அவசர உணர்வுடன் பிரசங்கியுங்கள்!
1. பவுல் கொடுத்த எந்த அறிவுரைக்கு இன்று நாம் கவனம் செலுத்த வேண்டும்?
1 ‘கடவுளுடைய வார்த்தையை . . . அவசர உணர்வுடன் பிரசங்கியுங்கள்.’ (2 தீ. 4:2) பவுல் கொடுத்த அறிவுரை இன்று ஏன் அதிக முக்கியமானதாய் இருக்கிறது? இந்த வார்த்தைகள் நம் மீதும் மற்றவர்கள் மீதும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம்?
2. நற்செய்தியைக் கேள்விப்படாதவர்களை நாம் ஏன் ஊக்கமாய்த் தேடிச் செல்கிறோம்?
2 உயிர்கள் உட்பட்டுள்ளன: மீட்புக்கு வழிநடத்தும் நற்செய்தியைக் கேள்விப்படாதவர்கள் உலகில் இன்னும் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். (ரோ. 10:13-15; 1 தீ. 4:16) அடிக்கடி ஊழியம் செய்யப்படுகிற பகுதிகளில்கூட நல்மனமுள்ள அநேகரைச் சந்திக்க முடிகிறது. வேறொரு நாளிலோ வேறொரு நேரத்திலோ சென்றால் இதுவரை சந்திக்காதவர்களை நாம் சந்திக்கலாம். இப்படி ஊக்கமாய் ஆட்களைத் தேடிச் சென்று ஊழியம் செய்தால் நாம் இரத்தப்பழிக்கு நீங்கலாகி, சுத்தமான மனசாட்சியோடு இருப்போம்.—அப். 20:26.
3. ஊழியம் செய்கையில் நாம் எப்படி நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்தலாம்?
3 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மூர்க்கமாய் எதிர்க்கப்பட்ட போதிலும், ‘எருசலேம் முழுவதையும் தங்கள் போதனையால் நிரப்பினார்கள்.’ (அப். 5:28) அவர்களைப் போல் “முழுமையாகச் சாட்சி கொடுக்க” நாமும் தீர்மானமாய் இருக்கிறோமா? நம் பிராந்தியத்தில் எதிர்ப்பு வரும் என்பதை மனதில் வைத்து, மூப்பர்கள் சொல்லும் இடத்தில் மட்டுமே அவ்வாறு சாட்சி கொடுக்கத் தீர்மானமாய் இருக்கிறோமா? (அப். 10:42) ஊழியம் செய்கையில் நாம் நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்துகிறோமா? மறுசந்திப்புக்குச் சென்றவர்கள் திரும்பி வரும்வரை நாம் காத்திருக்கையில், அவ்வழியே செல்பவர்களிடம் சாதுரியமாகப் பேச முயற்சி செய்கிறோமா?
4. அவசர உணர்வுடன் பிரசங்கிப்பது விழிப்புடன் இருக்க நமக்கு எப்படி உதவுகிறது?
4 அதிக விழிப்புடன் இருக்க உதவுகிறது: இந்தச் சகாப்தத்தின் முடிவு நெருங்கி வந்திருப்பதால், நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். (1 தெ. 5:1-6) நாம் தவறாமல் ஊழியத்திற்குப் போய் நம் நம்பிக்கையைப் பற்றி ஜனங்களிடம் பேசும்போது, இந்த உலகக் காரியங்களால் பாரமடையாமல் இருப்போம். (லூக். 21:34-36) அதோடு, யெகோவாவின் நாளை எப்போதும் ‘மனதில் வைப்போம்’; இது, உயிர்காக்கும் பிரசங்க வேலையில் அதிகளவு ஈடுபட நம்மைத் தூண்டும்.—2 பே. 3:11, 12.
5. உயிரை மதிப்பது, ஊழியம் செய்ய நம்மை எப்படித் தூண்டுகிறது?
5 அவசர உணர்வுடன் நாம் பிரசங்கிக்கையில், உயிரைக் குறித்த யெகோவாவின் கண்ணோட்டத்தை நாமும் கொண்டிருப்போம்; அவர், ‘ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்.’ (2 பே. 3:9; எசே. 33:11) யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில், நம் பிராந்தியத்தில் எத்தனை பேருக்கு நற்செய்தியை அறிவிக்க முடியுமோ அத்தனை பேருக்கும் அறிவிக்கத் தீர்மானமாய் இருப்போமாக!—சங். 109:30.