“யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்”
1. நம்முடைய ஊழியத்தைச் செய்வதற்குத் தேவைப்படும் பண்புகள் யாவை?
1 கிறிஸ்தவ சேவையின் எந்தவொரு அம்சத்திலும் நாம் ஆர்வமின்றி இருக்கக் கூடாது. மாறாக, “யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்; அவருக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்” என்று உற்சாகப்படுத்தப்படுகிறோம். (ரோ. 12:11) ஆனாலும், ஊழியத்தில் நம்முடைய பக்திவைராக்கியத்தை அநேக விஷயங்கள் தணித்துப் போடலாம். நம்முடைய ஊழியத்தைச் செய்வதற்குத் தேவைப்படும் பக்திவைராக்கியத்தையும் உற்சாகத்தையும், நாம் எப்படி ‘நெருப்புப்போல் மூட்டிவிட்டுக்கொண்டே இருக்கலாம்’?—2 தீ. 1:6, 7.
2. தனிப்பட்ட பைபிள் படிப்பு எப்படி ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?
2 தனிப்பட்ட பைபிள் படிப்பு: திறம்பட்ட விதத்தில் நற்செய்தியை அறிவிப்பவர், கடவுளுடைய சட்டத்தை நேசிப்பார்; அதிலுள்ள சத்தியத்தால் பெருமளவு கவரப்படுவார். (சங். 119:97) நம்முடைய தனிப்பட்ட படிப்பின்போது கண்டுபிடிக்கும் சத்தியத்தின் மணிக்கற்கள், நம் இருதயத்தைத் தூண்டுவதோடு நம் பக்திவைராக்கியத்தையும் அதிகப்படுத்துகின்றன. அத்தகைய சத்தியத்தை நமக்குக் கொடுத்திருப்பவர் மீதுள்ள அன்பும், மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்ற நம் ஆசையும், கடவுளைப் புகழ்ந்து, அவருடைய பெயரை எல்லாருக்கும் அறிவிக்க நம்மை உந்துவிக்கின்றன. (எபி. 13:15) அப்படியானால், ஊக்கமாய் நற்செய்தியை அறிவிப்பது, அதை நாம் எவ்வளவு உயர்வாய் மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
3. நம்முடைய ஊழியத்தில் கடவுளுடைய சக்தி எப்படி உதவும்?
3 கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள்: திறம்பட்ட ஊழியத்தை, நம்முடைய சொந்த பலத்தால் செய்ய முடியாது. தங்கு தடையில்லாமல் கடவுளுடைய சக்தி கிடைக்கும்போதுதான் உண்மையான பக்திவைராக்கியம் பிறக்கிறது. (1 பே. 4:11) ‘மகா வல்லமையின்’ ஊற்றுமூலரிடம் நெருங்கி வருவது, தைரியமாய் ஊழியம் செய்வதற்குரிய ஆன்மீக பலத்தைத் தரும். (ஏசா. 40:26, 29-31) அப்போஸ்தலன் பவுல் ஊழியத்தில் எதிர்ப்பைச் சந்தித்தபோது, அவருக்குக் ‘கடவுள் உதவினார்.’ (அப். 26:21, 22) புத்துணர்வு அளிக்கும் யெகோவாவுடைய சக்தி, ஊழியத்தில் ஆர்வத்துடிப்புடன் செயல்பட நமக்கு உதவும்; எனவே, அதற்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும்.—லூக். 11:9-13.
4. பக்திவைராக்கியம் என்ன நல்ல பலன்களைத் தருகிறது, ஆனால் என்ன எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன?
4 ஊழியம் செய்வதற்கு மிகுந்த உள்ளார்வம் காட்டும்போது, பொதுவாகச் சக கிறிஸ்தவர்களும் அதிக பக்திவைராக்கியத்தைக் காட்ட ஆரம்பிப்பார்கள். (2 கொ. 9:2) பிராந்தியத்தில், உற்சாகத்தோடும், உறுதியான நம்பிக்கையோடும் செய்தியை அறிவிக்கும்போது, பெரும்பாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பக்திவைராக்கியம் இருந்தால் மட்டும் போதாது, எப்போதும் சாதுரியமாகவும் நியாயமாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்ள வேண்டும். (தீத். 3:2) எல்லாச் சமயத்திலும், நாம் வீட்டுக்காரரிடம் மரியாதையுடன் நடந்துகொள்கிறோம், தெரிவு செய்ய அவருக்குள்ள சுதந்திரத்தை மதிக்கிறோம்.
5. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ள என்ன புத்திமதியை நாம் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்?
5 கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்பவர்களாக நாம் எப்போதும், ‘யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுவோமாக.’ தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலமும், தமது மகா வல்லமைமிக்க சக்தியை நமக்குக் கொடுக்கிற யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபம் செய்வதன் மூலமும், பக்திவைராக்கியத்தை வளர்த்துக்கொள்வோமாக. இவ்வாறு, “கடவுளுடைய சக்தியோடும் முழு நிச்சயத்தோடும்” நம்முடைய ஊழியத்தைப் பக்திவைராக்கியத்துடன் செய்ய முடியும்.—1 தெ. 1:5.