ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்கும் முறை
1. ஊழியக் கூட்டம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதிலிருந்து நாம் எப்படி அதிக நன்மை அடையலாம்?
1 ஊழியத்தைத் திறம்படச் செய்வதற்கு நமக்கு உதவவே ஊழியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பது, சீடர்களை உருவாக்குவது, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் விரைவில் வரவிருப்பதைப் பற்றி அறிவிப்பது ஆகியவற்றைக் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாகச் சிந்திக்கப்படுகிறது. (மத். 28:20; மாற். 13:10; 2 பே. 3:7) இந்த முக்கியமான கூட்டத்திற்காக நாம் நன்கு தயாரித்து அதில் பங்குகொள்வதற்குத் தயாராக இருந்தோமானால் அதிலிருந்து அதிக நன்மை அடைவோம்.
2. ஊழியக் கூட்டத்தில் கொடுக்கப்படும் பேச்சைக் கவனித்துக் கேட்பதற்கு நாம் எப்படித் தயாரிக்கலாம்?
2 பேச்சு: ஒரு பேச்சை எந்தக் கட்டுரையின் அடிப்படையில் அளிக்க வேண்டும் என்பது பொதுவாக ராஜ்ய ஊழியத்திலேயே கொடுக்கப்படும். அந்தக் கட்டுரையையும் அதிலுள்ள வசனங்களையும் நீங்கள் முன்கூட்டியே வாசித்து வரலாம்; அதோடு, அதிலுள்ள குறிப்புகளை உங்களுடைய ஊழியத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் சிந்தித்துப் பார்க்கலாம்.
3. கேள்வி-பதில் கலந்தாலோசிப்புக்குத் தயாரிக்க நாம் என்ன செய்யலாம்?
3 கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு: இப்பகுதி ஏறக்குறைய காவற்கோபுர படிப்பைப் போலவே நடத்தப்படும்; இதில் சுருக்கமான முன்னுரையும் முடிவுரையும் இருக்கும். ஒவ்வொரு பாராவிலும் உள்ள முக்கிய குறிப்புகளைக் கோடிடுங்கள்; சுருக்கமான, அர்த்தமுள்ள பதில்களைச் சொல்வதற்குத் தயாராய் இருங்கள்.
4. சபையார் கலந்தாலோசிப்புக்காக நாம் எப்படித் தயாரிக்கலாம்?
4 சபையார் கலந்தாலோசிப்பு: இப்பகுதி ஒரு பேச்சைப் போலவே கொடுக்கப்படும்; ஆனால், இடையிடையே சபையாரிடம் சில குறிப்புகளைச் சொல்லும்படி பேச்சாளர் கேட்கலாம். முக்கிய குறிப்புகளைக் கோடிட்டு, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து வந்திருந்தால் பேச்சாளர் கேள்வி கேட்கும்போது உங்களால் பதில் சொல்ல முடியும். முக்கிய குறிப்புகளை சபையாரிடமிருந்து வரவழைப்பதற்கு பேச்சாளர் முயற்சி செய்வார்.
5. நடிப்புகளிலிருந்து அதிக நன்மை அடைய எது நமக்கு உதவும்?
5 நடிப்புகள்: ஊழியக் கூட்டத்தின் சில பகுதிகளில் நடைமுறையான நடிப்புகள் இருக்கும்; சிந்திக்கப்பட்ட விஷயத்தை ஊழியத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு இந்த நடிப்புகள் உதவியாக இருக்கும். மூப்பர்கள், அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் அல்லது பயனியர்கள் இந்த நடிப்புகளைச் செய்யும்படி அழைக்கப்படுவார்கள். ஒரு நடிப்புக்காகத் தயாரிக்கையில் அது எப்படிச் செய்யப்படும் என்பதை நீங்கள் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கலாம். ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு நடிப்பு நடித்துக் காட்டப்படுகையில் அதிலுள்ள விஷயத்தை எப்படிச் சொந்தமாகச் சொல்லலாம், ஊழியத்தில் சந்திக்கிற வித்தியாசப்பட்ட ஆட்களுக்கு ஏற்ற விதமாக எப்படிப் பேசலாம் என்பதையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். நடிப்பில் பயன்படுத்தப்படவிருக்கும் பிரசுரத்தையோ பத்திரிகையையோ கூட்டத்திற்கு எடுத்துச்செல்ல மறவாதீர்கள். குடும்ப வணக்கத்திற்காக நீங்கள் ஒதுக்கியுள்ள சமயத்தில் இந்த நடிப்புகள் சிலவற்றைப் பழகிப்பார்ப்பது பயனுள்ளதாய் இருக்கும்.
6. நாம் ஏன் ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்க வேண்டும்?
6 நாம் ஊழியக் கூட்டத்திற்காகத் தயாரித்து, அங்கு அளிக்கப்படவிருக்கும் சிறந்த விஷயங்களைப் பற்றி முன்னரே சிந்தித்துப் பார்த்தால் அக்கூட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவ்வாறு செய்யும்போது, ஒருவருக்கொருவர் பெருமளவில் ஊக்கம் பெறுவோம். (ரோ. 1:11, 12) ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்க நாம் நேரம் ஒதுக்கினால், ஊழியத்தை திறம்பட்ட விதமாகச் செய்ய அதிகமாகத் தகுதி பெறுவோம்.—2 தீ. 3:17.