கவனமாகக் கேட்டுக் கற்றுக்கொள்ளுங்கள்
1. மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கவனமாகக் கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஏன் அதிக முயற்சி தேவைப்படுகிறது?
1 இந்த வருடத்திற்கான மாவட்ட மாநாடுகள் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றன. உலகளவில் தற்போதுள்ள தேவைகளை அடிப்படையாக வைத்து இந்நிகழ்ச்சியைத் தயாரிக்க அதிக முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாளும் மாநாட்டில் கலந்துகொள்ள நீங்கள் ஏற்பாடு செய்துவிட்டீர்களா? பெரிய மாநாடுகளில் கவனச்சிதறல்கள் நிறைய இருக்கும். சபைக் கூட்டங்களைவிட மாநாட்டு நிகழ்ச்சிகள் அதிக நேரம் நீடிக்கும்; எனவே, பேச்சுகளை உன்னிப்பாகக் கவனிக்க முயற்சியெடுக்க வேண்டியிருக்கும். அதோடு, பயணம் செய்ததாலோ வேறு ஏதாவது காரணத்தினாலோ நாம் களைப்பாக உணரலாம். விழிப்பாக இருந்து பேச்சுகளைக் கவனித்துக் கேட்பதற்கும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் எது நமக்கு உதவும்?—உபா. 31:12.
2. மாநாட்டு நிகழ்ச்சிக்கு நம் இருதயத்தை எப்படித் தயார்படுத்தலாம்?
2 மாநாட்டிற்குமுன்: www.jw.org என்ற நம் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் மாநாட்டு நிகழ்ச்சிநிரல் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எல்லாப் பேச்சுகளின் தலைப்புகளும் அவற்றுக்குரிய முக்கிய வசனங்களும் இருக்கும். நமக்கு இன்டர்நெட் வசதி இருந்தால் நிகழ்ச்சிநிரலை முன்கூட்டியே பார்த்துவிட்டு வருவது நம் இருதயத்தைப் பக்குவப்படுத்துவதற்கு, அதாவது தயார்படுத்துவதற்கு, பேருதவியாக இருக்கும். (எஸ்றா 7:10) இதை, குடும்ப வழிபாட்டின்போது கலந்தாலோசித்தால் குடும்பத்தார் அனைவரும் மாநாட்டை ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்; எனவே, அப்படிச் செய்ய நேரம் ஒதுக்குவீர்களா?
3. மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கவனமாகக் கேட்க எது நமக்கு உதவும்?
3 மாநாட்டின்போது: நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கழிவறையைப் பயன்படுத்திவிட்டு வருவது நல்லது. ஃபோன் செய்வதையும் மெசேஜ் அனுப்புவதையும் தவிர்ப்பதற்கு உங்கள் ஃபோனை ஆஃப் செய்வது நல்லது. ஃபோனை ஆன் செய்து வைக்க வேண்டியிருந்தால் மற்றவர்களுக்குத் தொந்தரவு ஏற்படாத விதத்தில் அதன் செட்டிங்கை மாற்றி வையுங்கள். நிகழ்ச்சியின்போது நீங்கள் எலெக்ட்ரானிக் டாப்லெட்டை (tablet) பயன்படுத்த வேண்டியிருந்தால் மற்றவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்காத விதத்தில் பயன்படுத்துங்கள். மாநாடு நடக்கும்போது தின்பண்டங்கள் சாப்பிடுவதையோ பானங்கள் குடிப்பதையோ தவிர்த்திடுங்கள். (பிர. 3:1) பேச்சாளர்மீதே உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். வசனம் வாசிக்கப்பட்டால் அதை உங்கள் பைபிளில் திறந்து பாருங்கள். சுருக்கமான குறிப்புகளை எடுங்கள்.
4. பிள்ளைகள் கவனமாகக் கேட்டுக் கற்றுக்கொள்ள பெற்றோர் எப்படி உதவலாம்?
4 நம் பிள்ளைகளும் கவனமாகக் கேட்டுக் கற்றுக்கொள்ள வேண்டுமென நாம் விரும்புகிறோம். “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” என்று நீதிமொழிகள் 29:15 சொல்கிறது. எனவே, குடும்பமாக உட்காருவது நல்லது, அப்போதுதான் பிள்ளைகள்மீது பெற்றோரால் ஒருகண் வைக்க முடியும். அவர்கள் அநாவசியமாகப் பேசுகிறார்களா, மெசேஜ் அனுப்புகிறார்களா, அல்லது இங்கும் அங்கும் நடக்கிறார்களா என்று கவனிக்க முடியும். பேச்சுகளைப் புரிந்துகொள்ள முடியாதளவு ரொம்ப சின்ன பிள்ளைகளாக இருந்தால்கூட தூங்காமல் அமைதியாக உட்கார அவர்களைப் பழக்க முடியும்.
5. மாநாட்டு நிகழ்ச்சிகளை மறுபார்வை செய்வது ஏன் நல்லது, அதை எப்படிச் செய்யலாம்?
5 ஒவ்வொரு நாளும் மாநாடு முடிந்தபின்: வெளியே வெகு நேரம் சுற்றிக்கொண்டிருக்காதீர்கள். இரவு சீக்கிரமாகவே படுக்கைக்குப் போங்கள், போதுமான ஓய்வு எடுங்கள். அன்றைய நாளில் கற்றுக்கொண்ட விஷயங்களைத் திரும்ப யோசித்துப் பார்த்தீர்களென்றால், மறக்க மாட்டீர்கள். எனவே, நிகழ்ச்சி முடிந்தபின் ஒவ்வொரு மாலையும் குடும்பமாகச் சேர்ந்து கொஞ்ச நேரம் கலந்துபேசுங்கள். நண்பர்களோடு சேர்ந்து ஓட்டலுக்குச் செல்கிறீர்கள் என்றால் மாநாட்டில் எடுத்த குறிப்புகளையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள், உங்களுக்குப் பிடித்த ஓரிரு குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மாநாடு முடிந்து வீடு திரும்பியபின், கற்றுக்கொண்ட விஷயங்களை எப்படிக் குடும்பமாகக் கடைப்பிடிக்கலாம் என்று குடும்ப வழிபாட்டின்போது கலந்துபேசுங்கள். அதோடு, புதிய வெளியீடுகளைப் பற்றிக் கலந்துபேச ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்குங்கள்.
6. மாநாட்டுக்குச் சென்றால் மட்டும் போதுமா? விளக்கவும்.
6 ஒரு விருந்துக்குச் சென்றால் மட்டும் போதாது அங்குள்ள உணவை ருசித்துச் சாப்பிட வேண்டும், அது நன்கு ஜீரணமாக வேண்டும்; அப்போதுதான் நன்மை அடைவோம். மாநாட்டில் பரிமாறப்படும் ஆன்மீக உணவும் அதுபோலத்தான். எனவே, மாநாட்டிலிருந்து முழுமையாகப் பயனடைய, எல்லா நிகழ்ச்சிநிரலுக்கும் ஆஜராகி ஒவ்வொரு பேச்சையும் கவனமாகக் கேட்போமாக, கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடிப்போமாக.