2010-ஆம் ஆண்டிற்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
1. (அ) கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற சில விசேஷ மாநாட்டு தினங்களின் தலைப்புகள் யாவை? (ஆ) கடந்த விசேஷ மாநாட்டு தினங்களின்போது கேட்ட ஏதேனும் முக்கியக் குறிப்புகள் ஊழியத்தில் உங்களுக்கு உதவியிருக்கின்றனவா?
1 “மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்,” “ஒரே மந்தையாக உறுதியோடு இருங்கள்,” “தொடர்ந்து சத்தியத்திற்குச் சாட்சி கொடுங்கள்,” “நாம் களிமண்—யெகோவா நம் குயவர்.” (பிலி. 1:9, 10, 27; யோவா. 18:37; ஏசா. 64:8) இவை, கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற விசேஷ மாநாட்டு தினங்களின் தலைப்புகளில் சில. 2010-ஆம் ஆண்டிற்கான விசேஷ மாநாட்டு தினத்தில் கலந்துகொள்ள நீங்கள் ஆவலாய் இருக்கிறீர்களா? “இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது” என்பதே அதன் தலைப்பு; இது, 1 கொரிந்தியர் 7:29-ன் அடிப்படையிலானது.
2. இந்த மாநாட்டின்பேரில் எப்படி ஆர்வத்தை வளர்க்கலாம்?
2 உங்கள் சபையில் விசேஷ மாநாட்டு தினத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டதுமே அதைப் பற்றி ஆர்வமாகப் பேச ஆரம்பியுங்கள். சில பெற்றோர் அந்தத் தேதியை வீட்டிலுள்ள காலண்டரில் குறித்து வைக்கிறார்கள்; மாநாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களையும் பட்டியலிடுகிறார்கள்; பின்பு, நாளை எண்ண ஆரம்பிக்கிறார்கள்; இதெல்லாம், அவர்களுடைய பிள்ளைகள் அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்க உதவுகின்றன. உங்களுடைய குடும்ப வழிபாட்டின்போது, கடந்த விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிகளில் எடுத்த குறிப்புகளைக் கலந்தாலோசிக்கலாம். தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில் பக்கங்கள் 13-16-ஐயும் நீங்கள் மறுபார்வை செய்யலாம். இது, உங்கள் இருதயத்தை இந்நிகழ்ச்சிக்குத் தயார்படுத்த உதவும்; அதோடு, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ‘கேட்கிற விதத்திற்குக் கவனம் செலுத்த’ உதவும்.—லூக். 8:18.
3. மாநாட்டு நிகழ்ச்சிகளிலிருந்து நாம் எவ்வாறு முழு பயனைப் பெறலாம்?
3 கற்பதைக் கடைப்பிடியுங்கள்: மாநாட்டின் முடிவில், ‘எவ்வளவு அருமையான மாநாடு!’ என்று எல்லாரும் பேசிக்கொள்வதைப் பொதுவாகக் கேட்கிறோம். அது எப்போதுமே உண்மை, ஏனென்றால், யெகோவா வழங்கும் பல ஆசீர்வாதங்களில் ஒன்றுதான் மாநாடுகள். (நீதி. 10:22) அங்கு சொல்லப்படும் விஷயங்கள் பயனளிக்க வேண்டுமென்றால், நீங்கள் அவற்றைத் தியானிப்பதும் மனதில் பதிய வைப்பதும் அவசியம். (லூக். 8:15) மாநாடு முடிந்து வீடு திரும்பும் வழியில் நிகழ்ச்சிகளைப் பற்றி உங்கள் குடும்பத்தாருடன் அல்லது உங்களுடன் பயணம் செய்வோருடன் கலந்துபேச நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளைப் பற்றியும் ஊழியத்தில் உதவும் குறிப்புகளைப் பற்றியும் ஒருவருக்கொருவர் கலந்துபேசுங்கள். அப்படிச் செய்தால், மாநாட்டு நிகழ்ச்சிகளிலிருந்து நெடு நாட்களுக்குப் பயன் பெறுவீர்கள்.—யாக். 1:25.
4. இந்த மாநாடு ஏன் நமக்கு விசேஷமானதாக இருக்கும்?
4 நமக்கு உண்மையிலேயே தேவையான, மிகப் பிரயோஜனமான ஒரு பொருளைப் பரிசாகப் பெறும்போது நாம் எப்போதும் பூரித்துப்போகிறோம். அப்படியென்றால், அடுத்த விசேஷ மாநாட்டு தினத்தில் யெகோவா நமக்கு வழங்கப்போகிறவற்றை எதிர்பார்த்து நாம் ஆவலோடு காத்திருக்கிறோம், அல்லவா? அது எல்லா விதத்திலும் பிரயோஜனமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் பரலோகத் தகப்பன் நமக்கு உண்மையிலேயே தேவையான பரிசை வழங்குவார் என நாம் எதிர்பார்க்கலாம்; அதாவது, அவர் நமக்கு நியமித்திருக்கும் வேலையை நாம் தொடர்ந்து செய்வதற்குத் தேவையான உற்சாகத்தையும் பயிற்சியையும் வழங்குவார் என நாம் எதிர்பார்க்கலாம்.—2 தீ. 4:2; யாக். 1:17.