கேள்விப் பெட்டி
◼ பயனியர்களுக்கு நாம் எப்படியெல்லாம் உதவலாம்?
2009-ஆம் ஊழிய ஆண்டில் உலகெங்கும் கிட்டத்தட்ட 8,00,000 சகோதர சகோதரிகள் ஒழுங்கான பயனியர்களாகவும் விசேஷ பயனியர்களாகவும் ஊழியம் செய்தார்கள். முழுநேர ஊழியர்களாகிய இவர்கள், நற்செய்தியை அறிவிப்பதற்காகத் தங்களுடைய பொன்னான நேரத்தையும், முழு பலத்தையும், முக்கியப் பொருள் வளத்தையும் தியாகம் செய்கிறார்கள். (நீதி. 3:9) அவர்கள் செய்கிற தியாகங்களைப் பார்த்து யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்! அப்படியென்றால், நாமும்கூட அவர்களைப் பார்த்துச் சந்தோஷப்படுவதை என்னென்ன வழிகளில் காட்டலாம்? பயனியர் ஊழியத்தில் மகிழ்ச்சி காணவும் அதில் நிலைத்திருக்கவும் நாம் என்னென்ன வழிகளில் அவர்களுக்கு உதவலாம்?
பயனியர்களோடு நாம் பேசும்போது அவர்களை உற்சாகமூட்டுகிற வார்த்தைகளைச் சொன்னோம் என்றால் தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்ய அவர்கள் நிச்சயமாக உத்வேகம் பெறுவார்கள். (நீதி. 25:11) அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்காக நேரம் ஒதுக்க நம்மால் முடியுமா? அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது, அவர்களுடைய வாகனத்தை உபயோகிப்பதற்குப் பதிலாக நம் வாகனத்தை உபயோகிக்கலாம்; அல்லது பொது வாகனங்களில் பயணிப்பதற்கு ஆகும் செலவை நாம் கொடுக்கலாம். ஒருவேளை அவர்களுடைய வாகனத்தில் நாம் செல்ல வேண்டியிருந்தால், அதற்கான செலவை ஈடுகட்ட நம்மால் முடிந்த பணத்தைக் கொடுத்து உதவலாம். (1 கொ. 13:5; பிலி. 2:4) அதோடு, அவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது அவர்களை உபசரிப்பதன் மூலமும்... முடிந்தபோதெல்லாம் சாப்பாட்டிற்காக அவர்களை நம் வீட்டிற்கு அழைப்பதன் மூலமும்... நம்முடைய அன்பையும் ஆதரவையும் காட்டலாம்.—1 பே. 4:8, 9.
தம்முடைய அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போருடைய தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்வார் என பைபிள் உத்தரவாதம் அளிக்கிறது. (சங். 37:25; மத். 6:33) ஆம், அவர் பல வழிகளில் கவனித்துக்கொள்கிறார்; அதில் ஒரு வழி, அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் மூலமாகும். (1 யோ. 3:16-18) ஆனால், மற்றவர்களிடமிருந்து எந்தப் பொருளுதவியையும் பயனியர்கள் எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்குக் கஷ்டம் ஏதாவது வந்தாலும்கூட, வாய்திறந்து நம்மிடம் சொல்ல அவர்கள் தயங்கலாம். என்றாலும், அப்படிப்பட்ட பக்திவைராக்கியமிக்க பயனியர்கள் ஏதாவது கஷ்டத்தில் இருக்கிறார்களா என்பதை நாம் கூர்ந்து கவனித்து அவர்களுக்கு உதவுவதன் மூலம் ‘அவர்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டலாம்.’—2 கொ. 8:14, 15.
முதல் நூற்றாண்டில் கெங்கிரேயா சபையில் பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்துவந்த சகோதரி பெபேயாள் ரோமாபுரிக்குச் சென்றபோது, ரோமாபுரியிலிருந்த சகோதரர்களிடம் பவுல் இவ்வாறு கேட்டுக்கொண்டார்: “நம் எஜமானரின் சீடர்களாகிய நீங்கள் பரிசுத்தவான்களை எப்படி ஏற்றுக்கொள்வீர்களோ அப்படியே . . . நம் சகோதரி பெபேயாளையும் ஏற்றுக்கொண்டு, அவளுக்குத் தேவைப்படுகிற உதவிகளையெல்லாம் செய்துகொடு[ங்கள்].” (ரோ. 16:1, 2) இன்றும்கூட, நம் சபையில் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வருகிற ஒழுங்கான பயனியர்களுக்கும் விசேஷ பயனியர்களுக்கும் அன்பையும் ஆதரவையும் காட்ட நமக்கு வாய்ப்பு இருக்கிறது.—அப். 5:42.