பலன் தரும் விசேஷ விநியோகிப்பு
மாவட்ட மாநாட்டிற்கான அழைப்பிதழை மாநாடு ஆரம்பிப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே நம் பிராந்தியத்திலுள்ள ஆர்வமுள்ளோருக்குக் கொடுக்க ஆரம்பிப்போம். வருடந்தோறும் செய்யப்படுகிற இந்த விசேஷ விநியோகிப்பிற்கு நல்ல காரணம் இருக்கிறது. அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு மாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலோர், அங்கு கொடுக்கப்பட்ட பைபிள் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்; முழுக்கமுழுக்க வாலண்டியர்களாலான இலாகாக்கள் ஒழுங்காகச் செயல்படுவதைக் கண்டு வியந்திருக்கிறார்கள்; நம்முடைய நன்னடத்தையையும் ஐக்கியத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். (சங். 110:3; 133:1; ஏசா. 65:13, 14) என்றாலும், மாநாட்டில் கலந்துகொள்ள வெகு தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ள இடங்களில்கூட இந்த விசேஷ விநியோகிப்பு பலன் தந்திருக்கிறதா?
2011 மாவட்ட மாநாட்டிற்குப் பிறகு, ஒரு பெண்ணிடமிருந்து கிளை அலுவலகம் ஒன்றுக்குக் கடிதம் வந்தது; யெகோவாவின் சாட்சி ஒருவர் அவருடைய வீட்டுக் கதவருகே மாநாட்டு அழைப்பிதழை விட்டுச் சென்றிருக்கிறார். பொதுவாக, யெகோவாவின் சாட்சிகள் வந்தாலே அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டாராம். அவர் சொல்கிறார்: “அம்சமான வீடு, பாசமான கணவருன்னு எனக்கு எல்லாமே இருந்தாலும் சந்தோஷம் மட்டும் இல்ல. வாழ்க்கை வெறுமையா இருந்துது. எதுக்காக வாழ்றோம்னு புரியாம இருந்துது. அதனால, 320 கிலோமீட்டர் பயணம் செஞ்சு சனிக்கிழமை மாநாட்டுல கலந்துக்கிட்டேன்.” அந்த மாநாடு அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது; அதனால் அங்கேயே தங்கி மறுநாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளப்போவதாகத் தன் கணவரிடம் ஃபோனில் சொன்னார். “அங்கே கேட்ட பேச்சுகளெல்லாம் ரொம்ப அருமையா இருந்துது, சாட்சிகள் நிறையப் பேரைப் பார்த்துப் பேசினேன். மாநாடு முடிஞ்சும் அங்கிருந்து வரவே எனக்கு மனசில்ல.” வீடு திரும்பிய பிறகு சாட்சிகளோடு அவர் படிக்க ஆரம்பித்தார், நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபி ஆனார். “அந்த அழைப்பிதழ் மட்டும் அன்னைக்கு எனக்கு கிடைக்கலன்னா, வாழ்க்கைக்கான அர்த்தத்தையே நான் இன்னைக்குத் தெரிஞ்சிருக்க மாட்டேன்.”
அழைப்பிதழைப் பெறும் சிலர் மாநாட்டுக்கு வருவார்கள். எனவே, இந்த முக்கியமான விநியோகிப்பில் ஆர்வமாகக் கலந்துகொள்ளுங்கள். மிச்சமிருக்கும் அழைப்பிதழ்களை மாநாடு நடைபெறும் ஊருக்கு எடுத்து வாருங்கள், சந்தர்ப்ப சாட்சி கொடுக்க அவற்றைப் பயன்படுத்துங்கள்.
[பக்கம் 2-ன் படம்]
அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம்?
நம் ஊழியப் பகுதி முழுவதிலும் அழைப்பிதழைக் கொடுக்க வேண்டியிருப்பதால், நாம் சுருக்கமாகப் பேச வேண்டும். ஒருவேளை இப்படிச் சொல்லலாம்: “வணக்கம். உலகம் முழுவதும் கொடுக்கப்படுகிற இந்த அழைப்பிதழை உங்களுக்கும் கொடுக்க நாங்கள் வந்திருக்கிறோம். கூடுதலான விவரங்களை இதில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.” உற்சாகமாகப் பேசுங்கள். வார இறுதி நாட்களில் இந்த அழைப்பிதழைக் கொடுக்கும்போது, வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் பத்திரிகைகளையும் சேர்த்துக் கொடுங்கள்!