வெளி ஊழியக் கூட்டங்கள்
1. ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக வெளி ஊழியத்திற்குச் செல்வதை நாம் ஏன் முக்கியமாகக் கருதுகிறோம்?
1 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கும் வேலையை ஒழுங்கமைத்துத் திறம்படச் செய்வதில் இயேசு முன்மாதிரியாக இருந்தார். அதேபோல் இன்று, உலகெங்கும் பிரசங்கிக்கிற வேலையை முன்நின்று நடத்துபவர்கள் இயேசுவைப் போலவே அந்த வேலையைச் செய்ய மிகவும் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள், உலகெங்குமுள்ள சபைகளில் வெளி ஊழியக் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்; இந்த ஏற்பாடு, பிரசங்கிப்பவர்களைத் தொகுதிகளாக ஒழுங்கமைத்து வெளி ஊழியத்திற்கு அனுப்ப உதவியாய் இருக்கிறது.—மத். 24:45-47; 25:21; லூக். 10:1-7.
2. வெளி ஊழியக் கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும்?
2 சிறந்த ஏற்பாடு: வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளவிருப்போருக்கு உற்சாகத்தையும் நடைமுறை ஆலோசனையையும் வழிநடத்துதலையும் அளிப்பதற்கு உதவியாக வெளி ஊழியக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினவசனம் வெளி ஊழியத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தால் அதைச் சுருக்கமாகச் சிந்திக்கலாம். சில சமயங்களில், வெளி ஊழியத்திற்குத் தயாராகும் விதத்தில், நம் ராஜ்ய ஊழியம், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், ஊழியப் பள்ளி புத்தகம் ஆகியவற்றிலுள்ள குறிப்புகள் கூடிவந்திருப்போருக்கு நினைப்பூட்டப்படுகின்றன. தேவைப்பட்டால், ஊழியத்தில் ஒரு பிரசுரத்தை எப்படி அளிக்கலாம் என்பதைக் காட்டும் சுருக்கமான நடிப்பும் ஏற்பாடு செய்யப்படுகிறது. முடிவு ஜெபத்திற்கு முன்பாக, யார் யாருடன் சேர்ந்து ஊழியம் செய்யப் போகிறார்கள், எந்த இடத்தில் ஊழியம் செய்யப் போகிறார்கள் என்பதை எல்லாரும் அறிந்திருக்க வேண்டும். வெளி ஊழியக் கூட்டம் 15 நிமிடங்களுக்குள் முடிவடைய வேண்டும்; அதோடு எல்லாரும் உடனடியாக ஊழியத்திற்குச் சென்றுவிட வேண்டும்.
3. வெளி ஊழியக் கூட்டங்கள் நடத்தப்படும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பு யாருக்கு உள்ளது?
3 அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன? ஊழியக் கண்காணிக்குத்தான், வெளி ஊழியக் கூட்டங்கள் நடத்தப்படும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளது. வார இறுதி நாட்களில் தங்கள் தொகுதியில் உள்ளவர்களை வெளி ஊழியத்திற்கு வழிநடத்தும் பொறுப்பு, தொகுதிக் கண்காணிகளுக்கு அல்லது அவர்களுடைய உதவியாளர்களுக்கு இருக்கிறது. சில கண்காணிகளோ உதவி ஊழியர்களோ, வார மத்திப நாட்களில் சகோதர சகோதரிகளை ஊழியத்தில் வழிநடத்தலாம். வார இறுதி நாட்களில் வெளி ஊழியம் செய்ய தங்கள் தொகுதியினருக்குப் போதுமான பிராந்தியம் இருப்பதை உறுதிசெய்துகொள்ள ஊழியக் கண்காணியோடு சேர்ந்து தொகுதிக் கண்காணிகள் செயல்படுவார்கள். வார நாட்களில் யார் தொகுதியை முன்நின்று நடத்துவார் என்பதையெல்லாம் ஊழியக் கண்காணி மேற்பார்வை செய்வார்.
4-6. (அ) சபை பிராந்தியத்தைப் பொறுத்ததில் வெளி ஊழியக் கூட்டங்களின் நோக்கம் என்ன? (ஆ) வெளி ஊழியக் கூட்டங்கள் சம்பந்தமாகத் தீர்மானிக்கையில் என்னென்ன விஷயங்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும்?
