எப்படி அவர்கள் கேள்விப்படுவார்கள்?
1. பிரசங்க வேலை ஏன் கடினமாக இருக்கலாம், ஆனாலும் நாம் ஏன் விடாமல் அதில் ஈடுபட வேண்டும்?
1 யெகோவாவின் நாள் வெகு விரைவில் வரப்போவதால், இன்னும் அநேகர் கடவுளைப் பற்றியும் மனிதகுலத்திற்கான அவரது நோக்கத்தைப் பற்றியும் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது; எனவே, அவர்களுக்கு நாம் அவசரமாக உதவி செய்ய வேண்டியிருக்கிறது. (யோவா. 17:3, NW; 2 பே. 3:9, 10) ஆனால், நம்முடைய பிரசங்க வேலையைப் பலர் அசட்டை செய்வதாலும் கேலி செய்வதாலும் அப்படி உதவி செய்வது சிலசமயம் கடினமாக இருக்கலாம். (2 பே. 3:3, 4) என்றாலும், நற்செய்தியைக் கேள்விப்பட்டு அதை ஏற்றுக்கொள்கிறவர்கள் நம்முடைய பிராந்தியத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் யாருமே பிரசங்கிக்கவில்லை என்றால் அவர்கள் எப்படிக் கேள்விப்படுவார்கள்?—ரோ. 10:14, 15, NW.
2. அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணம் நம்மை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
2 எதிர்ப்பைச் சந்திக்கும்போது: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்க இன்னும் நிறையப் பேர் மனமுள்ளவர்களாக இருப்பதால் நாம் பிரசங்க வேலையை நிறுத்திவிடக் கூடாது. அப்போஸ்தலன் பவுல், ஐரோப்பாவில் முதன்முதலாகப் பிரசங்கித்த நகரம் பிலிப்பி நகரம். அங்கு அவர் மீதும், சீலா மீதும் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, அவ்விருவரும் அடிக்கப்பட்டுச் சிறையில் போடப்பட்டார்கள். (அப். 16:16–24) அது வேதனைமிக்க அனுபவமாக இருந்தது; ஆனாலும், பவுல் பயந்துபோய் பிரசங்க வேலையை நிறுத்திவிடவில்லை. மாறாக, தன் மிஷனரி பயணத்தைத் தொடர்ந்தார்; ‘கடவுளுடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு’ தெசலோனிக்கே நகருக்குச் சென்றார். (1 தெ. 2:2) நாம் ‘சோர்ந்துபோய்விடக் கூடாது’ என்பதை பவுலுடைய உதாரணம் காட்டுகிறது, அல்லவா?—கலா. 6:9.
3. முன்பு ஆர்வம் காட்டாதவர்களுடைய மனம் இப்போது மாறியிருப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?
3 வருடக்கணக்காக நம் செய்தியைக் கேட்க மறுத்த பலருடைய மனம் இப்போது மாறியிருக்கிறது. ஒருவேளை அவர்களுக்குப் பண நெருக்கடி ஏற்பட்டிருக்கலாம், நோய் ஏதாவது வந்திருக்கலாம், குடும்ப அங்கத்தினர் யாராவது மரணமடைந்திருக்கலாம், அல்லது பீதியடையச் செய்யும் செய்திகளை அவர்கள் கேள்விப்பட்டிருக்கலாம்; இவற்றின் காரணமாக அவர்களுடைய மனம் மாறியிருக்கலாம். (1 கொ. 7:31) வேறு சிலருடைய விஷயத்தில், அவர்கள் பிள்ளைகளாக இருந்தபோது அவர்களுடைய பெற்றோர் நற்செய்தியைக் கேட்க விரும்பாமல் இருந்திருக்கலாம், ஆனால் இப்போது பெரியவர்களாகிவிட்ட அந்தப் பிள்ளைகள் நம் செய்திக்குச் செவிசாய்க்க மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், காலம் கடந்துவிடுவதற்குமுன் ‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற’ வாய்ப்பைப் பெற வேண்டுமானால், நாம் பிரசங்க வேலையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.—ரோ. 10:13, NW.
4. ஊழியத்தில் நாம் “இடைவிடாமல்” ஈடுபடுவதற்கு எது நம்மைத் தூண்டுவிக்கிறது?
4 “இடைவிடாமல்”: முதல் நூற்றாண்டு அப்போஸ்தலர்களைப் போலவே பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் “இடைவிடாமல்” ஈடுபடுவதற்கு, கடவுள் மீதும் சக மனிதர்கள் மீதும் உள்ள அன்பு நம்மைத் தூண்டுவிக்கும். (அப். 5:42) பலர் இன்று ‘சகல அருவருப்புகளின் நிமித்தமும் பெருமூச்சுவிட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்.’ (எசே. 9:4) அப்படிப்பட்டவர்கள் நற்செய்தியைக் கேட்கும்போது எவ்வளவாய் நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள்! நிச்சயம் அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசிக்கும். ஒருவேளை பெரும்பாலோர் நமக்குச் செவிகொடுக்காவிட்டாலும், நாம் எடுக்கிற முயற்சிகளைக் கண்டு யெகோவா மிகவும் சந்தோஷப்படுவார் என்று பைபிள் உறுதியளிக்கிறது.—எபி. 13:15, 16.