ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவா அன்பே உருவானவர். அதனால்தான், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 4:8) யெகோவா சர்வவல்லவராக இருந்தாலும், அவர் “வல்லமையாகவே இருக்கிறார்” என்றோ “சக்தியாகவே இருக்கிறார்” என்றோ பைபிள் சொல்வதில்லை. அவர் அன்பின் அடிப்படையில்தான் ஆட்சி செய்கிறார். அந்த அன்புதான் நம்மை அவரிடமாக ஈர்க்கிறது!
யெகோவா ஒரு சர்வாதிகாரி அல்ல. தம்மைச் சேவிக்கும்படி அவர் யாரையுமே கட்டாயப்படுத்துவதில்லை. அன்பு பொங்கும் இருதயத்தோடு நாம் அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அப்படிச் செய்யும்போது, அவருடைய ஆட்சியே சிறந்தது, சரியானது, அன்பானது என நாம் நம்புவதைக் காட்டுகிறோம்; அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அவருடைய ஆட்சியே சரியானது, அன்பானது என்பது மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
தமக்குக் கீழ்ப்படியும்படி ஆதாம்-ஏவாளை அவர் கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, சுயமாகத் தீர்மானமெடுக்க அவர்களுக்கு வாய்ப்பளித்தார். அவர்கள் உண்மையிலேயே யெகோவாவை நேசித்திருந்தால், தங்களுக்காக அவர் செய்த காரியங்களை மதித்திருந்தால், சாத்தானுடைய தூண்டுதலுக்கு நிச்சயம் இணங்கியிருக்க மாட்டார்கள்.
மோசே இஸ்ரவேல் மக்கள்முன் கடைசியாகக் கொடுத்த பேச்சில்: “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று [உங்கள்] முன்னே வைத்தேன்” என்று சொன்னார். (உபா. 30:15) எப்படி வாழ வேண்டுமெனத் தீர்மானிக்க அந்த மக்களுக்குச் சுதந்திரம் இருந்ததை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. யோசுவாவும் இஸ்ரவேலரிடம்: ‘யெகோவாவைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னே யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்’ என்றார். அப்பொழுது அந்த மக்கள், ‘யெகோவாவைவிட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக’ என்றார்கள். (யோசு. 24:15, 16) இன்று நாமும் அவர்களைப் போலவே உணருகிறோம். நாம் யெகோவாவை நேசிப்பதால், அவரைவிட்டு விலகுவது நமக்கு ‘தூரமாயிருக்கிறது,’ அதாவது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாக இருக்கிறது.
சுயமாகத் தீர்மானமெடுக்கிற உரிமையில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறதென்று உண்மைக் கிறிஸ்தவர்களான நமக்கு நன்றாகவே தெரியும். புத்திமதி கொடுப்பதற்கும், கண்டித்துத் திருத்துவதற்கும் மூப்பர்களுக்கு அதிகாரம் இருந்தாலும், சபையாரை அடக்கியாளவோ அவர்களுடைய வாழ்க்கையை அல்லது விசுவாசத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ அவர்கள் நினைப்பதில்லை. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாய் இருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை; உங்களுடைய சந்தோஷத்திற்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம்; ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தினால்தான் நீங்கள் உறுதியாய் நிற்கிறீர்கள்.”—2 கொ. 1:24.
ஏதோவொன்றைக் கட்டாயத்தினால் செய்யாமல், சொந்த விருப்பத்தினால் செய்யும்போது, எவ்வளவு திருப்தியாக இருக்கும்! நன்மையான காரியங்களை அன்பினால் தூண்டப்பட்டே நாம் செய்ய வேண்டுமென யெகோவா விரும்புகிறார். பவுலின் பின்வரும் வார்த்தைகளிலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறோம்: “தற்பெருமைக்காக என்னிடம் இருப்பதையெல்லாம் அன்னதானத்திற்குக் கொடுத்தாலும் என் உயிரையே தியாகம் செய்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.”—1 கொ. 13:3.
லட்சக்கணக்கான நம் சகோதர சகோதரிகள் யெகோவாமீது முழு இருதயத்தோடு அன்புகாட்டி அவரைச் சேவிப்பதைப் பார்க்கும்போது அவருடைய மனம் எவ்வளவாய் சந்தோஷப்படும்! அது எவ்வளவாய் அவருக்குப் புகழ் சேர்க்கும்!
தம்மைச் சேவிக்கிற அனைவர்மீதும் யெகோவா ரொம்பவே அன்புகாட்டுகிறார்; ஆம், இந்த உலகத்தையும் அது தூண்டிவிடுகிற சுயநல ஆசைகளையும் நேசிக்காமல் தம்மை நேசிக்கிற பிள்ளைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என உங்கள் எல்லோரையும் அவர் நேசிக்கிறார். நாங்களும் உங்களை உள்ளப்பூர்வமாக நேசிக்கிறோம்.—லூக். 12:42, 43.
சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யெகோவா மீதுள்ள அன்பின் காரணமாக நீங்கள் சென்ற வருடம் 1,74,86,97,447 மணிநேரம் நற்செய்தியை அறிவித்தீர்கள். அன்பினால் தூண்டப்பட்டு உலகெங்கும் 77,82,346 பேர் ஊழியத்தில் ஈடுபட்டீர்கள். ஏராளமான பிள்ளைகள் உட்பட 2,68,777 பேர் ஞானஸ்நானம் பெற்றீர்கள். அப்படியானால், ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5,168 பேர் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். இதெல்லாம் எங்கள் இருதயத்தை எவ்வளவாய் நெகிழ வைக்கிறது!
இந்தக் கடைசி காலத்தில், கடவுளுடைய மக்கள் அநேக பிரச்சினைகளையும் சவால்களையும் துன்புறுத்தல்களையும் வியாதிகளையும் சகித்து சமாளிக்க வேண்டியிருக்கிறது; சிலர் வயோதிபத்தினால் போராட வேண்டியிருக்கிறது. ஆனாலும் நாம் ‘பின்வாங்காதிருக்க’ தீர்மானமாய் இருக்கிறோம். உங்கள் எல்லோரையுமே நாங்கள் மனதார நேசிக்கிறோம் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.—எபி. 10:39; 2 கொ. 4:16.
உங்கள் சகோதரர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு