முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—தயாரிக்க மாணாக்கர்களுக்குப் பயிற்சியளியுங்கள்
1 பைபிள் மாணாக்கர் ஒருவர் முன்னதாகவே அந்த வாரத்திற்குரிய பாடத்தை வாசித்து, பதில்களை அடிக்கோடிட்டு, சொந்த வார்த்தையில் எப்படிப் பதில் சொல்லலாம் என யோசித்து வைத்தாரென்றால்... அவர் சீக்கிரம் முன்னேற்றம் அடைவார். ஆகவே, ஒருவருடன் தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்த நீங்கள் ஆரம்பித்துவிட்டால், படிப்பிற்குத் தயாரிப்பது எப்படி என்பதை அவருக்குச் சொல்லிக்கொடுங்கள். அதற்காக, அவரோடு சேர்ந்து தயாரியுங்கள். இப்படி ஓர் அதிகாரம் அல்லது பாடம் முழுவதையும் மாணாக்கர்களோடு சேர்ந்து தயாரிக்கும்போது பெரும்பாலோர் மிகவும் பயனடைவார்கள்.
2 அடிக்கோடு இடுவதும் குறிப்பு எழுதுவதும்: புத்தகத்திலுள்ள கேள்விகளுக்கு நேரடியான பதிலை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். உங்களுடைய புத்தகத்தில் முக்கியமான வார்த்தைகளுக்கு அல்லது சொற்றொடர்களுக்கு மட்டும் நீங்கள் அடிக்கோடிட்டிருப்பதை அவரிடம் காட்டுங்கள். அப்போது அவரும் உங்களைப் போல் செய்வார்; பதிலைச் சட்டென்று ஞாபகப்படுத்திக்கொள்ள வசதியாக அவருடைய புத்தகத்தில் முக்கியமான வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை மட்டும் அடிக்கோடிட்டு வைத்துக்கொள்வார். (லூக். 6:40) பின்னர், அவருடைய சொந்த வார்த்தையில் பதிலளிக்கச் சொல்லுங்கள். இப்படிச் செய்தீர்களென்றால், படிக்கிற விஷயத்தை அவர் எந்தளவு புரிந்துகொள்கிறாரென உங்களுக்குத் தெரிந்துவிடும்.
3 படிப்பிற்காகத் தயாரிக்கும்போது, மேற்கோளின்றி கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை மாணாக்கர் தன்னுடைய பைபிளில் எடுத்துப் பார்த்து அதைக் குறித்து நிதானமாக யோசிக்க வேண்டும். (அப். 17:11) பாராவில் உள்ள ஏதோ ஒரு குறிப்பை ஆதரிப்பதற்காகவே அந்த வசனங்கள் ஒவ்வொன்றும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுங்கள். அவருடைய புத்தகத்தில் ஓர் ஓரமாக, சுருக்கமான குறிப்புகளை எப்படி எழுதிக்கொள்ளலாம் என்பதைக் காட்டுங்கள். அவர் படிக்கிற விஷயங்கள் எல்லாமே பைபிளில் உள்ளவைதான் என்பதை அவருக்கு வலியுறுத்துங்கள். மேற்கோளின்றி கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைத் தாராளமாகப் பயன்படுத்திப் பதில் சொல்வதற்கு அவரை ஊக்கப்படுத்துங்கள்.
4 மேலோட்டமான பார்வையும் மறுபார்வையும்: அந்த வாரத்திற்கான பகுதியை விலாவாரியாகப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன் அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை மேலோட்டமாகப் பார்வையிடுவது மாணாக்கருக்குப் பயனுள்ளதாய் இருக்கும். அதை எப்படிச் செய்யலாம்? அதிகாரத்தின் தலைப்பு, உபதலைப்புகள், படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை மேலோட்டமாகப் பார்வையிடும்படி சொல்லுங்கள். தயாரித்து முடித்த பின் அந்தப் பகுதியிலுள்ள முக்கியமான குறிப்புகளை ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு கொஞ்ச நேரம் ஒதுக்கும்படி சொல்லுங்கள். அல்லது அங்கேயே மறுபார்வைப் பெட்டி கொடுக்கப்பட்டிருந்தால் அதைப் பார்க்கும்படி சொல்லுங்கள். இப்படி மீண்டும் பார்வையிடும்போது, படித்த விஷயங்களை மனதில் நன்கு பதியவைத்துக்கொள்ள முடியும்.
5 பைபிள் படிப்பிற்காக நன்கு தயாரிக்க மாணாக்கருக்கு இப்படிப் பயிற்சியளித்தோமென்றால், சபைக் கூட்டங்களிலும்கூட அர்த்தமுள்ள குறிப்புகளை அவர் சொல்லுவார். அதோடு, எதிர்காலத்திலும் நல்ல படிப்புப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பார்.