பிற மொழி பேசுபவர்களுக்கு உதவுதல்
1. நம்முடைய பிராந்தியங்களில் ஊழியம் செய்யும்போது நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?
1 பொதுவாக, நாம் கூட்டுறவு வைத்திருக்கிற சபையின் மொழியைப் பேசுபவர்களிடமே நாம் நற்செய்தியை அறிவிக்கிறோம். ஆனாலும், யெகோவாவைப் போல நம் பிராந்தியத்திலுள்ள எல்லாரிடமும் பாரபட்சமின்றி அன்பு காட்டுவதற்கு, பிற மொழி பேசுகிறவர்களின் தேவைகளைக் கவனத்தில் வைத்து, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வழிகளைத் தேட வேண்டும். (சங். 83:17; அப். 10:34, 35) அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
2. பயனுள்ள என்ன பிரசுரம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, அதைப் பயன்படுத்த நாம் எப்படித் தயாராய் இருக்கலாம்?
2 சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி சிறுபுத்தகத்தைப் பயன்படுத்துங்கள்: இந்தச் சிறுபுத்தகத்தை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருங்கள், அதிலுள்ள பல்வேறு அம்சங்களை நன்கு அறிந்திருங்கள், அதைப் பயன்படுத்தத் தயாராய் இருங்கள். உங்கள் பிராந்தியத்தில் பேசப்படுகிற முக்கிய மொழிகளில் பிரசுரங்கள் இருந்தால், அவற்றில் சிலவற்றை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது; அது, இந்தச் சிறுபுத்தகத்திலுள்ள செய்தியை ஒருவர் வாசித்த பிறகு அவருக்குக் கொடுப்பதற்கு உதவியாய் இருக்கும். அவர்களை மறக்காமல் மீண்டும் போய்ச் சந்திப்பதற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
3. பிற மொழி பேசுகிற ஆர்வம் காட்டுகிறவரைச் சந்தித்தால், நாம் என்ன செய்ய வேண்டும்?
3 மீண்டும் போய்ச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள்: கடவுளையும் அவருடைய வார்த்தையான பைபிளையும் பற்றி அறிந்துகொள்ள ஒருவர் உண்மையிலேயே ஆர்வம் காட்டுவது தெரிந்தால், ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) படிவத்தைப் பூர்த்தி செய்து உடனடியாகச் சபை செயலரிடம் கொடுக்க வேண்டும்; அப்போது, அந்த ஆர்வம் காட்டுகிறவருடைய மொழி பேசுகிற ஒருவர் அவரைப் போய்ச் சந்திப்பதற்கு அதை அவர் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார். செயலர் அதன் நகலை ஊழியக் கண்காணியிடம் கொடுக்கலாம்; அது, எந்த மொழித் தொகுதியினர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அவர் அறிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். ஆர்வம் காட்டுகிறவருடைய மொழி பேசுகிற ஒருவர் அந்த நபரைப் போய்ச் சந்திக்கும்வரை, S-43 படிவத்தைக் கொடுத்த பிரஸ்தாபி அவருடைய ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்க்கலாம். சில சந்தர்ப்பங்களில், அந்த நபருக்கு பைபிள் படிப்பு நடத்தலாம்.
4. நாம் சந்திப்பவர்களின் மொழியில் பிரசுரத்தைப் பெறுவதற்கு என்ன ஏற்பாடு உள்ளது?
4 பிற மொழி பிரசுரங்கள்: பிற மொழிப் பிரசுரங்களைச் சபைகள் பெருமளவு கையிருப்பில் வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், குறிப்பிட்ட ஒரு மொழித் தொகுதியினர் சத்தியத்திடம் அதிக ஆர்வம் காட்டி வருவது ஊழியக் கண்காணிக்கு உறுதியாய்த் தெரிந்தால், பிரஸ்தாபிகள் பயன்படுத்துவதற்காக அந்த மொழியில் ஓரளவு பிரசுரத்தைக் கையிருப்பில் வைப்பது நல்லதென அவர் நினைக்கலாம். அதோடு, நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கும் பிரசுரத்தை www.watchtower.org-லிருந்து பிரிண்ட் எடுப்பதற்கான ஏற்பாடும் உள்ளது.
5. வேறொரு மொழி பேசுபவர்கள் சத்தியத்திடம் காட்டும் ஆர்வத்தை வளர்ப்பதற்குச் சபை என்ன செய்ய வேண்டும்?
