சத்தியத்தில் இல்லாத ஒரு துணைக்கு உதவுங்கள்
1. சத்தியத்தில் இல்லாத துணைகளும் சத்தியத்திற்கு வரவேண்டுமென்று சபையார் எல்லாருமே ஏன் ஆசைப்படுகிறார்கள்?
1 உங்கள் சபையில் சிலருடைய துணை சத்தியத்தில் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், தங்களுடைய துணையும் சத்தியத்திற்கு வரவேண்டுமென்று நிச்சயம் ஆசைப்படுவார்கள். சபையார் அனைவருடைய ஆசையும்கூட அதுதான்; இந்த விஷயத்தில் கடவுளைப் போலவே அவர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால், “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” அவருடைய ஆசை. (1 தீ. 2:4) ஆகவே, சத்தியத்தில் இல்லாத துணைகளுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்?
2. சத்தியத்தில் இல்லாத துணையை நாம் புரிந்து நடந்துகொள்வது அவர் சத்தியத்திற்கு வர எப்படி உதவும்?
2 முதலில், சத்தியத்தில் இல்லாத துணையின் கண்ணோட்டத்திலிருந்து காரியங்களைப் பார்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அநேகர், தங்களுடைய குடும்பத்தார்மீது உயிரையே வைத்திருப்பார்கள்; தங்கள் மனைவி-மக்களுக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள்; என்றாலும், தங்கள் மதம் என்று வரும்போது இவர்களில் சிலர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் அப்படிப்பட்டவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய உண்மையைத் தெரிந்திருக்க மாட்டார்கள்; ஒருவேளை அவர்களைப் பற்றி அரைகுறையாகக் கேள்விப்பட்டிருக்கிற... அவர்கள்மீது தப்பெண்ணம் கொண்டிருக்கிற... நண்பர்கள் சொல்வதை மட்டுமே கேட்டிருப்பார்கள். சிலர், தங்களுடைய கணவர்/மனைவி முன்பு தங்களோடு செலவிட்ட நேரத்தையெல்லாம் இப்போது கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் கரைப்பதை நினைத்துக் கோபப்படுவார்கள். எனவே, பலரும் பலவிதமாக இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை நாம் கனிவோடும் மதிப்பு மரியாதையோடும் நடத்த வேண்டும்; மறுபட்சத்தில், நம் மத்தியில் அவர்கள் இருக்கும்போது தேவையின்றி பதற்றமடையக் கூடாது.—நீதி. 16:20-23.
3. சத்தியத்தில் இல்லாத துணையைச் சத்தியத்திடம் ஈர்ப்பதற்கு எது மிகச் சிறந்த வழி?
3 அக்கறை காட்டுங்கள்: எடுத்த எடுப்பில் சத்தியத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நம்முடைய செயல்களால் அவரைச் சத்தியத்திடம் ஈர்ப்பதுதான் மிகச் சிறந்த வழியாகும். (1 பே. 3:1, 2) ஆகவே, அவர்மீது தனிப்பட்ட அக்கறை காட்டுவது மிக முக்கியம். சத்தியத்தில் இல்லாத மனைவிகள்மீது சகோதரிகள் அக்கறை காட்டலாம்; கணவர்கள்மீது சகோதரர்கள் அக்கறை காட்டலாம். எப்படி?
4. நாம் எப்படியெல்லாம் தனிப்பட்ட அக்கறை காட்டலாம்?
