குடும்பமாகத் தப்பிப்பிழைக்க தயாராகிறீர்களா?
1 இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவு விரைவாக நெருங்கி வருவதை பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் தெளிவாகக் காண்பிக்கிறது. ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்ததைப் போன்ற மிகவும் மோசமான காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம். (மத். 24:37–39) நோவா ‘கடவுளோடு நடந்ததால்’ பூர்வ உலகிற்கு வந்த அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தார். (ஆதி. [தொடக்கநூல்] 6:9, பொ.மொ.) அவருடைய குடும்பத்தாரும் தப்பிப்பிழைத்ததிலிருந்து அவர் யெகோவாவின் வழிகளை அவர்களுக்கும் கற்பித்திருப்பார் என்று தெரிகிறது. இந்தப் பொல்லாத உலகின் முடிவை நாமும் தப்பிப்பிழைப்பதற்கு நோவாவைப் போல எந்த விதத்தில் குடும்பமாகத் தயாராகலாம்?
2 நீதியைப் பிரசங்கித்தவர்: சுமார் 40 முதல் 50 வருடங்களுக்கு நோவா தொடர்ந்து ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பே. 2:5) அவருடைய அக்கம்பக்கத்தார் அவர் பிரசங்கித்ததைப் பார்த்து கேலி கிண்டல் செய்திருக்கலாம். மனித உருவெடுத்து பூமிக்கு வந்த கீழ்ப்படியாத தூதர்களின் செல்வாக்கும் இதற்கு ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். நாம் ஊழியம் செய்யும்போதும் மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டாதவர்களாக, கேலி கிண்டல் செய்கிறவர்களாக இருக்கிறார்கள்; இது, இந்த உலகின் முடிவு விரைவாய் நெருங்கி வருவதைக் காட்டுகிறது. (2 பே. 3:3, 4) இருந்தாலும், நோவாவின் நாட்களில் வாழ்ந்தவர்களைப் போலில்லாமல், அநேகர் நாம் பிரசங்கிக்கும் நற்செய்திக்குச் செவிசாய்த்து யெகோவாவை வணங்குவதற்கு ‘ஓடிவருகிறார்கள்.’ (ஏசா. 2:2) நாம் தொடர்ந்து பிரசங்கித்து வந்தால்தான் ‘நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும்’ காப்பாற்றிக்கொள்ள முடியும். (1 தீ. 4:16) பிரசங்க வேலையின் அவசரத்தன்மையை பெற்றோர் தங்கள் சொல்லாலும் செயலாலும் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது!—2 தீ. 4:2.
3 அவர் “அப்படியே செய்தார்”: யெகோவாவின் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றியதாலேயே நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் தப்பிப்பிழைத்தார்கள். (ஆதி. 6:22, NW) பைபிளும் உண்மையுள்ள அடிமை வகுப்பாரும் தரும் அறிவுரைகளுக்கு இன்று நாம் ‘கீழ்ப்படியத் தயாராய்’ இருப்பதும் அவசியம். (யாக். 3:17, NW) யெகோவாவின் அமைப்பு தரும் ஆலோசனைகளை ஒரு தகப்பன் எப்படிப் பின்பற்றினார் என்பதை ஒரு குடும்பத்திலுள்ள பிள்ளைகள் வளர்ந்த பிறகு சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, அமைப்பு சொல்வதற்கேற்ப அவர் வாரந்தவறாமல் குடும்பப் படிப்பை நடத்தினார்; வார இறுதி நாட்களில் குடும்பத்தார் அனைவரையும் ஊழியத்திற்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொரு வாரமும் ஒரு பிள்ளையுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்படி பார்த்துக்கொண்டார். ஆலோசனைகளை ‘அப்படியே’ பின்பற்றுவதில் அவர் உறுதி காட்டியது, பிள்ளைகளின் மனதில் ஆழமாய் பதிந்தது. அவருடைய ஆறு பிள்ளைகளும் யெகோவாவை உண்மையுடன் சேவிக்கிறவர்களாய் ஆனார்கள்.
4 இவ்வுலகத்திற்கு முடிவு திடீரென வரும். (லூக். 12:40) நோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, இரட்சிப்பைப் பெறுவதற்காக விசுவாசத்தைச் செயலில் காட்டுவதன்மூலம் நாமும் நம் குடும்பத்தாரும் தப்பிப்பிழைக்க நிச்சயம் தயாராக இருப்போம்.—எபி. 11:7.