எந்நாளும் யெகோவாவைப் புகழுங்கள்
1. கடவுளுடைய ஊழியர்கள் எதைச் செய்யத் தூண்டப்படுகிறார்கள், ஏன்?
1 தாவீது ராஜா, “நாடோறும்,” சொல்லப்போனால் என்றென்றைக்கும் யெகோவாவைப் புகழ்ந்து துதிக்கத் தீர்மானமாய் இருந்தார். (சங். 145:2, 7, 21) நாமும்கூட எந்நாளும் யெகோவாவைப் புகழ சிறந்த காரணம் உள்ளது.—சங். 37:10; 145:14, 18; 2 பே. 3:13.
2. குடும்பமாக எவ்வாறு யெகோவாவை எந்நாளும் புகழலாம்?
2 நம் வீட்டில்: நாம் தின வசனத்தைச் சிந்திக்கையில், குடும்ப வணக்கத்தைச் செய்கையில், சபைக் கூட்டங்களுக்காகத் தயாரிக்கையில் பயன்தரும் விதத்தில் ஆன்மீக விஷயங்களைக் கலந்தாலோசிப்பதற்குச் சிறந்த பிரசுரங்கள் உள்ளன. அநேக குடும்பங்களில், ஒருநாளில் ஒருவேளையாவது ஒன்றுசேர்ந்து உணவருந்தும் பழக்கம் இருக்கிறது. அப்படிச் செய்யும்போது, ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கும் யெகோவாவைப் புகழ்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஒன்றாக உணவருந்தும் சமயத்தில் பிள்ளைகளிடம் பெற்றோர் சாதாரணமாகப் பேசும் விஷயங்கள் “யெகோவாவுக்கு ஏற்ற முறையில் அவர்களைக் [பிள்ளைகளைக்] கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்க்க” பேருதவியாய் இருக்கும்.—எபே. 6:4; உபா. 6:5-7.
3. நம் சகோதரர்களுடன் இருக்கையில் யெகோவாவைப் புகழ்வதற்கு என்ன சந்தர்ப்பங்கள் உள்ளன?
3 நம் சகோதரர்களுடன்: வெளி ஊழியத்தில் அல்லது சபைக் கூட்டங்களில் நம் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து யெகோவாவைப் புகழ்வதற்கு அருமையான சந்தர்ப்பங்கள் உள்ளன. (நீதி. 15:30; பிலி. 4:8; எபி. 13:15) நாம் எல்லாருமே யெகோவாவை நேசிப்பதால், ஒருவருக்கொருவர் பேசுகையில் அவருடைய நற்குணத்தை மனதார புகழ்ந்து பேச வேண்டும்.—சங். 106:1.
4. வெளி ஊழியத்தைத் தவிர வேறு என்னென்ன சந்தர்ப்பங்களில் நீங்கள் யெகோவாவைப் புகழலாம்?
4 மற்றவர்களிடம் பேசுகையில்: வெளி ஊழியத்தில் எந்நாளும் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும், சக பணியாளர்களிடம், பள்ளித் தோழர்களிடம், மற்றவர்களிடம் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் குறித்து சுருக்கமாகப் பேச வாய்ப்பு கிடைக்கலாம். அப்படிச் செய்யும்போது நல்மனமுள்ளவர்களின் மனதில் நம்பிக்கை துளிர்விட வழி பிறக்கலாம். (சங். 27:14; 1 பே. 3:15) பயணிக்கையில் ஒரு சகோதரிக்கு சக பயணியிடம் சாட்சிகொடுக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கேட்ட விஷயங்கள் அந்தளவு ஆறுதல் அளிப்பதாயும் தெம்பளிப்பதாயும் இருந்ததால் மீண்டும் அந்தச் சகோதரி தன்னைத் தொடர்புகொள்வதற்காகத் தன்னுடைய விலாசத்தையும் ஃபோன் நம்பரையும் கொடுத்தார். இந்த உலகில் பிரச்சினைகள் அதிகரித்துவருவது ஒருபுறம், நிலைமைகள் மோசமடைந்து வருவது மறுபுறமாக இருந்தாலும் யெகோவாவின் மக்கள், கேட்க மனமுள்ளவர்களுக்கு “மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை” தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதோடு யெகோவாவைப் புகழ்வதற்குக் காரணத்தையும் அளிக்கிறது.—ஏசா. 52:7, NW; ரோ. 15:11.
5. யெகோவாவைப் புகழ நாம் வாஞ்சிப்பது ஏன், அதன் மூலம் எதைச் சாதிக்கலாம்?
5 தம்முடைய ஊழியர்கள் எந்நாளும் தம்மைப் புகழ்வதைப் பார்க்கும்போது யெகோவாவின் மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்! நம்மைச் சுற்றியுள்ள படைப்புகள் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதுபோல நாமும்கூட எந்நாளும் நம்முடைய வீடுகளில், சபையில், மற்றவர்களிடம் பேசுகையில் அவரை வாயாரப் புகழலாம்; அப்போது அவர்களும்கூட நம்மோடு சேர்ந்து யெகோவாவைப் புகழ ஆரம்பிக்கலாம்.