4 சத்தியத்தில் இல்லாத துணையை நீங்கள் இதுவரை சந்தித்துப் பேசியிருக்காவிட்டால், அதைக் குறித்து சம்பந்தப்பட்ட சகோதரனிடம்/சகோதரியிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அவரிடம் நீங்கள் போய்ப் பேசும்போது ஆரம்பத்தில் அவர் அசைந்துகொடுக்காவிட்டாலும் அதை நினைத்து வருத்தப்படாதீர்கள். ஏனென்றால், சிநேகபாவத்தோடு நாம் நடந்துகொள்வதையும், அவர்மீது தனிப்பட்ட அக்கறை காட்டுவதையும் பார்த்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படலாம். (ரோ. 12:20) முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் சிலர், இப்படிப்பட்ட நபர்களைக் குடும்பத்தோடு தங்கள் வீட்டிற்கு அழைத்து உபசரித்திருக்கிறார்கள்; ஒருவேளை யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவருக்குத் தவறான அபிப்பிராயம் ஏதாவது இருந்தால் அதை அகற்றுவதற்கும், அவரோடு நன்கு பரிச்சயமாவதற்கும் அப்படிச் செய்கிறார்கள். அவரோடு எப்படியாவது ஆன்மீக விஷயங்களைப் பேச வேண்டும் என நினைக்காமல், அவருக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறதோ அதைக் குறித்துப் பேசியிருக்கிறார்கள். பின்பு... அவர் சகஜமாக உணரும்போது... பைபிள் சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பேசலாம். அல்லது, அவருடைய துணை என்ன செய்கிறாரென்று பார்க்க வரும்படி சொல்லி, அவரை நம் கூட்டங்களில் ஒன்றுக்கு அழைக்கலாம். அவருக்குத் தெரிந்த சிலர் சபையில் இருப்பார்களென்பதால் அவரும் உடனே அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம். சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அவருக்கு ஒருவேளை விருப்பம் இல்லாவிட்டாலும், அவருடைய துணைக்குக் கொடுத்துவருகிற ஆதரவுக்காக அவரை நாம் பாராட்ட வேண்டும்.
5. சாட்சியல்லாத நபரைச் சத்தியத்திடம் ஈர்க்க மூப்பர்கள் என்ன செய்யலாம்?
5 முக்கியமாக மூப்பர்கள் இந்த விஷயத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும்; இப்படிப்பட்டவர்களிடம் சாட்சிகொடுக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சத்தியத்தில் இல்லாத துணை முன்பு ஆர்வம் காட்டியிருக்காவிட்டாலும், அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிற சமயத்தில்... அல்லது தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிற சமயத்தில்... நாம் பைபிளிலிருந்து சொல்கிற ஆறுதலான வார்த்தைகளை அவர் காதுகொடுத்துக் கேட்கலாம். கணவர் சத்தியத்தில் இருந்து மனைவி சத்தியத்தில் இல்லாத அல்லது மனைவி சத்தியத்தில் இருந்து கணவர் சத்தியத்தில் இல்லாத ஒரு குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால்... ஒருவேளை அந்தக் குடும்பத்தில் யாராவது இறந்திருந்தால்... மூப்பர்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்போது சத்தியத்தில் இல்லாத அந்த நபரையும் உரையாடலில் சேர்த்துக்கொள்ளலாம்.
6. சத்தியத்தில் இல்லாத துணைக்கு நாம் உதவுவதால் வரும் பலன்கள் என்ன?
6 சத்தியத்தில் இல்லாத தன் துணை நற்செய்திக்குச் செவிசாய்த்து, சத்தியத்திற்கு வருவதைப் பார்க்கும்போது, அந்தச் சகோதரனுக்கோ சகோதரிக்கோ எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்துபாருங்கள். அவருக்கு மட்டுமா, யெகோவாவுக்கும், தேவதூதர்களுக்கும்கூட மகிழ்ச்சியாய் இருக்கும்; நமக்கும் அது ஆனந்தமான அனுபவமே! (லூக். 15:7, 10) ஒருவேளை, சத்தியத்தில் இல்லாத துணை ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லையென்றாலும் நாம் மனந்தளர்ந்துவிடாமல் தொடர்ந்து முயற்சி எடுக்கலாம்; அதைப் பார்த்து யெகோவா அகமகிழ்வார். “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும்” என்பதே அவருடைய விருப்பம்.—2 பே. 3:9.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
எடுத்த எடுப்பில் சத்தியத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நம்முடைய செயல்களால் அவர்களைச் சத்தியத்திடம் ஈர்ப்பதே மிகச் சிறந்த வழியாகும்