தொலைபேசியில் சாட்சிகொடுப்பது பயனளிக்கிறது
1 நம்முடைய ஊழியத்தில், தொலைபேசி மூலம் சாட்சிகொடுப்பதைப் பற்றி நாம் ஏன் யோசிக்கலாம்? ஏனென்றால், அது மீட்படைவதற்காகத் திருத்தமான அறிவைப் பெற மற்றவர்களுக்கு உதவ முடிந்த இன்னொரு வழியாகும். (2 பே. 3:9) வீட்டுக்கு வீடு ஊழியமே கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு நாம் பயன்படுத்தும் முக்கிய வழி; எனினும், வீட்டில் சந்திக்க முடியாதவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நாம் மற்ற வழிகளைப் பயன்படுத்தவும் மனமுள்ளவர்களாய் இருக்கிறோம்.—மத். 24:14; லூக். 10:1-7; வெளி. 14:6.
2 அது ஒழுங்கமைக்கப்படும் விதம்: வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குப் பிராந்தியம் கொடுக்கப்படுவதுபோல், தொலைபேசியில் சாட்சிகொடுப்பதற்கும் பிரஸ்தாபிகளுக்குப் பிராந்தியம் கொடுக்கப்படுகிறது. தொலைபேசியில் தனியாகச் சாட்சிகொடுக்கலாம் அல்லது சிறு குழுவாக இரண்டு, மூன்று பேர் சேர்ந்து சாட்சிகொடுக்கலாம். அப்படிச் சாட்சிகொடுக்கப் பயன்படுத்துகிற இடம் அதற்கு உகந்ததாய் இருக்க வேண்டும். பொதுவாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பயன்படுத்தும் பைபிள் பிரசுரங்களை மேசையிலே எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து பேசுவதைப் பலரும் பயனுள்ளதாகக் கண்டிருக்கிறார்கள்.
3 தொலைபேசியில் சாட்சிகொடுக்கும் விதம்: தொலைபேசியில் சாட்சிகொடுக்கும்போது, நம்முடைய பேச்சு உரையாடல் முறையில் இருக்க வேண்டும். புதிதாக இப்படிச் சாட்சிகொடுக்க ஆரம்பிக்கிற சிலர், சொல்ல வேண்டிய செய்தியை எழுதி வைத்து, அதை உரையாடும் விதத்தில் வாசிக்கிறார்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலும் நம் ராஜ்ய ஊழிய பிரதிகளிலும், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியிலும் காணப்படுகிற அறிமுகங்கள் இதற்கு உதவியாய் இருக்கும். நீங்களே சொந்தமாகத் தயாரித்துப் பேச விரும்பினால், வீட்டுக்காரரிடம் எந்தப் பொருளில் பேசுவது, என்ன கேள்வியைக் கேட்பது என்று தீர்மானியுங்கள்; பதிலளிக்க உதவும் சில வசனங்களைப் பயன்படுத்தவும் தயாராய் இருங்கள். உரையாடலை நீங்கள் தொடரலாமா என்பதைப் புரிந்துகொள்ள வீட்டுக்காரர் எப்படிப் பதிலளிக்கிறார் என்பதைக் கவனமாகக் கேளுங்கள். பொதுவாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அளிக்கிற பிரசுரங்களையே நீங்கள் அளிக்க விரும்பலாம். பின்வரும் நினைப்பூட்டுதல்களைக் கவனியுங்கள்: நிறுத்தி, நிதானமாகப் பேசுங்கள். மரியாதையாகவும், பொறுமையாகவும், அன்பாகவும் பேசுங்கள்; தொலைபேசியில் பேசுவதாக இருந்தாலும் அவை பளிச்செனப் புலப்படும். வீட்டுக்காரர் அவருடைய கருத்தைச் சொல்லும்போது கவனமாய்க் கேளுங்கள்; பின்னர், அவருடைய குறிப்புகளை ஆமோதிப்பதுடன், அவற்றிற்கு நன்றியும் தெரிவியுங்கள். நன்கொடையைப் பற்றி எதுவும் சொல்லாதபடி கவனமாய் இருங்கள்; இல்லாவிட்டால், தொலைபேசி மூலம் நன்கொடை சேகரிப்பதாக அவர் தப்புக்கணக்குப் போட்டுவிடலாம். ஒருவருக்கு ஆர்வமில்லை என்பது தெரிந்தால் பணிவோடு உரையாடலை முடித்துக்கொள்ளுங்கள்.
4 தொலைபேசியில் நீங்கள் உரையாடும் நபர், உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவராக இருக்கலாம் அல்லது வேலை நிமித்தம் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்திக்க முடியாதவராக இருக்கலாம். இன்னும் சிலர், வெளியாட்கள் அனுமதிக்கப்படாத குடியிருப்பு வளாகங்களிலோ அடுக்குமாடிக் கட்டிடங்களிலோ வசிக்கலாம். எனவே, ஊழியத்தை இன்னும் அதிகமாகவும் முழுமையாகவும் செய்து முடிக்க முயற்சி எடுக்கையில், தொலைபேசியில் சாட்சிகொடுப்பதைக் குறித்துச் சிந்தியுங்கள்; இது சாட்சிகொடுப்பதற்கு உதவும் பயனுள்ள முறையாகும்.
[கேள்விகள்]
1. தொலைபேசியில் சாட்சிகொடுப்பதை நம்முடைய ஊழியத்தின் முக்கிய பாகமாக ஏன் கருதலாம்?
2. தொலைபேசியில் சாட்சிகொடுப்பது எப்படி ஒழுங்கமைக்கப்படுகிறது?
3. தொலைபேசியில் சாட்சிகொடுக்கும்போது எதையெல்லாம் நாம் மனதில் வைக்க வேண்டும்?
4. நம்முடைய பிராந்தியத்தில் தொலைபேசி மூலம் சாட்சிகொடுப்பது எதற்கு வாய்ப்பளிக்கலாம்?