நம்மிடமுள்ள பொக்கிஷங்களை வாரி வழங்குவோம்
1 கடவுளுடைய வார்த்தையான பைபிளில் நாம் பொன்னெனப் போற்றும் ஆன்மீக பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. (சங். 12:6; 119:11, 14) ஒரு சமயம் இயேசு, ராஜ்யத்தின் பல்வேறு அம்சங்களை சித்தரித்துக் காட்டிய உவமைகளைச் சொன்னார்; பின்னர் சீஷர்களிடம் அவர், “இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா” என்று கேட்டார். “ஆம், அறிந்துகொண்டோம்” என்பதாக அவர்கள் பதிலளித்தபோது, “இப்படியிருக்கிறபடியால், பரலோக ராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்று சொன்னார்.—மத். 13:1–52.
2 முதன்முதலில் பைபிளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் நாம் படித்த பைபிள் சத்தியங்களைப் பழைய பொக்கிஷங்கள் எனலாம். கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான விஷயங்களைத் தனிப்பட்ட படிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துத் தெரிந்துகொள்ளும்போது அநேக புதிய பொக்கிஷங்களை, அதாவது புதிய பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடிக்கிறோம். (1 கொ. 2:7) ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்’ மூலமும் புதிய பொக்கிஷங்களை நாம் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம்.—மத். 24:45, NW.
3 பழையவையாக இருந்தாலும்சரி புதியவையாக இருந்தாலும்சரி, இந்த ஆன்மீக பொக்கிஷங்கள் நமக்கு அருமையானவையே! இது, கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கிற போதகர்களாவதற்குப் பயிற்சியையும் அனுபவத்தையும் பெறவும் கற்ற அருமையான சத்தியங்களை மற்றவர்களுக்குத் தாராளமாய் வாரி வழங்கவும் நம்மைத் தூண்டுகிறது.
4 இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்: மற்றவர்களுக்கு இந்தப் பொக்கிஷங்களைத் தருவதற்கு இயேசு பெரும் முயற்சி எடுத்ததன் மூலம் அவற்றை தாம் எவ்வளவாய் நேசித்தார் என்பதைக் காட்டினார். அவர் களைப்பாய் இருந்த சமயத்திலும்கூட தம் ‘களஞ்சியத்திலுள்ள’ பொக்கிஷங்களை வழங்கினார்.—யோவா. 4:6–14.
5 ஆன்மீக ரீதியில் ஏழைகளாய் இருந்தவர்கள்மீது இயேசு வைத்திருந்த அன்பு, உயிரளிக்கும் பொக்கிஷங்களான கடவுளுடைய சத்தியங்களை அவர்களுக்கு அறிவிக்க அவரைத் தூண்டியது. (சங். 72:13) ஆன்மீக பசியில் வாடியவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்; எனவே, “அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்க” தூண்டப்பட்டார்.—மாற். 6:34.
6 இயேசுவைப் பின்பற்றுங்கள்: நம்மிடமுள்ள பொக்கிஷங்களை நாம் அருமையானவையாய் கருதினால், இயேசுவைப் போலவே ஆன்மீக மணிக்கற்களை பைபிளிலிருந்தே ஜனங்களிடம் காட்ட நாம் ஆவலாய் இருப்போம். (நீதி. 2:1–5) சில சமயங்களில் உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்ந்து போகாமல் உற்சாகம் பொங்க பைபிள் சத்தியங்களை அறிவிப்போம். (மாற். 6:34) நம்மிடமுள்ள பொக்கிஷங்களை நாம் உயிராய் நேசிப்பது, அதிகளவு ஊழியம் செய்யவும் அதில் எப்போதும் முழுமையாய் பங்கெடுக்கவும் நம்மைத் தூண்டும்.