5 சபை செய்ய வேண்டியது: ஆர்வம் காட்டுபவர்களின் மொழியிலுள்ள சபை சற்று தூரத்தில் இருக்கிறதென்றால், அந்தச் சபை கூட்டங்களுக்குப் போக ஆரம்பிக்கும்படி அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்துவது நல்லது. ஆனால், சில இடங்களில் அந்த மொழியில் கூட்டங்கள் நடைபெறும் சபை எதுவும் அருகே இல்லாதிருக்கலாம். அந்தச் சமயத்தில், அவர்களை உங்களுடைய கூட்டங்களுக்கு வரும்படி நீங்கள் அழைக்க வேண்டும். சபையார் அவர்களைக் கனிவுடன் வரவேற்று, அவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதைப் பார்க்கும்போது தொடர்ந்து கூட்டங்களுக்கு வர அவர்கள் உற்சாகம் பெறலாம். ஆரம்பத்தில், மொழியும் கலாச்சாரமும் அவர்களுக்குத் தடையாக இருக்கலாம்; ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய கூட்டுறவில் உண்மைக் கிறிஸ்தவ அன்புக்குத் தடைகள் ஏதும் இல்லை.—செப். 3:9; யோவா. 13:35.
6. உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்வது ஏன் பயனுள்ளதாய் இருக்கும்?
6 நீங்கள் வசிக்கிற நகரத்தில் பேசப்படுகிற மொழியைப் பேச அறிந்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால், அந்த மொழியைக் கற்றுக்கொள்ள நீங்கள் தீர்மானிக்கலாம்; அப்போது சத்தியத்திடம் ஆர்வம் காட்டுவோருக்கு நல்ல விதத்தில் உதவ முடியும். உள்ளூர் மொழியை அறிந்திருப்பது, எதிர்ப்பவர்களிடம் பேசுவதற்குக்கூட அதிக உதவியாய் இருக்கும். மக்கள் தங்களுடைய தாய் மொழியில் பேசுபவர்களுக்குத்தான் பொதுவாகச் செவிசாய்க்கிறார்கள்.—அப். 22:1, 2.
7. பிற மொழி தொகுதியை எப்போது உருவாக்கலாம், இது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
7 ஒரு தொகுதியை உருவாக்குதல்: குறிப்பிட்ட மொழியில் ஒரு தொகுதி உருவாவதற்கு, நான்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். (1) குறிப்பிட்ட மொழி பேசுகிற பிராந்தியத்தில் கணிசமானோர் சத்தியத்திடம் ஆர்வம் காட்ட வேண்டும். (2) பிரஸ்தாபிகளில் கொஞ்சப் பேராவது அந்த மொழியை அறிந்திருக்க அல்லது அதைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். (3) முன்நின்று வழிநடத்தவும் வாராந்தரக் கூட்டத்தில் ஒரு கூட்டத்தையாவது அந்த மொழியில் நடத்தவும் தகுதியுள்ள ஒரு மூப்பர் அல்லது உதவி ஊழியர் இருக்கவேண்டும். (4) அந்தத் தொகுதியை ஆதரிக்க மூப்பர் குழு தயாராய் இருக்க வேண்டும். அந்தத் தேவைகள் அனைத்தும் ஓரளவு பூர்த்தி செய்யப்படும்போது, மூப்பர் குழு அந்தத் தொகுதியைப் பற்றிய விவரங்களைக் கிளை அலுவலகத்திற்கு எழுத வேண்டும்; இவ்வாறு, ஒரு தொகுதி உருவாவதற்கு முறைப்படி கிளை அலுவலகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். (ஒழுங்கமைக்கப்படுதல் புத்தகத்தில் பக். 106-107-ஐப் பாருங்கள்.) முன்நின்று வழிநடத்துகிற மூப்பர் அல்லது உதவி ஊழியர், அந்தத் தொகுதியின் தேவைகளைக் கவனிக்கிற, ‘தொகுதிக் கண்காணியாக’ அல்லது ‘தொகுதி ஊழியராக’ இருப்பார்.
8. நம்முடைய பிராந்தியத்தில் பிற மொழி பேசுவோருக்கு உதவுவது ஏன் பெரும் பாக்கியமாய் இருக்கிறது?
8 நம்முடைய பிராந்தியத்திலேயே பிற மொழி பேசுபவர்களுக்கு உதவுவது, நமக்கு முன்மாதிரியாய் திகழும் இயேசு கிறிஸ்து ஆரம்பித்து வைத்த உலகளாவிய பிரசங்க ஊழியத்தின் முக்கியப் பாகமாக இருக்கிறது. நாம் நம்முடைய பங்கை ஊக்கமாய்ச் செய்வோமாக; யெகோவா எப்படி எல்லா தேசத்தாரையும் அசையப் பண்ணி, விரும்பத்தக்கவர்களைக் கொண்டு வருகிறார் என்பதைப் பார்ப்போமாக.—ஆகா. 2:7.