4 எங்கே, எப்போது இந்தக் கூட்டங்களை நடத்த வேண்டும்? சபையார் அனைவரும் வெளி ஊழியக் கூட்டங்களுக்காக ஒரே இடத்தில் கூடிவராதிருப்பது நல்லது; சபை பிராந்தியமெங்கும் சபையாருக்குச் சௌகரியப்படும் இடங்களில், பொதுவாக வீடுகளில், கூடிவருவதற்கு ஏற்பாடு செய்வது சிறந்தது; இது சபை பிராந்தியத்தில் திறம்பட ஊழியம் செய்ய உதவியாய் இருக்கும். வெளி ஊழியக் கூட்டங்களுக்காக ராஜ்ய மன்றங்களையும் பயன்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமையில் பொதுப் பேச்சுக்கும் காவற்கோபுர படிப்புக்கும் பிறகு அநேக சபைகள் ராஜ்ய மன்றத்தில் வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துகின்றன. ஊழியத்திற்காக வெகு தூரம் செல்வதைத் தவிர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். சபை பிராந்தியத்தில் ஊழியத்தைத் திறம்படவும் முழுமையாகவும் செய்து முடிப்பதற்கு, தற்போது கூடிவரும் இடங்கள் பொருத்தமாக இருக்கின்றனவா என்பதை அவ்வப்போது பரிசீலிக்கலாம்.
5 இந்த வெளி ஊழியக் கூட்டங்களை எப்போது நடத்துவது சிறந்தது, ஒரு வாரத்தில் எவ்வளவு முறை நடத்துவது சிறந்தது என்பதெல்லாம் அந்தந்த பிராந்தியத்தைப் பொறுத்தது. வெளி ஊழியக் கூட்டங்களை எங்கே, எப்போது நடத்துவது சிறந்ததாய் இருக்குமெனத் தீர்மானிக்க பின்வரும் கேள்விகள் உதவியாய் இருக்கலாம்.
6 எந்தப் பிராந்தியத்திற்கு இன்னுமதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது? வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதற்கு எது சிறந்த நேரம்? மாலை நேரத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய அல்லது மறுசந்திப்புகள் செய்ய திட்டமிட வேண்டுமா? வெளி ஊழிய ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் சபையின் அறிவிப்புப் பலகையில் போட வேண்டும். தங்களுக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் முழுமையாய் ஊழியம் செய்து முடித்து, ‘நான் பிரசங்கிக்காத பிராந்தியம் இனி இல்லை’ என அப்போஸ்தலன் பவுலைப் போல் சொல்ல வேண்டும் என்பதே பிரஸ்தாபிகள் ஒவ்வொருவருடைய ஆசையாகும்.—ரோ. 15:23.
7. வெளி ஊழியத் தொகுதியை வழிநடத்துபவருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
7 வெளி ஊழியக் கூட்டங்களை நடத்துவது: இந்தக் கூட்டத்தை நடத்தும்படி நியமிக்கப்பட்டிருப்பவர் இதற்கு நன்கு தயாரித்து வருவதன்மூலம் இந்தத் தேவராஜ்ய ஏற்பாட்டுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறார். இந்தக் கூட்டங்கள் நேரத்தோடு ஆரம்பித்து 10-15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டும்; இவை தகவல் அளிப்பவையாகவும் சுருக்கமானவையாகவும் இருக்க வேண்டும். எந்தப் பிராந்தியங்களில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதை இக்கூட்டத்தை நடத்துபவர் முன்னரே அறிந்திருக்க வேண்டும். வெளி ஊழியக் கூட்டம் முடிந்த பிறகு, தாமதமாக வருபவர்களுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை; என்றாலும், ஊழியத்திற்கு எல்லாரும் எங்கு சென்றிருக்கிறார்கள் என்ற தகவலை விட்டுவருவது உதவியாய் இருக்கலாம். இக்கூட்டம் முடிந்ததுமே எல்லாரும் உடனடியாக ஊழியத்திற்குச் சென்றுவிட வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதும் தகவலளிப்பதுமான வெளி ஊழியக் கூட்டம், ஊழியத்தைச் செய்துமுடிக்க எல்லாருக்கும் தேவையான ஆலோசனையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.—நீதி. 11:14.
8. வெளி ஊழியக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் தொகுதியை வழிநடத்துபவருக்கு எந்தெந்த விதங்களில் ஒத்துழைப்பு தரலாம்?
