எதிர்ப்பை எதிர்கொள்ள புதியவர்களைத் தயார்படுத்துங்கள்
1 பைபிள் படிக்க ஆரம்பித்து, ‘தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிறவர்களை,’ சாத்தான் முக்கியமாய் குறிவைக்கிறான். (2 தீ. 3:12) சக வேலையாட்கள், பள்ளித் தோழர்கள், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மூலம் அவர்களை எதிர்க்கிறான். முக்கியமாய், தங்கள்மீது அக்கறையுள்ள உறவினர்கள் எதிர்க்கும்போது அதைச் சமாளிக்க புதியவர்களுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்கும்.—மத். 10:21; மாற். 3:21.
2 எதிர்ப்பு வரும்: தங்களுக்கு எதிர்ப்பு வரும் என்றும் அது தாங்கள் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என்பதற்கு அடையாளம் என்றும், புதியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். (யோவா. 15:20) சில சமயங்களில், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தவறான அபிப்பிராயம் இருப்பதால் எதிர்க்கிறார்கள். இயேசுவைப் பின்பற்றுவதாலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதாலும் அவமானப்பட்டால் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். (அப். 5:27–29, 40, 41) யெகோவாவின் அன்புக் கரம் அவர்களை எப்போதும் அரவணைக்கும் என புதியவர்களுக்குப் புரிய வையுங்கள். (சங். 27:10; மாற். 10:29, 30) அவர்கள் உத்தமத்தில் நிலைத்திருப்பது, கடவுளுடைய உன்னத அரசதிகாரம் பற்றிய விவாதத்தில் அவர்கள் யெகோவாவை ஆதரிப்பதைக் காட்டுகிறது.—நீதி. 27:11.
3 திருத்தமான அறிவு அவசியம்: எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பைபிள் மாணாக்கர்கள் தொடர்ந்து திருத்தமான அறிவைப் பெற்று வருவது அவசியம் என்பதை அவர்கள் மனதில் பதிய வையுங்கள். எதிர்ப்பைக் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் கற்று வரும் சத்தியங்கள் அவர்களுடைய இருதயத்தில் வேரூன்றாதபடி தடுக்க சாத்தான் முயற்சி செய்கிறான். (நீதி. 4:23; லூக். 8:13) விசுவாசத்தில் உறுதியாய் வேரூன்றுவதற்கு, தொடர்ந்து பைபிளிலிருந்து திருத்தமான அறிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.—சங். 1:2, 3; கொலோ. 2:6, 7.
4 சகிப்புத்தன்மை அவசியம்: சோதனைகளைச் சந்திக்கையில் சகிப்புத்தன்மை அவசியம்; இது, நல்ல பலன்களைத் தரும். (லூக். 21:16–19; NW) புதியவர்கள் எதிர்ப்பை எதிர்த்து நிற்கையில் அவர்களும் பயன் அடைவார்கள், மற்றவர்களும் பயன் அடைவார்கள். சகித்து நிலைத்திருப்பவர்களை யெகோவா அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார் என்பதை அவர்களே அனுபவத்தில் ருசிப்பார்கள்.—யாக். 1:12.
5 தெசலோனிக்கே சபையிலிருந்த சகோதரர்களின் ஆன்மீக முன்னேற்றத்தைப் பார்த்து அப்போஸ்தலன் பவுல் பூரித்துப் போனார். அவர்கள் நிமித்தம் கடவுளுக்கு நன்றி சொன்னார்; அவர்களில் பலர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இவர் உதவியிருந்தார். (2 தெ. 1:3–5) எதிர்ப்பை சந்திக்கவும் சகித்து நிற்கவும் பைபிள் மாணாக்கர்களை நாம் தயார்படுத்தினால் நாமும் பவுலைப் போலவே சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுவோம்.