போது நிறையப் பேருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே, உங்களுடைய கால்களுக்குப் பொருந்தும் நேர்த்தியான காலணிகளை அணிவது மிகவும் நல்லது; இது படிக்கட்டுகள், இரும்பு சட்டங்கள் போன்றவற்றின் மீது நடக்கும்போது தடுக்கி விழுந்துவிடாதிருக்க உதவும்.
◼ காதுகேளாதோருக்கு: சில இடங்களில் நிகழ்ச்சிகள் சைகை மொழியிலும் வழங்கப்படும்.
◼ சென்ட்டுகள்: பெரும்பாலான மாநாடுகள் நாலாபக்கமும் மூடியிருக்கும் அரங்குகளில் நடைபெறுகின்றன. அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. எனவே, சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, நறுமணப் பொருள்களையோ வாசனைத் தைலங்களையோ சென்ட்டுகளையோ நாம் அளவாகப் பயன்படுத்துவது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது ஆர்வமுள்ள ஒருவரை நாம் சந்தித்திருந்தால், தயவுசெய்து போய் பார்க்கவும் படிவத்தைப் பூர்த்தி செய்து மாநாட்டு புத்தக இலாகாவில் கொடுக்கலாம் அல்லது உங்களுடைய சபை செயலரிடம் பின்னர் கொடுக்கலாம்.
◼ உணவகங்கள்: உணவகங்களில் உங்கள் நல்நடத்தை மூலம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேருங்கள். உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு ஏற்ப நேர்த்தியாக உடை அணியுங்கள். உள்ளூர் வழக்கப்படி டிப்ஸ் கொடுக்க வேண்டியிருந்தால் கொடுங்கள்.
◼ தங்கும் ஓட்டல்கள்:
(1) தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை முன்பதிவு செய்யாதீர்கள். அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமானோரை உங்கள் அறையில் தங்க வைக்காதீர்கள்.
(2) நீங்கள் பதிவு செய்திருக்கும் அறையை அநாவசியமாக ரத்து செய்யாதீர்கள்; அப்படி ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உடனடியாக அதன் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (மத். 5:37) ரத்து செய்யும்போது அதற்குரிய எண்ணையும் கண்டிப்பாகப் பெறுங்கள். உங்களுடைய அறையை 48 மணிநேரத்திற்கு முன்னால் ரத்து செய்யாவிட்டால் அறைக்கான முன்தொகை திருப்பித் தரப்படாது.
(3) ஓட்டலில் ரிஜிஸ்டர் செய்யும்போது நீங்கள் ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்டைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்து வைத்துக்கொள்வது பொதுவான வழக்கமாகும். இது, தங்கும் அறைக்கான மொத்த வாடகைக்காகவும், தெரியாத்தனமாக நீங்கள் ஏதாவது சேதம் ஏற்படுத்தினால் அதற்காகவும் எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் அங்கிருந்து சென்ற பிறகு கொஞ்ச நாட்களுக்கு, அதாவது உங்களுடைய அக்கவுண்ட் செட்டில் ஆகும்வரை, அந்தத் தொகையை உங்களால் பயன்படுத்த முடியாது.
(4) லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள்.
(5) டிப்ஸ் கொடுப்பது அவரவருடைய விருப்பம் என்றாலும், ஓட்டலில் சௌகரியமாகத் தங்க உதவுகிற பணியாளர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது அன்பான செயலாகும்.
(6) சமைப்பதற்கு அனுமதியில்லாத அறைகளில் சமைக்காதீர்கள்.
(7) ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.
(8) ஓட்டல் பணியாளர்களிடம் எல்லாச் சமயத்திலும் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை வெளிக்காட்டுங்கள். அவர்கள் எத்தனையோ பேரைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நாம் கனிவாக, பொறுமையாக, நியாயமாக நடந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார்கள்.
(9) ஓட்டல் வளாகத்திலுள்ள லிப்ட், நீச்சல் குளம், வரவேற்பு அறை, உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் இருக்கும்போது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
(10) சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியல்களில் அறை வாடகையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்பட்ட ஒருநாள் வாடகையாகும். கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறை வசதி இலாகாவுடன் தொடர்புகொள்ளுங்கள்.
(11) உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், மாநாட்டு வளாகத்தில் இருக்கும்போதே அறை வசதி இலாகாவிடம் மறக்காமல் தெரிவியுங்கள். அப்போதுதான் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
◼ வாலண்டியர் சேவை: வாலண்டியர் சேவையில் ஈடுபட யாருக்காவது விருப்பமிருந்தால், மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளும்கூட தங்களுடைய பெற்றோர் அல்லது தங்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற பொறுப்புள்ள ஒருவரின் மேற்பார்வையில் சேவை செய்யலாம்.