8 வெளி ஊழியக் கூட்டத்தில் கலந்துகொள்வது: ஒத்துழைப்பு அவசியம். (எபி. 13:17) முடிந்தால், தொகுதியை வழிநடத்துபவர் உதவி தேவைப்படும் ஒருவரோடு சேர்ந்து ஊழியம் செய்வார். புதியவர்களுக்கும் அனுபவம் குறைந்தவர்களுக்கும் உதவ அனுபவம் பெற்ற பிரஸ்தாபிகள் அங்கிருப்பது நல்லது. அவ்வப்போது வித்தியாசமானவர்களுடன் ஊழியம் செய்ய மனமுள்ளவர்களாய் இருப்பவர்களால் அதிக நன்மை விளையலாம். (நீதி. 27:17; ரோ. 15:1, 2) நேரத்துடன் வருவதற்கு எல்லாரும் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இந்தத் தேவராஜ்ய ஏற்பாட்டை நாம் மதிப்பதும் சக ஊழியர்கள்மீது அக்கறை காட்டுவதும், இவ்விஷயத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய நம்மைத் தூண்டுவிக்கும்.—2 கொ. 6:3, 4; பிலி. 2:4.
9. பயனியர்கள் என்ன பயனுள்ள வழிகளில் இந்த ஏற்பாட்டை ஆதரிக்கலாம்?
9 பயனியர்கள் தரும் ஆதரவு: வெளி ஊழியக் கூட்டங்களுக்கு பயனியர்கள் ஆதரவளிப்பது எல்லாருக்குமே பயனுள்ளதாகவும் உற்சாகமளிப்பதாகவும் இருக்கிறது. உண்மைதான், பயனியர்களுக்கும் ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. பைபிள் படிப்புகளை நடத்துவது, மறுசந்திப்புகளைச் செய்வது தவிர, தினமும் அவர்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டியிருக்கலாம், வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். எனவே, சபை ஏற்பாடு செய்கிற வெளி ஊழியக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் பயனியர்கள் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை; முக்கியமாக ஒவ்வொரு நாளும் அத்தகைய கூட்டங்கள் நடக்கிறதென்றால் அவற்றில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை. எனினும், ஒவ்வொரு வாரமும் சில கூட்டங்களிலாவது பயனியர்கள் கலந்துகொண்டு ஆதரவளிக்கலாம். ஒரு விதத்தில், வெளி ஊழியக் கூட்டங்கள் பிரஸ்தாபிகளைப் பயிற்றுவிக்கும் வழியாக இருக்கின்றன எனலாம்; இவர்களுக்கு பயனியர்களின் அறிவும் அனுபவமும் பெருமளவு உதவலாம். பயனியர்கள் தவறாமல் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதால் அதிக அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவத்தை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். வெளி ஊழியக் கூட்டங்களிலும் ஊழியத்திலும் அவர்கள் பக்திவைராக்கியத்துடன் கலந்துகொள்வது மற்றவர்கள் பார்த்துப் பின்பற்றுவதற்குரிய மாதிரியாய் இருக்கிறது. இந்தக் கூட்டங்களில் அவர்கள் பங்கெடுப்பது அதிக பாராட்டுக்குரியது.
10. நற்செய்தியைப் பிரசங்கிக்கிற அனைவரும் இந்த ஏற்பாட்டிற்கு மனமார்ந்த ஆதரவை அளிப்பது ஏன் பொருத்தமாய் இருக்கிறது?
10 இயேசுவையும் அவருடைய சீடர்களையும் போல், வீட்டுக்கு வீடு ஊழியத்தின் மூலமே நம் பிரசங்க வேலையைப் பெருமளவு நிறைவேற்றுகிறோம். ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுவதற்கும், ஊழியத்தைத் திறம்பட செய்வதற்குமே வெளி ஊழியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நற்செய்தியைப் பிரசங்கிக்கிற எல்லாரும் இத்தகைய தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு முடிந்தவரை ஆதரவளிக்க வேண்டும். (அப். 5:42; 20:20) இதற்கு நாம் அனைவரும் மனமார்ந்த ஆதரவை அளிப்போமாக. இவ்வாறு செய்வதால், யெகோவாவின் அபரிமிதமான ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவோம்; அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து நம்முடைய தலைவரான இயேசு கிறிஸ்துவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவோம்.—மத். 25:34-40; 28:19, 20.