தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—யோனா
1. யோனா என்ன அருமையான குணங்களைக் காட்டினார்?
1 யோனா தீர்க்கதரிசி எப்படிப்பட்டவர் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? சிலர் அவரை ஒரு கோழை என்றோ, கல்நெஞ்சக்காரர் என்றோ சொல்லலாம். ஆனால், உண்மையில் அவர் மனத்தாழ்மையுள்ளவர், தைரியமிக்கவர், சுயதியாக மனப்பான்மையுள்ளவர். இந்த அருமையான குணங்களைக் காட்டிய யோனாவின் ‘முன்மாதிரியை’ நாம் எப்படிப் பின்பற்றலாம்?—யாக். 5:10.
2. யோனாவைப் போல் நாம் எப்படி மனத்தாழ்மை காட்டலாம்?
2 மனத்தாழ்மை: யெகோவா முதல் முறை யோனாவிடம் நினிவே நகரத்திற்குப் போகச் சொன்னபோது அவர் அங்கு போகாமல் எதிர்திசையில் ஓடிப்போனார். அவர் அப்படி ஓடியதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அசீரியர்கள் மிருகக் குணம் படைத்தவர்கள். நினிவே நகரமும் ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. (நாகூ. 3:1-3) ஆனால், யெகோவா யோனாவைத் திருத்தி, இரண்டாவது முறை வாய்ப்பு கொடுத்தபோது அதை அவர் மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். (நீதி. 24:32; யோனா 3:1-3) ஆரம்பத்தில் அவர் அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பிற்பாடு யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றினார். (மத். 21:28-31) கண்டித்துத் திருத்தப்படும்போதும், சவாலான பிராந்தியத்தில் ஊழிய நியமிப்பு கிடைக்கும்போதும் யோனாவைப் போலவே நாமும் திடத்தீர்மானத்தோடு நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோமா?
3. ஊழியத்தில் எது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு தைரியமும் சுயதியாக மனப்பான்மையும் தேவைப்படுகிறது?
3 தைரியம், சுயதியாகம்: யோனா எடுத்த தவறான முடிவு மாலுமிகளின் உயிருக்கே உலை வைத்தது. அப்போது, அவர்களுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்ய அவர் துணிந்தார். (யோனா 1:3, 4, 12) பிற்பாடு, கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நியாயத்தீர்ப்புச் செய்தியைச் சொல்ல நினிவே நகரத்தின் மையப் பகுதிக்கே சென்றார். யோனா கோழையாக இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்பாரா? இல்லவே இல்லை! அவர் தைரியமிக்க தீர்க்கதரிசி என்பதற்கு இதுவே அத்தாட்சி! (யோனா 3:3, 4) நாம் அவரைப் போல் இருப்போமா? எதிர்ப்பின் மத்தியிலும் பயப்படாமல் சாட்சி கொடுக்க நமக்கும் தைரியம் தேவைப்படுகிறது. (அப். 4:29, 31) ஊழியத்தில் நம் நேரத்தையும் நம் வளத்தையும் செலவிட சுயதியாக மனப்பான்மை தேவைப்படுகிறது.—அப். 20:24.
4. தீர்க்கதரிசிகளின் அருமையான முன்மாதிரியைப் பற்றித் தியானிக்க நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்?
4 தீர்க்கதரிசி ஒருவரைப் பற்றி ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போது அவருடைய இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அப்போது, பல நன்மைகளை அடைவீர்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: அவருடைய சூழ்நிலையில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன்? அவருடைய நல்ல குணங்களை நான் எப்படிப் பின்பற்றலாம்? (எபி. 6:11, 12) விசுவாசமிக்க தீர்க்கதரிசிகளைப் பற்றிய கட்டுரைகள் நம் ராஜ்ய ஊழியத்தில் தொடர்ந்து வெளிவர உள்ளன. அவர்களிடமிருந்து நிறைய அருமையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம்.